என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கொத்து புரோட்டா சாப்பிட்ட வாலிபர் திடீர் உயிரிழப்பு
- கொத்து புரோட்டா, சிக்கன் ரைஸ், ஆம்லெட் ஆகியவற்றை பார்சலாக வீட்டிற்கு வாங்கி சென்றனர்.
- கொத்து புரோட்டா சாப்பிட்ட வாலிபர் இறந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சித்தோடு:
ஈரோடு ஆர்.என்.புதூர் மரவபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர் (24). இவர் கங்காபுரம் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பூவிழி (24).
சம்பவத்தன்று வார விடுமுறை என்பதால் சுரேந்தர் தனது மனைவியுடன் ஈரோடு பெரியார்நகர் பகுதியில் உள்ள தனது பெரியம்மா வீட்டிற்கு வந்தார். பின்னர் மாலை மீண்டும் மரவபாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அவர்கள் ஆர்.என்.புதூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றனர்.
அங்கு கொத்து புரோட்டா, சிக்கன் ரைஸ், ஆம்லெட் ஆகியவற்றை பார்சலாக வீட்டிற்கு வாங்கி சென்றனர்.
வீட்டிற்கு சென்ற பின்னர் ஓட்டலில் இருந்து வாங்கி வந்த கொத்து புரோட்டாவை சுரேந்தர் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். திடீரென இரவு 11.30 மணி அளவில் சுரேந்தர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார்.
இதையடுத்து அவரது மனைவி பக்கத்து வீட்டை சேர்ந்த தினேஷ் என்ற நபருடன் மோட்டார் சைக்கிளில் சுரேந்தரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது செல்லும் வழியிலேயே சுரேந்தர் மயங்கி விழுந்தார்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது சுரேந்தரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி கதறி அழுதார்.
கொத்து புரோட்டா சாப்பிட்ட வாலிபர் திடீரென இறந்தது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சுரேந்தர் கொத்து புரோட்டா, சிக்கன் ரைஸ், ஆம்லெட் வாங்கிய ஓட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். கொத்து புரோட்டா சாப்பிட்ட வாலிபர் இறந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






