என் மலர்
ஈரோடு
- கிசான் சம்மான் நிதி பெறும் விவசாயிகள் ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
- மேலும் பி.எம்.கிசான் நிதி உதவி பெற்று வரும் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதும் அவசியமாகும்.
ஈரோடு:
பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி பெறும் விவசாயிகள் ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி (பி.எம்.கிசான்) திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்கும் வகையில் ஊக்கத் தெகையாக வழங்கப்பட்டு வருகிறது.
ஆதார் மூலம் விபரங்களை சரி செய்தால் மட்டுமே பி.எம்.கிசான் திட்டத்தில் அடுத்த (13-வது) தவணைத்தொகை பெற முடியும் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் தற்போது சுமார் 28,000 தகுதியான விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதி செய்யாமல் உள்ளனர்.
பி.எம்.கிசான் நிதித்திட்டத்தில் பயன் பெற்றுவரும் அனைத்து விவசாயிகளும் தங்களது ஆதார் எண்ணை சரிபார்க்க வேண்டும். அதற்கு தங்களது ஆதார் எண்ணுடன் செல்பேசி எண்ணை ஏற்கனவே இணைத்துள்ள விவசாயிகள் www.pmkisan.gov.in என்ற பி.எம்.கிசான் வலைதளத்தில் தங்களின் ஆதார் எண் விவரத்தினை உள்ளீடு செய்தால் ஓ.டி.பி. எண் தங்களது செல் போனுக்கு அனுப்பப்படும்.
அந்த ஓ.டி.பி. எண்ணை உள்ளீடு செய்து ஆதார் விவரங்களை சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இது நாள் வரை ஆதார் எண்ணுடன் செல்பேசி எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு சென்று ரூ.15 செலுத்தி பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து தங்களின் விரல் ரேகையினை பதிவு செய்து விவரங்களை சரிபார்த்து உறுதி படுத்திக் கொள்ள வேண்டும்.
விவசாயிகள் தங்கள் பகுதி அஞ்சல் அலுவலகம் மூலமும் ஆதார் எண்ணுடன் மொபைல் போன் எண்ணை இணைத்து விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பி.எம்.கிசான் நிதி உதவி பெற்று வரும் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதும் அவசியமாகும்.
எனவே இத்திட்டத்தில் பயனடைந்து வரும் அனைத்து விவசாயிகளும் அடுத்த (13-வது) தவணைத்தொகையை பெறுவதற்கு தங்கள் ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதி செய்வதுடன் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டு ள்ளதால் உடனடியாக துரிதமாக செயல்பட்டு வரும் 31-ந் தேதிக்குள் பதிவை புதுப்பித்து திட்டப்பயன்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- வீட்டுக்குள் நுழைந்து மாமனார் முத்து, மாமியார் பானுமதி மற்றும் மனைவி ஜெயகீர்த்தியை உருட்டு கட்டையால் கடுமையாக தாக்கினார்.
- இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம், நவ.23-
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முத்து (73). அவரது மனைவி பானுமதி (66). இவர்களது மகள் ஜெயகீர்த்தி (36).
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஜெயகீர்த்திக்குக்கும், சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொல்லம் பாளையம் பகுதியை சேர்ந்த உதயகுமார் (35) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணமான 3 மாத த்தில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். ஜெயகீர்த்தி சத்தியமங்கலத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். உதயகுமார் எடப்பாடியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் இரு வீட்டாரும் சமாதானம் பேசி கணவன்-மனைவியை சேர்த்து வைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். ஆனால் கணவன்-மனைவி இருவரும் சமரசம் ஆகவில்லை.
இந்நிலையில் இன்று காலை உதயகுமார் சத்தியமங்கலத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு உருட்டுக்கட்டையுடன் வந்தார்.
வீட்டுக்குள் நுழைந்து மாமனார் முத்து, மாமியார் பானுமதி மற்றும் மனைவி ஜெயகீர்த்தியை உருட்டு கட்டையால் கடுமையாக தாக்கினார்.எதிர்பாராத இந்த தாக்கு தலால் 3 பேரும் அலறினர்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் உதயகுமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். உதயகுமார் உருட்டு கட்டையால் தாக்கியதில் முத்து, பானுமதி, ஜெயகிரீத்தி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக சத்தியமங்கலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக மாமனார், மாமியார், மனைவியை மருமகன் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தாசம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே குவிந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- இதனால் பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலம், பண்ணாரி மற்றும் மைசூர் செல்ல வேண்டிய அனைத்து கனரக வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டது.
பு.புளியம்பட்டி:
சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகரில் இருந்து புஞ்சை புளியம்பட்டி செல்லும் முக்கிய சாலையில் தாசம்பாளையம் கிராமம் உள்ளது.
பவானிசாகரில் இருந்து புஞ்சைபுளியம்பட்டி வரை தற்பொழுது புதிய தார் சாலை அமைக்கப்பட்டு, ரோடு அகலப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கோவையில் இருந்து மைசூர் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் அனைத்து வாகனங்களும் அதி வேகத்தில் செல்வதால் கடந்த ஒரு மாதமாக தாசம்பாளையம் கிராமம் அருகே ஏராளமான விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும் கிராம மக்கள் புகார் அளித்தனர்.
மேலும் தாசம்பாளையம் கிராமத்தில் 3 இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எதுவும் இதுவரை செய்யப்படாததால் இன்று காலை தாசம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே குவிந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலம், பண்ணாரி மற்றும் மைசூர் செல்ல வேண்டிய அனைத்து கனரக வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஓரிரு நாட்களில் 3 இடங்களில் வேகத்தடை அமைக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதன் பேரில் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
- கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வேகத்தடை அமைத்து கொடுக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சாலை விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த அரசு பள்ளியானது சத்தியமங்கலம்- அத்தாணி முக்கிய சாலையின் ஓரமாக அமைந்துள்ளது. இதனால் காலை, மாலை பஸ்கள், லாரி, கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட போக்குவரத்து இந்த சாலை வழியாக அதிகம் காணப்படுகிறது.
அத்தாணி-சத்தியமங்கலம் சாலையில் எந்நேரமும் வாகனங்கள் வேகமாக செல்வதால் பள்ளி நாட்களில் மாணவ, மாணவிகள் தினமும் அச்ச த்துடன் பள்ளி சென்று வரும் சூழலே உள்ளது.
கள்ளிப்பட்டி அருகே பிரதான சாலையில் டாஸ்மாக் மதுபான கடை இருப்பதால் மது அருந்தி விட்டு அந்த சாலை வழியாக வாகன ஓட்டிகள் பயணிப்பதையும் காண முடிகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் சத்தியமங்கலத்தில் இருந்து அத்தாணி நோக்கி மது அருந்தி விட்டு லாரியை ஓட்டி வந்த டிரைவர் கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்த போது பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த மாணவ, மாணவிகள் கூட்டத்தில் லாரியை விட்டதில் 2 மாணவிகளுக்கு கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோன்று இந்த மாதத்தில் மட்டும் அத்தாணி- சத்தியமங்கலம் சாலையில் கள்ளிப்பட்டி பகுதியில் சாலை விபத்தில் ஒரு உயிர்சேதம், ஒருவருக்கு கால் துண்டானது மற்றும் 2 மாணவிகளுக்கு கை, கால் முறிவும் ஏற்பட்டு ள்ளது.
இதனால் அப்பகுதி பள்ளி மாணவ, மாணவிகள் மிகுந்த அச்சத்தில் பள்ளி செல்வதால் கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மாவட்ட நிர்வாகம் வேகத்தடை அமைத்து கொடுக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இனி வரும் காலங்களில் இது போன்ற சாலை விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
- கல்கடம்பூர் பிரிவு பஸ் நிறுத்தம் பகுதியில் ஒருவர் சந்தேகம் படும்படி நின்று கொண்டிருந்தார்.
- அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தினமும் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி ஈரோடு மாவட்டம் சத்தியம ங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கல்கடம்பூர் பிரிவு பஸ் நிறுத்தம் அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது அந்த பகுதியில் ஒருவர் சந்தேகம் படும்படி நின்று கொண்டிருந்தார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர். அப்போது அந்த நபர் கட்டப்பை ஒன்று வைத்திருந்தார்.
அதனை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான, ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் 3.480 கிலோ இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர் கோபி தாலுகா, பெருமுகை, காந்தி நகரை சேர்ந்த முருகன் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் முருகன் வைத்திருந்த தடைசெய்யப்பட்ட புகை யிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.3,480 ஆகும். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல் கொடுமுடி அருகே மளிகை கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட் விற்றதாக சரளா என்ப வரை போலீசார் கைது செய்தனர். அவரிட மிருந்து 23 புகையிலை பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேப்போல் வீரப்பன்சத்திரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ் பாக்கெட்டை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த முத்துபாண்டி (42) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
- கொடுமுடி பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் மற்றும் விடுதிகள் கழிப்பறைகள் ரூ.9.48 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன.
- ஏலத்தில் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் மற்றும் விடுதிகள் கழிப்பறைகள் ரூ.9.48 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன.
பேரூராட்சி தலைவர் திலகவதி சுப்பிரமணி தலைமையில், துணைத் தலைவர் கமால்ஹசன் மற்றும் மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் ஏலம் நடைபெற்றன.
பஸ் நிலைய கடைகள் ரூ.3.36 லட்சத்திற்கும், பஸ் நிலையத்தில் உள்ள தங்கும் விடுதி ரூ.2.08 லட்சத்திற்கும், மகுடேஸ்வரர் கோவில் கழிப்பிட கட்டிடம் ரூ.1.72 லட்சத்திற்கும், தினசரி மார்க்கெட் கடைகள் ரூ.1.72 லட்சத்திற்கும் ஏலம் விடப்பட்டன.
மீதி உள்ள கடைகள் மற்றும் பஸ் நிலைய நுழைவுக் கட்டண வசூல் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டன. ஏலத்தில் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
- மகிழீஸ்வரர் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம்-நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
- இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி அடுத்த பெருந்தலையூர் பவானி ஆற்றங்கரையோரம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரகன்நாயகி சமேத மகிழீஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் விநாயகர், முருகர், பைரவர், நவக்கிரகம், சந்திரன், சூரியன், சரஸ்வதி, லட்சுமி, ஆஞ்சநேயர் போன்ற பரிவார தெய்வங்கள் உள்ளன. இந்த கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இங்கு ஒரு கால பூஜை நடந்து வருகிறது. கோவில் அர்ச்சகராக அதே பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் இருந்து வருகிறார். தினமும் காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு இரவு 7 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
அதேபோல் நேற்று இரவு 7 மணிக்கு பூஜைகள் முடிந்து அர்ச்சகர் சண்முக சுந்தரம் கோவில் நடையை பூட்டி சென்று விட்டார். பின்னர் இன்று காலை 6 மணிக்கு வழக்கம் போல் கோவில் நடையை திறக்க அர்ச்சகர் சண்முகசுந்தரம் வந்தார்.
கோவில் நுழைவாயிலை திறந்து மூலவர் இருக்கும் பகுதிக்கு சென்றபோது மூலவர் பகுதியில் உள்ள கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம்-நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
கோவிலில் நள்ளிரவில் புகுந்த மர்மகும்பல் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இது குறித்து கோவில் செயல் அலுவலர் ஸ்ரீதருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீதர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தார்.பின்னர் இது குறித்து கவுந்தப்பாடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் சுபாஷ் தலைமையிலான போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்தனர். மேலும் கைரேகை நிபுணர்களும் கோவிலுக்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.
போலீசார் கோவிலை சுற்றி பார்த்த போது கோவிலின் வளாகத்தில் சனீஸ்வரர் கோவில் பின்புறத்தில் 2 மூட்டைகள் மற்றும் ஆயுதங்கள் இருந்தன.
மூட்டையை திறந்து பார்த்தபோது அதில் கோவிலில் கொள்ளைய டிக்கப்பட்ட நகை மற்றும் உண்டியல் பணம் இருந்தது தெரியவந்தது.
மகிழீஸ்வரர் கோவில் ஆற்றங்கரை ஓரம் அமைந்துள்ளதால் தினமும் நள்ளிரவில் கவுந்தப்பாடி போலீசார் அந்த பகுதியில் ரோந்து வருவது வழக்கம். அதேபோல் நேற்று நள்ளிரவும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது போலீஸ் வாகனத்தின் சைரன் சத்தம் கேட்டுள்ளதால் மாட்டி விடக்கூடாது என்பதற்காக கொள்ளையர்களை தாங்கள் திருடிய பணம், நகை மூட்டைகளை கோவிலின் பின்புறத்தில் விட்டு சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னிமலை:
சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை டவுன் பகுதி முழுவதும், பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமராபுரி, சக்திநகர், பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சிபாளையம்,
திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, கே.ஜி.,வலசு, பசுவபட்டி, முருங்கத்தொழுவு, எம்.பி.என்., நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என பெருந்துறை மின்வாரிய செயற்பொறியாளர் பி.வாசுதேவன் தெரிவித்தார்.
இதேபோல் திங்களுர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திங்களுர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, கிரே நகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டாகவு ண்டண்பாளையம், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம் மேற்கு பகுதி மட்டும், மேட்டூர், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், வீராணம்பாளையம், கராண்டிபாளையம்,
தலையம்பாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், பொன்முடி, குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரிபாளையம், சூரநாய்கனூர், பட்டகாரன்பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப்பாளையம், நடுவலசு, ஊத்துப்பாளையம், மல்லநாய்கனூர், ஊஞ்சப்பாளையம், ரைஸ்மில்புதூர், ஊ.ஆ.பாளையம், எல்லப்பாளையம், கோமையன் வலசு, தாசம்புதூர், வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டி தோப்பு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரி தெரிவித்தார்.
- பண்ணாரியம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- பண்ணாரியம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
இக்கோவிலின் பின்பகுதியில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்ன கத்தின் காசி, பரிகார ஸ்தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.
ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் உள்ள கூடுதுறையில் பொது மக்கள் பக்தர்கள் புனித நீராடி தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு அமாவாசை அன்று திதி தர்ப்பணம், எள்ளும், தண்ணீரில் விடுதல் போன்ற பல்வேறு பரிகார பூஜைகள் செய்து வழக்கம்.
இந்த நிலையில் இன்று கார்த்திகை மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு உள்ளூர், வெளியூர் பக்தர்கள் மற்றும் வெளி மாநில ஐயப்ப பக்தர்கள் என பலர் பவானி கூடுதுறையில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
பரிகார பூஜைகளை செய்ய உள்ளூர், வெளியூர் பக்தர்களும் அதே போல் சாமி தரிசனம் செய்ய ஐயப்ப பக்தர்களும் அதிக அளவில் காணப்பட்டதால் கூடுதுறை பகுதி முழுவதும் கூட்டம் அதிகளவில் நிறைந்து காணப்பட்டது.
இதனையடுத்து பவானி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
கார்த்திகை மாத அமாவாசையையொட்டி சத்திய மங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கர்நாடகா மாநில பக்தர்களும் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டனர்.
மேலும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களும் இன்று காலை அதிகளவில் வந்திருந்தனர். இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர். இதையொட்டி பண்ணாரியம்மன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
- இன்று சில்லரை வியாபாரம் 25 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- அடுத்த மாதம் தொடர் விசேஷங்கள் வர உள்ளதால் வியாபாரம் சூடு பிடிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஈரோடு ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மதியம் வரை ஜவுளி சந்தை நடைபெறுகிறது.
மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.
இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் உள்ளூர் வியாபாரிகள் அதிக அளவில் வந்து துணிகளை வாங்கி செல்வார்கள். சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்களில் கூடுதலாக வியாபாரம் நடைபெறும்.
இந்நிலையில் இன்று கூடிய ஜவுளி சந்தையில் கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வெளி மாநில வியாபாரிகள் வந்திருந்து துணிகளை வாங்கி சென்றனர்.
இதனால் மொத்த வியாபாரம் 30 சதவீதம் அளவு நடைபெற்றது. ஆனால் அதே நேரம் சில்லரை வியாபாரம் மந்தமாகவே நடைபெற்றது.
தற்போது அய்யப்ப சீசன் தொடங்கியுள்ளதால் ஏராளமானோர் விரதம் இருந்து வருகின்றனர். இதனால் காவி வெட்டி, துண்டு, சட்டை வியாபாரம் ஓரளவு நடைபெற்றது. இன்று சில்லரை வியாபாரம் 25 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த மாதம் தொடர் விசேஷங்கள் வர உள்ளதால் வியாபாரம் சூடு பிடிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
- பிரபு தனது நண்பர்களுடன் கண்ணேரி மடுவு நீரோடை குட்டையில் குளிக்க சென்றுள்ளார்.
- குட்டையில் குளித்து கொண்டிருந்தபோது சுழலில் சிக்கி மூச்சுத்திணறி நண்பர்கள் கண் முன்னே பரிதாபமாக இறந்து விட்டார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அணைக்கரடு பகுதியை சேர்ந்தவர் பிரபு (30). இவர் பி.எஸ்.என்.எல். காண்ட்ராக்ட் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 வருடங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
பிரபு தனது நண்பர்களான ராஜா, சின்னசாமி ஆகியோருடன் சம்பவத்தன்று அரேபாளையம், வனப்பகுதியில் உள்ள கண்ணேரி மடுவு நீரோடை குட்டையில் குளிக்க சென்றுள்ளார்.
குட்டையில் குளித்து கொண்டிருந்தபோது சுழலில் சிக்கி மூச்சுத்திணறி நண்பர்கள் கண் முன்னே பரிதாபமாக இறந்து விட்டார்.
இது குறித்து பிரபுவின் தாய் சின்னபொண்ணு அளித்த புகாரின்பேரில் ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சண்முகம் தனது மேஜையை திறந்து பார்த்தபோது அதில் பணம் இல்லாததால் சதீஷ்குண்டுவை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
- பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியாருக்கு சொந்தமான டெக்ஸ்டைல் நிறுவனத்தில் ஒரு பிரிவின் மேலாளராக பணிபுரிந்து வருபவர் சண்முகம் (வயது 29).
இவர் தனது அலுவலகத்தில் உள்ள மேஜையில் ரூ.5 ஆயிரத்தை வைத்துவிட்டு தனது வருகையை பதிவு செய்ய சென்று விட்டார். பின்னர் பணத்தை சூப்பர்வைசராக வேலை செய்யும் சுஜித்குமார் மாலிக் என்பவருக்கு தர அவரையும் அழைத்துக்கொண்டு தனது அலுவலக அறைக்கு வந்தார்.
அப்பொழுது அவருடைய அறையில் இருந்து கையில் பணத்துடன் அந்த கம்பெனியின் மிஷின் ஆபரேட்டராக வேலை செய்யும், உத்திரபிரதேசம் மாநிலம் கேராம் குடவா பகுதியை சேர்ந்த சதீஷ்குண்டு (வயது 25) வெளியே வந்துள்ளார்.
உடனடியாக சண்முகம் தனது மேஜையை திறந்து பார்த்தபோது அதில் பணம் இல்லாததால், உடனடியாக சத்தம் போட்டு அங்கிருந்த சூப்பர்வைசர் கோடீஸ்வரன் மற்றும் சுஜித்குமார் மாலிக் ஆகியோர் உதவியுடன் சதீஷ்குண்டுவை கையும் களவுமாக பிடித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.






