என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த 8 நாட்களில் மட்டும் 9 அடி உயர்ந்துள்ளது.
    • பவானிசாகர் உதவி செயற்பொறியாளர் வெள்ள அபாய எச்சரிக்கை விட்டு உள்ளார்.

    ஈரோடு:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதேபோல் பில்லூர் அணைப்பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருவதால் பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு மேலும் நீர் வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் இன்று பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 14,894 கனஅடி நீர் வருகிறது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த 8 நாட்களில் மட்டும் 9 அடி உயர்ந்துள்ளது.

    இன்று காலை 9 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.56 அடியாக உள்ளது. அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 900 கன அடி, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 1,005 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இன்னும் சில தினங்களில் அணை 100 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே பவானிசாகர் உதவி செயற்பொறியாளர் வெள்ள அபாய எச்சரிக்கை விட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    தென்மேற்கு பருவ மழை காரணமாக அடுத்த ஓரிரு தினங்களுக்குள் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் எனவே எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அதில் கேட்டுக்கொண்டு உள்ளார்.

    இதேபோல் மாவட்டத்தின் பிரதான அணையான வரட்டுப்பள்ளம் அணையின் மொத்த கொள்ளளவு 33. 50 அடி ஆகும். தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் வரட்டுபள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 33.57 அடியாக உள்ளது.

    இதேபோல் 41.75 அடியாக இருக்கும் குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.79 அடியாகவும், 30.84 அடியாக இருக்கும் பெரும் பள்ளம் அணையின் நீர்மட்டம் இந்த காலை நிலவரப்படி 18.83 அடியாக உள்ளது.

    • செங்கரைப்பா ளையத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஊராட்சிமன்ற தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
    • 1,600 வீடுகளுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து வைப்பதற்காக குப்பைத்தொட்டிகளை வழங்கி பேசினார்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அடுத்த குளூர் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குப்பைத்தொட்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    செங்கரைப்பா ளையத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஊராட்சிமன்ற தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஒன்றியகுழு தலைவர் கணபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழை ப்பாளராக மாவட்ட கூடுதல் கலெக்டர் மதுபாலன் கலந்து கொண்டு கிராமங்கள்தோறும் தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் ஊராட்சியில் உள்ள சுமார் 1,600 வீடுகளுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து வைப்பதற்காக குப்பைத்தொட்டிகளை வழங்கி பேசினார்.

    இதில் தோட்டக்காடு நல்லப்பகவுண்டர் அறக்கட்டளை நிர்வாகிகள், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சரோஜா, ஊராட்சி செயலாளர் வெ ங்கடாசலம், வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் மண்டல துணை தாசில்தார் கலைவாணி நன்றி கூறினார்.

    • ஒரத்துப்பாளையம் அணைக்கு நேற்று நொய்யல் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்ததால் ஒரே நாளில் 10 அடி நீர்மட்டம் உயர்ந்தது.
    • இதனால் நொய்யல் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    சென்னிமலை:

    மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கோவை, நீலகிரி மாவட்ட ங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதையொட்டி சென்னி மலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணைக்கு நேற்று நொய்யல் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்ததால் ஒரே நாளில் 10 அடி நீர்மட்டம் உயர்ந்தது.

    நேற்று காலை 6 மணியளவில் அணையில் 2. 5 அடி தண்ணீர் மட்டுமே இருந்தது. ஆனால், நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நேற்று பகலில் தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. படிப்படியாக மாலையில் அணையின் நீர் மட்டம் உயர்ந்தது. இதனால் நேற்று மாலை 6 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 1100 கன அடி தண்ணீர் நீர்வரத்து வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டது. அணையின் நீர்மட்டம் 11 அடியாக உயர்ந்தது. இரவு 8 மணியளவில் அணையின் நீர்மட்டம் 12 அடியாக உயர்ந்தது.

    அணைக்கு வினாடிக்கு 1200 கனஅடி நீர்வரத்து இருந்தது. 450 கனஅடி தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டது. டி.டி.எஸ். உப்புத் தன்மை 1800 ஆக இருந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்தது. அதிக அளவு வெள்ளப்பெருக்கால் நீர்வரத்து அதிகரித்ததால் ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் மதகுகளில் வெளியேற்றப்பட்டது.

    இதனால் நொய்யல் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

    • கோபி மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், வெள்ளியங்கிரி மற்றும் பங்களாப்புதூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் உள்பட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • சந்திரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் ரசாயனம் கலந்த கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த வேட்டுவன்புதூர் மாதேஸ்வரன் கோவில் அருகே கோபி மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், வெள்ளியங்கிரி மற்றும் பங்களாப்புதூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் உள்பட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகம்படும்படி வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் கொங்கர்பாளையம் இந்திரா நகரை சேர்ந்த சந்திரன் (47) என்பதும், சந்திரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் ரசாயனம் கலந்த கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் சந்திரனை கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சா, மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • காதலில் உறுதியாக இருந்த தங்கத்துரை, நர்மதா வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
    • இதுகுறித்து விசாரித்த மகளிர் போலீசார் இரு வீட்டு பெற்றோருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

    ஈரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி, தம்பிதோட்டம் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை (24). டிப்ளமோ முடித்து பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் நர்மதா (23) பி.எஸ்.சி. பட்டதாரி. 2 பேரும் ஒரே பகுதி என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டு பெற்றோர்களுக்கும் தெரிய வந்தது. இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் தங்களது காதலில் உறுதியாக இருந்த தங்கத்துரை, நர்மதா வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி கடந்த 13-ந் தேதி 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பெற்றோர்களால் அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்த தங்கதுரை, நர்மதா தம்பதிகள் இன்று ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    இதையடுத்து அவர்களை ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்திற்கு செல்ல போலீசார் அறிவுறுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து தங்கதுரை, நர்மதா மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.

    இதுகுறித்து விசாரித்த மகளிர் போலீசார் இரு வீட்டு பெற்றோருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் வந்ததும் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.

    • பந்துவீச்சில் பும்ரா, யசுவேந்திர சாஹல், முகமது ஷமி ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.
    • கேப்டன் பட்லர், ஜேசன்ராய், பென் ஸ்டோக்ஸ், மொய்ன் அலி, லிவிங்ஸ்டன் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர்.

    மான்செஸ்டர்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் நாளை நடக்கிறது.

    ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருந்தது. பும்ராவின் அபாரமான பந்து வீச்சும், ரோகித்சர்மாவின் அதிரடியான பேட்டிங்காலும் எளிதாக இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது.

    ஆனால் 2-வது போட்டியில் இந்திய வீரர்கள் ஆட்டம் மிகவும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. 247 ரன் இலக்கை எடுக்க முடியாமல் 146 ரன் வித்தியாசத்தில் சுருண்டு 100 ரன்னில் மோசமான தோல்வியை தழுவியது.

    இதில் இருந்து மீண்டு இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது.

    முன்னாள் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதனால் அவர் மிகுந்த நெருக்கடியில் உள்ளார். கேப்டன் ரோகித் சர்மா அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்.

    இந்திய அணியின் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டயா, ஜடேஜா, ரோகித்சர்மா, தவான் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ரிஷப் பண்ட் தொடர்ந்து மோசமாக ஆடி வருகிறார். டெஸ்ட் போட்டிக்கு பிறகு அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

    பந்துவீச்சில் பும்ரா, யசுவேந்திர சாஹல், முகமது ஷமி ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    மிகவும் முக்கியமான இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாடுவது அவசியமாகும்.

    முதல் ஆட்டத்தில் மோசமாக ஆடிய பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அதில் இருந்து மீண்டு 2-வது போட்டியில் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது. அதே உத்வேகத்துடன் விளையாடி 3-வது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் வேட்கையில் இங்கிலாந்து அணி உள்ளது.

    கடந்த போட்டியில் இந்தியாவின் சரிவுக்கு வேகப்பந்து வீரர் ரீஸ் டாப்லே காரணமாக இருந்தார். அவர் நாளைய ஆட்டத்திலும் இந்திய பேட்ஸ் மேன்களுக்கு சவாலாக திகழ்வார்.

    கேப்டன் பட்லர், ஜேசன்ராய், பென் ஸ்டோக்ஸ், மொய்ன் அலி, லிவிங்ஸ்டன் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர்.

    இரு அணிகளும் இதுவரை 105 முறை ஒருநாள் போட்டியில் மோதி உள்ளன. இதில் இந்தியா 56-ல், இங்கிலாந்து 44-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டி 'டை' ஆனது. 3 போட்டி முடிவு இல்லை.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி டென் டெலிவிசன் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • ஈரோடு மாவட்டத்தில் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 150 அரிசி ஆலைகள் ஈடுபட்டுள்ளன.
    • போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் 40 ஆயிரம் டன் அரிசி அரைக்கப்படுவது பாதிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மீது மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதித்துள்ளது. இதனால் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    இந்நிலையில் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், உணவு பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஜிஎஸ்டியை திரும்ப பெறக்கோரியும் அகில இந்திய அளவில் அரிசி, கோதுமை மற்றும் பருப்பு ஆலை உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

    ஈரோடு மாவட்டத்தில் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 150 அரிசி ஆலைகள் ஈடுபட்டுள்ளன. இதே போல அரிசி விற்பனை கடைகள் 400-க்கும் மேற்பட்டவை பூட்டப்பட்டுள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு அரிசி ஆலை உரிமை யாளர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவர் கந்தசாமி கூறியதாவது:-

    மத்திய அரசு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதித்துள்ளது. இதனால் உணவு பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அரிசி விலை மட்டும் கிலோ ஒன்றுக்கு ரூ.3 முதல் 5 வரை உயர வாய்ப்பு உள்ளது. இதனால் நுகர்வோர்கள் பாதிக்கப்படுவார்கள்.

    இதை திரும்ப பெறக்கோரி இன்று அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி விற்பனை வியாபாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மாநிலம் முழுவதும் 4 ஆயிரம் அரிசி ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 150 அரிசி ஆலைகள், 400 அரிசி கடைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்று வருகின்றன. ஒரு அரிசி ஆலையில் நாளொன்றுக்கு சராசரியாக 10 டன் அரிசி அரைக்க ப்படும். போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் 40 ஆயிரம் டன் அரிசி அரைக்கப்படுவது பாதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், முன்கள பணியாளர்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
    • பொதுமக்கள் அச்சமின்றி இலவச பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த 12 வயது மேற்பட்ட மாணவர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனை வருக்கும் கொரோனா முதல் தவணை மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு அதன் மூலமும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், முன்கள பணியாளர்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட 60 வயதுக்குட்பட்ட மக்கள் அனைவருக்கும் இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் வருகின்ற அடுத்த மாதம் 30-ந் தேதி வரை அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் அச்சமின்றி இலவச பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • சந்தேகப்படும் விதமாக வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர்.
    • அவரிடம் இருந்த 40 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் குமரன் கோவில் பகுதியில் பங்காளாப்புதூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் விதமாக வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர்.

    சோதனையில் மோட்டார்சைக்கிளில் மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் பெரியகொடிவேரி அருகே உள்ள வேட்டுவன்புதூர் பகுதியை சேர்ந்த சின்னமாரப்பன் (வயது 58) என்பதும், மதுபாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து சின்னமாரப்பன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 40 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் ஸ்பீடு சென்சார் கருவி கொண்டு வாகன சோதனை நடத்தினர்.
    • அதிவேகமாக வந்த அரசு பஸ்களின் டிரை வர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டத்தில் சில வாகனங்கள் அதிவேக மாக வருவதாகவும் இதனால் விபத்துகள் ஏற்படுவதாகவும் போலீ சுக்கு புகார் வந்தது. இதை யடுத்து போலீசார் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இதையொட்டி பெரு ந்துறை பகுதியில் வேகமாக வரும் வாகனங்களை கண்காணிக்கும் வகையில் பெருந்துறை ஆர்.டி.ஓ. சக்திவேல், இன்ஸ்பெக்டர் பாஸ்கர், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சுகுமார் மற்றும் போலீசார் பெருந்துறை- கோவை மெயின் ரோடு பைபாஸ் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து போலீசார் ஸ்பீடு சென்சார் கருவி கொண்டு வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், லாரி, வேன், கார், மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சுமார் 40-க்கு மேற்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்க ப்பட்டது.

    இதைத் ெதாடர்ந்து அதிவேகமாக வந்த அரசு பஸ்களின் டிரை வர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அபராதம் விதிக்கப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அவர்களின் வாகன வேகம் குறித்து விவரம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

    • கடந்த பிப்ரவரி மாதம் ஓமனில் நடந்த தகுதி சுற்று மூலம் அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தகுதி பெற்றன.
    • உலகக்கோப்பை போட்டிக்கு கடைசி இரு அணிகளாக ஜிம்பாப்வேயும், நெதர்லாந்தும் நுழைந்தன.

    புலவாயோ:

    8-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந் தேதி முதல் நவம்பர் 13-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.

    இந்தப் போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, 2021 போட்டியின் முடிவின்படி 'டாப் 11' அணிகளான இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நமீபியா, ஸ்காட்லாந்து ஆகியவை நேரடியாக தகுதி பெற்றன.

    எஞ்சிய 4 நாடுகள் தகுதி சுற்று மூலம் தேர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் ஓமனில் நடந்த தகுதி சுற்று மூலம் அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தகுதி பெற்றன.

    இந்தநிலையில் உலகக்கோப்பை போட்டிக்கு கடைசி இரு அணிகளாக ஜிம்பாப்வேயும், நெதர்லாந்தும் நுழைந்தன. ஜிம்பாப்வேயில் நடந்த தகுதி சுற்றில் இந்த இரு அணிகளும் அரை இறுதியில் வெற்றி பெற்றதால் வாய்ப்பை பெற்றன. ஜிம்பாப்வே அணி 27 ரன்னில் பப்புவா நியூ கினியாவையும், நெதர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்காவையும் வீழ்த்தியது.

    உலகக்கோப்பையில் விளையாடும் 16 நாடுகளில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக 2-வது சுற்றில் (சூப்பர்-12)விளையாடும். முதல் சுற்றில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய 8 அணிகள் விளையாடும். இதில் இருந்து 4 நாடுகள் 'சூப்பர் 12' சுற்றுக்கு முன்னேறும்.

    • வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் துப்பறியும் மோப்ப நாய் மூலம் சித்தோடு நால்ரோடு பகுதியில் வந்த பஸ்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
    • கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் நம்பரை போலீசார் ஆய்வு செய்தனர்.

    ஈரோடு:

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு ஒருவர் போன் செய்தார். அதில் பேசிய நபர் ஈரோட்டில் இருந்து சித்தோடு செல்லும் அரசு பஸ்சில் பையில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அது சில நேரத்தில் வெடித்து விடும் என்று கூறி தொடர்பை துண்டித்தார்.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உயர் அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டு சித்தோடு போலீசார் சித்தோடு நால்ரோடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் துப்பறியும் மோப்ப நாய் மூலம் சித்தோடு நால்ரோடு பகுதியில் வந்த பஸ்களை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.

    இதையடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் நம்பரை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த போன் சேலம் எருமாபாளையம் ரோடு, நேதாஜி தெருவை காட்டியது. இதையடுத்து அங்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஜமால்தீன் (37) என்ற வாலிபர்தான் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.

    இதையடுத்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து ஜமால்தீனை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×