என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கொடைக்கானலில் இருளில் மூழ்கிய கிராமங்கள்- புயலால் மரங்கள், மின் கம்பங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
    X

    கொடைக்கானல் மலைச்சாலையில் மரம் முறிந்து விழுந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

    கொடைக்கானலில் இருளில் மூழ்கிய கிராமங்கள்- புயலால் மரங்கள், மின் கம்பங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

    • புயல் கரையை கடந்த பிறகும் கொடைக்கானலில் மழை இன்று காலையிலும் நீடித்து வந்தது.
    • பழனி-கொடைக்கானல் சாலையில் இரவு நேரத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    கொடைக்கானல்:

    மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. கொடைக்கானலில் நேற்று காலை முதலே தொடர்ந்து பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில் வத்தலகுண்டு பிரதான சாலை, ஏரிச்சாலை, செண்பகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ராட்சத மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற நகராட்சி அதிகாரிகள் மரங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மரங்கள் முறிந்த அருகில் இருந்த மின் கம்பங்கள் மீது விழுந்ததால் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. இதனால் நகர் பகுதிகளிலும், மழை கிராமங்களும் இருளில் மூழ்கியது. அதனை சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    புயல் கரையை கடந்த பிறகும் கொடைக்கானலில் மழை இன்று காலையிலும் நீடித்து வந்தது. ஏற்கனவே மழை மற்றும் புயல் காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இன்று 2-வது நாளாக மரங்களை அகற்றும் பணிகள் நடந்து வருவதால் இன்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பழனி-கொடைக்கானல் சாலையில் இரவு நேரத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. பழனியில் இருந்து தேக்கந்தோட்டம் வழியாக கொடைக்கானல் செல்லும் பாதை உள்ளது. இப்பகுதியில் பல இடங்களில் மரங்கள் முறிந்து கிடப்பதால் அதனை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    தொடர் மழையால் கொடைக்கானல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று 2-வது நாளாக கொடைக்கானல் மற்றும் சிறுமலை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    மரங்கள் மற்றும் மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகளை நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    மேலும் பொதுமக்கள் மழை நேரங்களில் வீடுகளில் இருக்க வேண்டும் எனவும் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தினர். வத்தலக்குண்டு முதல் கொடைக்கானல் வரை உள்ள மலைச்சாலையில் நேற்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை நான்கு சக்கர வாகனங்கள் இரு சக்கர வாகனங்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டது.

    வருவாய் துறை சார்பில் வத்தலக்குண்டு-கொடைக்கானல், கொடைக்கானல்-பழனி பிரதான சாலைகளில் பேரிடர் மீட்பு படையினர் களத்தில் இருந்து பணியாற்றி வருகின்றனர். இருப்பினும் மலைச்சாலைகளில் அவ்வபோது மரங்கள் விழுந்து கொண்டே இருப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மாண்டஸ் புயலின் தாக்கத்தால் கொடைக்கானல் பொதுமக்கள் கடுமையான பாதிப்படைந்தனர். வனப்பகுதியில் உள்ள கடைகளுக்கு வியாபாரத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டது. இன்றும் காலையிலிருந்து மழை விட்டு விட்டு பெய்ததால் பொதுமக்கள் அன்றாட வாழ்க்கையில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலில் நேற்று ஒரே நாளில் 87 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×