என் மலர்
ஈரோடு
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது.
- 200 பேர் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படா வண்ணம் அமைதியான முறையில் நடத்தி முடிக்க மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் ஈரோடு கிழக்கு தொகுதி மட்டும் அல்லாது மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றச்செயல்களில் ஈடுபடும் பழங்குற்றவாளிகள் மற்றும் அரசியல் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதில் 200 பழங்குற்றவாளிகள் கண்டறியப்பட்டனர். அவர்களிடம் ஆயுதங்கள் உள்ளதா? என 200 பேரின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ஆனால் ஆயுதங்கள் ஏதுவும் கைப்பற்றப்படவில்லை.
அந்த பழங்குற்றவாளிகள் பட்டியலில் உள்ள 10 பேர் ஏற்கனவே குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 150 பேர் நன்னடத்தை விதிமுறைகளின் படி ஆர்.டி.ஓ. முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை போலீசார் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
இவர்கள் நன்னடத்தையை மீறினால் உடனடியாக சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும், மீதமுள்ள 40 பேர் ஈரோடு மாவட்டத்தில் இல்லை என்பதால் அவர்கள் விவரம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி செங்கோடம்பள்ளம் பகுதியில் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
- காய்கறி பாரம் ஏற்றிக்கொண்டு வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி செங்கோடம்பள்ளம் பகுதியில் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக காய்கறி பாரம் ஏற்றிக்கொண்டு வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது, அந்த சரக்குவேனில் செங்கோடம்பள்ளம் பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் என்ற வியாபாரி உரிய ஆவணம் இல்லாமல் ரூ.62 ஆயிரத்து 600 வைத்திருந்ததை கண்டுபிடித்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
- 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஈரோடு கிழக்குசட்டமன்ற தொகுதிக்கு 27-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.
ஈரோடு :
ஈரோடு கிழக்குசட்டமன்ற தொகுதிக்கு வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆக இருந்த திருமகன் ஈவெரா திடீர் மரணம் அடைந்ததால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.
காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு உள்பட 77 பேர் களத்தில் இருக்கிறார்கள். இருந்தாலும் காங்கிரசுக்கும், அ.தி.மு.க.வுக்கும்தான் நேரடி போட்டி நடக்கிறது.
இருதரப்பினரும் தீவிர ஓட்டுவேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து வருகிற 24, 25 ஆகிய தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 15-ந் தேதி முதல் 5 நாட்கள் ஓட்டுவேட்டை நடத்துகிறார்.
இதுதவிர கூட்டணி கட்சிகளும் களம் இறங்கி பிரசாரம் நடத்த இருக்கிறார்கள். ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நடைபெறுவதால், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது.
தொகுதியில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகளாக கண்டறியப்பட்டு உள்ளன.
தேர்தலையொட்டி 4 நிலை கண்காணிப்பு குழுக்களும், 3 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
பல்வேறு இடங்களில் போலீசார் தற்காலிக சோதனை சாவடிகளை அமைத்து ஆங்காங்கே வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்றால் அவைகள் உடனடியாக பறிமுதல் செய்யப்படுகின்றன.
பாதுகாப்பு பணிக்காக தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏற்கனவே கடந்த 8-ந் தேதி சென்னை ஆவடி, வேலூர் ஆகிய இடங்களில் இருந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த 160 வீரர்கள் ஈரோட்டுக்கு வந்தார்கள்.
மத்திய துணை ராணுவப்படை வீரர்களும் வரத் தொடங்கி உள்ளனர். நேற்று முன்தினம் 2 கம்பெனி துணை ராணுவத்தினர் ரெயில் மூலம் வந்தனர். நேற்று காலை மேலும் 2 கம்பெனி துணை ராணுவப்படை வீரர்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ரெயில் மூலம் வந்தனர்.
இந்திய ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 4 கம்பெனி வீரர்கள் நேற்று மாலை வந்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேலும் ஒரு கம்பெனி வீரர்கள் ஈரோடு வர உள்ளனர்.
மத்திய துணை ராணுவ வீரர்கள் வருகையை தொடர்ந்து நேற்று ஈரோடு கிழக்கு தொகுதியில் பதற்றமான பகுதிகள் என கண்டறியப்பட்டு உள்ள இடங்களில் 2 கம்பெனி துணை ராணுவப்படை வீரர்களின் கொடி அணிவகுப்பு நடந்தது. ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் தொழிலக பாதுகாப்பு படை உதவி கமாண்டன்ட் ரதோர் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் 128 பேர், தமிழ்நாடு சிறப்பு காவல்படை வீரர்கள் 90 பேர், சட்டம்-ஒழுங்கு போலீசார் 30 பேர் கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வி.சசிமோகன் கூறும்போது, "வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க காவல்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது. நாளை (அதாவது இன்று) முதல் மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பதற்றமான பகுதிகளில் ரோந்து, வாகன சோதனை மற்றும் பறக்கும் படை குழுவில் பணி செய்வார்கள். நிலையான குழுவிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். தேர்தல் தினத்தன்று பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு உள்ள 32 வாக்கு மையங்களிலும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்" என்றார்.
இதற்கிடையே வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி நேற்று நடந்தது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் பணி அதிகாரிகள் மற்றும் பெல் நிறுவன என்ஜினீயர்களும் ஈடுபட்டனர்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். மேலும், ஒரு நோட்டாவுக்கான இடம் சேர்த்து 78 இடங்கள் வேண்டும். எனவே ஒரு கட்டுப்பாட்டு கருவியுடன் தலா 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன. இதனால் மொத்தம் 1,430 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படும். ஏற்கனவே 286 எந்திரங்கள் தயாராக உள்ளன. எனவே கூடுதலாக 1,144 வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் 3 நாட்களில் முடிந்து விடும்.
பாதுகாப்புக்காக 5 கம்பெனி துணை ராணுவப்படை அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே தேர்தல் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 93 வழக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தல் நாளில் ஓட்டுப்பதிவுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுமா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.
இவ்வாறு கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கூறினார்.
- அதானி குழுமத்திற்கு வங்கிகள் எதன் அடிப்படையில் கடன் கொடுத்தன?
- ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி தான் இந்தியாவின் வளர்ச்சி என்பதை ஏற்க முடியாது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இதனிடைய ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்குகள் கேட்டு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:
கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருக்க தான் செய்யும். திமுக காங்கிரஸ் இடையேயும் ஒருசில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் உண்டு. சிறைகளில் உள்ள 75 சதவீதம் பேர் குற்றம் நிரூபிக்கப்படாமல் தான் உள்ளனர். தனிநபர்கள் மீதான வரியை குறைக்க வேண்டும். தனிநபர்கள் மீதான வரியை குறைத்தால் நாங்கள் வரவேற்போம். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டுமான பணிகளையே இன்னும் தொடங்கவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான வகுப்புகள் ராமநாதபுரத்தில் தான் நடந்து வருகிறது. அதானி குழுமத்திற்கு வங்கிகள் எதன் அடிப்படையில் கடன் கொடுத்தன? அதானி குழுமத்தில் ஏன் அதிக முதலீடுகள் செய்யப்பட்டன? ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி தான் இந்தியாவின் வளர்ச்சி என்று சொல்வதை ஏற்க முடியாது. இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் பேசினார்.
- வாந்தி, வயிற்று வலி, மயக்கம் இருந்ததாக அந்தியூர் அரசு மருத்துவமனையில் 29 மாணவர்கள் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
- இச்சம்பவம் குறித்து அந்தியூர் தாசில்தார் மற்றும் பவானி டி.எஸ்பி. தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி அருகே கரட்டூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 157 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
தலைமையாசிரியர் விஜயலட்சுமி உள்பட 5 ஆசிரியர்கள் பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். கரட்டூர் பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் சமையலராக கடந்த 20 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் பள்ளியில் படிக்கும் 132 மாணவ-மாணவிகள் நேற்று வழக்கம் போல 12 மணிக்கு மதிய உணவு சாப்பிட சென்றனர். வெஜிடபிள் சாப்பாடு மதிய உணவாக சமைக்கப்பட்டது.
அப்போது ஒரு சில மாணவிகள் உணவில் ஏதோ கிடப்பதாக எடுத்து வந்து சமையலர் வள்ளியம்மாளிடம் கொடுத்த போது மீதி உள்ள உணவை யாரும் சாப்பிட வேண்டாம் என்று அவர் நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பிய ஒரு சில மாணவ, மாணவிகள் மதிய உணவில் பல்லி கிடந்ததாக அவரவர் வீட்டில் பேசி வரும் போது வாந்தி, மயக்கம் வந்ததாக கூறப்படுகிறது.
ஒரு சில பள்ளி குழந்தைகளை பெற்றோர்கள் அத்தாணி கருவல்வாடிபுதூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
இத்தகவல் பரவிய நிலையில் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளை பெற்றோர்கள் கருவல்வாடிபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சை அழைத்து சென்னர்.
இதைத்தொடர்ந்து வாந்தி, வயிற்று வலி, மயக்கம் இருந்ததாக அந்தியூர் அரசு மருத்துவமனையில் 29 மாணவ, மாணவிகள் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இத்தகவலறிந்த அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரித்ததோடு, குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
இச்சம்பவம் குறித்து அந்தியூர் தாசில்தார் மற்றும் பவானி டி.எஸ்பி. தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கரட்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் உள்ள பயன்படுத்தப்படும் தண்ணீர் மற்றும் மதிய உணவுகளின் மாதிரிகளை எடுத்து இந்த உணவில் விஷத்தன்மை கலந்து உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய உணவு கட்டுப்பாடு அதிகாரிகள் கோவையில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக ஆப்பக்கூடல் போலீசார் தெரிவித்தனர்.
பரிசோதனைக்கு பின்னரே மதிய உணவில் பல்லி விழுந்து விஷம் கலந்து இருக்குமா? இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்று தெரியவரும்.
- சரிதா, அவரது மகன் பவன் கிருத்திக் ஆகியோர் ஒரே சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் சரிதாவின் கணவர் செல்வராஜை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்தனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி நேரு நகர் ரேசன் கடை வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (31). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சரிதா (29).
இவர்களுக்கு கடந்த 4ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களின் மகன் பவன் கிருத்திக் (3).கடந்த சில மாதங்களாக கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று சரிதா மற்றும் அவரது மகன் பவன் கிருத்திக் ஆகியோர் ஒரே சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து சரிதாவின் தாயார் ஜெயா பு.புளியம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து போலீசார் சரிதாவின் கணவர் செல்வராஜை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்தனர்.
இதை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சத்தியமங்கலம் கிளை சிறையில் அடைக்கப் பட்டார்.
- கண்டிக்காட்டு வலசு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- பெரியமணியம்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
ஈரோடு:
சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம், அறச்சலூர் அருகே உள்ள கண்டிக்காட்டு வலசு பகுதியில் உள்ள முள்காடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக அறச்சலூர் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அங்கு சட்டவிரோதமாக அரசு மதுபானத்தை விற்பனை செய்து கொண்டிருந்த ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே உள்ள பெரியமணியம்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (72) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து ரூ. 2 ஆயிரத்து 210 மதிப்பிலான 17 மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
- கழுத்து அறுக்கப்பட்டு படுகாயம் அடைந்த பெண்ணை மீட்ட டிரைவர்களுக்கு அந்தியூர் போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
- அந்தியூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையில் தேநீர் விருந்து கொடுத்து கவுரவிக்கப்பட்டது.
அந்தியூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையத்தில் கடந்த ஒரு ஆண்டாக தங்கி மைக்கேல் பாளையம் அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தியூர் புதுப்பாளையம் பகுதியில் இருந்து ஆட்டோவில் அந்த பெண், குன்னூரை சேர்ந்த ஜீவா (35) ஆகியோர் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது ஆட்டோவில் பயணம் செய்த ஜீவா, அந்த பெண்ணை கழுத்தை கத்தியால் அறுத்ததார். இதையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு டிரைவர் ஆட்டோவை நிறுத்தினார். அப்போது ஜீவா தப்பி ஓட முயன்றார்.
இதை கண்ட அக்கம்பக்க த்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் ஆட்டோ டிரைவர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த கார், டெம்போ, டிராவல்ஸ் டிரைவர்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்து அந்தியூர் போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த அந்த பெண்ணை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
இந்த நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு படுகாயம் அடைந்த பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற அந்த பகுதி பொதுமக்கள், மற்றும் கார், டெம்போ, டிராவல்ஸ் டிரைவர்களுக்கு அந்தியூர் போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து அந்தியூரில் அவர்களுக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையில் தேநீர் விருந்து கொடுத்து பாராட்டி கவுர விக்கப்பட்டது.
- சசிகலா தனது வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
- இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
திருப்பூர் மாவட்டம் தண்ணீர் பந்தல் சின்னமுத்தூரைச் சேர்ந்தவர் தங்கமணி (45). இவரது கணவர் ரத்தினசாமி (51). இவர்களது மகள் சசிகலா (26).
இவர் கடந்த 9 வருடங்களுக்கு முன்னர் ஈரோடு மாவட்டம், கொடுமுடி, வெங்கமேட்டூர் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
சசிகலா காதல் திருமணம் செய்து கொண்டதால் அவரது பெற்றோர் எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் சசிகலா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கொடுமுடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அதன் பின்னர் உயர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சசிகலா உயிரிழந்தார். இதுகுறித்து, சசிகலாவின் தாய் தங்கமணி அளித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கணுவாய் அருகே காப்புக்காடு பகுதியில் வறண்டு கிடந்த செடி, கொடிகளில் திடீரென தீ பிடித்தது.
- தீயணைப்பு வாகனம் செல்ல சரியான பாதை இல்லாததால் இலை, தழைகளை பயன்படுத்தி தீயை அணைத்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை-காங்கேயம் ரோட்டில் உள்ள கணுவாய் அருகே வனப்பகுதியை ஒட்டிய காப்புக்காடு பகுதியில் வறண்டு கிடந்த செடி, கொடிகளில் திடீரென தீ பிடித்தது.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
ஆனால் தீப்பிடித்த பகுதிக்கு தீயணைப்பு வாகனம் செல்ல சரியான பாதை இல்லாததால் தீயணைப்பு வீரர்கள் நடந்து சென்று இலை, தழைகளை பயன்படுத்தி சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அந்த பகுதியில் யாரோ பீடி, சிகரெட்டை பற்ற வைத்துவிட்டு வீசிய நெருப்பால் வறண்டு கிடந்த செடி, கொடிகளில் தீ பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
+2
- ஈரோடு கிழக்கு தொகுதியில் வசிக்கும் பெரும்பாலான பெண்கள் தற்போது வேலைக்கு செல்லாமல் பிரசாரத்தில் குதித்து விட்டனர்.
- பிரசாரத்துக்கு செல்வது, தேர்தல் பணிமனையில் அமர்வது, கூட்டத்துக்கு செல்வது என்று பொதுமக்களுக்கு பண மழை கொட்டுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போது அனல் பறக்கிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்டாலும் தி.மு.க.-அ.தி.மு.க. இடையே தான் நேரடி போட்டி நிலவி வருகிறது. தி.மு.க. ஆட்சி அமைந்து வரும் முதல் இடைத்தேர்தல் என்பதால் எப்படியும் 50 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு அமைச்சர்கள், தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் வீடுகளுக்கு சென்று திண்ணை பிரசாரம் செய்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டு கை சின்னத்துக்கு ஆதரவு கேட்டு வருகிறார்கள். இதே போல் அ.தி.மு.க. சார்பிலும் 30 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் தேர்தல் பிரசாரத்தில் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனால் இடைத்தேர்தல் களத்தில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. இடைத்தேர்தல் தி.மு.க., அ.தி.மு.க. இடையே கடும் பலப்பரீட்சையாக உள்ளது. தங்களது ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழாக இந்த தொகுதி வெற்றி அமைய வேண்டும் என்று தி.மு.க.வினரும், வருகிற பாராளுமன்ற தொகுதியின் முன்னோட்டமாக அ.தி.மு.க.வினரும் இந்த தொகுதியின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
அரசியல் கட்சியினருக்கு இந்த தேர்தல் ஒரு சவாலாக அமைந்து இருக்கிறது. ஆனால் சாமானியர்கள் இந்த இடைத்தேர்தலை உற்சாகமாக திருவிழாபோல் எதிர்கொள்கிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கிடைக்கின்ற கூலி வேலைக்கு சென்று வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இதில் ஆண்களுக்கு ஒரு நாள்கூலியாக ரூ.450ம், பெண்களுக்கு ஒரு நாள் கூலியாக ரூ.250 முதல் 300 வரை பெற்று வந்தனர். அவர்களுக்கு இந்த இடைத்தேர்தல் ஒரு வேலைவாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறது.
இந்த தொகுதியில் வசிக்கும் பெரும்பாலான பெண்கள் தற்போது வேலைக்கு செல்லாமல் பிரசாரத்தில் குதித்து விட்டனர். காலையில் 3 மணி நேரம் ஒரு கட்சிக்கும், மாலையில் 3 மணி நேரம் மற்றொரு கட்சிக்கும் பிரசாரத்துக்கு செல்கிறார்கள். இதனால் 2 கட்சிகாரர்களிடம் இருந்தும் தலா ரூ.500 வீதம் ஒரு நாளைக்கு ரூ.1000 சம்பாதிக்கிறார்கள். இதனால் பொதுமக்கள் வேலைக்கு செல்வது போல் காலையிலேயே பிரசாரத்துக்கு தயாராகி விடுகின்றனர். ஒரு பையில் தண்ணீர் பாட்டில், பிஸ்கெட் பாக்கெட்டுடன் அவர்கள் காத்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட கட்சியினர் வந்ததும் மினி ஆட்டோவில் அவர்களை ஏற்றி செல்கிறார்கள். சில பெண்கள் கைக்குழந்தைகளுடன் பிரசாரத்துக்கு சென்று வருகிறார்கள்.
பிரசாரத்துக்கு செல்வது, தேர்தல் பணிமனையில் அமர்வது, கூட்டத்துக்கு செல்வது என்று பொதுமக்களுக்கு பண மழை கொட்டுகிறது. இதனால் பொதுமக்கள் உற்சாகத்தில் உள்ளனர். நாள் முழுவதும் உழைத்தால் வரும் வருமானத்தை விட 6 மணி நேர பிரசாரம் செய்தால் ரூ.1000 வருமானம் கிடைப்பதால் வேலைக்கு செல்வதை விரும்பவில்லை. தேர்தல் 27-ந் தேதி நடப்பதால் எப்படியும் 25-ந் தேதி வரை பிரசாரம் இருக்கும். எனவே அதற்குள் தேர்தல் பிரசாரத்துக்கு தினமும் செல்ல வேண்டும் என்று ஆர்வமாக உள்ளனர். அரசியல் கட்சியினர் பிரசாரத்துக்கு அழைக்காவிட்டாலும், பொதுமக்கள் தாமாக முன் வந்து இன்று எங்கு பிரசாரம், எத்தனை மணிக்கு வர வேண்டும் என்று ஆர்வத்துடன் கேட்கிறார்கள். அதோடு இல்லாமல் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா? என்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கேட்டு வருகிறார்கள். மொத்தத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பொதுமக்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.
சில இடங்களில் முக்கிய பிரமுகர்களை வரவேற்க குடம், சேலை மற்றும் ரூ.500 வழங்குவதாகவும் கூறப்படுகிறது. இதனால் வாக்காளர்களே பிரசாரத்தில் குதித்து உள்ளனர். ஒரு பகுதியில் அனைத்து வீடுகளும் பூட்டப்பட்டு இருந்தது. அங்கு பிரசாரத்துக்கு சென்ற ஒரு அரசியல் கட்சி பிரமுகர் ஏன் அனைத்து வீடுகளும் பூட்டப்பட்டு இருக்கிறது என்று கேட்டு உள்ளார். அதற்கு அவருடன் வந்த உள்ளூர் நிர்வாகிகள் அவர்கள் அனைவரும் நம்முடன் பிரசாரம் செய்து வருகிறார்கள் என்று கூறியதால் சிரிப்பலை ஏற்பட்டது.
- 77 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுவதாக தேர்தல் அதிகாரிகள் முறைப்படி அறிவித்தனர்.
- அதிகளவில் சுயேச்சைகள் போட்டியிடுவதால் சின்னம் ஒதுக்குவதில் கடும் சிரமம் நிலவியது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 31-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி நிறைவடைந்தது. இதில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் உள்பட 96 பேர் 121 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
வேட்பு மனுக்கள் பரிசீலனையில் 83 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டு 38 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் வேட்பு மனுக்கள் திரும்ப பெற கடைசி நாளான நேற்று அ.ம.மு.க. வேட்பாளர் மற்றும் சுயேச்சைகள் 5 பேர் மனுவை திரும்ப பெற்றனர்.
பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 77 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுவதாக தேர்தல் அதிகாரிகள் முறைப்படி அறிவித்தனர்.
இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னம், அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். தென்னரசுக்கு இரட்டை இலை சின்னமும், தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்துக்கு முரசு சின்னமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு கரும்புடன் விவசாயி சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட சில அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டது.
தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்குவதில் கடும் சிரமம் ஏற்பட்டது. சுயேச்சைகளுக்காக தேர்தல் ஆணையம் சார்பில் 151 சின்னங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது.
இதில் குறிப்பிட்ட ஒரு சின்னத்தை பெரும்பாலான சுயேச்சை வேட்பாளர்கள் கேட்டனர். இதில் குலுக்கல் முறையில் அவர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. இதே போல் பலரும் குறிப்பிட்ட சின்னத்தை கேட்டதால் நள்ளிரவு வரை சுயேச்சை வேட்பாளர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் குலுக்கல் முறையில் சின்னங்களை ஒதுக்கீடு செய்தனர்.
நள்ளிரவு 11 மணி வரை சுயேச்சைகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பின்னர் ஒரு வழியாக குலுக்கல் முறையில் அனைவருக்கும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த தேர்தலில் அதிகளவில் சுயேச்சைகள் போட்டியிடுவதால் சின்னம் ஒதுக்குவதில் கடும் சிரமம் நிலவியது குறிப்பிடத்தக்கது.






