என் மலர்
ஈரோடு
- ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஏ. எம். எஸ். காலனியை சேர்ந்தவர் அனிபா (65). பீடி சுற்றும் தொழிலாளி.
- தலைமறைவாக இருக்கும் இந்த கும்பலைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஏ. எம். எஸ். காலனியை சேர்ந்தவர் அனிபா (65). பீடி சுற்றும் தொழிலாளி. இவர் தனது நண்பர்களான எழுமாத்தூர் வேலம் பாளையத்தைச் சேர்ந்த சாமிநாதன், சங்கராபாளையம் பகுதியை சேர்ந்த முருகன், ஈரோட்டைச் சேர்ந்த மற்றொரு முருகன், வாணியம் பாடி பகுதியைச் சேர்ந்த இர்பான் ஆகியோருடன் சேர்ந்து பொதுமக்களிடம் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி பணம் வசூலித்துள்ளனர். இதனை நம்பி ஏராளமானோர் இவர்களிடம் பணம் செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் எண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த சித்தன் மற்றும் அவரது மகன் சூர்யா இருவரும் தங்களுக்கு தெரிந்த கரூரைச் சேர்ந்த தமிழரசி மற்றும் ரேவதி ஆகியோரிடம் ரூ. 11 லட்சம் வாங்கி அதனை அனிபா மற்றும் அவரது நண்பர்களிடம் இரட்டிப்பு பணம் பெற்று தர கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் இரட்டிப்பு பணம் கொடுக்க வில்லை என கூறப்படுகிறது.
இதனை அடுத்து சித்தன் அவரது மகன் சூர்யா மற்றும் இவர்களுக்கு தெரிந்த பாக்கியநாதன் என்பவர் உள்பட 3 பேரும் கடந்த சில நாட்களாகவே பணத்தை திரும்ப தர சொல்லி அனிபாவுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். அதற்கு அனிபா நாங்கள் 5 பேர் சேர்ந்துதான் பணத்தை பிரித்துள்ளோம் என்னிடம் மட்டும் பணம் கேட்டு ஏன் நெருக்கடி கொடுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு பாக்கியநாதன், சித்தன், சூர்யா ஆகியோர் அனிபாவிடம் பணம் கொடுக்காவிட்டால் உங்களை அடியாட்கள் மூலம் கடத்தி சென்று விடுவோம் என்று மிரட்டி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அனிபா ஏ.எஸ்.எம் நகர் அருகே அந்தியூர் வெள்ளிதிருப்பூர் ரோடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சித்தன், சூர்யா, மேட்டூர் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ், பாக்கியராஜ், மாணிக்கம், மோகன் குமார் ஆகிய 6 பேர் கொண்ட கும்பல் காரில் வந்து அனிபாவை கடத்தி சென்றனர்.
பின்னர் அந்த கும்பல் அனிபா மகன் இப்ராஹிம் என்பவருக்கு போன் செய்து உனது தந்தையை நாங்கள் தான் கடத்தி உள்ளோம். அவரை விடுவிக்க ரூ.70 லட்சம் பணம் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். அதற்கு இப்ராஹிம் தனது தந்தை தற்போது எங்கு உள்ளார் என்று கேட்டதற்கு, உனது அப்பா சேலம் அம்மாபேட்டையில் உள்ளார்.வாணியம் பாடியில் உள்ளார் என மாறி மாறி இடத்தை கூறியுள்ளனர்.
பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த கடத்தல் கும்பல் இப்ராஹீமிடம் பணத்தை தயார் செய்து வைத்து சேலம் அம்மாபேட்டைக்கு கொண்டு வரச் சொல்லி உள்ளனர். அப்படி பணத்தை கொண்டு வரவில்லை என்றால் உனது தந்தையை சித்ரவதை செய்வதாகவும் மிரட்டி உள்ளனர்.
இதனை அடுத்து இப்ராஹிம் அந்தியூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் அந்தியூர் போலீசார் இப்ராஹிமிடம் கடத்தல் கும்பல் பேசிய செல்போன் எண்ணை வைத்து சேலம் அம்மாபேட்டைக்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது 2 பேர் சந்தேகப்படும்படி அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த மோகன் குமார், மாணிக்கம் என தெரிய வந்தது.
மேலும் அவர்கள் அனிபாவை கடத்திய கும்பலைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பாக்கியராஜ், மோகன்ராஜ், சித்தன், அவரது மகன் சூர்யா ஆகிய நான்கு பேரை தேடி வருகின்றனர். இந்த கும்பல் தான் அனிபாவை கடத்தி வைத்துள்ளனர். இந்த கும்பல் பிடிபட்டால் தான் அனிபாவை கடத்திய உண்மையான காரணம் தெரிய வரும். தலைமறைவாக இருக்கும் இந்த கும்பலைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
- ராமகிருஷ்ணா அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினார். இதை அவரது தந்தை சுரேஷ் பாபு கண்டித்து உள்ளார்.
- பெற்றோர் ராமகிருஷ்ணாவை காளிங்கராயன் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காளிங்கராயன்பாளையம் மேட்டுநாசுவம்பாளையம் மணக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் பாபு. லாரி டிரைவர். இவரது மனைவி சுமித்ரா. இவர்களுக்கு ஸ்ரீராமகிருஷ்ணா (22) என்ற மகன் உள்ளார்.
இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் ராமகிருஷ்ணா அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினார். இதை அவரது தந்தை சுரேஷ் பாபு கண்டித்து உள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று நள்ளிரவு ஒரு மணியளவில் வீட்டில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தபோது ராமகிருஷ்ணா வாந்தி எடுத்து கொண்டிருந்தார்.
உடனே இதைப்பார்த்த அவரது பெற்றோர் ராமகிருஷ்ணாவை காளிங்கராயன் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சித்தோடு போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கல்லூரி மாணவர் ராமகிருஷ்ணா தான் இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த காதல் தோல்வி அடைந்ததால் எலி பேஸ்ட் (விஷம்) சாப்பிட்டு உள்ளதாகவும், இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கூறியுள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ராமகிருஷ்ணா ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது தாய் சுமித்ரா கொடுத்த புகார் அடிப்படையில் சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவ, மாணவிகள் பெருந்துறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு களப்பயணம் மேற்கொண்டனர்
- மாணவர்களுக்கு வாழ்வியல் ஒழுக்கம் முறைகள் குறித்தும், சட்ட விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
பெருந்துறை,
இந்திய அரசியலமைப்பு நாள் மற்றும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான சர்வதேச வன்முறை எதிர்ப்பு நாளை முன்னிட்டு பெருந்துறை வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் 6, 7, 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பெருந்துறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு களப்பயணம் மேற்கொண்டனர்.
அங்கு பெருந்துறை சார்பு நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண பிரியா, குற்றவியல் நீதித்துறை நடுவர் விபிசி, அரசு வக்கீல் திருமலை மற்றும் பெருந்துறை நீதிமன்ற சிராஸ்தார் கல்யாணசுந்தரம் ஆகியோர் மாணவ,மாணவிகளுடன் கலந்துரையாடி மாணவர்களுக்கு வாழ்வியல் ஒழுக்கம் முறைகள் குறித்தும், சட்ட விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதில் ஆசிரியர்கள் கோபிநாத், வெங்கடாஜலபதி, சுமதி, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தீபக்ராஜ் மற்றும் தினேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
- எக்கட்டாம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 23-ந் தேதி பூச்சாட்டுகளுடன் பொங்கல் விழா தொடங்கியது
- திரளான பக்தர்கள் ஆடு, கோழிகள் பலியிட்டனர். பின்னர் இரவு கம்பம் பிடுங்கி நொய்யல் ஆற்றில் விடப்பட்டது
சென்னிமலை,
சென்னிமலை அருகே எக்கட்டாம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 23-ந் தேதி பூச்சாட்டுகளுடன் பொங்கல் விழா தொடங்கியது.
பின்னர் 30-ந் தேதி இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நடைபெற்றது.
இந்த பொங்கல் விழாவில் நொய்யல், அண்ணாமலைபாளையம், புதுவலசு, சாணார் பாளையம், தாமரைக்காட்டுவலசு மற்றும் கோவிலை சேர்ந்த ஏழு கிராமத்து பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
திரளான பக்தர்கள் ஆடு, கோழிகள் பலியிட்டனர். பின்னர் இரவு கம்பம் பிடுங்கி நொய்யல் ஆற்றில் விடப்பட்டது.
இதேபோல் சென்னிமலை அருகே கே.ஜிவலசு அடுத்துள்ள புதுவலசு மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து மாரியம்மனை வழிபட்டனர்.
- தனசேகர் நள்ளிரவு திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை:
சென்னிமலை, அடுத்துள்ள அண்ணாநகர், மின்னகாடு பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (44). இவர் இப்பகுதியில் விசைத்தறி ஆலை வைத்து நடத்தி வருகிறார்.
இவர் கடந்த சில நாட்களாக தனது மனைவி ஜமுனாவிடமும், பெற்றோர்களிடமும், தனக்கு ஜாதகத்தில் ஏழரை சனி நடக்கிறது.
அதனால் ஏதேனும் விபரீதம் நடக்கும் என கூறி பயந்து வந்தார். அவருக்கு ஒன்றும் நடக்காது என்று அவர்கள் ஆறுதல் கூறி வந்துள்ளனர்.
சம்பவத்தன்று இரவு தனசேகர் காய்ச்சலால் அவதிப்பட்டு, உடல் நலக்குறைவு ஏற்பட்டு டாக்டரிடம் சென்று வந்தவர் வீட்டில் படுத்து தூங்கினார்.
இந்நிலையில் தனசேகர் நள்ளிரவு திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாய் ஒன்று திடீரென ரோட்டின் குறுக்கே வந்து சதீஷ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- இதில் நிலை தடுமாறிய அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து திடீரென கீழே விழுந்தார்.
சென்னிமலை:
காங்கேயம், கோவை ரோடு, லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (22). இவர் சென்னிமலையை அடுத்த ஈங்கூர் பகுதியில் உள்ள சிப்காட் தொழில் பேட்டையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
சென்னிமலையில் இருந்து காங்கேயம் செல்லும் ரோட்டில் உள்ள பசுவபட்டி பிரிவில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ரோட்டோரம் இருந்த நாய் ஒன்று திடீரென ரோட்டின் குறுக்கே வந்து இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறிய சதீஷ் மோட்டார் சைக்கிளில் இருந்து திடீரென கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுப்பிரமணி மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு வீட்டில் வாந்தி எடுத்துள்ளார்.
- இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்தார்.
ஈரோடு, டிச. 9-
ஈரோடு, சடையம்பாளையம் ரோடு, முத்துசாமி காலனி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (66) தொழிலாளி.
கடந்த அக்டோபரில் இவரது மனைவி செல்வி இறந்துவிட்டார். இதனால் மனவேதனையில் இருந்த சுப்பிரமணி சரியாக சாப்பிடாமல் மது அருந்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் சுப்பிரமணி சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு வீட்டில் வாந்தி எடுத்துள்ளார்.
அதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்தார்.
இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வாலிபர் கருப்பு பையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்.
- கர்நாடகாவில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் மைசூர்-சக்தி ரோடு ஆசனூர் பஸ் நிறுத்தம் அருகே ஆசனூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர்.
அப்போது பஸ் நிலையம் அருகே ஒரு வாலிபர் கருப்பு பையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்.
அவரை பிடித்து போலீசார் சோதனை செய்ததில் கருப்பு பையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஹான்ஸ் என 9 கிலோ மதிப்பிலான புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.
கர்நாடகாவில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் சத்தியமங்கலம் அடுத்த கோட்டு வீராம்பாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த அல்லாபகஸ் (38) என தெரிய வந்தது.
இதுகுறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 9 கிலோ மதிப்புள்ள புகையிலை பொருட்கள், ரூ.6,500 ரொக்க பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
- பவானி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சென்னிமலையில் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்கும் இயக்கத்தை முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
சென்னிமலை:
தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் கொண்டு வந்துள்ள அன்னூர், பவானிசாகர், வாரப்பட்டி தொழிற் பேட்டை திட்டங்களை ரத்து செய்ய கோரி பவானி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சென்னிமலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 18 லட்சம் மக்களுக்கு குடிநீராகவும், கீழ்பவானி, தடப்பள்ளி – அரக்கன் கோட்டை, காளிங்கராயன், அவிநாசி-அத்திக்கடவு, வழியோர பாசனங்கள் என 10 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் பயன்பெற்று வரும் பவானி ஆற்று நீரை, நொய்யல் ஆற்றை போல மனிதர்கள் பயன்படுத்த இயலாத நிலைக்கு கொண்டு செல்வதற்கு வழி வகுப்பதற்காக தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் கோவை மாவட்டம் அன்னூர்- சிறுமுகை இடையே 3,800 ஏக்கர், பவானிசாகரில் 1,084 ஏக்கரிலும் தொழிற் பேட்டைகளை அமைப்ப தற்கு திட்டமிட்டுள்ளது.
பெருந்துறை சிப்காட் கழிவுகளால் புற்று நோயால் திணறும் ஈரோடு மாவட்டத்திற்கு மற்றொரு பேரழிவு திட்டமாக இத்திட்டம் உள்ளது.
இத்திட்டத்தினை ரத்து செய்ய கோரி நேற்று பவானி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சென்னிமலையில் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகள், விவசாய சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். திட்டத்தை ரத்து செய்ய அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் வரும் 30-ந் தேதி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்கும் இயக்கத்தை முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு சசிகுமாருக்கு விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்றார்.
- மன வேதனை அடைந்து வந்தார். இந்த நிலையில் சசிகுமார் வீட்டில் மின்விசிறியால் தூக்குபோட்டு கொண்டார்.
அரச்சலூர்:
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் போலீஸ் நிலை யத்தில் மாலதி என்பவர் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சசிகுமார் (வயது 42). இவர்கள் போலீஸ் குடியிருப்பு பகுதியில் குடியிருந்து வரு கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சசிகுமாருக்கு விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்றார்.
ஆனால் அவருக்கு தோள்பட்டையில் அடிபட்ட காரணத்தால் தொடர்ந்து கை வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கை வலி தாங்க முடியாமல் சசிகுமார் மன வேதனை அடைந்து வந்தார்.
இந்த நிலையில் சசிகுமார் வீட்டில் மின்விசிறியால் தூக்கு போட்டு கொண்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சசிகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மரு த்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வராக டாக்டர்.மணி பணி மாற்றம் செய்யப்பட்டார்.
- பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வராக டாக்டர்.வள்ளி சத்தியமூர்த்தி முதல்வராக நியமிக்ககப்பட்டார்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையின் டீன் மற்றும் முதல்வராக டாக்டர் மணி பணியாற்றி வந்தார். அவர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வராக பணி மாற்றம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் முதல்வராக பணியாற்றி வந்த டாக்டர் வள்ளி சத்திய மூர்த்தி முதல்வராக நியமிக்ககப்பட்டார்.
இதை தொடர்ந்து அவர் மருத்துவ கல்லூரி முதல்வராக பொறுப்பேற்று கொண்டார்.
முதல்வராக பொறு ப்பேற்ற டாக்டர் வள்ளி சத்தியமூர்த்திக்கு கல்லூரி ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்து வர்கள், மாணவர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரி வித்தனர்.
- மூர்த்தி வேலைக்கு செல்லும் போது வீட்டில் மது குடித்து விட்டு சென்றார்.
- அப்போது அவர் நடந்து சென்ற போது தவறி கீழே விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார்.
கோபி:
கோபி செட்டி பாளையம் அருகே உள்ள பொலவக்காளி காளி பாளையம் பெரியார் நகரை சேர்ந்தவர் மூர்த்தி (49). இவரது மனைவி அலமேலு. கூலி தொழிலாளியான மூர்த்திக்கு குடிப்பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று காலை மூர்த்தி வேலைக்கு செல்லும் போது வீட்டில் மது குடித்து விட்டு சென்றார்.
அப்போது அவர் பழையூர் பாட்டப்பமடை பள்ளம் பகுதியில் நடந்து சென்ற போது தவறி கீழே விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். இது குறித்து தெரியவந்ததும் அலமேலு மற்றும் உறவினர்கள் விரைந்து சென்று மூர்த்தியின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இது குறித்து சிறுவலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி செட்டி பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.






