என் மலர்tooltip icon

    ஈரோடு

    • அந்தியூர் நோக்கி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக கார்த்தி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
    • இந்த சம்பவம் குறித்து அந்தியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள சிந்தகவுண்டம்பாளையம் அடுத்த காட்டுபாளையம் ஏரி தோட்டத்தை சேர்ந்தவர் சொக்கப்பன். இவரது மகன் கார்த்தி ( 19). டிப்ளமோ படித்துள்ளார்.

    இந்த நிலையில் கார்த்தி சம்பவத்தன்று அந்தியூர் அருகே உள்ள பாட்டப்பன் கோவிலுக்கு செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் சின்னபருவாச்சியில் அந்தியூர்-பவானி ரோட்டை கடக்க முயன்றார்.

    அப்போது அந்தியூர் நோக்கி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக கார்த்தி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த கார்த்தியை அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை கார்த்தி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். 

    • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், மத்திய அரசின் இந்திய உணவு கழகத்தின் நேரடி முகவராக இருந்து நெல் பயிரிடும் விவசாயிகளிடம் நேரடியாக நெல்லை கொள்முதல் செய்கிறது.
    • ஈரோடு மாவட்டத்தில் மூன்று பாசன பகுதிகளில் இருந்து அரசின் நெல் கொள்முதல் விதிகளின்படி 90 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளோம். இதன் மூலம் 12 ஆயிரம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், மத்திய அரசின் இந்திய உணவு கழகத்தின் நேரடி முகவராக இருந்து நெல் பயிரிடும் விவசாயிகளிடம் நேரடியாக நெல்லை கொள்முதல் செய்கிறது.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, காளிங்கராயன், தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனப்பகுதியில் நெல் பயிரிட்ட விவசாயிகளிடம் இருந்து நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் அரசு கொள்முதல் செய்து வருகிறது.

    தடப்பள்ளி–அரக்கன்கோட்டை பாசன பகுதியில் மட்டும் ஆண்டுக்கு 2 பருவத்துக்கும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. மற்ற பாசனங்களில் ஒரு பருவத்துக்கு மட்டும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

    இதனிடையே மாவட்டத்தில் அமைக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 12 ஆயிரம் விவசாயிகளிடம் இருந்து 90 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் மூன்று பாசன பகுதிகளில் இருந்து அரசின் நெல் கொள்முதல் விதிகளின்படி 90 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளோம். இதன் மூலம் 12 ஆயிரம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.

    விவசாயிகளுக்கான தொகை, அவர்களது வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளோம். வரும் பருவத்தில் தேவையான இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    • செவ்வாய்கிழமை, ஆனி அமாவாசை இரண்டும் இன்று இணைந்து வந்ததால் சென்னிமலை மலை முருகன் கோவிலில், அதிகாலை முதலே, பக்தர்கள் குவியத் தொடங்கினர்.
    • காலை முதல் இரவு வரை, மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் காட்சியளித்தார்.

    சென்னிமலை:

    அமாவாசை, செவ்வாய்கிழமை என இன்று 2 விசேஷங்கள் வந்தன. இதன் மகிமை அறிந்த மக்கள், சென்னிமலை முருகன் கோவிலுக்கு படை யெடுத்தனர். குறிப்பாக முருகனுக்கு உகந்த நாள் செவ்வாய்கிழமை. இதே நாளில் மற்ற அம்சங்களும் சேர்ந்து கொண்டதால், சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர்.

    செவ்வாய்கிழமை, ஆனி அம்மாவாசை இரண்டும் இன்று இணைந்து வந்ததால் சென்னிமலை மலை முருகன் கோவிலில், அதிகாலை முதலே, பக்தர்கள் குவியத் தொடங்கினர்.

    காலை முதல் இரவு வரை, மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் காட்சியளித்தார்.

    பக்தர்கள் தர்ம தரிசனத்தில் நீண்ட வரிசையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ. 25 கட்டண தரிசனத்திலும் 30 நிமிடங்களுக்கு மேல் பக்தர்கள் காத்திருந்து சென்னிமலை முருகப்பெருமான தரிசித்தனர்.

    அதிகாலை முதலே கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில் பணியாளர்கள் மட்டும் இன்றி தனியார் செக்யூரிட்டி பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டது. கோவிலின் இரு பஸ்களும் காலை முதல் தொடர்ந்து இயக்கப்பட்டது.

    • சமூக ஆர்வலர் மஞ்சள் மாரிமுத்து கழுத்தில் காலி மது பாட்டில்களை மாலையாக அணிந்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.
    • ஈரோடு மாவட்டம் மற்றும் தமிழகம் முழுவதும் இதேப்போல் காலி மது பாட்டில்களை 10 ரூபாய்க்கு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த நஞ்சை ஊத்துக்குளி, காங்கேயம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மஞ்சள் மாரிமுத்து. சமூக ஆர்வலரான இவர் கடந்த 6 மாதமாக காலி பாட்டில்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும், அதனால் மக்களுக்கு ஏற்படும் துன்பம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

    இந்நிலையில் கழுத்தில் காலி மது பாட்டில்களை மாலையாக அணிந்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.

    அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    மது பாட்டில்களை மது பிரியர்கள் பல்வேறு இடங்களில் வீசி சென்று விடுகின்றனர். இதனால் காவிரி ஆறு காலிங்கராயன் வாய்க்கால், குளம், ஏரி போன்ற நீர் நிலைகளில் மாசு ஏற்படுகிறது. சில சமயம் மது பாட்டில்கள் காலில் குத்தி பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய பணிகளும் இதனால் பாதிக்கப்படுகிறது.

    காலி மதுபாட்டில்கள் மலைபோல் குவிந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் காலி மது பாட்டில்களுக்கு 10 ரூபாய் எடுக்கும் திட்டத்தை எனது முயற்சியால் நடை முறை படுத்தி உள்ளனர். அதேப்போன்று ஈரோடு மாவட்டம் மற்றும் தமிழகம் முழுவதும் இதேப்போல் காலி மது பாட்டில்களை 10 ரூபாய்க்கு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

    இதேப்போல் அனைத்து வகையான உடைந்த பாட்டில்கள், கண்ணா டிகளை கிலோ ரூ.20-க்கு வாங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் ஒரு வருடத்திற்குள் அனைத்து உடைந்த பாட்டில்களையும் பெற்று விடலாம். இதனால் சுற்றுப்புறம் தூய்மையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

    • நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி இதுவரை மேலும் ஒரே நாளில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

    ஈரோடு, ஜூன். 28-

    ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த 2 வாரத்திற்கும் மேலாக மீண்டும் அதிகரித்து வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி இதுவரை மேலும் ஒரே நாளில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 764 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 985 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 21 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் தற்போது தினசரி பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து மாவட்ட சுகாதார துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • முக்கிய முகூர்த்த நாட்கள் முடி வடைந்ததையடுத்து இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் விற்பனை மந்தமாக காணப்பட்டது.
    • ஆடி மாதம் தொடக்கம் வரை இதே மந்த நிலை தான் நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே வாரம் தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெறுவது வழக்கம்.

    இந்த சந்தைக்கு ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகா ராஷ்டிரா, போன்ற வெளி மாநிலங்கள் இருந்து 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருவது வழக்கம். இதுபோல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்கிறார்கள்.

    இந்நிலையில் ஜவுளி சந்தையில் கடந்த சில நாட்களாக பள்ளி சீருடை, முகூர்த்த ஜவுளிகள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வந்தது. மேலும் உள்ளூர் திருவிழாக்களையொட்டி வேட்டி, சேலை, துண்டு உள்ளிட்டவைகள் விற்பனையானது.

    இந்நிலையில் முக்கிய முகூர்த்த நாட்கள் முடி வடைந்ததையடுத்து இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் விற்பனை மந்தமாக காணப்பட்டது. ஆடி மாதம் தொடக்கம் வரை இதே நிலை நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறியதாவது:-

    ஆனி மாதத்தின் முக்கிய முகூர்த்த நாட்கள் நிறை வடைந்து விட்டதால் ஜவுளி சந்தையில் வியா பாரம் மந்த நிலையில் காணப்பட்டது. சில்லரை விற்பனை 30 சதவீதமும், மொத்த வியாபாரம் 20 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. வழக்கமாக ஆந்திரா வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் வந்து ஜவுளிகளை கொள்முதல் செய்வது வழக்கம்.

    ஆனால் இந்தாண்டு ஆந்திரா வியாபாரிகள் யாரும் வரவில்லை. கேரளா வில் இருந்து வர வேண்டிய ஆர்டர்களும் வரவில்லை. ஆடி மாதம் தொடக்கம் வரை இதே மந்த நிலை தான் நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறி னர்.

    • கடந்த 2 நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
    • நேற்று 1,600 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தை காட்டிலும் தொடர்ந்து அதிக அளவில் பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும், நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று 1,600 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.64 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,293 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கன அடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 905 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • மாணவர்களுக்கு நெருக்கடி கொடுத்து மாணவர்களை படிப்பில் இருந்து வெளியேற்றும் நிலை உள்ளது.
    • தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எதிர்ப்பு உள்ளது.

    ஈரோடு:

    ஈரோட்டில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தேசிய கல்வி கொள்கை என்பது சூழ்ச்சியான ஆவணம். கல்வியை பற்றி எதுவுமே பேசாமல் அதில் கல்விக் கொள்கை என கூறப்படுகிறது. இந்த ஆவணத்தை நிராகரித்து தான் தமிழக மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களிடம் வாக்குகளை பெற்ற தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்க குழு ஒன்றை அமைத்துள்ளது.

    மத்திய அரசு தேசியக் கல்வி கொள்கைக்கு மாற்றாக தமிழகத்தில் வேறொரு கல்விக்கொள்கை உருவாக்கி வரும் போது மத்திய அரசு தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்த கூடாது. இன்றைக்கு இருக்கும் கல்விமுறையில் 5 வயதில் ஒரு குழந்தையை சேர்க்கும்போது அந்த குழந்தையின் பெற்றோர்களுக்கு பாடம் குறித்து தெரிய வேண்டியதில்லை.

    மாணவ, மாணவிகள் விருப்பம் போல் பாடபிரிவுகளை தேர்வு செய்து பிளஸ்-2 முடித்து கல்லூரிக்கு சென்று விடலாம். ஏணி போன்ற அமைப்பு உள்ளது. இந்த ஏணி போன்ற அமைப்பை புதிய கல்வி கொள்கை சிதைத்து பல்வேறு வழிகளில் வடிகட்டும் முறை உள்ளது. மாணவர்களுக்கு நெருக்கடி கொடுத்து மாணவர்களை படிப்பில் இருந்து வெளியேற்றும் நிலை உள்ளது.

    பலவீனமான அரசுப்பள்ளிகளை வலுப்படுத்துவதற்கு பதிலாக மற்ற பள்ளிகளோடு இணைத்துவிட ஏற்பாடு உள்ளது. பிளஸ்-2 படித்து விட்டு கல்லூரிக்கு போக முடியும் என்ற நிலை மாற்றி அந்நிய மொழி தெரியாவிட்டால் உயர்கல்விக்கு செல்ல முடியாது என்ற நிலை புதிய கல்வி கொள்கையில் உள்ளது.

    இதனால் அனைத்து தரப்பினரும் உயர்கல்விக்கு செல்ல முடியாது. ஏற்கனவே உள்ள முன்னேறிய சமுதாயம்தான் செல்ல முடியும். தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எதிர்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்திற்கு உட்பட்ட 13கிராம மக்கள் நிலக்கரி கூடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.
    • நிலக்கரி குடோன் அமைந்தால் காற்று மாசுபடும், பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படும். இந்த பகுதியை சுற்றி ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். ஏற்கனவே மாசுவால் அவதியடைந்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் வெள்ளியம்பாளையம், புலவனூர், முத்துராண்டி பாளையம், வாய்ப்பாடி புதூர், முருகம்பாளையம், வேலாயுதம்பாளையம், பனியம்பள்ளி, கொமாரபாளையம், எளையாம்பாளையம், துலுக்கம் பாளையம், மாடுகட்டிபாளையம், கவுண்டம்பாளையம் ஆகிய 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர்

    அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

    எங்கள் பகுதியில் தனியார் நிறுவனம் பல நபர்களிடம் இருந்து நிலங்களை வாங்கி உள்ளது. எங்கள் பகுதி ஆடு, மாடு மேய்த்தல் மற்றும் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட பூமி ஆகும். இந்த பகுதியில் நிலக்கரி குடோன் அமைக்க முயற்சி நடத்துவதாக நாங்கள் அறிகிறோம்.

    இங்கு மேற்படி நிலக்கரி குடோன் அமைந்தால் காற்று மாசுபடும், பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படும். இந்த பகுதியை சுற்றி ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். ஏற்கனவே மாசுவால் அவதியடைந்து வருகின்றனர்.

    எனவே எங்கள் பகுதியில் நிலக்கரி குடோன் மற்றும் வேறு எந்த தொழிற்சாலையும் அமைக்க நடவடிக்கை எடுக்க கூடாது.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த இச்சிபாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து தேங்காய் நார் தொழிற்சாலை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர்.

    • மலையப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1991-1992-ம் ஆண்டில் 10- ம் வகுப்பு படித்த மாணவ -மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • முன்னாள் மாணவ- மாணவியர்கள் சங்கம் சார்பில் பள்ளிக்கு தேவையான கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதி செய்துதர முடிவு செய்யப்பட்டது.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள மலையப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1991-1992-ம் ஆண்டில் 10- ம் வகுப்பு படித்த மாணவ -மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் எம். செந்தில்குமார் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சரவணன்காந்தன், சரவணகுமார், ராஜூ, வசந்தாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியர்கள் பழனிச்சாமி, ராமலிங்கம், ஆறுமுகம், கல்யாணி, உஷாராணி, ருத்ரமூர்த்தி ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இதில் 30 வருடங்கள் கழித்து சந்தித்துக் கொண்ட மாணவ-மாணவியர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களுடைய பள்ளி பருவ நிகழ்வுகளையும் தற்போதைய குடும்ப நிகழ்வுகளையும் மகிழ்ச்சியையும் சந்தோஷமாக வெளிப்படுத்திக் கொண்டனர்.

    ஆசிரியர்கள் அப்பொழுது பள்ளி பருவத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து பேசினர்.

    பள்ளியில் படித்த நினைவாக மாணவி விஜயஸ்ரீ நினைவுப்பரிசு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஆசிரியர் மோகன், முன்னாள் மாணவர்கள் வேலுச்சாமி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவசாமி மற்றும் முன்னாள் மாணவ- மாணவியர்கள் 85 பேர் கலந்துகொண்டு குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    மேலும் முன்னாள் மாணவ- மாணவியர்கள் சங்கம் சார்பில் பள்ளிக்கு தேவையான கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதி செய்துதர முடிவு செய்யப்பட்டது.

    • ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 662 மாணவர்கள், 12 ஆயிரத்து 500 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 162 மாணவ-மாணவிகள் எழுதினர்.
    • இதில் மாணவர்களில் 10 ஆயிரத்து 316 பேரும், மாணவிகளில் 11 ஆயிரத்து 944 பேரும் என மொத்தம் 22,260 மாணவ -மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.46, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 95.55 என மொத்தம் 92.13 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வுகள் கடந்த மே மாதம் 10-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து மதிப்பெண்களை கணினியில் ஏற்றும் பணியும் முடிவடைந்தது.

    இதைத்தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் காலை 10 மணிக்கு பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியாகின. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 662 மாணவர்கள், 12 ஆயிரத்து 500 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 162 மாணவ-மாணவிகள் எழுதினர்.

    இதில் மாணவர்களில் 10 ஆயிரத்து 316 பேரும், மாணவிகளில் 11 ஆயிரத்து 944 பேரும் என மொத்தம் 22,260 மாணவ -மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.46, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 95.55 என மொத்தம் 92.13 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் 108 அரசு பள்ளிகளை சேர்ந்த 5,913 மாணவர்கள், 6,995 மாணவிகள் என மொத்தம் 12,908 பேர் பிளஸ்-1 பொதுத்தேர்வை எழுதினர். இதில் 4756 மாணவர்கள், 6475 மாணவிகள் என மொத்தம் 11,231 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 80.43, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 92.57 என மொத்த தேர்ச்சி விகிதம் 87.01 சதவீதமாகும்.

    பிளஸ்-1 பொதுத்தேர்வை 78 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 67 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

    மாணவ, மாணவிகளுக்கு தேர்வு முடிவுகளை எளிதில் அறியும் வகையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளில் சென்று தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர். மாணவர்களின் செல்போ னுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருந்தது.

    இன்னும் 4 நாட்களில் தற்காலிக மதிப்பெண் சான்றுகளை அந்தந்த பள்ளியில் மாணவர்கள் பெற்று கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • வேளாண்மையில் தரமான விதைகளை தேர்வு செய்து விதைப்பது அவசியம். இதற்கு விதை பரிசோதனை செய்யப்பட்ட சான்றளிக்கப்பட்ட விதைகளை தேர்வு செய்ய வேண்டும்.
    • விதைக்கும் முன் முளைப்பு திறன் பரிசோதனை செய்து தேர்ச்சி பெற்ற விதைகளை விதைத்தால் அதிக மகசூல் பெறலாம்.

    ஈரோடு:

    வேளாண்மையில் தரமான விதைகளை தேர்வு செய்து விதைப்பது அவசியம். இதற்கு விதை பரிசோதனை செய்யப்பட்ட சான்றளிக்கப்பட்ட விதைகளை தேர்வு செய்ய வேண்டும். விதைக்காக சேமிக்கப்பட்ட விதைகள் தரமானதா? என்பதை பரிசோதனை செய்து சேமித்து வைத்தல் அவசியமாகும்.

    இதன்படி ஆடிப்பட்டத்துக்கு தானிய பயிர்களை விதைக்கும் விவசாயிகள், நெல் பயிரில் ஐ.ஆர்.20, கோ–43, கோ–51, ஏ.டீ.டி.36, ஏ.டீ.டி.53, மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி, சி.ஆர்.1009 (சாவித்ரி), வி.ஜி.டி.1 ரகங்கள், மக்காசோளத்தில், கோ–6, கோ (எச்.எம்.,) 7, கோ (எச்.எம்.)8 ரகங்கள், சோளத்தில் கோ(எஸ்)8, கோ–30, பி.எஸ்.ஆர்.1, பையூர் 2 ரகங்கள், கம்பில் கோ– 7, கோ (சி.யூ.)9 போன்ற ரகங்களை இருப்பு வைத்துள்ள விவசாயிகள், விற்பனையாளர்கள், விதைக்கும் முன் முளைப்பு திறன் பரிசோதனை செய்து தேர்ச்சி பெற்ற விதைகளை விதைத்தால் அதிக மகசூல் பெறலாம்.

    விதை பரிசோதனைக்கு நெல்–50 கிராம், மக்காசோளம்– 500 கிராம், சோளம் –100 கிராம், கம்பு– 25 கிராம், ராகி– 25 கிராம், பாகல் மற்றும் புடலை 250 கிராம், பூசணி, சுரைக்காய், வெண்டை, தர்பூசணி– 100 கிராம், தக்காளி, காலிபிளவர், கத்தரி, வெங்காயம், முட்டைகோஸ், நுால்கோல், முள்ளங்கி, மிளகாய் – தலா, 10 கிராம் என வழங்க வேண்டும்.

    வேளாண் அலுவலர், விதை பரிசோதனை நிலையம், ஆனுார் கம்மன் காம்ப்ளெக்ஸ், 2-ம் தளம், 68 வீரபத்திர வீதி, சத்தி சாலை, ஈரோடு–-3 என்ற முகவரிக்கு விதைகளை அனுப்ப வேண்டும் என விதை பரிசோதனை அலுவலர் கேட்டு கொண்டார்.

    ×