என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரட்டிப்பு பணம் தருவதாக கூறி மோசடி ரூ.70 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட முதியவர் மீட்பு- 2 பேர் கைது
    X

    இரட்டிப்பு பணம் தருவதாக கூறி மோசடி ரூ.70 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட முதியவர் மீட்பு- 2 பேர் கைது

    • ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஏ. எம். எஸ். காலனியை சேர்ந்தவர் அனிபா (65). பீடி சுற்றும் தொழிலாளி.
    • தலைமறைவாக இருக்கும் இந்த கும்பலைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஏ. எம். எஸ். காலனியை சேர்ந்தவர் அனிபா (65). பீடி சுற்றும் தொழிலாளி. இவர் தனது நண்பர்களான எழுமாத்தூர் வேலம் பாளையத்தைச் சேர்ந்த சாமிநாதன், சங்கராபாளையம் பகுதியை சேர்ந்த முருகன், ஈரோட்டைச் சேர்ந்த மற்றொரு முருகன், வாணியம் பாடி பகுதியைச் சேர்ந்த இர்பான் ஆகியோருடன் சேர்ந்து பொதுமக்களிடம் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி பணம் வசூலித்துள்ளனர். இதனை நம்பி ஏராளமானோர் இவர்களிடம் பணம் செலுத்தியுள்ளனர்.

    இந்நிலையில் எண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த சித்தன் மற்றும் அவரது மகன் சூர்யா இருவரும் தங்களுக்கு தெரிந்த கரூரைச் சேர்ந்த தமிழரசி மற்றும் ரேவதி ஆகியோரிடம் ரூ. 11 லட்சம் வாங்கி அதனை அனிபா மற்றும் அவரது நண்பர்களிடம் இரட்டிப்பு பணம் பெற்று தர கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் இரட்டிப்பு பணம் கொடுக்க வில்லை என கூறப்படுகிறது.

    இதனை அடுத்து சித்தன் அவரது மகன் சூர்யா மற்றும் இவர்களுக்கு தெரிந்த பாக்கியநாதன் என்பவர் உள்பட 3 பேரும் கடந்த சில நாட்களாகவே பணத்தை திரும்ப தர சொல்லி அனிபாவுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். அதற்கு அனிபா நாங்கள் 5 பேர் சேர்ந்துதான் பணத்தை பிரித்துள்ளோம் என்னிடம் மட்டும் பணம் கேட்டு ஏன் நெருக்கடி கொடுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு பாக்கியநாதன், சித்தன், சூர்யா ஆகியோர் அனிபாவிடம் பணம் கொடுக்காவிட்டால் உங்களை அடியாட்கள் மூலம் கடத்தி சென்று விடுவோம் என்று மிரட்டி உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அனிபா ஏ.எஸ்.எம் நகர் அருகே அந்தியூர் வெள்ளிதிருப்பூர் ரோடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சித்தன், சூர்யா, மேட்டூர் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ், பாக்கியராஜ், மாணிக்கம், மோகன் குமார் ஆகிய 6 பேர் கொண்ட கும்பல் காரில் வந்து அனிபாவை கடத்தி சென்றனர்.

    பின்னர் அந்த கும்பல் அனிபா மகன் இப்ராஹிம் என்பவருக்கு போன் செய்து உனது தந்தையை நாங்கள் தான் கடத்தி உள்ளோம். அவரை விடுவிக்க ரூ.70 லட்சம் பணம் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். அதற்கு இப்ராஹிம் தனது தந்தை தற்போது எங்கு உள்ளார் என்று கேட்டதற்கு, உனது அப்பா சேலம் அம்மாபேட்டையில் உள்ளார்.வாணியம் பாடியில் உள்ளார் என மாறி மாறி இடத்தை கூறியுள்ளனர்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த கடத்தல் கும்பல் இப்ராஹீமிடம் பணத்தை தயார் செய்து வைத்து சேலம் அம்மாபேட்டைக்கு கொண்டு வரச் சொல்லி உள்ளனர். அப்படி பணத்தை கொண்டு வரவில்லை என்றால் உனது தந்தையை சித்ரவதை செய்வதாகவும் மிரட்டி உள்ளனர்.

    இதனை அடுத்து இப்ராஹிம் அந்தியூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் அந்தியூர் போலீசார் இப்ராஹிமிடம் கடத்தல் கும்பல் பேசிய செல்போன் எண்ணை வைத்து சேலம் அம்மாபேட்டைக்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது 2 பேர் சந்தேகப்படும்படி அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த மோகன் குமார், மாணிக்கம் என தெரிய வந்தது.

    மேலும் அவர்கள் அனிபாவை கடத்திய கும்பலைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பாக்கியராஜ், மோகன்ராஜ், சித்தன், அவரது மகன் சூர்யா ஆகிய நான்கு பேரை தேடி வருகின்றனர். இந்த கும்பல் தான் அனிபாவை கடத்தி வைத்துள்ளனர். இந்த கும்பல் பிடிபட்டால் தான் அனிபாவை கடத்திய உண்மையான காரணம் தெரிய வரும். தலைமறைவாக இருக்கும் இந்த கும்பலைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    Next Story
    ×