என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கருங்கல்பாளையம் காவிரி ஆற்றோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.56 அடியாக உயர்வு- கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த 8 நாட்களில் மட்டும் 9 அடி உயர்ந்துள்ளது.
- பவானிசாகர் உதவி செயற்பொறியாளர் வெள்ள அபாய எச்சரிக்கை விட்டு உள்ளார்.
ஈரோடு:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதேபோல் பில்லூர் அணைப்பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருவதால் பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு மேலும் நீர் வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் இன்று பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 14,894 கனஅடி நீர் வருகிறது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த 8 நாட்களில் மட்டும் 9 அடி உயர்ந்துள்ளது.
இன்று காலை 9 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.56 அடியாக உள்ளது. அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 900 கன அடி, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 1,005 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இன்னும் சில தினங்களில் அணை 100 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே பவானிசாகர் உதவி செயற்பொறியாளர் வெள்ள அபாய எச்சரிக்கை விட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
தென்மேற்கு பருவ மழை காரணமாக அடுத்த ஓரிரு தினங்களுக்குள் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் எனவே எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அதில் கேட்டுக்கொண்டு உள்ளார்.
இதேபோல் மாவட்டத்தின் பிரதான அணையான வரட்டுப்பள்ளம் அணையின் மொத்த கொள்ளளவு 33. 50 அடி ஆகும். தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் வரட்டுபள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 33.57 அடியாக உள்ளது.
இதேபோல் 41.75 அடியாக இருக்கும் குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.79 அடியாகவும், 30.84 அடியாக இருக்கும் பெரும் பள்ளம் அணையின் நீர்மட்டம் இந்த காலை நிலவரப்படி 18.83 அடியாக உள்ளது.






