என் மலர்tooltip icon

    ஈரோடு

    • சிறுமியிடம் இருந்து 8 முறைக்கு மேல் கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளது.
    • ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களை 15 நாட்களில் மாற்று ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை போலி ஆதார் கார்டு மூலம் பெற்றோரே, பெண் புரோக்கர் மூலம் தனியார் ஆஸ்பத்திரிகளில் விற்பனை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் சிறுமியை வளர்ப்பு தந்தையே பாலியல் பலாத்காரம் செய்ததும் இதற்கு உடந்தையாக அவரது தாய் இருந்ததும் தெரியவந்தது.

    மேலும் சிறுமியின் கருமுட்டையை ஈரோடு, பெருந்துறை மட்டும் அல்லாது சேலம், ஓசூர், ஆந்திர மாநிலம் திருப்பதி, கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் இயங்கும் தனியார் ஆஸ்பத்திரிகளில் விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இவ்வாறாக சிறுமியிடம் இருந்து 8 முறைக்கு மேல் கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் பணத்தை கொண்டு சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

    இதையடுத்து போலீசார் சிறுமியின் தாய், வளா்ப்பு தந்தை, புரோக்கராக செயல்பட்ட மாலதி, போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்த டிரைவர் ஜான் உட்பட 4 பேர் மீது போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக உயர்மட்ட மருத்துவ குழு டாக்டர் விஸ்வநாதன் தலைமையில் ஈரோடு வந்து, பாதிக்கப்பட்ட சிறுமியிடமும், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளிடமும் நேரடியாக விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையில் மாவட்ட காவல் துறை சார்பில், ஈரோடு ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி தலைமையில் தனி விசாரணை நடந்து வருகிறது. ஈரோடு, பெருந்துறை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள், ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.

    சிறுமியிடம் கரு முட்டை எடுத்தது தொடர்பாக சேலம், ஓசூர், கேரள மாநிலம் திருவனந்தபுரம், ஆந்திர மாநிலம் திருப்பதி ஆகிய இடங்களில் இயங்கும் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகிகள், மருத்துவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஈரோடு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து டாக்டர் விசுவநாதன் தலைமையிலான அதிகாரிகள் ஜெயிலில் இருக்கும் சிறுமியின் தாய் ,வளர்ப்பு தந்தை, புரோக்கர், போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்தவர் என நான்கு பேரிடமும் நேரடியாக சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணை அறிக்கை அனைத்தும் அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    அதன் அடிப்படையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது 16 வயது சிறுமியிடம் சட்டத்துக்கு புறம்பாக கருமுட்டை பெற்றது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக ஈரோடு, சேலத்தில் உள்ள சுதா ஆஸ்பத்திரி, பெருந்துறையில் உள்ள ராம் பிரசாத் ஆஸ்பத்திரி மற்றும் ஓசூர் விஜய் ஆஸ்பத்திரி ஆகிய நான்கு ஆஸ்பத்திரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.

    இந்த ஆஸ்பத்திரிகளில் உள்ள ஸ்கேன் மையம் உடனடியாக சீல் வைக்கப்படும் எனவும், நோயாளிகளை 15 நாட்களுக்குள் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தார்.

    இதன்படி நேற்று ஈரோடு மாவட்ட மருத்துவ மற்றும் நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் பிரேம குமாரி தலைமையில் குடும்ப நல துணை இயக்குனர் டாக்டர் ராஜசேகரன், ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணியம், வீரப்பன் சத்திரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நிர்மலா மற்றும் அதிகாரிகள் சுதா ஆஸ்பத்திரியில் ஸ்கேன் மையத்துக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

    மதியம் 2 மணி அளவில் மருத்துவக் குழுவினர் சுதா மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு ஸ்கேன் கருவிகளை அதிகாரிகள் பார்வையிட்டனர். ஸ்கேன் மையத்தில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தனர். இந்த பணி இரவு முழுவதும் நடந்தது. மொத்தம் 5 ஸ்கேன் கருவி மையத்திற்கும் அதன் அறைக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    நேற்று மதியம் தொடங்கிய இந்த பணி அதிகாலை 3.30 மணி வரை விடிய விடிய நீடித்தது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர். இந்த ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களை 15 நாட்களில் மாற்று ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    எனவே 15 நாட்கள் கால கெடு முடிந்த பிறகு மீண்டும் குழுவினர் இங்கு வந்து ஆஸ்பத்திரிக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். இதைத் தொடர்ந்து புகாருக்கு உள்ளான மற்றொரு ஆஸ்பத்திரியான பெருந்துறையில் உள்ள ராம்பிரசாத் ஆஸ்பத்திரிக்கு இன்று ஈரோடு மாவட்ட மருத்துவம் மற்றும் நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் பிரேம குமாரி தலைமையில் குழுவினர் சென்று அங்குள்ள ஸ்கேன் மையத்துக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.

    இதேப்போல் அங்கு தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளை 15 நாட்களுக்குள் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • கர்நாடக மாநிலத்தில் பருவ மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
    • காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு:

    கர்நாடக மாநிலத்தில் பருவ மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தொடர்ந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 120 அடியை எட்டியது.

    இதையடுத்து அணையில் இருந்து பாசன தேவைக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், உள்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவேரி கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில், அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, பெருபள்ளம், சின்ன பள்ளம், பவானி, பி.பி. அக்ரஹாரம் கருங்கல்பாளையம் கொடுமுடி ஆகிய பகுதியில் உள்ள காவிரி ஆற்று கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவுறுத்தல் பேரில் இன்று கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரை பகுதியில் வருவாய்த் துறையினர் வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    காவிரி ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றில் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ மீன் பிடிக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டது. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது கிராம நிர்வாக அலுவலர்கள் சுதா பிரியா, சம்பத்குமார், சுரேஷ் உடன் இருந்தனர்.

    இதை போல் பவானி கரையை ஒட்டிய தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பவானி தாசில்தார் முத்துக்கிருஷ்ணன் முன்னிலையில் வருவாய் துறை சார்பில் தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டது.

    இதேபோல் அம்மாபேட்டை, கொடுமுடி பகுதிகளில் உள்ள காவேரி கரை பகுதி மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    • கொத்து புரோட்டா, சிக்கன் ரைஸ், ஆம்லெட் ஆகியவற்றை பார்சலாக வீட்டிற்கு வாங்கி சென்றனர்.
    • கொத்து புரோட்டா சாப்பிட்ட வாலிபர் இறந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சித்தோடு:

    ஈரோடு ஆர்.என்.புதூர் மரவபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர் (24). இவர் கங்காபுரம் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பூவிழி (24).

    சம்பவத்தன்று வார விடுமுறை என்பதால் சுரேந்தர் தனது மனைவியுடன் ஈரோடு பெரியார்நகர் பகுதியில் உள்ள தனது பெரியம்மா வீட்டிற்கு வந்தார். பின்னர் மாலை மீண்டும் மரவபாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அவர்கள் ஆர்.என்.புதூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றனர்.

    அங்கு கொத்து புரோட்டா, சிக்கன் ரைஸ், ஆம்லெட் ஆகியவற்றை பார்சலாக வீட்டிற்கு வாங்கி சென்றனர்.

    வீட்டிற்கு சென்ற பின்னர் ஓட்டலில் இருந்து வாங்கி வந்த கொத்து புரோட்டாவை சுரேந்தர் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். திடீரென இரவு 11.30 மணி அளவில் சுரேந்தர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார்.

    இதையடுத்து அவரது மனைவி பக்கத்து வீட்டை சேர்ந்த தினேஷ் என்ற நபருடன் மோட்டார் சைக்கிளில் சுரேந்தரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது செல்லும் வழியிலேயே சுரேந்தர் மயங்கி விழுந்தார்.

    பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது சுரேந்தரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி கதறி அழுதார்.

    கொத்து புரோட்டா சாப்பிட்ட வாலிபர் திடீரென இறந்தது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சுரேந்தர் கொத்து புரோட்டா, சிக்கன் ரைஸ், ஆம்லெட் வாங்கிய ஓட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். கொத்து புரோட்டா சாப்பிட்ட வாலிபர் இறந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 6 மாதத்தில் கல்லூரி மாணவர்கள் ரூ.4 லட்சம் வரை பணத்தை பெற்றுக் கொண்டு உல்லாசமாக சுற்றி திரிந்தது தெரியவந்தது.
    • இதையடுத்து போலீசார் 3 மாணவர்களையும் கைது செய்து ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர். மேலும் தலைமறைவான 2 மாணவர்களையும் தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோட்டைச் சேர்ந்த 2 வாலிபர்கள் சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் செய்தனர்.

    அந்த புகாரில் 2 இணையதள முகவரியில் ஒரு செல்போன் எண் பதிவாகி இருந்தது. அதில் உல்லாசமாக இருக்க இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நாங்கள் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டோம். முதலில் எங்களது அழைப்பை எடுக்கவில்லை.

    சிறிது நேரம் கழித்து அதே நம்பரில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசியவர்கள் நீங்கள் எங்களை உல்லாசத்துக்கு அழைத்தீர்கள் என்று கூறி எங்களை மிரட்டினார்கள். மேலும் உங்கள் மீது போலீசில் புகார் செய்ய உள்ளோம் என்று கூறினார்கள். மேலும் போலீசில் புகார் செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் எங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டினர். இதையடுத்து பயந்து போன நாங்கள் அவர்களுக்கு பணத்தை செலுத்தினோம். மறுநாள் வேறு ஒரு நம்பரில் இருந்து நாங்கள் போலீசார் பேசுகிறோம் உங்கள் மீது ஒரு புகார் வந்து உள்ளது. எனவே பணம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.

    இதை உண்மை என்று நம்பி அவர்கள் தெரிவித்த வங்கி கணக்குக்கு ரூ.85 ஆயிரத்தை செலுத்தினோம்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறி இருந்தனர்.

    இதையடுத்து ஈரோடு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட இணையதளத்தில் சென்று போலீசார் செல்போன் எண்ணை கைப்பற்றினர்.

    இதையடுத்து போலீசார் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்தனர். அப்போது அவர்கள் கோவையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது இந்த சம்பவத்தில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 3 மாணவர்களை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் வேறு ஒருவரின் பெயரில் போலியாக சிம்கார்டு வாங்கி பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் 2 இணையதள முகவரியில் செல்போன் எண்களை பதிவிட்டு உல்லாசத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளனர்.

    இதை உண்மை என நம்பி இந்த செல்போன் எண்களை தொடர்பு கொள்பவர்களை போலீசில் சொல்லி நடவடிக்கை எடுப்பதாக கூறி ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பணம் பறித்தது தெரிய வந்தது.

    கடந்த 6 மாதத்தில் இவர்கள் ரூ.4 லட்சம் வரை இதுபோல் பணத்தை பெற்றுக் கொண்டு உல்லாசமாக சுற்றி திரிந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 3 மாணவர்களையும் கைது செய்து ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர். மேலும் தலைமறைவான 2 மாணவர்களையும் தேடி வருகின்றனர்.

    இந்த கும்பலிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பலர் போலீசில் புகார் செய்யாமல் இருந்ததால் இவர்கள் இந்த வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்து உள்ளனர்.

    • கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்து அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறலாம்.
    • தமிழ்நாடு பனை மர தொழிலாளர்கள் நலவாரியத்தில் www.tnuwwb.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பித்து உறுப்பினராக பதிவு செய்யலாம்.

    ஈரோடு:

    தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் சமூக பாதுகாப்பு நலவாரியத்தில் 18 வகையான தொழிலாளர் நலவாரியங்கள் செயல்படுகிறது.

    இதில் பல்வேறு வகையான கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்து அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறலாம்.பனை மரம் சார்ந்த தொழிலாளர்கள், தமிழ்நாடு பனை மர தொழிலாளர்கள் நலவாரியத்தில் www.tnuwwb.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பித்து உறுப்பினராக பதிவு செய்யலாம்.

    5 ஆண்டுக்கு ஒரு முறை உறுப்பினர் பதிவை புதுப்பிக்க வேண்டும். உறுப்பினர்களுக்கு திருமணம், மகப்பேறு, குழந்தைகளுக்கு கல்வி நிதி உதவி, கண் கண்ணாடி, நியமனதாரருக்கு இயற்கை மரணம் மற்றும் விபத்து மரண உதவித்தொகை, 60 வயது நிறைவு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் போன்றவை வழங்கப்படும்.

    ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண், அசல் ஆதார் அட்டை, அசல் ரேஷன்கார்டு, பாஸ்போர்ட் அளவு போட்டோ, வங்கி கணக்கு புத்தகம், வயதுக்கான ஆவணங்களை www.tnuwwb.in என்ற இணைய தளம் மூலம் பதிவு செய்யலாம்.

    கூடுதல் விபரத்தை, 0424 2275591, 2275592 என்ற எண்ணில் அறியலாம். இந்த தகவலை தொழி லாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • ஈரோடு பஸ் நிலைய பகுதியில் கடந்த சில நாட்களாக இவ்வாறாக முறை யில்லாமல் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்களை மர்ம நபர்கள் கள்ள சாவி போட்டு திருடிவிட்டு சென்றுவிடும் சம்பவம் நடந்துள்ளது.
    • இதனை தடுக்கும் வகையில் பஸ் நிலையத்தில் முறை யில்லாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து தினமும் 600-க்கும் மேற்பட்ட உள்ளூர், வெளி மாவட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பஸ் நிலையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

    இதில் வெளியூர், தொலைதூரத்தில் இருந்து வருபவர்கள் ஈரோடு பஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வருகின்றனர். இவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்கு வசதியாக மாநகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் சத்தி ரோடு மற்றும் மினி பஸ் ரேக் கீழ் பகுதிகளில் சைக்கிள் நிறுத்தம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு வெளியூர், தொலைதூரத்தில் இருந்து வருபவர்கள் தங்களது சைக்கிள், மோட்டார் சைக்கிளை நிறுத்தி வருகின்றனர். இதற்காக மாநகராட்சி சார்பில் அவர்களிடம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த சில தினங்களாகவே சைக்கிள், மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் அதனை முறையாக சைக்கிள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தாமல் தங்கள் மனப்போக்கில் பஸ் நிலைய கடைப்பகுதியில் முன்புறமும், ஓரமாகவும் ஆங்காங்கே நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர்.

    இதனை நோட்டமிடும் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள்களை கள்ள சாவி போட்டு திருடி செல்கின்றனர். பஸ் நிலைய பகுதியில் கடந்த சில நாட்களாக இவ்வாறாக முறை யில்லாமல் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள், மற்றும் சைக்கிள்களை மர்ம நபர்கள் கள்ள சாவி போட்டு திருடிவிட்டு சென்றுவிடும் சம்பவம் நடந்துள்ளது. இது சம்பந்தமாக போலீஸ் நிலையத்திலும் புகார்கள் வருகின்றன.

    இதனை அடுத்து ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் பஸ் நிலையத்திற்கு வந்து திடீர் சோதனை செய்தனர். அதில் முறையில்லாமல் ஆங்காங்கே மோட்டார் சைக்கிள், சைக்கிள்களை சிலர் நிறுத்தி வைத்தி ருந்தனர். அந்த மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்து மோட்டார் சைக்கிள் நிறுத்தும் பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    மேலும் மோட்டார் சைக்கிள் சாவியை போலீசார் எடுத்து வைத்து ள்ளனர். சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் போலீசாரிடம் தெரிவித்து தங்களது சாவிகளை வாங்கிக் கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் கூறியதாவது:

    ஈரோடு பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் நிறுத்துவதற்கு என்று மாநகராட்சி சார்பில் மோட்டார் சைக்கிள் நிறுத்தம் செயல்பட்டு வருகிறது. இங்கு சிலர் முறையாக வாகனங்களை நிறுத்தி செல்கிறார்கள்.

    ஆனால் கடந்த சில நாட்களாகவே பஸ் நிலையத்துக்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை முறையாக நிறுத்தாமல் ஆங்காங்கே கடை முன்பும் ஓரமாகவும் நிறுத்திவிட்டு செல்கின்றனர். பின்பு மாலை வந்து வாகனங்களை எடுத்து விட்டு செல்கிறார்கள்.

    இதனை நோட்டமிடும் மர்ம நபர்கள் கள்ள சாவிகளை போட்டு வாகனங்களை திருடும் சம்பவம் நடந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பஸ் நிலையத்தில் முறை யில்லாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
    • கடன் விண்ணப்பங்களை கே.சிகருப்பண்ணன் எம்.எல்.ஏ. 30-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கினார்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.

    ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் என். கிருஷ்ணராஜ் தலைமையில் நடந்தது. முன்னதாக கிளை மேலாளர் வேலுமணி வரவேற்றார்.

    கடன் விண்ணப்பங்களை  கே.சி.கருப்பண்ணன் எம்.எல்.ஏ. 30-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பவானி யூனியன் சேர்மன் பூங்கோதை, கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவா தங்கமணி, மேலாளர்கள் லோகமுத்து, தர்மலிங்கம், கவுந்தி டெக்ஸ் மேலாளர் தண்டபாணி, டாக்டர் மனோகரன், ஜான், தட்சிணாமூர்த்தி, ஜெகதீஷ், ஆறுமுகம், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். முடிவில் மேற்பார்வையாளர் ராஜேஸ்வரன் நன்றி கூறினார்.

    • வனப்பகுதியில் இருந்து வந்த கருப்பன் என்ற ஒற்றை காட்டு யானை தோட்டத்துக்குள் புகுந்தது. தொடர்ந்து அந்த யானை அங்கு சாகுபடி செய்யப்பட்ட வாழையை திண்று மிதித்து சேதப்படுத்தியது.
    • வனத்துறையினர் விரைவில் கும்கி யானை உதவியுடன் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதிகளில் ஏரா ளமான வன விலங்கு கள் உள்ளன.

    இந்த வனப்பகுதி களில் இருந்து உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி வெளியேறி அருகே உள்ள விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகிவருகிறது .

    இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட மல்குத்திபுரம் கிராமத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி (60). இவர் தனது 3 ஏக்கர் தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார்.

    இந்த நிலையில் இரவு 12 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வந்த கருப்பன் என்ற ஒற்றை காட்டு யானை தோட்டத்துக்குள் புகுந்தது. தொடர்ந்து அந்த யானை அங்கு சாகுபடி செய்யப்பட்ட வாழையை திண்று மிதித்து சேதப்படுத்தியது.

    இந்த சத்தம் கேட்டு அங்கு வந்த விவசாயி திருமூர்த்தி ஒற்றை காட்டு யானை பயிர்களை சேதாரம் செய்வது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி வனத்துறைக்கும் மற்றும் விவசாயிகளுக்கும் தகவல் அளித்தார்.

    பின்னர் விவசாயிகள் ஒன்று சேர்ந்து யானையை விரட்டினர். ஆனால் யானைகள் வாழைகளை சேதப்படுத்தி கொண்டு இருந்தது. சுமார் 1 மணி நேரத்திக்கு பிறகு யானை வனப்பகுதிக்கு சென்றது.

    இதில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 300 வாழைகள் சேதம் ஆனது. கருப்பன் என்ற ஆட்கொல்லி யானையை விரட்ட 2 கும்கி யானைகள் வனப்பகுதியில் உள்ளது.

    இந்த நிலையில் கும்கி யானை உள்ள பகுதியிலயே கருப்பன் யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய தோட்டத்தில் புகுந்து நாசம் செய்தது விவசாயிகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே வனத்துறையினர் விரைவில் கும்கி யானை உதவியுடன் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பரிசல் இயக்க முடியவில்லை. இதனால் தெங்குமரஹடா பகுதி மக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கிராமத்துக்குளே முடங்கி கிடக்கின்றனர்.
    • இதன் காரணமாக இன்று பஸ்சில் பயணிகள் யாரும் ஏறவில்லை. இதனால் பஸ் பயணிகள் இன்றி வெறிச்சோடி மீண்டும் திரும்பி சென்றது.

    சத்தியமங்கலம், ஜூலை. 15-

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் தெங்குமரஹடா, கள்ளம்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள் தான்.

    இங்குள்ள மக்கள் பிழைப்புக்காகவும், வியாபாரத்துக்காகவும் மாயாற்றை பரிசல் மூலம் கடந்து தான் சத்தியமங்கலம் செல்ல வேண்டும்.

    இந்த பகுதி மக்கள் வசதிக்காக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து தினமும் அரசு பஸ் தெங்குமரஹடா மாயாற்று பகுதிக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த பஸ் மேட்டுப்பா ளையம், பவானிசாகர் வழியாக தெங்குமரஹடா பகுதிக்கு தினமும் காலை நேரத்தில் வந்து செல்லும். அப்போது கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் மாயாற்றை பரிசலில் கடந்து அங்கு தயாராக நிற்கும் பஸ்சில் ஏறி சத்தியமங்கலம் செல்வார்கள்.எப்போதும் இந்த பஸ் கூட்டம் நிறைந்து காணப்படும்.

    இந்நிலையில் தொடர் மழை காரணமாக மாயாற்றில் கடந்த சில நாட்களாக வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பரிசல் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் விவசாயிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இன்று வழக்கம் போல் கோத்தகிரியில் இருந்து அரசு பஸ் தெங்குமரஹடா மாயாற்று பகுதிக்கு வந்தது.

    ஆனால் தற்போது மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பரிசல் இயக்க முடியவில்லை. இதனால் தெங்குமரஹடா பகுதி மக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கிராமத்துக்குளே முடங்கி கிடக்கின்றனர்.

    இதன் காரணமாக இன்று பஸ்சில் பயணிகள் யாரும் ஏறவில்லை. இதனால் பஸ் பயணிகள் இன்றி வெறிச்சோடி மீண்டும் திரும்பி சென்றது.

    • ஈரோடு-கரூர் மெயின் ரோட்டில் சோளக் காளிபாளையம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே உள்ள பெரிய வட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி (52). இவரது மனைவி லட்சுமி (47). கணவன்-மனைவி இருவரும் கொடுமுடி கடை வீதியில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.

    ஈரோடு-கரூர் மெயின் ரோட்டில் சோளக் காளிபாளையம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பழனிசாமி, லட்சுமி நிலை தடுமாறி கிழே விழுந்தனர். இதில் லட்சுமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாகமாக இறந்தார்.

    இதில் பழனிசாமி படு காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் பழனிசாமியை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரி விக்க ப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் லட்சுமி உடலை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படை க்கப்பட்டது.

    இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் தலா 40 விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
    • காளான் வளர்ப்பு தொழில்நுட்பம் விற்பனை விபரங்கள் மற்றும் காளான் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் போன்ற விபரங்களை தெளிவாக கூறப்பட்டது.

    கொடுமுடி:

    கொடுமுடி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருகிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் கொளத்துப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பெரும்மாம்பாளையம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் தலா 40 விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.

    வேளாண்மை உதவி இயக்குநர் யசோதா தலைமையில் நடைபெற்றது. சிவகிரி கோவில்பாளையத்தில் செயல்பட்டு வரும் காளான் பண்ணையின் உரிமையாளர் இளங்கோ காளான் வளர்ப்பு தொழில்நுட்பம் விற்பனை விபரங்கள் மற்றும் காளான் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் போன்ற விபரங்களை தெளிவாக கூறினார்.

    விதை சான்று மற்றும் அங்கக சான்று துறையின் மூலம் விதை சான்று அலுவலர் ஹேமாவதி கலந்துக்கொண்டு அங்கக வேளாண்மை மற்றும் அங்கக சான்றுகள்வழங்கும் முறைகள் பற்றிய விபரங்களை தெளிவாக எடுத்துரைத்தார்.

    வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையின் சார்பாக உதவி வேளாண்மை அலுவலர் அரவிந்த் கலந்து கொண்டு உழவர் சந்தை செயல்படும் முறைகள் உழவர் சந்தை அட்டைகள் பெறப்படும் முறைகள் மற்றும் பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் தொழில்கள் பற்றிய விபரங்களை தெளிவாக எடுத்துரைத்தார்.

    உதவி வேளாண்மை அலுவலர் நாகராஜ் கலந்து கொண்டு துறையின் மானிய திட்டங்களை பற்றி விளக்கினர். தொழில்நுட்ப மேலாளர் கிருத்திகா கலந்து கொண்டு பயிற்சிக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் உதவித்தொகை வழங்கும் முகாம் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பெருந்துறை கிளையில் நடைபெற்றது.
    • இந்த முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் உதவித்தொகை வழங்கும் முகாம், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பெருந்துறை கிளையில் நடைபெற்றது.

    கிளை மேலாளர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    முகாமில் சிறப்பு அழைப்பாளராக பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் உதவி தொகை மற்றும் உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் அப்புகுட்டி (எ) வெங்கடாஜலபதி, பெருந்துறை பேரூராட்சி கவுன்சிலர் அருணாச்சலம், கல்யாணசுந்தரம், மாவட்ட பொருளாளர் மணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    ×