என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சூறாவளி காற்றுடன் கனமழை: பர்கூர்-மைசூர் சாலையில் உருண்டு விழுந்த பாறைகள்
    X

    சூறாவளி காற்றுடன் கனமழை: பர்கூர்-மைசூர் சாலையில் உருண்டு விழுந்த பாறைகள்

    • ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்து வருகிறது.
    • பர்கூர் மலைப்பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பொழிந்த கன மழையினால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தாளவாடி, சத்தியமங்கலம், அந்தியூர் பகுதிகளில் தொடர்ந்து 5 நாட்களாக மாலை நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    இதேப்போல் மாவட்டத்தின் முக்கிய அணை பகுதிகளான வரட்டுபள்ளம், குண்டேரிபள்ளம், பவானிசாகர், கொடிவேரி போன்ற பகுதிகளிலும் கடந்த 4 நாட்களாக மாலை நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் மாலை 6 மணிக்கு பிறகு மழை பெய்யத் தொடங்கி விடுகிறது.

    இந்நிலையில் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இரவு 10 மணிக்கு பிறகு இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் வழக்கம்போல் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது. இதேபோல் நேற்று மாலை நேரத்தில் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்று வீச தொடங்கியது. பின்னர் மிதமான மழை பொழிந்தது.

    அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பொழிந்த கன மழையினால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த மழையின் காரணமாக ஈரட்டி பகுதியில் உள்ள நீரோடையில் தண்ணீர் ஓட தொடங்கியுள்ளது. நேற்று மாலை பெய்த மழை காரணமாக பர்கூர்-கர்நாடகா மாநிலம் மைசூர் செல்லும் பிரதான சாலையில் ஆங்காங்கே பாறைகள் சாலையில் குறுக்கே உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக வரட்டுபள்ளம் அணைப்பகுதியில் கனமழை பெய்தது. இதேபோல் அம்மாபேட்டை, தாளவாடி, கொடுமுடி, பவானி, குண்டேரிபள்ளம், சத்தியமங்கலம், நம்பியூர், பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    வரட்டுபள்ளம்-48.80, அம்மாபேட்டை-17.20, தாளவாடி-15.40, ஈரோடு-12, கொடுமுடி-10.20, பவானி-6.80, குண்டேரிபள்ளம்-6.20, சத்தியமங்கலம்-4, பவானிசாகர்-2.80, நம்பியூர்-2.

    Next Story
    ×