என் மலர்
ஈரோடு
- மக்கள் மண்ணை ரோட்டில் கொட்டிய லாரியை சிறை பிடித்தனர்.
- டிப்பர் லாரி உரிமையாளர்கள் தரப்பில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
சென்னிமலை:
சென்னிமலை அருகே பனியம்பள்ளி ஊராட்சி பகுதியில் ஜல்லி கிரசர்கள் செயல்பட்டு வருகிறது. இந்த கிரசர்களில் இருந்து ஜல்லி கற்கள், ஜல்லி மண் ஆகியவற்றை செந்தாம்பாளையம், புலவனூர் ஆகிய ஊர்கள் வழியாக தினமும் ஏராளமான லாரிகள் கொண்டு செல்கிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று பகல் 12 மணி அளவில் செந்தாம்பாளையம் வழியாக ஒரு டிப்பர் லாரி ஜல்லி கற்கள் கலந்த மண்ணை கொண்டு சென்ற போது லாரியின் பின்பக்க கதவை சரியாக மூடாததால் தார் ரோட்டில் நீண்ட தூரத்திற்கு ஜல்லி கற்களுடன் மண் விழுந்துள்ளது. இதனால் அந்த வழியே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் மண்ணை ரோட்டில் கொட்டிய லாரியை சிறை பிடித்தனர். மேலும் அந்த வழியாக வந்த மற்ற டிப்பர் லாரிகளையும் போக விடாமல் தடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் தரப்பில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அப்போது இனிமேல் ஜல்லி கற்கள் மற்றும் ஜல்லி மண் டிப்பர் லாரிகளில் ஏற்றி செல்லும் போது பாதுகாப்பாக கொண்டு செல்வதாக பொதுமக்களிடம் உறுதி அளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் சிறை பிடிக்கப்பட்ட லாரிகளை விடுவித்தனர்.
- பவானி ஆற்றங்கரையோரம் பெண் உடல் மிதப்பதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- இந்த பெண் எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்று தெரியவில்லை.
ஆப்பக்கூடல்:
ஆப்பக்கூடல் அடுத்துள்ள அத்தாணி பவானி ஆற்றில் சுமார் 55 வயதுடைய முதியவர் உடல் மிதப்பதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல் அத்தாணி கருவல்வாடிபுதூர் அருகே பவானி ஆற்றங்கரையோரம் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல் மிதப்பதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவல் கிடைத்ததும் ஆப்பக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பவானி ஆற்றில் வெவ்வேறு இடங்களில் பிணமாக மிதந்த ஆண், பெண் உடல் குறித்து யார் என்று அடையாளம் தெரிந்தது. அத்தாணி திருவள்ளுவர் நகர் ஓடைமேடு பகுதியை சேர்ந்த செங்கோடன் (45) என்பதும்,
அத்தாணி கருவல்வாடிபுதூர் அருகேயுள்ள பவானி ஆற்றில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி பலியானார் என்றும் தெரியவந்தது.
இதனையடுத்து பெண் உடலில் இடது கையில் அமுதா என்ற பெயர் எழுதி உள்ளது. ஆனால் இந்த பெண் எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்று தெரியவில்லை.
இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஈரோடு:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் ஊராட்சி செயலாளர்களுக்கு பணி விதிகளை காலதாமதம் இன்றி வெளியிடுதல் மற்றும் விடுபட்ட உரிமைகளை உடனடியாக வழங்குதல்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு அனைத்து வட்டாரங்களிலும் வட்டாரத்திட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்புதல்.
இணை இயக்குனர், உதவி இயக்குனர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் நிலையிலான அனைத்து பதவி உயர்வு ஆணைகளையும் காலதாமதம் இன்றி உடனடியாக வெளியிடுதல்.
வளர்ச்சி துறையில் வட்டார உதவி பொறியாளர்கள் தொழில்நுட்ப அங்கீகாரம் வழங்கும் உச்சவரம்பினை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்குதல் உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி இன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஒட்டுமொத்தமாக ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கலெக்டர் அலுவலகம், மொடக்குறிச்சி, சென்னிமலை, கோபி, சத்தியமங்கலம், அந்தியூர், பவானி, தாளவாடி, கொடு முடி, டி.என்.பாளையம் உள்பட 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊராட்சி செயலாளர்கள் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரை மொத்தம் 732 அலுவலர்கள் இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுக்கும் போரா ட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அலுவலர்களின் விடுப்பு போராட்டம் காரணமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. ஒரு நாள் விடுப்பு போராட்டம் காரணமாக 100 நாள் திட்டம் குடிநீர் பணிகள் அரசு நலத்திட்ட பணிகள் முடங்கியுள்ளது.
அடுத்த கட்டமாக சென்னையை நோக்கி பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டு ள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
- ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்து வருகிறது.
- பர்கூர் மலைப்பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பொழிந்த கன மழையினால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தாளவாடி, சத்தியமங்கலம், அந்தியூர் பகுதிகளில் தொடர்ந்து 5 நாட்களாக மாலை நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இதேப்போல் மாவட்டத்தின் முக்கிய அணை பகுதிகளான வரட்டுபள்ளம், குண்டேரிபள்ளம், பவானிசாகர், கொடிவேரி போன்ற பகுதிகளிலும் கடந்த 4 நாட்களாக மாலை நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் மாலை 6 மணிக்கு பிறகு மழை பெய்யத் தொடங்கி விடுகிறது.
இந்நிலையில் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இரவு 10 மணிக்கு பிறகு இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் வழக்கம்போல் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது. இதேபோல் நேற்று மாலை நேரத்தில் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்று வீச தொடங்கியது. பின்னர் மிதமான மழை பொழிந்தது.
அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பொழிந்த கன மழையினால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த மழையின் காரணமாக ஈரட்டி பகுதியில் உள்ள நீரோடையில் தண்ணீர் ஓட தொடங்கியுள்ளது. நேற்று மாலை பெய்த மழை காரணமாக பர்கூர்-கர்நாடகா மாநிலம் மைசூர் செல்லும் பிரதான சாலையில் ஆங்காங்கே பாறைகள் சாலையில் குறுக்கே உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக வரட்டுபள்ளம் அணைப்பகுதியில் கனமழை பெய்தது. இதேபோல் அம்மாபேட்டை, தாளவாடி, கொடுமுடி, பவானி, குண்டேரிபள்ளம், சத்தியமங்கலம், நம்பியூர், பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
வரட்டுபள்ளம்-48.80, அம்மாபேட்டை-17.20, தாளவாடி-15.40, ஈரோடு-12, கொடுமுடி-10.20, பவானி-6.80, குண்டேரிபள்ளம்-6.20, சத்தியமங்கலம்-4, பவானிசாகர்-2.80, நம்பியூர்-2.
- ஒரு வாலிபர் போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.
- அவரை பிடித்து சோதனை செய்தபோது கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
பவானி ரோடு நெறிகல்மேடு பஸ் நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது ஒரு வாலிபர் போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.
அவரை பிடித்து சோதனை செய்தபோது அந்த நபர் 100 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது.
விசாரணையில் அவர் கனி ராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்த அர்க்கி என்கிற ஆனந்தகுமார்(35) என தெரிய வந்தது. இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து ஆனந்தகுமாரை கைது செய்தனர்.
இதேபோல் கோபி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளியங்கிரி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது கடத்தூர் முனிசிபாலிட்டி குப்பை கிடங்கு அருகே சந்தேகப்படும்படி 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை சோதனை செய்தபோது 100 கிராம் கஞ்சாவை சட்ட விரோதமாக விற்பனைக்கு வைத்திருப்பதை ஒத்து கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் ராமன் (22), மவ்லி ரஞ்சித் (25) என தெரிய வந்தது. இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.
- வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது.
- விவசாயிகள் 2,158 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2,158 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 55 காசுக்கும், அதிகபட்ச விலையாக 24 ரூபாய் 75 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 55 காசுக்கும் ஏலம் போனது.
மொத்தம் 904 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 20 ஆயிரத்து 706 ரூபாய்க்கு விற்பனையானது.
சென்னிமலை:
சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
இதனால் சென்னிமலை டவுன் பகுதி முழுவதும், பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமராபுரி, சக்திநகர்,
பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம்,
ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவபட்டி, முருங்கத்தொழுவு, எம்.பி.என்.நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என பெருந்துறை செயற்பொறியாளர் பி.வாசுதேவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது இளங்கோ சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.
- சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்துள்ள கம்புளியம்பட்டி, காசிபுள்ளாம்பாளையத்தை சேர்ந்தவர் இளங்கோ (45). மீன் வியாபாரியான இவர் தனது உறவினர் சுஜீத் என்பவருடன் சம்பவத்தன்று இரவு மீன் வியாபாரத்திற்கு ஐஸ் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் பெருந்துறை சென்று விட்டு 2 பேரும் மீண்டும் சென்னிமலை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை சுஜீத் ஓட்ட இளங்கோ பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது சிப்காட் 3-வது கிராஸ் அருகே சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த வடமாநில இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் மீது இளங்கோ சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் இளங்கோவுக்கு தலையில் பலத்த அடிபட்ட நிலையில் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். காயமடைந்த சுஜீத் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நர்மதா பெகரா இரும்பு கம்பியில் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தொங்கி கொண்டிருந்தார்.
- ஈரோடு ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகின்றது.
சென்னிமலை:
ஒடிசா மாநிலம், மதுபூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் பெகரா. இவரது மனைவி நர்மதா பெகரா (30). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 10 மாத ஆண் குழந்தை உள்ளது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவர் ரஞ்சித் பெகரா மற்றும் இவரது தாயார் ஜீனுராணி, தங்கை பங்கஜனி பெகரா ஆகியோர் ஈங்கூர் எல்.ஐ.சி. காலனி, சக்திநகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.
இதனிடையே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒடிசாவில் இருந்து மனைவி நர்மதா பெகரா தனது கைக்குழந்தையுடன் வந்து கணவர் ரஞ்சித் பெகரா மற்றும் மாமியாருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அனைவரும் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் நர்மதா பெகரா தனது குழந்தையை பார்த்துக்கொண்டு வீட்டில் இருந்தார்.
வெளியே சென்றிருந்த கணவர் ரஞ்சித் மதியம் வீட்டிற்கு வந்த போது மனைவி நர்மதா பெகரா இரும்பு கம்பியில் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தொங்கி கொண்டிருந்தார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியோடு அவரை மீட்டு ஈங்கூர் தனியார் மருத்துமனைக்கு கொண்டு சென்று பின்னர் மேல்சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே நர்மதா பெகரா இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதோடு, ஈரோடு ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகின்றது.
- மருத்துவமனைக்குள் நுழைந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
- இந்த சோதனை இரவு வரை நீடித்தது.
ஈரோடு, மே. 10-
ஈரோடு பெருந்துறை ரோட்டில் பிரபல தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு நேற்று மதியம் 4 கார்களில் 20-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்வதற்காக வந்தனர்.
மருத்துவமனைக்குள் நுழைந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரம் மருத்துவ சிகிச்சைக்கு இடையூறு ஏற்படுத்தாமல் அதிகாரிகள் தங்களது சோதனைகளை நடத்தினர்.
மருத்துவமனையில் தலைவர், நிர்வாக இயக்குனர் ஆகியோர் அறையிலும் நிர்வாக அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனையிட்டனர். அங்குள்ள கோப்புகளை பார்வையிட்ட அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர்.
இந்த சோதனை இரவு வரை நீடித்தது. அதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனியார் மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கருமுட்டை விற்பனை வழக்கில் இந்த தனியார் மருத்துவமனையின் கருத்தரித்தல் மைய ஆய்வகத்துக்கு ஏற்கனவே சீல் வைக்கப்பட்டது.
பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த சீல் அகற்றப்பட்டு ஆய்வகம் தற்போது மீண்டும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வருமான வரித்துறையினர் இந்த தனியார் மருத்துவமனையில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஈரோடு மாவட்டத்திலேயே முதல் முறையாக பி.எஸ்.சி தாவரவியல் பாடப்பிரிவு புதிதாக தொடக்கப்பட்டுள்ளது.
- இந்த பாடப்பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் பாடப்பிரிவு 2023-2024-ம் கல்வி ஆண்டு முதல் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம் கடந்த 8-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற 2023-2024-ம் கல்வியாண்டு முதல் ஈரோடு மாவட்டத்திலேயே முதல் முறையாக இளங்கலை பி.எஸ்.சி தாவரவியல் பாடப்பிரிவு புதிதாக தொடக்கப்பட்டுள்ளது.
மேல்நிலை கல்வியில் (பிளஸ்-2) உயிரியல் அல்லது தாவரவியல் பயின்ற மாணவர்கள் இதற்கு தகுதியுடையவர்கள் ஆவர். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் கடந்த 8-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த பாடப்பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி நாள் வரும் 19-ந் தேதி ஆகும்.
மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை 9363462099 என்ற கல்லூரி கல்வி இயக்க அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
மேலும் சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இதற்கான உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரியில் செயல்படும் சேர்க்கை உதவி மையத்திற்கு நேரடியாக வந்திருந்து தங்களது சுய விவரங்களை தெரிவித்து விண்ணப்பித்து கொள்ளலாம்.
எனவே ஈரோடு, கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்த மேல்நிலை கல்வி முடித்த மாணவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பித்து சேர்க்கை பெற்று பயனடையுமாறு கல்லூரி முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.24 அடியாக உள்ளது.
- வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 27.30 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.
105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.24 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,619 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காக 950 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதேப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 35.54 அடியாக உள்ளது.
30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.21 அடியாக உள்ளது. 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 27.30 அடியாக உள்ளது.
கடந்த சில நாட்களாக அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.






