search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coin breaking in the"

    • மகிழீஸ்வரர் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம்-நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
    • இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அடுத்த பெருந்தலையூர் பவானி ஆற்றங்கரையோரம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரகன்நாயகி சமேத மகிழீஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் விநாயகர், முருகர், பைரவர், நவக்கிரகம், சந்திரன், சூரியன், சரஸ்வதி, லட்சுமி, ஆஞ்சநேயர் போன்ற பரிவார தெய்வங்கள் உள்ளன. இந்த கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

    இங்கு ஒரு கால பூஜை நடந்து வருகிறது. கோவில் அர்ச்சகராக அதே பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் இருந்து வருகிறார். தினமும் காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு இரவு 7 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

    அதேபோல் நேற்று இரவு 7 மணிக்கு பூஜைகள் முடிந்து அர்ச்சகர் சண்முக சுந்தரம் கோவில் நடையை பூட்டி சென்று விட்டார். பின்னர் இன்று காலை 6 மணிக்கு வழக்கம் போல் கோவில் நடையை திறக்க அர்ச்சகர் சண்முகசுந்தரம் வந்தார்.

    கோவில் நுழைவாயிலை திறந்து மூலவர் இருக்கும் பகுதிக்கு சென்றபோது மூலவர் பகுதியில் உள்ள கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம்-நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    கோவிலில் நள்ளிரவில் புகுந்த மர்மகும்பல் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இது குறித்து கோவில் செயல் அலுவலர் ஸ்ரீதருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீதர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தார்.பின்னர் இது குறித்து கவுந்தப்பாடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் சுபாஷ் தலைமையிலான போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்தனர். மேலும் கைரேகை நிபுணர்களும் கோவிலுக்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

    போலீசார் கோவிலை சுற்றி பார்த்த போது கோவிலின் வளாகத்தில் சனீஸ்வரர் கோவில் பின்புறத்தில் 2 மூட்டைகள் மற்றும் ஆயுதங்கள் இருந்தன.

    மூட்டையை திறந்து பார்த்தபோது அதில் கோவிலில் கொள்ளைய டிக்கப்பட்ட நகை மற்றும் உண்டியல் பணம் இருந்தது தெரியவந்தது.

    மகிழீஸ்வரர் கோவில் ஆற்றங்கரை ஓரம் அமைந்துள்ளதால் தினமும் நள்ளிரவில் கவுந்தப்பாடி போலீசார் அந்த பகுதியில் ரோந்து வருவது வழக்கம். அதேபோல் நேற்று நள்ளிரவும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது போலீஸ் வாகனத்தின் சைரன் சத்தம் கேட்டுள்ளதால் மாட்டி விடக்கூடாது என்பதற்காக கொள்ளையர்களை தாங்கள் திருடிய பணம், நகை மூட்டைகளை கோவிலின் பின்புறத்தில் விட்டு சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ×