என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் தமிழக அரசுக்கு 5 கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
    • நிறைவேற்ற தவறினால் அடுத்து 3 கட்ட போராட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் அனுப்பப்பட்டது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம் சார்பாக மாவட்டத் தலைவர் பாண்டியராஜ் தலைமையில் தமிழக அரசுக்கு 5 கோரிக்கைகளை வலியுறுத்த தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

    இந்தப் போராட்டத்தில் வலியுறுத்திய கோரிக்கைகள் தபால் மூலம் 327 தபால்கள் அனுப்பப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளது:-

    கிராம ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கிடவும், பணிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு கால ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரம் மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கிடவும், ஊராட்சி பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்களுக்கு சிறப்பு கால ஓய்வூதியம் வழங்கிடவும், ஓய்வூதிய தொகையாக வழங்கும் பணத்தொகையாக ரூ.1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சம் ஆக உயர்த்திடவும்,

    மேல்நிலைத் தொட்டி ஆபரேட்டர்களாக பணியாற்றும் பணியாளர்களுக்கு மாதம்தோறும் ஓய்வூதியமாக ரூ.5000 வழங்கிடவும், கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு காலம் வரை ஊதியம் அரசு கருவூலம் மூலமாக வழங்கிட கோரியும், ஊரக வளர்ச்சித் துறையில் காலம் நேரம் கருதாமல் பணியாற்றும் ஊழியர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். முதல் கட்ட போராட்டமாக தபால் அனுப்பும் போராட்டமும், கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் அடுத்து 3 கட்ட போராட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் அனுப்பப்பட்டது.


    • திண்டுக்கல் மேற்கு பகுதி அ.தி.மு.க சார்பில் பேகம்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

    திண்டுக்கல்:

    தி.மு.க அரசின் பால் விலை, மின்கட்டணம், சொத்துவரி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து திண்டுக்கல் மேற்கு பகுதி அ.தி.மு.க சார்பில் பேகம்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது,

    தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் 525 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். ஆனால் 18 மாத தி.மு.க ஆட்சியில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. பால் விலையை உயர்த்தவே மாட்டோம் எனக்கூறி லிட்டருக்கு ரூ.12 உயர்த்தி உள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

    ரேசன் கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளது. மண்எண்ணை என்ற பேச்சே தற்போது இல்லாமல் போய்விட்டது. கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். மின்கட்டணத்தை கேட்டாலே ஷாக்கடிக்கும் நிலை உள்ளது. இதை அந்த துறையின் அமைச்சரிடம் கேட்டால் மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு பாருங்கள் என்கிறார்.

    சொத்துவரியை 83 சதவீதம் வரை உயர்த்தி விட்டனர். அ.தி.மு.க ஆட்சியில் எந்த விலையும் உயர்த்தப்படாமல் கட்டுக்குள் இருந்தது. பிளாட்பாரங்களில் மக்களை பிச்சைஎடுக்கும் நிலைக்கு தி.மு.க அரசு தள்ளியுள்ளது. பள்ளி, கல்லூரிகள் முன்பு தடைசெய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை தாராளமாக நடக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யாததால் ஏராளமான உயிர்கள் பலியாகி வருகின்றன.

    இதற்கு உரிய தீர்வை காணாமல் கவர்னர் மீது தி.மு.க குறைகூறி வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. போலீஸ் நிலையங்களில் தி.மு.க வினரின் தலையீடு அதிகரித்து வருகிறது.

    நாட்டில் இத்தனை பிரச்சினை உள்ளபோது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மகனுக்கு அமைச்சர் பதவியை கொடுத்து வருகிறார். இதன்மூலம் தி.மு.கவில் வாரிசு அரசியல் மீண்டும் உறுதியாகி உள்ளது. காங்கிரசில் நேருவுக்கு பிறகு இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, சோனியா, ராகுல் என தொடர்ந்து வாரிசுகளின் ஆதிக்கம் தொடர்ந்ததால் இன்று அந்த கட்சியே காணாமல் போய்விட்டது. அதேநிலைதான் தி.மு.கவுக்கும் ஏற்படும். மத்திய அரசுடன் இணக்கமாக இல்லாததால் தமிழகத்திற்கு வரவேண்டிய திட்டங்கள் கைநழுவிபோய்வருகிறது. அ.தி.மு.க ஆட்சியில் ரூ.1½ லட்சம் கோடி நிதியை தமிழகத்திற்கு பெற்றோம். ஆனால் தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சிகளுக்கு கூட நிதி ஒதுக்க முடியவில்லை.

    திண்டுக்கல் மாவட்டத்தில் நல்ல மழை பெய்தும் சீரான குடிநீர் வினியோகம் கொடுக்க முடியவில்லை. அரசுஆஸ்பத்திரியில் மருந்து தட்டுப்பாடு உள்ளது. சட்டமன்றத்தில் அறிவித்த எந்த திட்டங்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் நிறைவேற்ற முடியவில்லை. ஓ.பன்னீர்செல்வம் மூலம் அ.தி.மு.கவை பிளவுபடுத்த நினைத்தார். ஆனால் தற்போது பெரும்பாலான அ.தி.மு.க நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியின் பக்கமே உள்ளனர்.இனி எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.கவே வெற்றிபெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வாழ்க்கையில் வெறுப்படைந்த மணிகண்டன் தனது அண்ணன் முத்துச்சாமி வீட்டிலேயே வாழ்ந்து வந்தார்.
    • மணிகண்டன் அணிந்திருந்த உடைகள், ஏ.டி.எம். கார்டு ஆகியவை அருகே தனியாக எடுத்து வைக்கப்பட்டிருந்தது.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் காந்திஜிநகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது49). பி.காம். சி.ஏ. பட்டதாரி. இவர் கடலூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2012-ம் ஆண்டு அம்பிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

    இதனால் அவர்கள் கடந்த 2015-ம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டனர். அதன்பிறகு வாழ்க்கையில் வெறுப்படைந்த மணிகண்டன் தனது அண்ணன் முத்துச்சாமி வீட்டிலேயே வாழ்ந்து வந்தார். வேலைக்கு எதுவும் செல்லாததால் வீட்டில் இருந்தவர்கள் அவருக்கு அறிவுரை வழங்கி வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 8ந் தேதி தான் வேலை தேடி செல்வதாக கூறி சென்றார். அதன்பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று கொடைக்கானல் பூம்பாறை அருகில் உள்ள கருப்பசாமி கோவில் கைகாட்டி பகுதியில் நிர்வாண நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது மணிகண்டன் அணிந்திருந்த உடைகள், ஏ.டி.எம். கார்டு ஆகியவை அருகே தனியாக எடுத்து வைக்கப்பட்டிருந்தது.

    அதனை வைத்து விசாரணை நடத்தியதில் இறந்தது மணிகண்டன் என தெரிய வந்தது. அவரது உடலை கைப்பற்றி கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எவ்வாறு இறந்தார்? என தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்கு பிறகே முடிவுகள் தெரியும் என சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது
    • விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில் கழிவுகளால் அப்பகுதி சுகாதார சீர்கேடான நிலைக்கு மாறி வருகிறது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை பஸ் நிலையம் முன்பு கடந்த 2 மாதங்களாக தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. பல வாரங்களாக அகற்றப்படாமல் இருப்பதால் இப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    தற்போது விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில் கழிவுகளால் அப்பகுதி சுகாதார சீர்கேடான நிலைக்கு மாறி வருகிறது.

    இங்கு அரசு அலுவலகங்கள், வங்கி, கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை உள்ளன. தினசரி ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் இப்பகுதியில் மருத்துவகழிவுகள் கொட்டப்படுவதை பேரூராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் உள்ளது. இதுகுறித்து ெசயல்அலுவலர் சுந்தரியிடம் கேட்டபோது பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தனியார் மருத்துவமனை கழிவுகள் கொட்டப்படுவதாக புகார் வந்துள்ளது.

    இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம். மருத்துவகழிவுகள் கொட்டும் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • டாஸ்மாக் ஊழியரை குத்திய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • இவ்வழக்கில் வாலிபருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் தாலுகா பெரும்பாறை கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருபவர் சக்திவேல்(42). கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் அதேபகுதியை சேர்ந்த செந்தில்குமார்(40) என்பவர் தனக்கு ஓசியாக மதுபானம் தருமாறு சக்திவேலிடம் கேட்டுள்ளார்.

    அவர் தர மறுக்கவே ஆத்திரமடைந்த செந்தில்குமார் தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும் அவர் கடையை அடைத்துவிட்டு வெளியே வந்தபோது மீண்டும் தகராறு செய்து காலி மதுபாட்டிலை எடுத்து சக்திவேலின் வயிற்றில் குத்தினார். இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து செந்தில்குமாைர கைது செய்தனர்.

    இந்த வழக்கு கொடைக்கானல் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கார்த்திக், பாட்டிலால் குத்திய செந்தில்குமாருக்கு 8 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    • திருவேங்கடநாத பெருமாள் கோவிலில் கருவறை சுவற்றில் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது
    • இடையகோட்டையில் கிடைத்த கல்வெட்டில் உள்ள எழுத்துக்களை ஆராய்ந்தபோது 13-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது தெரியவந்தது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே இைடயகோட்டையில் திருவேங்கடநாத பெருமாள் ேகாவில் உள்ளது. இக்கோவிலின் கருவறை சுவற்றில் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது என பாண்டியநாடு பண்பாட்டு ஆய்வு மைய ஆய்வாளர்களான பேராசிரியர் லட்சுமணமூர்த்தி, அரிஸ்டாட்டில் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    மேலும் இதுகுறித்து கூறுகையில், வரலாற்றின் பல தடயங்கள் புதைந்து கிடக்கின்றன என்ற தகவல்களை இன்றைய கீழடி பொருனை தொல்லியல் ஆய்வுகள் வழியே அறியலாம். இடையகோட்டையில் திருவேங்கடநாத பெருமாள் கோவில், இந்திய விடுதலைப்போராட்ட வரலாற்றில் முக்கிய இடம் வகித்த விருப்பாச்சி பாளையம் அமைந்துள்ள நங்காஞ்சி ஆற்றங்கரையில் ஜமீன் அரண்மனைக்கு அருகில் உள்ளது.

    சமகால வரலாற்று சிறப்பும், தொன்மையும், பழமையும் நிறைந்த இடமான இடையகோட்டையில் கிடைத்த கல்வெட்டில் உள்ள எழுத்துக்களை ஆராய்ந்தபோது 13-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது தெரியவந்தது. மேலும் உதகம்பாலன் என்பவர் இக்கோவிலுக்கு நிலைகால், சிற்பங்கள் போன்றவற்றை செய்து கொடுத்துள்ளார் என்ற தகவல் இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது.

    இதில் உள்ள 17 வரிகளில் கடைசி 2 வரிகள் அழிந்த நிலையில் உள்ளன என்று தெரிவித்தனர்.

    • அரிவாளால் சரமாரியாக அவர்கள் 2 பேரையும் வெட்டினர். இதில் காயம் அடைந்த இருவரும் உயிருக்கு பயந்து மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு புகார் அளிக்க வந்தனர்.
    • போலீசார் இவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மதுக்காரன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (40). விவசாயி. இவரது மகன் சந்தோஷ் (18). இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் கொய்யா சாகுபடி செய்துள்ளனர்.

    வெள்ளைச்சாமிக்கும் இவரது சகோதரர் பழனியாண்டி (52) என்பவருக்கும் இடையே நில தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று தோட்டத்தில் கொய்யா பழங்கள் பறித்துக் கொண்டிருந்த வெள்ளைச்சாமியிடம் பழனியாண்டி மற்றும் இவரது மகன் அழகர் ஆகியோர் தகராறு செய்தனர்.

    அப்போது கையில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை காட்டி வெள்ளைச்சாமி மற்றும் அவரது மகன் சந்தோஷை மிரட்டினர். மேலும் அரிவாளால் சரமாரியாக அவர்கள் 2 பேரையும் வெட்டினர். இதில் காயம் அடைந்த சந்தோஷ் மற்றும் வெள்ளைச்சாமி ஆகிய இருவரும் உயிருக்கு பயந்து மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு புகார் அளிக்க வந்தனர்.

    அங்கிருந்த போலீசார் இவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து தகராறில் சொந்த அண்ணன் மற்றும் அண்ணன் மகனை நாட்டுத் துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    • 35-வது வார்டு பகுதியில் வசிப்போருக்கு கடந்த பல ஆண்டுகளாகவே குடிமனை பட்டா இல்லை. இது தொடர்பாக கிழக்கு தாசில்தார் அலுவலகம் முன்பாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன
    • வட்டாட்சியரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. விரைவில் பட்டா வழங்குவதாக வட்டாட்சியர் உறுதியளித்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 35-வது வார்டு பகுதியில் அண்ணா காலனி, பர்மா காலனி, சாமியார் தோட்டம், குருநகர், வேடப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் வசிப்போருக்கு கடந்த பல ஆண்டுகளாகவே குடிமனை பட்டா இல்லை.

    அண்ணா காலனியில் வசிப்பவர்களுக்கு கடந்த 35 ஆண்டுகளாக பட்டா வழங்கப்படாத நிலையில் ஏராளமான போராட்டங்கள் நடைபெற்றன. ஏற்கனவே இது தொடர்பாக கிழக்கு தாசில்தார் அலுவலகம் முன்பாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதற்கு முன்பு பணியாற்றிய வட்டாட்சியர்கள் விரைவில் பட்டா வழங்கப்படும் என்ற வாக்குறுதி அளித்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

    இந்நிலையில் இன்று திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இலவச வீட்டு மனை பட்டா கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு 35 வது வார்டு சி.பி.எம். கவுன்சிலர் ஜோதிபாசு தலைமை வகித்தார். கட்சியின் நகர செயலாளர் அரபு முகமது முன்னிலை வகித்தார். அடியனூத்து ஊராட்சி தலைவர் ஜீவானந்தம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாண்டி, மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 2வது வார்டு சி.பி.எம். கவுன்சிலர் கணேசன், நகர் குழு உறுப்பினர் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விஷ்ணுவர்தன் நன்றி கூறினார். பின்னர் வட்டாட்சியரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. விரைவில் பட்டா வழங்குவதாக வட்டாட்சியர் உறுதியளித்தார்.

    • முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி தராமல் பல லட்சம் மோசடி செய்துள்ளதாக புகார் வந்துள்ளது.
    • திண்டுக்கல் மாவட்டத்திலும் இந்நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்திருந்தால் மதுரை தபால்தந்தி நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம்

    திண்டுக்கல்:

    மதுரை பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

    மதுரை பெத்தானியாபுரம் சின்னச்சாமிபிள்ளை தெருவில் தமிழ்மாறன், நிறைமாறன், வேல்முருகன் ஆகியோர் கூட்டு சேர்ந்து வி.எல்.சி. என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். பல கவர்ச்சிகரமான திட்டங்களின் மூலம் பொதுமக்களை முதலீடு செய்ய வைத்து ஆசைவார்த்தைகளை கூறினார்கள்.

    ஆனால் முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி தராமல் பல லட்சம் மோசடி செய்துள்ளதாக புகார் வந்துள்ளது. இந்நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்கள் தற்போது புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.

    எனவே திண்டுக்கல் மாவட்டத்திலும் இந்நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்திருந்தால் மதுரை தபால்தந்தி நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பல்வேறு நோய்கள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகே பள்ளபட்டி ஊராட்சிக்குட்பட்ட கொட்டபட்டியில் தாடிக்கொம்பு வட்டாரம், நரசிங்கபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இதில் பல்வேறு நோய்கள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில் மருத்துவ அலுவலர் டாக்டர். விக்னேஷ், டாக்டர் ராஜரவிவர்மன், ஊராட்சி மன்ற தலைவர் பரமன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்

    • அதிக மதிப்பெண்கள் பெற்ற அய்யலூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 30 மாணவ- மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் கொடியேற்று விழா நடைபெற்றது.
    • 120 நலிவடைந்த முதியோர்களுக்கு சேலை, வேஷ்டிகள் வழங்கப்பட்டன.

    வடமதுரை:

    அய்யலூரில் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாநகரத் தலைவர் ஜெயக்குமார், திருச்சி மாவட்ட தலைவர் புரட்சிமணி, வடமதுரை ஒன்றிய செயலாளர் வடிவேல் முன்னிலை வகித்தனர்.

    திண்டுக்கல் மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார். செயல் தலைவர் இளமுருகு முத்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் அம்பேத்கரின் உருவப்படம் திறக்கப்பட்டது. 120 நலிவடைந்த முதியோர்களுக்கு சேலை, வேஷ்டிகள் வழங்கப்பட்டன.

    அதிக மதிப்பெண்கள் பெற்ற அய்யலூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 30 மாணவ- மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் கொடியேற்று விழா நடைபெற்றது.

    இதில் அய்யலூர் பேரூராட்சி தலைவர் கருப்பன், அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் அரசு ஊழியர் பிரிவு மாநில செயலாளர் மெய்யர், மாநில மகளிர் அணி செயலாளர் இலக்கிய செல்வி, மகளிர் அணி தலைவர் ஆசை தேன்மொழி, மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இளைஞர் அணி செயலாளர் மணிவேல் நன்றி கூறினார்.

    • இந்திய அரசமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப் பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்துகொள்வேன் என்று நான் உளமாற உறுதி மொழிகிறேன்.
    • மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) வாசிக்க அனைவரும் உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) அமர்நாத் தலைமையில் அலுவலர்கள் மனித உரிமைகள் தின உறுதிமொழியேற்றுக் கொண்டனர்.

    "இந்திய அரசமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப் பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்துகொள்வேன் என்று நான் உளமாற உறுதி மொழிகிறேன். எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில்,

    நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன். என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ செய்யமாட்டேன்.

    மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்" என்று மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) வாசிக்க அனைவரும் உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் அலுவலக மேலாளர்(குற்றவியல்) லட்சுமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×