search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு கிழக்கு தொகுதியில் துணை ராணுவம் கொடி அணிவகுப்பு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
    X

    துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்திய காட்சி.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் துணை ராணுவம் கொடி அணிவகுப்பு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

    • 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஈரோடு கிழக்குசட்டமன்ற தொகுதிக்கு 27-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    ஈரோடு :

    ஈரோடு கிழக்குசட்டமன்ற தொகுதிக்கு வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆக இருந்த திருமகன் ஈவெரா திடீர் மரணம் அடைந்ததால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

    காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு உள்பட 77 பேர் களத்தில் இருக்கிறார்கள். இருந்தாலும் காங்கிரசுக்கும், அ.தி.மு.க.வுக்கும்தான் நேரடி போட்டி நடக்கிறது.

    இருதரப்பினரும் தீவிர ஓட்டுவேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து வருகிற 24, 25 ஆகிய தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

    அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 15-ந் தேதி முதல் 5 நாட்கள் ஓட்டுவேட்டை நடத்துகிறார்.

    இதுதவிர கூட்டணி கட்சிகளும் களம் இறங்கி பிரசாரம் நடத்த இருக்கிறார்கள். ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நடைபெறுவதால், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது.

    தொகுதியில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகளாக கண்டறியப்பட்டு உள்ளன.

    தேர்தலையொட்டி 4 நிலை கண்காணிப்பு குழுக்களும், 3 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

    பல்வேறு இடங்களில் போலீசார் தற்காலிக சோதனை சாவடிகளை அமைத்து ஆங்காங்கே வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்றால் அவைகள் உடனடியாக பறிமுதல் செய்யப்படுகின்றன.

    பாதுகாப்பு பணிக்காக தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏற்கனவே கடந்த 8-ந் தேதி சென்னை ஆவடி, வேலூர் ஆகிய இடங்களில் இருந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த 160 வீரர்கள் ஈரோட்டுக்கு வந்தார்கள்.

    மத்திய துணை ராணுவப்படை வீரர்களும் வரத் தொடங்கி உள்ளனர். நேற்று முன்தினம் 2 கம்பெனி துணை ராணுவத்தினர் ரெயில் மூலம் வந்தனர். நேற்று காலை மேலும் 2 கம்பெனி துணை ராணுவப்படை வீரர்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ரெயில் மூலம் வந்தனர்.

    இந்திய ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 4 கம்பெனி வீரர்கள் நேற்று மாலை வந்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேலும் ஒரு கம்பெனி வீரர்கள் ஈரோடு வர உள்ளனர்.

    மத்திய துணை ராணுவ வீரர்கள் வருகையை தொடர்ந்து நேற்று ஈரோடு கிழக்கு தொகுதியில் பதற்றமான பகுதிகள் என கண்டறியப்பட்டு உள்ள இடங்களில் 2 கம்பெனி துணை ராணுவப்படை வீரர்களின் கொடி அணிவகுப்பு நடந்தது. ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் தொழிலக பாதுகாப்பு படை உதவி கமாண்டன்ட் ரதோர் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் 128 பேர், தமிழ்நாடு சிறப்பு காவல்படை வீரர்கள் 90 பேர், சட்டம்-ஒழுங்கு போலீசார் 30 பேர் கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வி.சசிமோகன் கூறும்போது, "வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க காவல்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது. நாளை (அதாவது இன்று) முதல் மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பதற்றமான பகுதிகளில் ரோந்து, வாகன சோதனை மற்றும் பறக்கும் படை குழுவில் பணி செய்வார்கள். நிலையான குழுவிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். தேர்தல் தினத்தன்று பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு உள்ள 32 வாக்கு மையங்களிலும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்" என்றார்.

    இதற்கிடையே வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி நேற்று நடந்தது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் பணி அதிகாரிகள் மற்றும் பெல் நிறுவன என்ஜினீயர்களும் ஈடுபட்டனர்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். மேலும், ஒரு நோட்டாவுக்கான இடம் சேர்த்து 78 இடங்கள் வேண்டும். எனவே ஒரு கட்டுப்பாட்டு கருவியுடன் தலா 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன. இதனால் மொத்தம் 1,430 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படும். ஏற்கனவே 286 எந்திரங்கள் தயாராக உள்ளன. எனவே கூடுதலாக 1,144 வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் 3 நாட்களில் முடிந்து விடும்.

    பாதுகாப்புக்காக 5 கம்பெனி துணை ராணுவப்படை அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே தேர்தல் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

    தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 93 வழக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தல் நாளில் ஓட்டுப்பதிவுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுமா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.

    இவ்வாறு கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கூறினார்.

    Next Story
    ×