என் மலர்
உள்ளூர் செய்திகள்

இடைத்தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழைய குற்றவாளிகள் 200 பேர் வீடுகளில் போலீசார் சோதனை
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது.
- 200 பேர் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படா வண்ணம் அமைதியான முறையில் நடத்தி முடிக்க மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் ஈரோடு கிழக்கு தொகுதி மட்டும் அல்லாது மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றச்செயல்களில் ஈடுபடும் பழங்குற்றவாளிகள் மற்றும் அரசியல் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதில் 200 பழங்குற்றவாளிகள் கண்டறியப்பட்டனர். அவர்களிடம் ஆயுதங்கள் உள்ளதா? என 200 பேரின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ஆனால் ஆயுதங்கள் ஏதுவும் கைப்பற்றப்படவில்லை.
அந்த பழங்குற்றவாளிகள் பட்டியலில் உள்ள 10 பேர் ஏற்கனவே குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 150 பேர் நன்னடத்தை விதிமுறைகளின் படி ஆர்.டி.ஓ. முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை போலீசார் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
இவர்கள் நன்னடத்தையை மீறினால் உடனடியாக சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும், மீதமுள்ள 40 பேர் ஈரோடு மாவட்டத்தில் இல்லை என்பதால் அவர்கள் விவரம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






