search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம்- சுதா ஆஸ்பத்திரியில் 5 ஸ்கேன் மையங்களுக்கு சீல் வைப்பு
    X
    சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்திற்கு சீல் வைத்த மருத்துவ குழுவினர்.

    சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம்- சுதா ஆஸ்பத்திரியில் 5 ஸ்கேன் மையங்களுக்கு சீல் வைப்பு

    • சிறுமியிடம் இருந்து 8 முறைக்கு மேல் கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளது.
    • ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களை 15 நாட்களில் மாற்று ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை போலி ஆதார் கார்டு மூலம் பெற்றோரே, பெண் புரோக்கர் மூலம் தனியார் ஆஸ்பத்திரிகளில் விற்பனை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் சிறுமியை வளர்ப்பு தந்தையே பாலியல் பலாத்காரம் செய்ததும் இதற்கு உடந்தையாக அவரது தாய் இருந்ததும் தெரியவந்தது.

    மேலும் சிறுமியின் கருமுட்டையை ஈரோடு, பெருந்துறை மட்டும் அல்லாது சேலம், ஓசூர், ஆந்திர மாநிலம் திருப்பதி, கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் இயங்கும் தனியார் ஆஸ்பத்திரிகளில் விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இவ்வாறாக சிறுமியிடம் இருந்து 8 முறைக்கு மேல் கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் பணத்தை கொண்டு சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

    இதையடுத்து போலீசார் சிறுமியின் தாய், வளா்ப்பு தந்தை, புரோக்கராக செயல்பட்ட மாலதி, போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்த டிரைவர் ஜான் உட்பட 4 பேர் மீது போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக உயர்மட்ட மருத்துவ குழு டாக்டர் விஸ்வநாதன் தலைமையில் ஈரோடு வந்து, பாதிக்கப்பட்ட சிறுமியிடமும், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளிடமும் நேரடியாக விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையில் மாவட்ட காவல் துறை சார்பில், ஈரோடு ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி தலைமையில் தனி விசாரணை நடந்து வருகிறது. ஈரோடு, பெருந்துறை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள், ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.

    சிறுமியிடம் கரு முட்டை எடுத்தது தொடர்பாக சேலம், ஓசூர், கேரள மாநிலம் திருவனந்தபுரம், ஆந்திர மாநிலம் திருப்பதி ஆகிய இடங்களில் இயங்கும் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகிகள், மருத்துவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஈரோடு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து டாக்டர் விசுவநாதன் தலைமையிலான அதிகாரிகள் ஜெயிலில் இருக்கும் சிறுமியின் தாய் ,வளர்ப்பு தந்தை, புரோக்கர், போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்தவர் என நான்கு பேரிடமும் நேரடியாக சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணை அறிக்கை அனைத்தும் அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    அதன் அடிப்படையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது 16 வயது சிறுமியிடம் சட்டத்துக்கு புறம்பாக கருமுட்டை பெற்றது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக ஈரோடு, சேலத்தில் உள்ள சுதா ஆஸ்பத்திரி, பெருந்துறையில் உள்ள ராம் பிரசாத் ஆஸ்பத்திரி மற்றும் ஓசூர் விஜய் ஆஸ்பத்திரி ஆகிய நான்கு ஆஸ்பத்திரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.

    இந்த ஆஸ்பத்திரிகளில் உள்ள ஸ்கேன் மையம் உடனடியாக சீல் வைக்கப்படும் எனவும், நோயாளிகளை 15 நாட்களுக்குள் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தார்.

    இதன்படி நேற்று ஈரோடு மாவட்ட மருத்துவ மற்றும் நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் பிரேம குமாரி தலைமையில் குடும்ப நல துணை இயக்குனர் டாக்டர் ராஜசேகரன், ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணியம், வீரப்பன் சத்திரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நிர்மலா மற்றும் அதிகாரிகள் சுதா ஆஸ்பத்திரியில் ஸ்கேன் மையத்துக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

    மதியம் 2 மணி அளவில் மருத்துவக் குழுவினர் சுதா மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு ஸ்கேன் கருவிகளை அதிகாரிகள் பார்வையிட்டனர். ஸ்கேன் மையத்தில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தனர். இந்த பணி இரவு முழுவதும் நடந்தது. மொத்தம் 5 ஸ்கேன் கருவி மையத்திற்கும் அதன் அறைக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    நேற்று மதியம் தொடங்கிய இந்த பணி அதிகாலை 3.30 மணி வரை விடிய விடிய நீடித்தது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர். இந்த ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களை 15 நாட்களில் மாற்று ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    எனவே 15 நாட்கள் கால கெடு முடிந்த பிறகு மீண்டும் குழுவினர் இங்கு வந்து ஆஸ்பத்திரிக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். இதைத் தொடர்ந்து புகாருக்கு உள்ளான மற்றொரு ஆஸ்பத்திரியான பெருந்துறையில் உள்ள ராம்பிரசாத் ஆஸ்பத்திரிக்கு இன்று ஈரோடு மாவட்ட மருத்துவம் மற்றும் நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் பிரேம குமாரி தலைமையில் குழுவினர் சென்று அங்குள்ள ஸ்கேன் மையத்துக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.

    இதேப்போல் அங்கு தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளை 15 நாட்களுக்குள் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×