search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய கல்வி கொள்கைக்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு உள்ளது- பிரின்ஸ் கஜேந்திரபாபு பேட்டி
    X

    தேசிய கல்வி கொள்கைக்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு உள்ளது- பிரின்ஸ் கஜேந்திரபாபு பேட்டி

    • மாணவர்களுக்கு நெருக்கடி கொடுத்து மாணவர்களை படிப்பில் இருந்து வெளியேற்றும் நிலை உள்ளது.
    • தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எதிர்ப்பு உள்ளது.

    ஈரோடு:

    ஈரோட்டில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தேசிய கல்வி கொள்கை என்பது சூழ்ச்சியான ஆவணம். கல்வியை பற்றி எதுவுமே பேசாமல் அதில் கல்விக் கொள்கை என கூறப்படுகிறது. இந்த ஆவணத்தை நிராகரித்து தான் தமிழக மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களிடம் வாக்குகளை பெற்ற தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்க குழு ஒன்றை அமைத்துள்ளது.

    மத்திய அரசு தேசியக் கல்வி கொள்கைக்கு மாற்றாக தமிழகத்தில் வேறொரு கல்விக்கொள்கை உருவாக்கி வரும் போது மத்திய அரசு தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்த கூடாது. இன்றைக்கு இருக்கும் கல்விமுறையில் 5 வயதில் ஒரு குழந்தையை சேர்க்கும்போது அந்த குழந்தையின் பெற்றோர்களுக்கு பாடம் குறித்து தெரிய வேண்டியதில்லை.

    மாணவ, மாணவிகள் விருப்பம் போல் பாடபிரிவுகளை தேர்வு செய்து பிளஸ்-2 முடித்து கல்லூரிக்கு சென்று விடலாம். ஏணி போன்ற அமைப்பு உள்ளது. இந்த ஏணி போன்ற அமைப்பை புதிய கல்வி கொள்கை சிதைத்து பல்வேறு வழிகளில் வடிகட்டும் முறை உள்ளது. மாணவர்களுக்கு நெருக்கடி கொடுத்து மாணவர்களை படிப்பில் இருந்து வெளியேற்றும் நிலை உள்ளது.

    பலவீனமான அரசுப்பள்ளிகளை வலுப்படுத்துவதற்கு பதிலாக மற்ற பள்ளிகளோடு இணைத்துவிட ஏற்பாடு உள்ளது. பிளஸ்-2 படித்து விட்டு கல்லூரிக்கு போக முடியும் என்ற நிலை மாற்றி அந்நிய மொழி தெரியாவிட்டால் உயர்கல்விக்கு செல்ல முடியாது என்ற நிலை புதிய கல்வி கொள்கையில் உள்ளது.

    இதனால் அனைத்து தரப்பினரும் உயர்கல்விக்கு செல்ல முடியாது. ஏற்கனவே உள்ள முன்னேறிய சமுதாயம்தான் செல்ல முடியும். தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எதிர்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×