என் மலர்
திண்டுக்கல்
- பைக்கில் சென்ற வாலிபர் சாலையோரம் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்தார்.
- படுகாயமடைந்த வாலிபர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகில் உள்ள விருதலைப்பட்டி மக்கள் நகரை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை பார்த்து வருகிறார். இன்று காலை மோட்டார் சைக்கிளில் வேடசந்தூரில் இருந்து தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
மினுக்கம்பட்டி பிரிவு அருகே சென்றபோது சாலையோரம் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்தார். நீண்ட நேரம் அவர் கீழே விழுந்து எழ முடியாமல் தவித்து வந்தார்.
பின்னர் அவ்வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- சுகாதார ஆய்வாளர்கள், பூச்சியியல் வல்லுனர்கள், களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று டெங்கு கொசுக்கள் அழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
- கொசு புழுக்கள் கண்டறியப்பட்டால் வீட்டு உரிமையாளர் களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திண்டுக்கல்:
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் தண்ணீரில் டெங்கு காய்ச்சலை பரப்பும் புழுக்கள் அதிகமாக உற்பத்தியாகிறது.
இதனால் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. திண்டுக்கல்லில் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் தடுப்பு பணிகளில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று மாநகர் நல அலுவலர் செபாஸ்டின் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள், பூச்சியியல் வல்லுனர்கள், களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று டெங்கு கொசுக்கள் அழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாநகராட்சி 19 வார்டுக்கு உட்பட்ட தெய்வசிகாமணி புரம், ஏ.ஆர். நகர், கிழக்கு ஆரோ க்கிய மாதா விஸ்தரிப்பு, அழகு நகர் உள்ளிட்ட பகுதி களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணியில் ஈடுபட்டனர். அப்போது கொசு புழுக்கள் கண்டறியப்பட்டது. அவற்றில் அபேட் மருந்து ஊற்றியும், பயன்படாத சிமெண்ட் தொட்டிகளை உடைத்தும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இது குறித்து மாநகர் நல அலுவலர் செபாஸ்டின் கூறுகையில், கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில், வீடு வீடாக சென்று டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியை தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். கொசு புழுக்கள் கண்டறியப்பட்ட வீடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மீண்டும் கொசு புழுக்கள் கண்டறியப்ப ட்டால் வீட்டு உரிமையாளர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
- தொழிலாளர்களுக்கு தீ தடுப்பு குறித்த செயல் விளக்க விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- தீ விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து எப்படி மீட்பது என்று செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கபட்டது.
நத்தம்:
நத்தம் அருகே உலுப்பகுடியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் குழு சார்பாக அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு தீ தடுப்பு குறித்த செயல் விளக்க விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இதில் 10 பேர் கொண்ட தீயணைப்பு குழு வீரர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். முகாமில் மழை, வெள்ளம் காலங்களில் பேரிடர் மீட்பு பணிகள் மூலம் எப்படி மீட்பது, கேஸ் சிலிண்டர் தீ விபத்தை எப்படி கட்டுப்படுத்துவது,
கட்டிடங்களின் மாடிகளில் தீ விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து எப்படி மீட்பது என்று செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கபட்டது.
- ரூ.7.60 கோடி மதிப்பில் புதிய திட்ட பணிகளுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி அடிக்கல் நாட்டி வைத்தார்.
- 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 15 லட்சம் புதிய ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன என பேசினார்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரூ.2 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து ரூ.7.60 கோடி மதிப்பில் புதிய திட்ட பணிகளுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி அடிக்கல் நாட்டி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். மகளிர் உரிமை திட்டம் வழங்கியதன் மூலம் பெண்கள் தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள வழிவகை செய்துள்ளார். முதியோர் உதவித்தொகை ரூ.1200 ஆகவும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.1500 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 15 லட்சம் புதிய ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. வயதானவர்கள், மாற்றுத்திற னாளிகள், நோயாளிகள் என ரேசன் கடைக்கு செல்ல முடியாதவர்கள் பொருட்கள் வாங்க வேறு ஒருவரை நியமித்து விண்ணப்பம் அளித்தால் அந்த நபரிடம் பொருட்கள் வழங்கப்படும். தமிழகத்தில் 1.50 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்ப ட்டுள்ளது. பரப்பலாறு அணை விரைவில் தூர்வாரப்படும். குடிநீர், தெருவிளக்கு, பஸ் வசதி, கல்வி, சுகாதாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் செயல்படுத்த ப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
- மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் அவ்வழியாக நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.
- வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
பழனி:
பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி தனியார் மில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் அவ்வழியாக நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். அந்தபெண் சத்தம் போடவே அருகில் இருந்த பொதுமக்கள் அந்த வாலிபர்களை பிடிக்க முயன்றனர்.
ஆனாலும் அவர்கள் பைக்கில் சென்றபோது பொதுமக்கள் துரத்திச் சென்று மாவட்ட எல்லையான ெகாழுமத்தில் 2 பேரையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.பின்னர் இது குறித்து பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்டது கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த காதர் மகன் நியாஸ்தீன் (வயது33), காதர் அலி மகன் உமர்முக்தார் பாரூக் (26) என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
இவர்கள் இதற்கு முன் வேறு யாரிடமாவது வழிப்பறி செய்துள்ளார்களா? இக்கும்பலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொடைக்கானலில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாநில பொது குழு கூட்டம் நடந்தது.
- கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாநில பொது குழு கூட்டம் நடந்தது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் தங்க மணி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேல்நிலை கல்வி தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு 45 ஆண்டுகள் ஆகியும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
எனவே மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், பள்ளிகளில் மாணவர்களை நெறிப்படுத்துவதற்காக ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் பிரச்சினையில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது, தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் வகையில் ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும்.
மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்களை தோற்றுவித்து பணி நியமனம் செய்ய வேண்டும். இதே போல கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநிலம் முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.அதன்பின் மாநில தலைவர் தங்கமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, மாணவர்களை நெறிப்படுத்தும் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 3-ம் கட்ட போராட்டங்கள் நடைபெறுகிறது. முதற்கட்டமாக கருப்பு பேட்ச் அணிந்து போராட்டம் செய்யப்பட்டு முடிக்கப்பட்டது.
வரும் 9ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கவனஈர்ப்பு போராட்டம் நடத்துவது என்றும், இதை அடுத்து சென்னையில் முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
- உரங்கள் நியாயமான விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்கவும், போலி உரங்கள் விற்பனையை தடுக்கவும் மாவட்டத்தில் 14 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- இந்த சோதனையில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாத 4 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் 195 தொடக்க வேளாண்ைம கூட்டுறவு கடன் சங்கங்கள், 327 தனியார் உரக்கடைகள் என ெமாத்தம் 522 கடைகள் செயல்பட்டு வருகின்றன. ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பருத்தி, மக்காச்சோளம், தோட்டக்கலை பயிர்கள் மற்றும் மலர் செடிகளின் தேவைக்காக 3294 டன் யூரியா, 2130 டன் டி.ஏ.பி., 1398 டன் பொட்டாஸ், 9048 டன் கலப்பு உரங்கள், 889 டன் சூப்பர் பாஸ்பேட் என 16760 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இந்த உரங்கள் நியாயமான விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்கவும், போலி உரங்கள் விற்பனையை தடுக்கவும் மாவட்டத்தில் 14 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் கடந்த 5 நாட்களுக்கு மேலாக மாவட்டத்தில் உள்ள அனைத்து உரக்கடைகளிலும் சுழற்சி முறையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கடைகளில் வைக்கப்பட்டுள்ள எடை கருவி, கடைகளின் உரிமம், விற்பனை விவரம், இருப்பு விவரம் உள்ளிட்ட 27 வகையான கள அறிக்கை விவரங்களை தனித்தனியாக இந்த குழுவினர் சேகரித்து வருகின்றனர். இந்த சோதனையில் 15 உரக்கடைகள் தரப்பில் உரிமம் புதுப்பிப்பதற்கும், 10 கடைகள் ஓ படிவம் கேட்டும், வேளாண்மை உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாட்டு அலுவ லகத்தில் விண்ணப்பம் அளித்திருந்தனர்.
இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் தெரிவிக்கையில், வேளாண்ைம உதவி இயக்குனர், வேளாண் அலுவலர், தோட்டக்கலை அலுவலர்கள் ஆகியோரை கொண்ட 14 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள உரக்கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனையில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாத 4 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
உர விற்பனையாளர்கள் லாப நோக்கில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்வது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- சாலை பணியாளர்கள் அனைவரையும் தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்கள் என அங்கீகரித்து ஊதியம் மாற்றம் வழங்க வேண்டும்.
- திண்டுக்கல் தலைமை தபால் நிலயைத்தில் முதல்-அமைச்சர், பொதுப்பணி த்துறை அமைச்சர் ஆகியோருக்கு மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
தமிழ்நாடு நெடுஞ்சாலை த்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் வட்டார கிளை தலைவர் சேகர் தலைமையில் மாநில துணைத்தலைவர் ராஜமாணிக்கம் உள்பட பலர் திண்டுக்கல் தலைமை தபால் நிலயைத்தில் முதல்-அமைச்சர், பொதுப்பணி த்துறை அமைச்சர் ஆகி யோருக்கு மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த மனுவில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். இறந்தவர்களின் வாரிசு களுக்கு நெடுஞ்சாலைத் துறையிலேயே கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்.
சாலை பணியாளர்கள் அனைவரையும் தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்கள் என அங்கீகரித்து ஊதியம் மாற்றம் வழங்க வேண்டும். 10 சதவீத ஆபத்து படி, சீருடை சலவை படி, நிரந்தர பயணப்படி வழங்க வேண்டும் என குறிப்பிட ப்பட்டுள்ளது.
- பீடி ஓசி தராத ஆத்திரத்தில் கும்பல் வாலிபர் மற்றும் குடும்பத்தினரை தாகத வார்த்தைகளால் திட்டி தாக்கினர்.
- புகாரின் பேரில் போலீசார் 4 பேரை கைது செய்தனர்.
பெரும்பாறை:
பெரும்பாறை அருகே குத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் பாண்டி(27). கூலித்தொழிலாளி. இவரிடம் புதூர் பகுதியை சேர்ந்த வினோத்குமார்(24) மற்றும் அவரது நண்பர்கள் ஓசியில் பீடி வாங்கி தருமாறு கேட்டுள்ளனர்.
அதற்கு பாண்டி தன்னிடம் பணம் இல்லை என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் பாண்டியை தகாத வார்த்தைகளால் திட்டி வீட்டின் கதவை உடைத்தனர். இதை தடுக்க வந்த பாண்டியின் தந்தை-தாய், உறவினர்களை தாக்கினர்.
இதுகுறித்து தாண்டிக்குடி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அருண்குமார், அஜித்குமார், ஜெகன்நாத் மற்றொரு அஜித்குமார் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- காதல் திருமணம் செய்த வாலிபர் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ராமையா மகன் கார்த்திக் (வயது 29). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ராதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வாடிப்பட்டியில் வசித்து வந்த கார்த்திக் கடந்த 1 வாரமாக கள்ளிப்பட்டியில் தனது தாயாருடன் வசித்து வந்தார். இன்று காலை அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒவ்வொரு மாத பவுர்ணமியன்று பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மனை பக்தர்கள் வேண்டி மலைக்கோ ட்டையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.
- புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி பெண்கள் , வாலிபர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செய்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மலைக்கோ ட்டை உச்சியில் பழமை வாய்ந்த பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி சிலைகள் இல்லாததால் 2 நூற்றாண்டுகளுக்கு மேலாக வழிபாடுகள் நடைபெறுவது இல்லை. எனினும் ஒவ்வொரு மாத பவுர்ணமியன்று பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மனை பக்தர்கள் வேண்டி மலைக்கோ ட்டையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.
நேற்று புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி பெண்கள் , வாலிபர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செய்தனர். அவர்கள் பத்மகிரீஸ்வரர்- அபிராமி அம்மன் சிலைகளை பல்லக்கில் சுமந்தபடி பக்தி பாடல்களை பாடி கிரிவலம் சென்று வழிபாடு நடத்தினர்.
- திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கை முகாம் நடைபெற்றது.
- வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் கொசு புழுக்களை உற்பத்தியாகும் வண்ணம் வைத்திருந்தால் உரிமையாளர் களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி கென்னடி நினைவு தொடக்கப்பள்ளியில் மாநகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கை முகாம் நடைபெற்றது. இதில் கமிஷனர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
டெங்கு இல்லாத நகரமாக திண்டுக்கல் மாநகரம் இருக்க வேண்டும். இதற்கு சுகாதார ஆய்வாளர்கள், களப்பணியாளர்கள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். வீடு வீடாக சென்று கொசு புழுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டுபிடித்து, மருந்து ஊற்றி அழிக்க வேண்டும்.
தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க அறிவுறுத்த வேண்டும். தொடர்ந்து வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் கொசு புழுக்களை உற்பத்தியாகும் வண்ணம் வைத்திருந்தால் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். முறையாக பணியில் ஈடுபடாத களப்பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கொசு உற்பத்தியை தடுக்க சுகாதார ஆய்வாளர்கள் முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும். கொரோனாவை போல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் அனைவரும் தீவிரம் காட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.
இதில் சுகாதார இணை இயக்குநர் வரதராஜன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ பணியாளர்கள், மருத்துவ அலுவலர்கள், பரப்புரையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






