என் மலர்
திண்டுக்கல்
- பெண், சிறுமியுடன் வெளியேறிய பின் ஊழியர் கடையில் இருந்த தங்க செயின்களை சரிபார்த்தனர். அப்போது ஒரு சங்கிலி குறைவாக இருந்தது தெரிய வந்தது.
- கடையில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவை சோதனை செய்தபோது அதில் தங்க சங்கிலியை அந்த பெண் ஆடைக்குள் மறைத்து வைத்து திருடிச் சென்றது தெரிய வந்தது.
பழனி:
பழனியில் திண்டுக்கல் சாலையில் நகைக்கடை உள்ளது. இங்கு ஒரு சிறுமியுடன் வந்தபெண் ஊழியர்களிடம் தங்க சங்கிலி வாங்க வேண்டும் என கூறி உள்ளார். இதனைத் தொடர்ந்து பல்வேறு மாடல்களை கடை ஊழியர்கள் காண்பித்தனர்.
அதனை பார்த்த பெண் மற்றொரு நாள் வந்து வாங்கிக் கொள்வதாக கூறி விட்டு சிறுமியுடன் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து ஊழியர் கடையில் இருந்த தங்க செயின்களை சரிபார்த்தனர். அப்போது ஒரு சங்கிலி குறைவாக இருந்தது தெரிய வந்தது.
உடனடியாக கடையில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவை சோதனை செய்தபோது அதில் தங்க சங்கிலியை அந்த பெண் ஆடைக்குள் மறைத்து வைத்து திருடிச் சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ஊழியர்கள் விரட்டிச் சென்று அந்த பெண்ணை பிடித்து பழனி டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த காஜாமைதீன் மனைவி ஆமினா (40) என்பது தெரிய வந்தது. மகளுடன் நகைக்கடையில் தங்க சங்கிலி திருடியதை ஒப்புக் கொண்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்
- சபரிமலை சீசன் நடைபெற்று வருவதால் அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் தங்கள் புனித யாத்திரையில் பழனி முருகனையும் தரிசனம் செய்து செல்கின்றனர்.
- அடிவாரம் மலைக்கோவில், கிரி வீதி, பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் வருகையால் நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பழனி:
தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
தற்போது சபரிமலை சீசன் நடைபெற்று வருவதால் அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் தங்கள் புனித யாத்திரையில் பழனி முருகனையும் தரிசனம் செய்து செல்கின்றனர்.
இதனால் கடந்த சில நாட்களாக அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.மேலும் இன்று விடுமுறை என்பதால் சுற்றுவட்டாரத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் அடிவாரம் மலைக்கோவில், கிரி வீதி, பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் வருகையால் நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனை சீர்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இருந்தபோதும் அதிக வாகனங்கள் வந்ததால் சமாளிக்க முடியவில்லை. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. ரோப்கார், மின் இழுவை ரெயில் நிலையம் ஆகியவற்றிலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மேலும் படிப்பாதை மற்றும் யானைப்பாதை வழியாக பக்தர்கள் மலை க்கோவிலுக்கு சென்றனர்.
கூட்டம் அதிகரித்ததால் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 2 மணி நேரம் காத்திருந்து முருகனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
- வழக்கமாக ஞாயிற்றுகிழமைகளில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். தற்போது மழை பெய்து மரங்கள் சாலையில் முறிந்து விழுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது.
- கடந்த 2 நாட்களாக கொடைக்கானல் நகர், கிராம பகுதிகளில் ஆய்வு செய்து குடிநீர் பாட்டில்கள் 1, 2 லிட்டர்களில் விற்பனை செய்யக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
தமிழகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் பெய்த தொடர்மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. மேலும் மின் கம்பங்களும் ஒடிந்ததால் மலைக்கிராமங்கள் இருளில் மூழ்கியது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். அங்கு முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணி நடைபெற்றது.
மேலும் மின் ஊழியர்கள் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர் மழையால் கொடைக்கானலில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது புயல் கரையைக் கடந்த நிலையில் மழை குறைந்துள்ளது.
வழக்கமாக ஞாயிற்றுகிழமைகளில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். தற்போது மழை பெய்து மரங்கள் சாலையில் முறிந்து விழுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. வந்திருந்த பயணிகளும் நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை மட்டும் கண்டு ரசித்தனர்.
மேலும் கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்தனர். இதனால் சாலைகள் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்பட்டது.
கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு அட்வகேட் கமிஷனர் முகமது முகைதீன் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். கடந்த 2 நாட்களாக கொடைக்கானல் நகர், கிராம பகுதிகளில் ஆய்வு செய்து குடிநீர் பாட்டில்கள் 1, 2 லிட்டர்களில் விற்பனை செய்யக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், உள்ளாட்சி நிர்வாகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் 13ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை பொன்னகரம் , நல்லாம்பட்டி, ெரட்டியபட்டி, வாழைக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார் புரம், மேட்டுப்பட்டி, தொழில்பேட்டை,
என்.ஜி.ஓ காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, காப்பிளியபட்டி, நாகல்நகர், பாரதிபுரம், ரெயில்நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.
- சின்னாளப்பட்டி ராஜன் உள் விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற ஒரு மாணவி உட்பட 9 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. இந்திய அணிக்காக விளையாடி வெற்றி பெற்று திரும்பிய திண்டுக்கல் மாணவர்களுக்கு சின்னாளப்பட்டியில் பாராட்டு விழா நடைபெற்றது.
சின்னாளப்பட்டி:
இலங்கையில் நபாக மாவட்டம், சுமேதா கல்லூரியில் உலக அளவிலான ரோல்பால் போட்டி நடைபெற்றது. 11 வயதுக்குட்பட்டோர், 14 வயதுக்குட்பட்டோர், 17 வயதுக்குட்பட்டோர், 17 வயதுக்கு மேற்பட்டோர் என 4 பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் 50 பேர் கலந்து கொண்டனர். இதில் திண்டுக்கல் சின்னாளப்பட்டி ராஜன் உள் விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற ஒரு மாணவி உட்பட 9 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய அணி 14 வயதுக்குட்பட்டோர், 17 வயதுக்கும் மேற்பட்டோர் (பெண்கள்) ஆகிய 2 பிரிவுகளில் முதல் பரிசும், 11 வயதுக்குட்பட்டோர், 17 வயதுக்கும் மேற்பட்ட சீனியர் பிரிவிலும் 2 ம் பரிசும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. இந்திய அணிக்காக விளையாடி வெற்றி பெற்று திரும்பிய திண்டுக்கல் மாணவர்களுக்கு சின்னாளப்பட்டியில் பாராட்டு விழா நடைபெற்றது.
மாணவர்களை சர்வதேச நடுவரும், பயிற்சியாளருமான பிரேம்நாத், தென்னிந்திய ரோல்பால் சங்க செயலாளர் சுப்பிரமணியன், ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல்பால் சங்க செயலாளர் கோவிந்தராஜ், இந்திய அணி மேலாளர் ராஜசேகர் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- இடையகோட்டையில் நங்காஞ்சியாற்றுக்கு குறுக்கே கடந்த 25 வருடங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் கட்டப்பட்டுள்ளது.
- இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும். இல்லையெனில் புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து இடையகோட்டை வழியாக கரூர் வரை மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்த தார் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதில் இடையகோட்டையில் நங்காஞ்சியாற்றுக்கு குறுக்கே கடந்த 25 வருடங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பாலத்தை கடந்துதான் கோயமுத்தூர், மார்க்கம்பட்டி, கள்ளிமந்தையம், கரூர், பள்ளபட்டி, அரவக்குறிச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.
பாலம் வழியாக ஏராளமான பஸ், லாரி, கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்கள் சென்று வருகிறது.
பாலத்தின் இரு புறங்களிலும் உள்ள தடுப்புச்சுவர் மற்றும் பாலத்தின் அடிப்பகுதி சேதமடைந்துள்ளது.
இந்த பாலத்தில் அதிக பாரம் கொண்ட லாரிகள் கடந்து செல்லும்போது இடிந்து விடுமோ என்ற அச்சத்தோடு வாகன ஓட்டிகள் கடந்து செல்கிறார்கள்.
எனவே இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும். இல்லையெனில் புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- புயல் கரையை கடந்த பிறகும் கொடைக்கானலில் மழை இன்று காலையிலும் நீடித்து வந்தது.
- பழனி-கொடைக்கானல் சாலையில் இரவு நேரத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
கொடைக்கானல்:
மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. கொடைக்கானலில் நேற்று காலை முதலே தொடர்ந்து பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில் வத்தலகுண்டு பிரதான சாலை, ஏரிச்சாலை, செண்பகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ராட்சத மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற நகராட்சி அதிகாரிகள் மரங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மரங்கள் முறிந்த அருகில் இருந்த மின் கம்பங்கள் மீது விழுந்ததால் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. இதனால் நகர் பகுதிகளிலும், மழை கிராமங்களும் இருளில் மூழ்கியது. அதனை சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
புயல் கரையை கடந்த பிறகும் கொடைக்கானலில் மழை இன்று காலையிலும் நீடித்து வந்தது. ஏற்கனவே மழை மற்றும் புயல் காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இன்று 2-வது நாளாக மரங்களை அகற்றும் பணிகள் நடந்து வருவதால் இன்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழனி-கொடைக்கானல் சாலையில் இரவு நேரத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. பழனியில் இருந்து தேக்கந்தோட்டம் வழியாக கொடைக்கானல் செல்லும் பாதை உள்ளது. இப்பகுதியில் பல இடங்களில் மரங்கள் முறிந்து கிடப்பதால் அதனை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
தொடர் மழையால் கொடைக்கானல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று 2-வது நாளாக கொடைக்கானல் மற்றும் சிறுமலை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மரங்கள் மற்றும் மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகளை நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
மேலும் பொதுமக்கள் மழை நேரங்களில் வீடுகளில் இருக்க வேண்டும் எனவும் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தினர். வத்தலக்குண்டு முதல் கொடைக்கானல் வரை உள்ள மலைச்சாலையில் நேற்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை நான்கு சக்கர வாகனங்கள் இரு சக்கர வாகனங்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டது.
வருவாய் துறை சார்பில் வத்தலக்குண்டு-கொடைக்கானல், கொடைக்கானல்-பழனி பிரதான சாலைகளில் பேரிடர் மீட்பு படையினர் களத்தில் இருந்து பணியாற்றி வருகின்றனர். இருப்பினும் மலைச்சாலைகளில் அவ்வபோது மரங்கள் விழுந்து கொண்டே இருப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மாண்டஸ் புயலின் தாக்கத்தால் கொடைக்கானல் பொதுமக்கள் கடுமையான பாதிப்படைந்தனர். வனப்பகுதியில் உள்ள கடைகளுக்கு வியாபாரத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டது. இன்றும் காலையிலிருந்து மழை விட்டு விட்டு பெய்ததால் பொதுமக்கள் அன்றாட வாழ்க்கையில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலில் நேற்று ஒரே நாளில் 87 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- 23-ந் தேதி 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
- மரக்கன்று நடுவதற்கு குழி தோண்டும் பணியில் 100 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகிறார்கள்
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டையில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான 117 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடத்தில் சீமை கருவேல மரங்கள் மற்றும் செடி கொடிகளாக புதர்மண்டி கிடந்தது.
உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அந்த இடத்தை சுத்தப்படுத்தி பல வகையான மரக்கன்று நடவு செய்ய முடிவு செய்தார்.
இதற்காக நிலத்தை சுத்தப்படுத்தி தயார் படுத்தினர். மேலும் அங்கு 23-ந் தேதி 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் கின்னஸ் நடுவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை பார்வையிடுகின்றனர்.
இதனையொட்டி பொதுமக்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் மரக்கன்று நடுவதற்கு குழி தோண்டும் பணியில் 100 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகிறார்கள்
குள்ளனம்பட்டி:
சோனியாகாந்தியின் 76-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் திண்டுக்கல் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதற்கு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் ரோஜாபேகம் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் முன்னிலை வகித்தார்.
இதில் முன்னாள் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் முகமது சித்திக், மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வக்கீல் குப்புசாமி, மச்சக்காளை, அம்சவள்ளி, சிவாஜி, கவுன்சிலர் பாரதி, மண்டல தலைவர்கள் அப்பாஸ் மந்திரி, உதயகுமார், பரமன், நாகலட்சுமி, துணை தலைவர்கள் ஜோதி இராமலிங்கம், அப்துல் ரகுமான், வட்டாரத் தலைவர் மதுரை வீரன், எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாவட்ட தலைவர் காளிராஜ், நிர்வாகிகள் நிக்கோலஸ், அமீர்அம்ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு செல்வதாக கூறி விட்டு ராஜேஷ்குமார் பிலாத்து கிராமத்துக்கு வந்தார்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள ஊராளிப்பட்டியைச் சேர்ந்தவர் மகாலெட்சுமி (வயது 28). இவர் டிப்ளமோ நர்சிங் முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார்.
வடமதுரை அருகே உள்ள பிலாத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (33). இவர் சென்னை பெருங்குடியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அப்போது இவர்கள் 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் யாருக்கும் தெரியாமல் சென்னையிலேயே திருமணம் செய்து கொண்டு அங்கேயே வாழ்ந்து வந்தனர்.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு செல்வதாக கூறி விட்டு ராஜேஷ்குமார் பிலாத்து கிராமத்துக்கு வந்தார். அதன் பிறகு தனது மனைவியிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டார். பலமுறை தொடர்பு கொண்டும் அவர் பேசவில்லை.
இதனால் சந்தேகமடைந்த மகாலெட்சுமி வேறொரு செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது தனக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்க இருப்பதால் இனிமேல் நாம் சேர்ந்து வாழ முடியாது. எனவே தன்னை மறந்து விடவும் என கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மகாலெட்சுமி வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மாற்று சமூகம் என தெரிந்தும் தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், தான் கர்ப்பிணியானபோது சில வருடங்கள் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என கூறி கருவை கலைத்து விட்டதாகவும் கூறினார்.
தற்போது பெற்றோரின் பேச்சை கேட்டுக்கொண்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய முயல்வதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- காளைகளுக்கு தற்காலிகமாக வாடிவாசல் அமைத்தும், மண்களம் அமைத்தும் பிரத்யேகமாக பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
- மேலும் காளைகளுக்கு மண்குவியலில் முட்டும் கொம்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. காலை, மாலை வேளைகளில் தவிடு, பருத்தி விதை, சோளம், அரிசிமாவு, பேரிச்சம்பழம் போன்ற சத்தான உணவுகள் வழங்கப்பட்டு மாடுகளை தயார் படுத்தி வருகின்றனர்.
வத்தலக்குண்டு:
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தைத்திருநாளான பொங்கல பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. பொங்கல் பண்டிகையின் போது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் திண்டுக்கல், மதுரை, திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், எம்.வாடிப்பட்டி முத்துலாபுரம், சித்தரேவு, சித்தையன்கோட்டை பகுதிகளில் காளைகள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்த காளைகளுக்கு தற்காலிகமாக வாடிவாசல் அமைத்தும், மண்களம் அமைத்தும் பிரத்யேகமாக பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. காளைகள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வகையில் தீவிர பயிற்சி அளிக்கும் பணிகள் எம்.வாடிப்பட்டி, அய்யம்பாளையம் பகுதிகளில் நடைபெற்று வருகின்றது.
காளைகளுக்கு வாரத்தில் 1 நாள் நீச்சல் பயிற்சியும், தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுமார் 4 கி.மீ தூரம் நடைப்பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் காளைகளுக்கு மண்குவியலில் முட்டும் கொம்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. காலை, மாலை வேளைகளில் தவிடு, பருத்தி விதை, சோளம், அரிசிமாவு, பேரிச்சம்பழம் போன்ற சத்தான உணவுகள் வழங்கப்பட்டு மாடுகளை தயார் படுத்தி வருகின்றனர்.
வட மஞ்சுவிரட்டு பயிற்சி என்னும் வித்தியாசமான பயிற்சியும் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சியில் ஜல்லிக்கட்டு மாடு ஓடாத வண்ணம் களத்தின் நடுவில் வடக்கயிறால் கட்டி வைத்து மாடு களத்தில் சுற்றி வந்து மாடுபிடி வீரர்களை ஒருகை பார்ப்பதற்காக இப்பயிற்சினை அளிக்கின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்க மாநில இணைச்செயலாளர் அருண்குமார் கூறியதாவது, ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு பயிற்சியளிப்பதற்கு தற்காலிமாக வாடிவாசல் அமைத்து காளைகளை விட்டு பழக்கப்படுத்தினால் போட்டி நேரத்தில் வாடிவாசலை பயமின்றி தாண்டும்.
மாடுகளை கயிற்றால் கட்டி மாடுபிடி வீரர்கள் பயிற்சியளிக்கின்றனர். இங்கு கரிமாடு, நெத்திமரை கரைசல் செலலைகாளை, செவலைமரை மன்னப்போர், மரமாடு காம்பைமாடு உட்பட 15க்கும் மேற்பட்ட வகையான மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றது. இப்பகுதியில் வளர்க்கப்பட்டு வரும் மூல்லிக்கட்டு மாடுகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று தங்கம் வெள்ளி காசுகள், கட்டில், சிலவர் மற்றும் வெண்கல பாத்திரங்கள், சைக்கிள் உள்ளிட்ட பல பொருட்களை பெற்றுள்ளது.
இந்தவகையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வண்ணம் பயிற்சி அளித்து வருகிறோம் என்றார். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடும் மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கூறினார்.
- பள்ளிக்கு செல்லும் போது பலத்த மழை பெய்ததால் நனைந்துகொண்டே செல்லும் நிலை ஏற்பட்டது.
- புயல் மற்றும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில் சிறு குழந்தைளுக்காவது விடுமுறை அறிவிக்கலாம் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.
திண்டுக்கல்:
மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் இன்றுமுதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை, காஞ்சிபுரம், தேனி உள்பட 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், சிறுமலை பகுதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. புயல் காரணமாக நேற்று மாலை முதலே மாவட்டத்தில் விட்டுவிட்டு சாரல்மழை பெய்து வந்தது. மேலும் கடுமையான குளிர் வாட்டி வதைத்தது. இன்று காலையில் சற்று மழை குறைந்திருந்த நிலையில் மீண்டும் 8 மணி அளவில் பலத்த காற்றுடன் பெய்ய தொடங்கியது.
ஆனால் பள்ளிகளுக்கு எந்தவித விடுமுறை அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மாணவர்கள் விடுமுறை அறிவிப்பை எதிர்பார்த்து ஏமாந்த நிலையில் நனைந்த படியும், மழை கோட்டு அணிந்தபடியும் பள்ளிக்கு சென்றனர். ஆனால் பள்ளிக்கு செல்லும் போது பலத்த மழை பெய்ததால் நனைந்துகொண்டே செல்லும் நிலை ஏற்பட்டது.
இதேபோல நத்தம், வடமதுரை, அய்யலூர், எரியோடு உள்ளிட்ட பகுதிகளிலும் மழையில் நனைந்தபடியே மாணவர்கள் சென்றனர். நர்சரி மற்றும் ஆரம்பப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளும் மழையில் நனைந்து செல்லும் நிலை ஏற்பட்டது. அவர்களை பள்ளிக்கு விடவந்த பெற்றோர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். புயல் மற்றும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில் சிறு குழந்தைளுக்காவது விடுமுறை அறிவிக்கலாம் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே மழைக்கால நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ள குழந்தைகள் இதுபோன்ற சூழலில் பள்ளிக்கு செல்லும் போது அவர்கள் மட்டுமின்றி மற்ற குழந்தைகளும் நோய்தொற்றுக்கு ஆளாகும் நிலை உள்ளது. மேலும் பெரும்பாலான பள்ளிகளில் தரையில் அமர்ந்து படிக்கும் குழந்தைகள் மற்றும் நெருக்கமாக அமர்ந்து வகுப்பறையில் படிக்கும் குழந்தைகளுக்கு நோய்தொற்று ஏற்படும் நிலை உருவாகுேமா என பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.






