என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு- ஈரோடு மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- கர்நாடக மாநிலத்தில் பருவ மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
- காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு:
கர்நாடக மாநிலத்தில் பருவ மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தொடர்ந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 120 அடியை எட்டியது.
இதையடுத்து அணையில் இருந்து பாசன தேவைக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், உள்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவேரி கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, பெருபள்ளம், சின்ன பள்ளம், பவானி, பி.பி. அக்ரஹாரம் கருங்கல்பாளையம் கொடுமுடி ஆகிய பகுதியில் உள்ள காவிரி ஆற்று கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவுறுத்தல் பேரில் இன்று கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரை பகுதியில் வருவாய்த் துறையினர் வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
காவிரி ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றில் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ மீன் பிடிக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டது. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது கிராம நிர்வாக அலுவலர்கள் சுதா பிரியா, சம்பத்குமார், சுரேஷ் உடன் இருந்தனர்.
இதை போல் பவானி கரையை ஒட்டிய தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பவானி தாசில்தார் முத்துக்கிருஷ்ணன் முன்னிலையில் வருவாய் துறை சார்பில் தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டது.
இதேபோல் அம்மாபேட்டை, கொடுமுடி பகுதிகளில் உள்ள காவேரி கரை பகுதி மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.






