என் மலர்
திண்டுக்கல்
- தாமரைக் குளத்தில் திறந்த வெளி கிணற்றிலிருந்து குடிதண்ணீர் கடந்த பல ஆண்டுகளாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- இந்நிலையில் தாமரை குளத்தில் திறந்தவெளி கிணறாக உள்ளதால் அந்த கிணற்றில் புழு பூச்சிகள் மிதந்து வருகிறது.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே சித்தையன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட நரசிங்கபுரம், அழகர்நாயக்கன்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 1 கி.மீ தூரத்தில் உள்ள தாமரைக் குளத்தில் திறந்த வெளி கிணற்றிலிருந்து குடிதண்ணீர் கடந்த பல ஆண்டுகளாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தாமரை குளத்தில் திறந்தவெளி கிணறாக உள்ளதால் அந்த கிணற்றில் புழு பூச்சிகள் மிதந்து வருகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வரும் காட்டுப்பன்றி, மலைப்பாம்புகள், காட்டுப் பூனைகள் உள்ளிட்ட வன விலங்குகளும், நாய்களும் கிணற்றில் இறந்து மிதக்கிறது.
இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் நிலையில் திறந்தவெளி கிணற்றில் இருந்து எடுக்கப்படும் குடிதண்ணீர் சித்தையன்கோட்டை பேரூராட்சியில் விநியோகம் செய்யப்பட்டு வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. திறந்த வெளி கிணற்றில் இருந்து உரிய பாதுகாப்பு இல்லாமல் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே பேரூராட்சி நிர்வாகம், அந்த கிணற்றுக்கு மூடி அமைத்து பாதுகா ப்பான குடிதண்ணீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 9 ஆண்டு கால முயற்சியில் தற்பொழுது வெற்றியும் கண்டுள்ளார்.
- தற்பொழுது கொடைக்கானலில் விளையக்கூடிய குங்குமப்பூ காஷ்மீரை காட்டிலும் தரம் உயர்ந்ததாக உள்ளது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானல் மலைக்காய்கறிகள் விளைச்சலுக்கு அதிக பெயர் பெற்றது. இங்கு முக்கிய காய்கறிகளான உருளைக்கிழங்கு, பீட்ரூட், காலிபிளவர், பீன்ஸ், காரட், புரோக்கோலி போன்ற பல்வேறு வகையான காய்கள் பயிரிடப்பட்டு வருகிறது. உலக அளவில் கர்ப்பிணி பெண்கள் தங்கள் குழந்தைகள் சிவப்பாக பிறக்க குங்குமப்பூவை பாலில் கலந்து குடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இந்த குங்குமப்பூ உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடுகள் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான். அடுத்து இந்தியாவில் நமது காஷ்மீர் மாநிலம் ஆகும். ஆனால் இங்கு உற்பத்தி செய்யப்படும் குங்குமப்பூ குறைந்த அளவில் உள்ளதால் ஆண்டுக்கு பல ஆயிரம் கிலோ வெளிநாட்டில் இருந்து வாங்கும் நிலை உள்ளது. தற்பொழுது இந்தியாவில் காஷ்மீருக்கு அடுத்தபடியாக மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் மேல் மலை கிராமமான கவுஞ்சி மற்றும் பூண்டி மலை கிராமங்களில் மூர்த்தி என்ற விவசாயி கடந்த 2014ம் ஆண்டு முதல் தொடர்ந்து முயற்சி செய்து காஷ்மீரிலிருந்து குங்குமப்பூ விதை கிழங்கு வாங்கி பசுமை குடில் அமைத்து விவசாயம் செய்தார். 9 ஆண்டு கால முயற்சியில் தற்பொழுது வெற்றியும் கண்டுள்ளார். தனது ஒரு ஏக்கர் நிலத்தில் குங்குமப்பூ பயிரிட்டு சாகுபடி செய்தார்.
இது குறித்து அவர் கூறும்போது, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் இதற்கான பயிற்சி மற்றும் அறிவுரைகளின்படி தனது முயற்சியை தொடர்ந்ததாக தெரிவித்தார். மேலும் காஷ்மீருக்கு அடுத்தபடியாக குங்குமப்பூ பயிரிட கொடைக்கானலில் சீதோஷ்ண நிலை மற்றும் குளிர் முக்கிய காரணமாக உள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் ரூ.4 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும். ஒரு ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் பயிரிட்டால் சில ஆயிரங்கள் மட்டுமே கிடைக்கும். ஆனால் குங்குமப்பூ சாகுபடிக்கு 55 நாட்கள் முதல் 60 நாட்கள் போதுமானது. 15 கிலோ குங்குமப்பூ விதை கிழங்கு வாங்கி தற்பொழுது அதனை 40 கிலோவாக உருவாக்கி உள்ளேன். தற்பொழுது கொடைக்கானலில் விளையக்கூடிய குங்குமப்பூ காஷ்மீரை காட்டிலும் தரம் உயர்ந்ததாக உள்ளது. மேலும் கொடைக்கானலில் விளையும் குங்குமப்பூவுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. இந்த புது முயற்சியை மற்ற விவசாயிகளும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
- ஆண்டு தோறும் நவம்பர் 26ம் தேதி இந்திய அரசியல் அமைப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
- இதனை முன்னிட்டு திண்டுக்கல்லில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.
திண்டுக்கல்:
சுதந்திர இந்தியாவின் அரசியல் அமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் நவம்பர் 26ம் தேதி இந்திய அரசியல் அமைப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1950 ஜனவரி 26 அன்று முதல் நடைமுறைக்கு வந்தது. அரசியலமைப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளை நாம் குடியரசு தினமாக கொண்டாடி வரு கிறோம். இந்திய அரசிய லமைப்பின் முக்கியத்து வத்தை வலியுறுத்தும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26ம் நாளை அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு திண்டுக்கல்லில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. பெரியார் சிலை முதல், வெள்ளை விநாயகர் கோயில் வரை மாணவர்கள் மனித சங்கிலியில் ஈடுபட்ட னர். இதில் மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர், பாரதியார், திப்புசுல்தான், சின்ன மருது, சுபாஷ் சந்திர போஸ், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பல்வேறு விடுதலைப் போராட்ட வீரர்கள் வேடமணிந்து பங்கேற்றனர்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம், கடமையை செய்வோம், உரிமையை கேட்போம், அடிப்படை உரிமை அனைவருக்கும் உரியது என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி மாணவர்கள் மனித சங்கிலி பேரணியில் ஈடுபட்டனர்.
- இன்று 4 ஜோடிகளுக்கு திருமணங்களை மாவட்ட கலெக்டர் பூங்கொடி நடத்தி வைத்தார்
- மொத்தம் ரூ.30,000 மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் இன்று 4 ஜோடிகளுக்கு திரு மணங்களை மாவட்ட கலெக்டர் பூங்கொடி நடத்தி வைத்து ரூ.2.19 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை வழங்கினார். அப்போது அவர் பேசிய தாவது,
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பொருளாதாரத்தில் பின்த ங்கிய ஏழை, எளிய பொது மக்களின் ஜோடிகளுக்கு கோவில்கள் சார்பாக 4 கிராம் தங்கத்தாலி உட்பட ரூ.50,000 மதிப்பில் சீர் வரிசை பொருட்கள் வழங்கி திருமண விழா நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்துக்களின் திருமணத்திற்கு தேவையான 4 கிராமில் திருமாங்கல்யம், மணமகன் ஆடை ரூ.1000, மணகள் ஆடை ரூ.2,000, திருமணத்திற்கு மணமகன், மணமகள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு ரூ.2,000, மாலை, புஷ்பம் ரூ.1,000, பீரோ ரூ.7,800, கட்டில் ரூ.7500, மெத்தை ரூ.2,200, இரண்டு தலையணை ரூ.190, ஒரு பாய் ரூ.180, இரண்டு கைக்கடிகாரம் ரூ.1,000, ஒரு மிக்சி ரூ.1,490, பூஜை பொரு ட்கள் மற்றும் பாத்திரங்கள் ரூ.3,640 என மொத்தம் ரூ.30,000 மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு 500 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தப்பட்டது. தற்போது கூடுதலாக மேலும் 100 ஜோடிகளை சேர்த்து ஒரு மண்டலத்திற்கு 30 ஜோடிகள் வீதம் 600 ஜோடிகளுக்கு திருமண விழா நடத்தப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்ட த்தில் ஏற்கனவே 2 கட்டமாக இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அதனை த்தொடர்ந்து திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் 4 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு அவர்களுக்கு ரூ.2.19 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் திண்டுக்கல் மேயர் இளமதி, மாவட்ட அறங்காவலர் குழுத்தலை வர் சுப்பிரமணியன், கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேலுச்சாமி, இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் சுரேஷ், கோவில் செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- நாடார் சங்க கருப்பு கட்டி பேட்டையில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடை பெற்றது.
- முதல் நாள் நிகழ்ச்சியாக மங்கள இசை, விக்னேஸ்வரர் பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை தட்சிணமா நாடார் சங்க கருப்பு கட்டி பேட்டையில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. கும்பாபி ஷேகத்தை முன்னிட்டு முதல் நாள் நிகழ்ச்சியாக மங்கள இசை, விக்னேஸ்வரர் பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.
2-வது நாள் நிகழ்ச்சியாக பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். நிறைவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது.இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- ஓட்டலில் பரோட்டா சாப்பிட்டு விட்டு 2 பேரும் தூங்கிக் கொண்டு இருந்தனர்.
- ராமகிருஷ்ணனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
நிலக்கோட்டை:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சித்தார்பட்டியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 39). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 15-ந்தேதி சதுரகிரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக சேர்ந்தார்.
பின்னர் அங்கிருந்து ராமகிருஷ்ணனும், அதே ஊரைச் சேர்ந்த வீரமுத்து என்பவரும் லாரியில் பொருட்களை ஏற்றிக் கொண்டு நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி தனியார் மில்லுக்கு வந்தனர்.
இரவு அங்குள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா சாப்பிட்டு விட்டு 2 பேரும் தூங்கிக் கொண்டு இருந்தனர். சிறிது நேரத்தில் ராமகிருஷ்ணனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமகிருஷ்ணன் உயிரிழந்தார். இது குறித்து அவரது தாயார் இன்பவள்ளிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் ஷர்மிளா வழக்கு பதிவு செய்து ராமகிருஷ்ணன் பரோட்டா சாப்பிட்டதால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றார்.
- பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் முருகன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது.
- துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொசவபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 50 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக முருகன் (வயது 51) என்பவர் பணிபுரிந்து வருகிறார். பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் முருகன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது.
இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு பள்ளிக்கு வந்தனர். அங்கிருந்த தலைமை ஆசிரியர் முருகனை சரமாரியாக தாக்கினர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தலைமை ஆசிரியரை சக ஆசிரியர்கள் மீட்டு வேறு ஒரு அறைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இது குறித்து அம்பிளிக்கை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் தலைமை ஆசிரியரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தால் அரசு பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
- பண்ணைக்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்து சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- இதன் காரணமாக வத்தலகுண்டு-கொடைக்கானல் மெயின் ரோட்டில் உள்ள மூலையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்தது. குறிப்பாக கொடைக்கானல், வேடசந்தூர், பழனி, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொடைக்கானல் மலை கிராமங்களிலும் கன மழை பெய்து வருகிறது. பண்ணைக்காடு, மச்சூர், வடகரைபாறை, மூலையாறு, பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, கே.சி.பட்டி உள்ளிட்ட பகுதியில் கடந்த சில வாரங்களாக இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்து வந்தது.
இதனால் மலை பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஊற்று தண்ணீர் சிறு அருவியாக கொட்டுகிறது. பண்ணைக்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்து சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக வத்தலகுண்டு-கொடைக்கானல் மெயின் ரோட்டில் உள்ள மூலையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் இந்த அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க கூடும் என பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பழனி 8, சத்திரப்பட்டி 24.4, நிலக்கோட்டை 6 மி.மீ. மழைளவு பதிவாகி உள்ளது.
- குழந்தை இல்லை. இந்த விரக்தியில் பாலாஜி மது போதைக்கு அடிமையானார்.
- கடந்த 22ம் தேதி தனது கணவனரை காணவில்லை என வேடசந்தூர் போலீசில் புகார் அளித்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் ஆர்.எம். காலனி 13-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் பாலாஜி (வயது33). சென்ட்ரிங் தொழிலாளி. இவருக்கு சசிகலா என்பவருடன் திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து பாலாஜி தனியாக வசித்து வந்தார். பின்னர் புவனேஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டு வேடசந்தூரில் வசித்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த விரக்தியில் பாலாஜி மது போதைக்கு அடிமையானார்.
கடந்த 22ம் தேதி தனது கணவனரை காணவில்லை என வேடசந்தூர் போலீசில் புவனேஸ்வரி புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு திண்டுக்கல் ஆயுதப்படை மைதானம் அருகே நெல்லையில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச் சம்பவம் குறித்து ரயில்வே போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் செல்ல இரவு நேர பஸ்கள் இல்லை
- எனவே திண்டுக்கல்லில் இருந்து வக்கம்பட்டி, செம்பட்டி, மைக்கேல்பாளையம் வழியாக நிலக்கோட்டைக்கு காலநேர நிர்ணயம் செய்து 56 தனி நடைகள் இயக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்:
நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் செல்ல இரவு நேர பஸ்கள் இல்லை என பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் செய்தி வெளியானது.
இதனிடையே அரசு போக்குவரத்து கழக திண்டுக்கல் மண்டலம் சார்பில் விடுத்துள்ள அறிக்கையில், திண்டுக்கல்லில் இருந்து வக்கம்பட்டி, செம்பட்டி, மைக்கேல்பாளையம் வழியாக நிலக்கோட்டைக்கு காலநேர நிர்ணயம் செய்து 56 தனி நடைகள் இயக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்லில் இருந்து சின்னாபட்டி, கொடைரோடு வழியாக நிலக்கோட்டைக்கு 32 தனி நடைகளும் என மொத்தம் 88 நடைகள் தடை இல்லாமல் நிலக்கோட்டை பகுதிக்கு இயக்கப்பட்டு வருகிறது.
இதில் நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல்லுக்கு இரவு 7, 7.45, 8.20, 8.45, 9.15, 9.25, 9.40 ஆகிய நேரங்களில் இயக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலம் பணி கடந்த 7 ஆண்டுகளாக நடைபெ ற்றதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் இயக்கம் கடந்த மாதம் 30ந் தேதி முதல் திண்டுக்கல்லில் இருந்து இரவு. 7.50 மணிக்கு புறப்பட்டு இரவு 9.25 மணிக்கு சென்று திண்டுக்கல்லுக்கு திரும்பும் வகையிலும் இதேபோல திண்டுக்கல்லில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு 9.25 மணிக்கு நிலக்கோட்டை சென்று திண்டுக்கல்லுக்கு திரும்பும் வகையிலும் கூடுதலாக 4 தனி நடைகள் இயக்கப்பட்டு வருகிறது.
எனவே பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள், வியாபாரிகள், பொதுமக்கள் வந்து செல்ல போக்குவரத்து சதவீதத்திற்கு ஏற்ப பஸ் வசதி உள்ளது என தெரிவித்துள்ளனர்.
- நத்தத்தில் உள்ள தனியார் பைக் ஷோரூமில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.
- இவரும் மணக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக்கும் சர்வீஸ் வந்த பைக்கை ஓட்டி பார்க்க சென்றனர்.
திண்டுக்கல்:
நத்தம் அருகே கொசவபட்டியைச் சேர்ந்தவர் வினித் (வயது 30). இவர் நத்தத்தில் உள்ள தனியார் பைக் ஷோரூமில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரும் மணக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் விஜயகுமார் என்பவரும் சர்வீஸ் வந்த பைக்கை ஓட்டி பார்க்க சென்றனர்.
நத்தம், - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சேர்வீடு பகுதியில் சென்ற போது துவரங்குறிச்சியில் இருந்து வந்த கார் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயமடைந்தனர்.
நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- கொடைக்கானலில் நேற்று காலை முதல் சாரல் தொடங்கி இரவு வரை கனமழை வெளுத்து வாங்கியது.
- மழையும் பெய்ததால் பைக், கார் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மிதமான வெப்பம் நிலவிய நிலையில் அவ்வப்போது மிதமான மழை மற்றும் திடீர் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கொடைக்கானலில் நேற்று காலை முதல் சாரல் தொடங்கி இரவு வரை கனமழை வெளுத்து வாங்கியது. மேலும் காலையில் தொடங்கிய மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லாத நிலையில் மாணவ-மாணவிகள், அன்றாட பணிகளுக்கு செல்லும் பொதுமக்களும், கொடைக்கானல் வந்திருந்த சுற்றுலா பயணிகளும் கடும் அவதி அடைந்தனர்.
மதியம் மற்றும் மாலை வேளைகளில் கடும் பனிமூட்டம் நிலவியது. அத்துடன் மழையும் பெய்ததால் பைக், கார் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். நேற்றைய பருவநிலை இன்றும் தொடர்ந்து வருகிறது. இன்று காலை 6 மணி முதல் அவ்வப்போது சாரல் மழையும் பனி மூட்டமும் நிலவி வந்ததால் காலை நேர பணிகளுக்கு செல்பவர்களும் மாணவ-மாணவிகளும் அவதி அடையும் நிலை ஏற்பட்டது. மேலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் சூழல் நிலவி வருகிறது.
கொடைக்கானல் ரோஸ்கார்டன் பகுதியில் 15.6, பிரையண்ட் பூங்காவில் 38.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.






