என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • எனது பணியை பாராட்டி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எனக்கு எம்.எல்.ஏ. பதவி வழங்கினார்.
    • குஜராத்தில் மகத்தான வெற்றி பெற்றதைப் போல தமிழகத்திலும் பா.ஜ.க. ஆட்சியை பிடித்து தாமரை மலரும். அதற்காக நான் பாடுபடுவேன் என்றார்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் அன்பழகன். இவர் அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை பிரச்சினை தலைதூக்கிய நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார்.

    பின்னர் அவர் தெரிவிக்கையில், அ.தி.மு.க.வில் நீண்ட காலமாக பணியாற்றி வந்தேன். எனது பணியை பாராட்டி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எனக்கு எம்.எல்.ஏ. பதவி வழங்கினார். அதன் பிறகு கட்சியிலும் பதவிகள் வழங்கப்பட்டது.

    ஆனால் அதன் பிறகு தேன்மொழிக்கு மட்டும் 3 முறை சீட் வழங்கியுள்ளனர். எனக்கு முக்கியத்துவம் அளிக்காமல் புறக்கணித்து வந்தனர். இதனால் பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன். குஜராத்தில் மகத்தான வெற்றி பெற்றதைப் போல தமிழகத்திலும் பா.ஜ.க. ஆட்சியை பிடித்து தாமரை மலரும். அதற்காக நான் பாடுபடுவேன் என்றார்.

    • சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம், தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் சுமார் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு வழங்கப்பட்டது.
    • சிறந்த கால்நடைகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

    செந்துறை:

    நத்தம் தாலுகா செந்துறை அருகே மந்தகுளத்துப்பட்டியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    திண்டுக்கல் கோட்ட உதவி இயக்குநர் திருவள்ளுவன் ஆலோசனையின் பேரில் நடந்த முகாமில் செந்துறை கால்நடை மருந்தக உதவி மருத்துவர் இந்து தலைமையில் உதவி மருத்துவர்கள் சிறுகுடி குமரேசன், குட்டுப்பட்டி பிரேமாவதி ஆய்வாளர் கமலா, பராமரிப்பு உதவியாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    இதில் சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம், தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் சுமார் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு வழங்கப்பட்டது. சிறந்த கால்நடைகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகளை குடகிப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் ராஜேஸ்வரி அழகர்சாமி மற்றும் வார்டு உறுப்பினர் கணேசன் வழங்கினர்.

    • பலத்த காற்று வீசியதால் கொடைக்கானல் நகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் பெயர்ந்து விழுந்தன.
    • சாரல் மழை காரணமாக ஏரியில் படகு சவாரி செய்ய யாரும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்த நிலையில் இன்று காலையிலும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    இருந்தபோதும் கொடைக்கானல் மற்றும் சிறுமலை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.

    கொடைக்கானலில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்த நிலையில் வத்தலக்குண்டு ரோடு, பழனி ரோடு பகுதிகளில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து போக்குவரத்து தடைபட்டது. அந்த இடங்களில் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் வனத்துறையினர் சென்று முறிந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    பலத்த காற்று வீசியதால் கொடைக்கானல் நகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் பெயர்ந்து விழுந்தன. சாரல் மழை காரணமாக ஏரியில் படகு சவாரி செய்ய யாரும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பெரும்பாலான சுற்றுலா தலங்களும் வெறிச்சோடியே காணப்பட்டது.

    இதேபோல் தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது.

    • மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள உண்டியல் அருகே சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார்.
    • போலீசார் அந்நபரை மறைமுகமாக கண்காணித்து வந்தனர்.

    பழனி:

    பழனி மலைக்கோவிலில் தற்போது சீசன் நடைபெற்று வருவதால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வருகை தருகின்றனர். இதுபோன்ற பக்தர்களை குறிவைத்து வழிப்பறி சம்பவங்களும், திருட்டு சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

    இதுபோன்ற நபர்களை போலீசார் கண்காணித்து அவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள உண்டியல் அருகே சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை மறைமுகமாக கண்காணித்து வந்தனர். ஆட்கள் இல்லாததை அறிந்து அந்த நபர் உண்டியலில் இருந்து பணத்தை எடுத்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    அடிவாரம் போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் தென்காசியை சேர்ந்த சுந்தர் (வயது34) என்பதும் இவர் கடந்த 4 வருடங்களாக பழனியில் தங்கி சமையல் வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்தார். உண்டியலில் இருந்து ரூ.340யை திருடியபோது கையும் களவுமாக பிடிபட்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிலக்கோட்டை மாலை கட்டும் தொழிலாளர்களை கொண்டு அம்மனுக்கு மாலைகள், 150 நிலை மாலை, தோரணங்கள் கட்டுவதற்கான பூக்கள் கட்டும் பணியில் ஈடுபட்டனர்.
    • சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலில் திருக்கார்த்திகை மகஉற்சவத்தில் நிலக்கோட்டையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட மாலைகள், தோரணங்கள் கோவிலை அலங்கரிக்க உள்ளன.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மைக்கேல்பாளையம் ஊராட்சி தலைவர் சுகந்தா. இவர் கேரள மாநிலம் சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் திருக்கார்த்திகை மகஉற்சவ நிகழ்ச்சிக்கு கோவில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கும் வகையில் மாலைகள், தோரணங்கள் செய்வதாக நேர்ந்து கொண்டார்.

    அதன்படி சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலில் இன்று நடைபெற உள்ள மக உற்சவத்துக்கு நிலக்கோட்டை மலர் சந்தையில் இருந்து பட்டு ரோஸ், 4 வண்ணங்களில் செவ்வந்தி, அரளி, செண்டுமல்லி, கோழிக்கொண்டை உள்பட 9 வகையான மலர்கள் 2 டன் அனுப்பப்பட்டது.

    நிலக்கோட்டை மாலை கட்டும் தொழிலாளர்களை கொண்டு அம்மனுக்கு மாலைகள், 150 நிலை மாலை, தோரணங்கள் கட்டுவதற்கான பூக்கள் கட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    நேற்று மாலை 2 டன் மலர்களும், மாலை, தோரணங்களாக கட்டி முடிக்கப்பட்டு கேரளாவுக்கு சுகந்தா குடும்பத்தினர் புறப்பட்டனர். இன்று சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலில் திருக்கார்த்திகை மகஉற்சவத்தில் நிலக்கோட்டையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட மாலைகள், தோரணங்கள் கோவிலை அலங்கரிக்க உள்ளன.

    • கடந்த சில நாட்களாக தொடர் சாரல்மழையும், கடுமையான குளிரும் நிலவி வருகிறது.
    • ஒருமுறை மட்டுமே பூக்கும் இந்த சிலுவை பூக்களை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து அதன் முன்பு புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர் சாரல்மழையும், கடுமையான குளிரும் நிலவி வருகிறது. பனிமூட்டமும், மேகக்கூட்டமும் நிறைந்து காணப்படுவதால் வாகனங்கள் சாலையில் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

    காலையில் 10 மணிவரை கூட கடும் குளிர் நிலவிவருகிறது. இந்நிலையில் இந்த சீதோஷனத்திற்கு ஏற்ற வகையில் பல்வேறு பூக்கள் பூத்துக்குலுங்கி வருகின்றன. குறிப்பாக டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் சிலுவை பூக்கள் கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும். அதுபோன்ற மலர்கள் தற்போது அதிக அளவில் பூக்க தொடங்கியுள்ளன.

    சிலுவை வடிவத்தில் இளஞ்சிவப்பு மற்றும் மெருன் நிறத்தில் இவ்வகை பூக்கள் பூத்துக்குலுங்குவது சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனை காண்பதற்காகவே பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் இந்த சிலுவை பூக்களை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து அதன் முன்பு புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

    • மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • இன்று தங்க ரத புறப்பாடு நடைபெறாது.

    முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனியில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி காப்பு கட்டு தலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மலைக்கோவிலில் தினமும் மாலை சண்முகார்ச்சனை, சின்னக்குமார சுவாமி தங்கசப்பரத்தில் யாகசாலை புறப்பாடு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாலையில் சாயரட்சை பூஜையைத் தொடர்ந்து மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்பட்டது.

    பின்னர் பரணி தீபத்தில் இருந்து சுடர் பெறப்பட்டு மலைக்கோவிலில் 4 திசைகளிலும் விளக்குகள் ஏற்றப்பட்டன.

    திருக்கார்த்திகையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கே சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு தொடர்ந்து சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் யாகசாலை பூஜைக்கு சின்னக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மேள தாளம் முழங்க சிவாச்சாரியார்களால் கோவில் முன்பு உள்ள தீப ஸ்தம்பத்தில் மகா தீபம் ஏற்பட்டது. பின்னர் பனை, தென்னை ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனையில் எண்ணெய், நெய் ஊற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பழனி மலைக்கோவிலைத் தொடர்ந்து பெரியநாயகி அம்மன் கோவில், திரு ஆவினன்குடி கோவில்களிலும் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.விழாவை முன்னிட்டு பழனி மலைக்கோவிலில் இன்று தங்க ரத புறப்பாடு நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காலையிலேயே ஏராளமாக பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    • திண்டுக்கல்லில் பஸ்நிலையம், ரெயில்நிலையம், வழிபாட்டு தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக அளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு நடத்தி சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் இருந்தால் அவர்களிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் பஸ்நிலையம், ரெயில்நிலையம், வழிபாட்டு தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக அளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் உத்தரவின் பேரில் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு நடத்தி சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் இருந்தால் அவர்களிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் கடந்த 2 நாட்களாக போலீசார் பயணிகளின் உடமைகளை பரிசோதனை செய்து கண்காணித்து வருகின்றனர்.

    திண்டுக்கல் நகரில் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் மலைக்கோட்டையிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு திருக்கார்த்திகையை முன்னிட்டு ஒரு தரப்பினர் தீபம் ஏற்ற வருவார்கள் என்ற தகவலால் இந்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் யாரையும் மலைக்கோட்டைக்கு அனுமதிக்கவில்லை.

    இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தொடர்ந்து இன்று முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டதால் அப்பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் சுற்றித்திரிந்தால் அவர்களது விபரங்களை கேட்டறிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் முகவரி மற்றும் செல்போன் எண்களையும் போலீசார் குறித்து வைத்துக்கொண்டனர்.

    • எழும்பள்ளம் ஏரி சீரமைப்பு பணிக்காக ரூ.1 கோடியே 37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • எழும்பள்ளம் ஏரி சீரமைப்பு பணியை தொடங்குவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் பகுதியில் அமைந்துள்ளது எழும்பள்ளம் ஏரி. இப்பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரியை சீரமைக்க அப்பகுதி விவசாயிகள் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

    இதனையடுத்து ஏரியை தூர் வாரவும், கரைகளை பலப்படுத்துதல் மற்றும் முழு கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள செந்தில்குமார் எம்.எல்.ஏ., கொடைக்கானல் ஒன்றிய பெருந்தலைவர் ஸ்வேதா ராணி கணேசன், துணைத் தலைவர் முத்துமாரி சுரேஷ்பாண்டி, மன்னவனூர் ஊராட்சித் தலைவர் முருகன் மற்றும் கவுன்சிலர்கள், ஊர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்-அமைச்சரிடம் முறையிடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து எழும்பள்ளம் ஏரி சீரமைப்பு பணிக்காக ரூ.1 கோடியே 37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எழும்பள்ளம் ஏரி சீரமைப்பு பணியை தொடங்குவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், ஒன்றிய துணைப் பெருந்தலைவர் முத்துமாரி, மன்னவனூர் ஊராட்சித் தலைவர் முருகன், மேல்மலை ஒன்றிய செயலாளர் ராஜதுரை, ஒன்றிய துணைச் செயலாளர் சுரேஷ் பாண்டி மற்றும் யூனியன் கவுன்சிலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • மழையின் காரணமாகவும், அவ்வப்போது ஏற்படும் பனியின் தாக்கத்தாலும் கொய்யா பழங்களில் புதுவித நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளது.
    • இந்த புதுவித நோய் தாக்கத்திலிருந்து கொய்யாப்பழ மரங்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலை கிராமங்களில் அதிக அளவில் காய்கறிகள், பழங்கள், மலர் வகைகள் சாகுபடி செய்யப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு பல்வேறு ஆங்கில காய்கறிகள் மட்டுமின்றி பழ வகைகளும் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கொடைக்கானல் வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட புலியூர் கிராமத்தில் தற்போது அதிக அளவில் கொய்யா பழங்கள் விவசாயம் செய்து வருகின்றனர். கொடைக்கானலில் பெய்து வரும் மழையின் காரணமாகவும், அவ்வப்போது ஏற்படும் பனியின் தாக்கத்தாலும் கொய்யா பழங்களில் புதுவித நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் விளைச்சல் பாதிப்பு அடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    எனவே தோட்டக்கலைத்துறையினர் இந்த புதுவித நோய் தாக்கத்திலிருந்து கொய்யாப்பழ மரங்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புலியூர் கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகமான காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதோடு காய்கறிகளையும் முழுமையாக அழித்து விடுகிறது.
    • காட்டுப்பன்றிகளை விரட்ட மின் வேலி அமைத்தாலும் அதில் சிக்கி இறக்கும் காட்டுப்பன்றிகள் மற்றும் மற்ற விலங்ககுளால் விவசாயிகள் குற்ற வழக்குகளில் சிக்கும் அபாயமும் உள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் அதிகமான மக்கள் விவசாயத்தையே முழுமையாக செய்து வருகின்றனர். கேரட், முள்ளங்கி, உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் விளையும் நிலங்களில் அதிகமான காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதோடு காய்கறிகளையும் முழுமையாக அழித்து விடுகிறது.

    இதனால் மன்னவனூர் ஊராட்சிக்குட்பட்ட கவுஞ்சி கிராமப்பகுதியில் அறுவடைக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் விளைந்திருந்த கேரட் பயிர்களை காட்டுப்பன்றிகள் அதிகமான நஷ்டம் ஏற்படும் வகையில் நாசம் செய்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    இதனால் ஒவ்வொரு விவசாயிக்கும் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ெதரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது குறித்து காட்டுப்பன்றிகள் சேதப்படுத்திய விளைநிலங்களில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும் தொடர்ந்து அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை விரட்ட மின் வேலி அமைத்தாலும் அதில் சிக்கி இறக்கும் காட்டுப்பன்றிகள் மற்றும் மற்ற விலங்ககுளால் விவசாயிகள் குற்ற வழக்குகளில் சிக்கும் அபாயமும் உள்ளது.

    இது போன்ற பிரச்சினைகள் இல்லாமல் மேல்நிலை கிராம விவசாயிகளின் விவசாயத்தை அழிக்கும் காட்டுபன்றி போன்ற விலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இது வரை வன விலங்குகளால் ஏற்பட்ட நஷ்டத்தினை விவசாயிகளுக்கு பெற்றுத்தரவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    • சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டறியும் நடவடிக்கையாக கொடைக்கானல் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • 2 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டறியும் நடவடிக்கையாக கொடைக்கானல் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி நாயுடுபுரம், பாக்கியபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த பாக்கியபுரத்தை சேர்ந்த ஜீவா மகன் விஜய் (வயது22), கீழ் பூமி பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் மகன் முருகன் (47) ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர்.

    இதில் அவர்கள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து போதைக்காளான் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்றது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 1.100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×