என் மலர்
ஈரோடு
சத்யமங்கலம்:
சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் இரவு நேரம் மட்டும் கனரக வாகனங்களுக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், வியாபாரிகள், பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திம்பம் மலைப்பாதையில் 12 சக்கர டாரஸ் லாரிகளுக்கு நிரந்தர தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு வியாபாரிகள், லாரி உரிமையாளர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் சத்தியமங்கலம் லாரி உரிமையாளர்கள், வியாபாரிகள், அரசு பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. சத்தியமங்கலம் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சாலை வழியாக இரவு நேரம் வாகன போக்குவரத்துக்கு தடை மற்றும் கனரக சரக்கு வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் வணிகர் சங்கம் லாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேர வாகனப் போக்கு வரத்தை தடை குறித்து கருத்து கேட்கப்பட்டது.
இதன்படி நாளை(திங்கட்கிழமை) சத்தியமங்கலம் பகுதி முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்துவது எனவும், ஈரோடு மாவட்டம் முழுவதும் லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபடுவது எனவும், பண்ணாரி சோதனை சாவடியில் லாரி உரிமையாளர்கள், அனைத்து கட்சியினர் , வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப் பட்டது.
இதன்படி நாளை சத்தியமங்கலம் பகுதி முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்படுகிறது. நாளை முழு கடை அடைப்பு காரணமாக பல கோடி வர்த்தகம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் சத்தியமங்கலம் சோதனை சாவடி அருகே நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதேப்போல் மாவட்டம் முழுவதும் லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளது. இந்நிலையில் தாளவாடியில் விவசாய சங்க தலைவர் கண்ணையன், திம்பம் மலைப்பாதை போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் யுவபாரத் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் விவசாயிகள் வணிகர்கள் வாகன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். திம்பம் மலைப்பாதை தடையை முழுமையாக நீக்க வலியு றுத்தி சத்தியமங்கலத்தில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது . அதற்கு ஆதரவு தெரிவித்து தாளவாடி மலைப்பகுதி முழுவதும் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை தாக்கிய வடமாநிலத்தவர்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மயூர் கபீர், வெற்றிக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினர்.
தமிழக அரசே, தமிழக அரசே வடமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு உள் நுழைவு அனுமதி சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். முன்னுரிமை கொடு, முன்னுரிமை கொடு தமிழர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடு. தடுத்து நிறுத்து, தடுத்து நிறுத்து தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை தடுத்து நிறுத்து என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் கோஷம் எழுப்பினர்.
இதிர் மாவட்டச் செயலாளர்கள் லோகு பிரகஷ், தாமோதரன், சந்திரசேகர் சுப்புசாமி உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம் இவரது மகன் விஜய் (24). இவர் சென்னை ஒரகடம் பகுயில் உள்ள ஒரு தனியார் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
அதே கம்பெனியில் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் பவித்ரா (23) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இவர்கள் நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு விஜய் கோவையில் உள்ள தனது அக்காவை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவருடன் பவித்ராவும் உடன் வந்தார். விடிய, விடிய மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்ததால் விஜய் தூக்கக் கலக்கத்தில் இருந்தார்.
இன்று அதிகாலை 4 மணி அளவில் ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த ஆட்டையாம்பாளையம் பகுதியில் கோவை-சேலம் பைபாஸ் ரோட்டில் அவர்கள் வந்து கொண்டு இருந்தனர். அப்போது தூக்கக் கலக்கத்தில் இருந்த விஜய் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ரோட்டின் மையப்பகுதியில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்தானது.
இதில் படுகாயமடைந்த பவித்ரா சம்பவ இடத்திலேயே பலியானார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த விஜய் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது பற்றி தெரிய வந்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான பவித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கா ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காயமடைந்த விஜயையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து பலியான பவித்ராவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஈரோடு:
கோவையில் இருந்து இன்று காலை மயிலாடுதுறைக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் காலை 8.30 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் வந்து நின்றது. பின்னர் 8.50 மணிக்கு மீண்டும் ஈரோட்டில் இருந்து அந்த ரெயில் புறப்பட்டது.
ரெயில் நிலையத்தை விட்டு ரெயில் செல்ல தொடங்கிய சிறிது நேரத்தில் அந்த ரெயில் திடீரென நின்றது. உடனே என்னவோ ஏதோ வென்று பதறி அடித்துக் கொண்டு போலீசார் அந்த ரெயிலை நோக்கி ஓடினர்.
அப்போது அந்த ரெயிலில் பயணம் செய்த ஒரு பெண் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தியது தெரியவந்தது.
இது குறித்து அந்த பெண்ணிடம் ரெயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரித்தபோது, நானும் எனது மகளும் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தோம். எனது மகள் ஈரோடு ரெயில் நிலையத்தில் தின்பண்டம் வாங்க இறங்கி சென்றார். ஆனால் அவர் வருவதற்குள் ரெயில் கிளம்பி விட்டதால் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினேன் என்றார்.
ரெயில் நின்றதும் அவரது மகள் மற்றும் சில பயணிகள் ரெயிலில் ஏறினார். பின்னர் ரெயில்வே போலீசார் அந்தப் பெண்ணின் முகவரி செல்போன் போன்ற விவரங்களை வாங்கிக் கொண்டு அனுப்பிவிட்டனர். இதனால் ஈரோடு ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. ரெயிலை நிறுத்தி அந்தப் பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக திருப்பூர் நோக்கி இன்று காலை ஒரு அரசு பஸ் வந்தது. பஸ்சை ராசிபுரத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (45) என்பவர் ஓட்டி வந்தார். அந்த பஸ் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வந்து அடைந்தது.
பின்னர் பஸ் ஈரோட்டில் பயணிகளை ஏற்றிக் கொண்டு திருப்பூருக்கு புறப்பட்டது. பஸ் ஈரோடு திண்டல் அருகே காலை 8.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது டிரைவர் பழனிச்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் நெஞ்சை பிடித்துக்கொண்டு வலியால் துடித்தார்.
பஸ் திடீரென தாறுமாறாக ஓடத் தொடங்கியது. பஸ்சில் இருந்த பயணிகள் என்ன ஏதுவென்று தெரியாமல் கூச்சல் போடத் தொடங்கினர். அப்போதும் சாமர்த்தியமாக செயல்பட்ட டிரைவர் பழனிச்சாமி ரோட்டின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் பஸ்சை மோதி நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பஸ்சில் இருந்த பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வலியால் துடித்த பஸ் டிரைவர் பழனிச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து நடந்த பகுதி வழியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் வந்தார். அப்போது அவர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார்.
அங்குள்ள ஒரு போலீஸ்காரரை அழைத்து பஸ்சை எடுத்து சாலை ஓரமாக நிறுத்த சொன்னார்.






