என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பவானி போலீசார் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது.
    • ஒரு மனுதாரர் மட்டும் வழக்கை முடித்துக்கொண்டனர்.

    பவானி:

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் பவானி போலீசார் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது.

    பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் பவானி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள புகார்தாரர்கள் இரு தரப்பினரை அழைத்து சமரச பேச்சுவார்த்தை ஈடுபட்டு வழக்குகளை முடிக்க ஆவண செய்யும் வகையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த முகாமில் கணவன்-மனைவி பிரச்சனை, நில பிரச்சனை, தகராறு உள்பட 6 மனுக்கள் வழங்கப்பட்டு இருந்தது. இந்த 6 மனுக்களையும் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் ஒவ்வொரு மனுதாரர்களை தனித்தனியாக அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு மனுதாரர் மட்டும் வழக்கை முடித்துக்கொண்டனர். மற்ற 5 மனுதாரர்களும் கோர்ட்டு வழக்கு மூலம் தீர்வு கொள்வதாக தெரிவித்தனர்.

    • மாட்டுசந்தையில் ஜெர்சி மாடு , சிந்து மாடு , எருமைகள் விற்பனையானது.
    • மொத்தம் கால்நடைகள் ரூ. 75 லட்சத்திற்கு விற்பனை ஆனது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை புதன் மற்றும் வியாழன் கூடுவது வழக்கம். இது தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாகும்.

    இந்த சந்தையில் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி மாவட்டங்களான திருப்பூர், கோவை, நாமக்கல், கரூர், சேலம் மற்றும் புளியம்பட்டி சுற்று பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை விற்பதும், வாங்கி செல்வதும் வழக்கம்.

    இந்த வாரம் கூடிய மாட்டுசந்தையில் ஜெர்சி மாடு 20 ஆயிரம், சிந்து மாடு 15 ஆயிரம், எருமைகள் 16 முதல் 33 ஆயிரம் வரை விற்பனையானது.

    இதில் நாட்டுமாடுகள் 45 ஆயிரம் மற்றும் வளர்ப்பு கன்றுகள் 5 ஆயிரம் வரை விற்பனையானது. வெள்ளாடு 7 ஆயிரம், மற்றும் செம்மறியாடு 6 ஆயிரம் வரை விற்பனையானது.

    இதில் மொத்தம் கால்நடைகள் ரூ. 75 லட்சத்திற்கு விற்பனை ஆனது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தொட்டியில் ஆணின் பிணம் கிடந்துள்ளது.
    • வீரப்பன்சத்திரம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு வெட்டுக்காட்டு வலசு சைவ மாரியம்மன் கோவில் எதிர்புறம் ஒரு தொட்டியில் சம்பவத்தன்று 50 வயது மதிக்கத்தக்க ஆணின் பிணம் கிடந்துள்ளது.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அந்த நபரின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவர் வெள்ளை நிற அரக்கை சட்டை அணிந்து இருந்தார். இறந்த நபர் அந்த வழியாக சென்றபோது தொட்டியில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • மாவனத்தம் அருகே உள்ள சாலையோரத்தில் உள்ள மரம் ஒன்று விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக சத்தியமங்கலம், தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    இதனால் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது.

    இந்நிலையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    தாளவாடி, தலமலை, கொடிபுரம், விஜயலெட்டி, காளிதிம்பம், ராமர் அணை, மாவனத்தம் போன்ற பகுதிகளில் இரவு முழுவதும் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த கனமழையால் மாவனத்தம் அருகே உள்ள தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    இதனால் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் சத்தியமங்கலம், தாளவாடிக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். இதேபோல் மாவனத்தம் அருகே உள்ள சாலையோரத்தில் உள்ள மரம் ஒன்று விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பின்னர் அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர். இதனையடுத்து இன்று காலை மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

    இதேபோல் தரைப்பாலத்தை மூழ்கடித்த காட்டாற்று வெள்ளம் நீர் வடிய தொடங்கியதால் இன்று காலை மீண்டும் அந்த பகுதியில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி ரம்மியமாக காட்சியளிக்கிறது. 

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.47 அடியாக உள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 1142 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இதன் காரணமாக நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.47 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1142 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காக 955 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 35.50 அடியாக உள்ளது. 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும் பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.21 அடியாக உள்ளது. 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 27.49 அடியாக உள்ளது.

    • அந்தியூரில் கடந்த 2 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை, சூறாவளி காற்றுடன் மழையும் பெய்தது.
    • அத்தாணி, சின்னத்தம்பி பாளையம், நகலூர், எண்ணமங்கலம், கோவிலூர், செல்லம்பூர், அம்மன் கோவில், விராலி காட்டூர் ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்றடன் பலத்த மழை பெய்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி, பவானி, கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இதேபோல் மாவட்டத்தின் முக்கிய அணைகளான பவானிசாகர், வரட்டுபள்ளம், குண்டேரி பள்ளம், கொடிவேரி அணை போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    தாளவாடி மலைப்பகுதியில் கடந்த 6 நாட்களாக இரவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருவதால் வனப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவும் மாவட்டத்தின் புறநகர் பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரவு 11 மணிக்கு மேல் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    கோபி அருகே உள்ள கூகலூரில் நேற்று இரவு 10 மணிக்கு பிறகு சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதன் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்தன. கூகலூர் குளம் அருகே 4-வது வார்டில் உள்ள மின் கம்பம் முறிந்து கீழே விழுந்தது.

    இதனால் நேற்று இரவு அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. விடிய விடிய மின் வினியோகம் இல்லாததால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இதேப்போல் நம்பியூரிலும் இரவு நேரத்தில் சூறாவளியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அந்தியூரில் கடந்த 2 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை, சூறாவளி காற்றுடன் மழையும் பெய்தது. குறிப்பாக அத்தாணி, சின்னத்தம்பி பாளையம், நகலூர், எண்ணமங்கலம், கோவிலூர், செல்லம்பூர், அம்மன் கோவில், விராலி காட்டூர் ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்றடன் பலத்த மழை பெய்தது.

    இதில் விவசாயிகள் பயிரிட்டு இருந்த கதலி, செவ்வாழை, பூவன் உள்ளிட்ட வாழை மரங்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை முற்றிலும் முறிந்து விழுந்தன. இதனால் ரூ.10 லட்சத்துக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதே போல் அந்தியூர் அருகே உள்ள கெட்டிசமுத்திரம் ஏரிகரையொட்டி ஆலாம்பாளையம், ஜெ.ஜெ. நகர் செல்லும் தார்சாலை உள்ளது. இந்த சாலையின் ஓரம் ஏராளமான மரங்கள்உள்ளன. நேற்று மாலையில் இந்த பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் இருந்த மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே போல் சூறாவளி காற்று காரணமாக அந்தியூர் பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த வெற்றிலை கொடிகளும் சேதமடைந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    நம்பியூர்-15, கோபி-10.20, சென்னிமலை-10, எலந்தகுட்டைமேடு-7.80, சத்தியமங்கலம்-7.

    • சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி நின்றது.
    • காரில் இருந்த வாலிபருக்கு காயம் ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் இருந்து நேற்று மாலை ஈரோடு நோக்கி வந்த சொகுசு கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சூளை, பாரதி நகர் பகுதியில் சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி நின்றது.

    இந்த விபத்தில் காரின் முன் பகுதி சேதம் அடைந்தது. காரில் இருந்த வாலிபருக்கு காயம் ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்த நபர் சிகிச்சைக்காக அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொ ண்டனர். விசாரணையில், சொகுசு காரில் வந்தவர் மூலப்பாளையம் பகுதியை சேர்ந்த ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஸ்ரீராம் ( 27 ) என்பதும், இவரின் கல்லூரி சான்றிதழ் பெறுவதற்காக தனியார் கல்லூரி சென்று வீடு திரும்பி கொண்டிருந்த போது இந்த விபத்து நடைபெற்றதாகவும் தெரிய வந்தது.

    விபத்து நடந்த பொழுது அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான பரபரப்பு காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    அதிகளவில் கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் பயணிக்கும் சூளை பகுதியில் தொடர்ந்து இது போன்ற விபத்துகள் ஏற்படுவதால் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த சில நாட்களாக இஞ்சி விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது.
    • இதன் எதிரொலியாக இஞ்சி கிலோவுக்கு 3 மடங்கு விலை உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாட்டில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வரத்தாகி வருகிறது.

    குறிப்பாக ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு இஞ்சி கேரளா, மைசூர், தாளவாடி, கூடலூர் போன்ற பகுதிகளில் இருந்து விற்பனைக்கு வருகிறது.

    வழக்கமாக 6 டன் வரை விற்பனைக்கு வரும். ஆனால் கடந்த சில நாட்களாக இஞ்சி விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது. இதனால் இஞ்சி வரத்து குறைந்துள்ளது.

    இதன் எதிரொலியாக இஞ்சி கிலோவுக்கு 3 மடங்கு விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.60 முதல் ரூ.80 வரை விற்கப்பட்ட ஒரு கிலோ இஞ்சி இன்று ஒரு கிலோ ரூ.220 முதல் ரூ.240 வரை கிடுகிடுவென விலை உயர்ந்து விற்கப்படுகிறது.

    இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதால் விலை உயர்ந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

    • கோபி அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் எக்கோ ஸ்கேன் வசதி செயல்பட உள்ளது.
    • இரு தினங்களில் செயல்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கோபி, தாளவாடி, சத்தியமங்கலம், கள்ளிப்பட்டி, கூகலூர், கெட்டிசெவியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு எக்கோ ஸ்கேன் வசதி செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக எக்கோ ஸ்கேன் செயல்ப்படவில்லை.

    இதனால் இங்கு வரும் நோயாளிகள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஸ்கேன் எடுத்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

    அதை தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் எக்கோ ஸ்கேன் வசதி செயல்பட உள்ளது. செவ்வாய், வியாழன் ஆகிய இரு தினங்களில் செயல்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • குளித்து கொண்டிருந்த ஆனந்தராஜ் நீரில் அடித்து செல்லப்பட்டார்.
    • தீயணைப்பு வீரர்கள் மீனவர்கள் உதவியுடன் தேடி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ் (32). இவரது மனைவி ராஜேஸ்வரி. இவரது தம்பி ஆனந்தராஜ் (25). புஞ்சை புளியம்பட்டி நீலிப்பாளையத்தில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அரசூர் பவானி ஆற்று படித்துறைக்கு துணி துவைப்பதற்காக அருள்ராஜ் சென்றார். அங்கு சிறிது நேரத்தில் அவரது மைத்துனர் ஆனந்தராஜ் குளிக்க வந்தார்.

    திடீரென குளித்து கொண்டிருந்த ஆனந்தராஜ் நீரில் அடித்து செல்லப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருள்ராஜ் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார்.

    எனினும் ஆனந்தராஜ் நீரில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் மீனவர்கள் உதவி உடன் நேற்று இரவு வரை ஆனந்தராஜை தேடி பார்த்தனர். பின்னர் இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

    அதைத்தொடர்ந்து இன்று 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் மீனவர்கள் உதவியுடன் ஆனந்தராஜை தேடி வருகின்றனர். அவரது கதி என்னவென்று தெரியவில்லை.

    • சுவாமியை குளிர வைக்கும் விதமாக ஜல அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.
    • ஏற்பாடுகளை சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    பவானி:

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக பவானி சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருவது வழக்கம்.

    அதேபோல் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் அக்னி நட்சத்திரம் முடியும் நாள் வரை சங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள மூலவரான சங்கமேஸ்வரர் மற்றும் கோவில் தெற்கு கோபுரத்தின் பின் பகுதியில் உள்ள சகஸ்ரலிங்கேஸ்வரர் (1008 சிவலிங்கம்) ஆகிய சன்னதியில் உள்ள மூலவர்களுக்கு ஐதீக முறைப்படி தாரா பாத்திரத்தில் பன்னீர், வெற்றி வேர், தண்ணீர் நிரப்பப்பட்டு சாமியின் தலையின் (சிரசு) கீழ் ஒவ்வொரு சொட்டாக விழுந்து சுவாமியை குளிர வைக்கும் விதமாக தாரா பாத்திரம் அபிஷேகம் தினசரி நடைபெறுவது வழக்கம்.

    இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி வருகின்ற 29-ந் தேதி முடிவடைய உள்ள நிலையில் அக்னி நட்சத்திர நாட்களான 26 நாட்களும் பவானி சங்கமேஸ்வரர் மற்றும் சகஸ்ர லிங்கேஸ்வரர் சுவாமிகளுக்கு இந்த தாரா பாத்திரத்தின் மூலம் (சிரசு) சுவாமியை குளிர வைக்கும் விதமாக ஜல அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    • தின்னரை எடுத்து உடம்பில் ஊற்றி தீ பற்ற வைத்துக் கொண்டார்.
    • இது குறித்து ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.

    ஈரோடு:

    ஈரோடு பெரிய சேமூர், வேல் நகரை சேர்ந்தவர் கோபி ராஜா. இவரது மனைவி மோனிஷா (23). இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    இந்நிலையில் கோபிராஜா குடி போதைக்கு அடிமையாகி சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இவ்வாறு சண்டை வரும் போதெல்லாம் மோனிஷா கணவருடன் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு செல்வது வழக்கம். இதேபோல் கடந்த 3 மாதத்திற்கு முன்பு மோனிஷா கணவருடன் சண்டை போட்டு கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதன் பின்னர் கோபி ராஜாவின் தாய், தந்தை சமாதானம் பேசி மீண்டும் மோனிஷாவை கணவர் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கோபிராஜா மீண்டும் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மோனிஷா இப்படியே குடித்துக்கொண்டு இருந்தால் வீட்டு வாடகை, வண்டி தவணை எப்படி கட்ட முடியும் என்று கணவரிடம் கேட்டுள்ளார்.

    இப்படியே செய்து கொண்டிருந்தால் நான் செத்து விடுவேன் என்று கூறி மோனிஷா வேகமாக வீட்டின் பின்புறம் சென்றார்.

    அங்கு இருந்த தின்னரை எடுத்து உடம்பில் ஊற்றி தீ பற்ற வைத்துக் கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கோபிராஜா தீயை அணைத்து மனைவியை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மோனிஷா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 7 ஆண்டுக்குள் ஆவதால் இது குறித்து ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.

    ×