என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • மார்கழி மாதத்தில் அதிகாலையிலேயே அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு திருவிளக்கு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெறும்.
    • மார்கழி மாதத்தில் தொடங்கி தைப்பொங்கல் வரையிலும் கோலப்பொடிகள் விற்பனை அதிக அளவில் நடைபெறும்.

    திண்டுக்கல்:

    மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாள் என்று கூறுவதுண்டு. ஏனெனில் மார்கழி மாதத்தில் அதிகாலையிலேயே அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு திருவிளக்கு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெறும்.

    இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். இதேபோல வீடுகளில் விதவிதமான கலர் கோலம் வரைந்து அதன் நடுவில் பசுஞ்சாணத்தில் பூசணிப்பூ வைத்து அழகுபடுத்துவார்கள். இதற்காக திண்டுக்கல்லில் பல்வேறு நிறங்களில் கோலப்பொடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    இதனை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். 1 பாக்கெட் ரூ.5 முதல் விற்பனை செய்யப்படுகிறது. மகளிர் சுயஉதவிக்குழுவினர் இந்த கலர் கோலப்பொடி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மார்கழி மாதத்தில் தொடங்கி தைப்பொங்கல் வரையிலும் கோலப்பொடிகள் விற்பனை அதிக அளவில் நடைபெறும். வீடுகள் மட்டுமின்றி கோவில்களிலும் அலங்கரிக்க கோலப்பொடிகள் வாங்கிச் செல்வார்கள். இதனை கருத்தில் கொண்டு அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ள பொடிகளை பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

    இதனால் தொழிலில் ஈடுபட்டுள்ள சுயஉதவிக் குழுவினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பழுதான பஸ்சை மீண்டும் இயக்கியதால் அதிருப்தி அடைந்த அவர்கள் போக்குவரத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • டிரைவரால் இயக்க தகுதியில்லாத பஸ் என கூறப்பட்ட பஸ்சை மீண்டும் பயணிகள் போக்குவரத்துக்கு கொண்டுவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    குள்ளனம்பட்டி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அழகர்நாயக்கன்பட்டிைய சேர்ந்தவர் முருகேசன். இவர் லோயர்கேம்ப் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று குமுளியில் இருந்து திண்டுக்கல்லுக்கு அரசு பஸ்சை ஓட்டிவந்தார்.

    கனமழை பெய்ததால் பஸ்சுக்குள் மழைநீர் ஒழுகியது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் முருகேசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து பயணிகளை திண்டுக்கல் பஸ்நிலையத்தில் இறக்கிவிட்டு பஸ்சுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்கு கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார்.

    பஸ் மிகவும் பழுதான நிலையில் உள்ளதால் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே இதனை சீரமைக்க வேண்டும் என அவர் கோரிக்ைக விடுத்தார். இதனைதொடர்ந்து போக்குவரத்து அதிகாரிகள் பஸ்சை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.

    நத்தத்தை சேர்ந்த மாட்டு வியாபாரிகள் கணேசன், ஆறுமுகம், அருணகிரி ஆகியோர் செம்பட்டிக்கு மாடு வாங்க சந்தைக்கு சென்றனர். அப்போது திண்டுக்கல் பஸ்நிலையத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்ட பஸ் நின்றிருந்ததை பார்த்தனர். பழுதான பஸ்சை மீண்டும் இயக்கியதால் அதிருப்தி அடைந்த அவர்கள் போக்குவரத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பயணிகள் உயிருடன் விளையாடுவதாக அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், டிரைவர் புகார் அளித்தபின்னர் சம்பந்தப்பட்ட பஸ்சை பணியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் பஸ் இயக்கப்படும் நிலையில் உள்ளது. மழை பெய்தால் மட்டும் தண்ணீர் ஒழுகும் நிைல உள்ளது. இருந்தபோதும் இயக்கலாம் என தெரிவித்ததால் மீண்டும் பஸ்நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றனர்.

    ஆனால் இதை ஏற்கமறுத்த பயணிகள் கூறுகையில், திண்டுக்கல் பகுதியில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் ஓட்டை உடைசலாகவே காணப்படுகிறது. அதிலும் கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்களை பராமரிப்பதே இல்லை. சீட்டுகள் கிழந்த நிலையில் மேற்கூரையும் சேதமடைந்து காணப்படுவதால் மழை காலங்களில் குடையுடனே பஸ்சில் செல்லும் அவல நிலை உள்ளது.

    இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் போக்குவரத்து அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. இந்த நிலையில் டிரைவரால் இயக்க தகுதியில்லாத பஸ் என கூறப்பட்ட பஸ்சை மீண்டும் பயணிகள் போக்குவரத்துக்கு கொண்டுவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.

    • பைக், கார்களிலும் ரேசன் அரிசி டன் கணக்கில் கடத்தப்படுகிறது.
    • ரேசன் அரிசி கடத்துவோர்க்ள மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், எரியோடு, குஜிலியம்பாறை, பாளையம் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் இருந்து இலவச அரிசி வாங்கும் சிலர் அதனை விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். அவர்களிடமிருந்து பெறப்படும் ரேசன் அரிசியை மறுசுழற்சி செய்து விற்பனை செய்கின்றனர்.

    ஒரு கிலோ ரூ.5-க்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பைக், கார்களிலும் ரேசன் அரிசி டன் கணக்கில் கடத்தப்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என சமூகஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    ரேசன் கடையில் வேலை செய்யும் நபர்கள், அரசு அலுவலர்கள் இதற்கு உடந்தையாக உள்ளனரா என்ற சந்தேகமும் எழுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதனை கண்காணித்து ரேசன் அரிசி கடத்துவோர்க்ள மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
    • 17 நாட்களுக்குப் பிறகு மாயமான வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஏ.வெள்ளோடு மேற்கு தெருவைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் மகன் டென்சிங்குமார் (வயது 34). கேட்டரிங் முடித்துவிட்டு கேரள மாநிலம் குமுளியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைபார்த்து வந்தார். இவருக்கு பிரிஸ்கா தமிழரசி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த 26ம் தேதி டென்சிங்குமாரின் தாய்மாமன் இறந்துவிடவே அதற்காக குடும்பத்துடன் வெள்ளோடு வந்தார். மறுநாள் காலை வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவரது மனைவி கடந்த 4ம் தேதி தனது கணவரை கண்டு பிடித்து தரும்படி அம்பாத்துரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வந்தனர். அவரது புகைப்படத்துடன் கூடிய நோட்டீஸ் ஒட்டியும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் நேற்று அதேபகுதியில் உள்ள பக்கவாட்டு சுவர் இல்லாத ஒரு கிணற்றில் ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தீயணைப்பு துறையினர் வரவழை க்கப்பட்டு கிணற்றில் கிடந்தவரின் உடல் போராடி மீட்கப்பட்டது. போலீசார் விசாரணையில் இறந்து கிடந்தவர் டென்சிங்குமார் என உறுதியானது.

    ஆனால் அவரது உடல் அழுகிய நிலையில் இருந்த தால் பிரேத பரிசோதனை செய்தால்தான் அவர் எவ்வாறு இறந்தார் என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். ஆனால் சம்பவ இடத்திற்கு வந்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் மறுத்துவிட்டனர். இதனை ெதாடர்ந்து ஓலைப்பாய் மூலம் அழுகிய நிலையில் இருந்த டென்சிங்குமார் உடல் சுற்றப்பட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது

    17 நாட்களுக்குப் பிறகு மாயமான வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தவறி விழுந்தாரா அல்லது யாரேனும் கிணற்றில் தள்ளி கொலை செய்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கிராம புறங்களில் பாதுகாப்பற்ற முறையில் பராமரிப்பின்றி உள்ள கிணறுகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆய்வு செய்து அதனை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி விவசாயிகளும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
    • வில்பட்டி கிராம பகுதியில் கனமழையால் அடுக்கடுக்காக இருந்த விளை நிலங்கள் சரிந்து கடும் சேதுமடைந்துள்ளது.

    கொடைக்கானல்:

    தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி விவசாயிகளும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

    கொடைக்கானல் மேல்மலை கிராம விவசாய நிலங்களில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த விவசாய பயிர்கள் நாசம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    வில்பட்டி கிராம பகுதியில் கனமழையால் அடுக்கடுக்காக இருந்த விளை நிலங்கள் சரிந்து கடும் சேதுமடைந்துள்ளது.இதனால் வேதனையடைந்த விவசாயிகள் மண் சரிவை தடுக்கும் விதமாக மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாத்து வருகின்றனர்.

    மேலும் பனிக்காலத்தில் பயிரிடப்படும் பட்டாணி போன்ற பணப்பயிர்களை விளைவிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். ஏற்கனவே பயிரிட்டு அறுவடைக்கு தயாராக இருந்த காய்கறிகளும் கடும் சேதம் அடைந்துள்ளது.அடுத்த கட்ட விவசாய பணிகளை தொடரவும் முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் மேல்மலை கிராமப்பகுதி விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில் வில்பட்டி கிராம விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பல லட்ச ரூபாய்க்கும் மேலாக கடன் வாங்கி விவசாயம் செய்தனர். தற்போது கனமழையால் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு முன்வந்து கொடைக்கானல் மலை கிராம விவசாயிகளின் துயர்துடைக்கும் வகையில் விவசாயிகளுக்கு பேரிடர் கால மானியங்களை வழங்கிட வேண்டும்.

    விவசாய கடன்களில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளை மீட்டெடுக்கவும், மேலும் அடுத்த கட்ட விவசாய பணிகளை துரிதமாக தொடர இழப்பீட்டுத் தொகையை வழங்கி உதவிடவும் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வியாபாரிகள் அனைவரும் இணை ஆணையர் லட்சுமியை முற்றுகையிட்டனர்.
    • சாலையோர வியாபாரி பூவாயி என்பவரை இணை ஆணையர் தாக்கியதாக கூறப்போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை சமரசம் செய்ய முயன்றும் கேட்கவில்லை.

    பழனி:

    பழனி கோவிலுக்கு தற்போது சபரிமலை சீசனாக இருப்பதால் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு இடையூறாக அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரக் கடைகள் அதிக அளவில் முளைத்து வருகின்றன.

    அவர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களை மிரட்டி பல்வேறு பொருட்களை வாங்க வற்புறுத்துவதாக புகார் எழுந்து வந்தது. இதனையடுத்து அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது. குறிப்பிட்ட எல்லைக்கு மேல் கடை வைத்திருப்பவர்களை கோவில் நிர்வாகம் சார்பில் அகற்றி அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

    இன்று காலை ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெற்றபோது கோவில் இணை ஆணையர் லட்சுமி பார்வையிட்டார். அவரிடம் ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் வியாபாரிகள் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சாலையோர வியாபாரி பூவாயி என்பவரை இணை ஆணையர் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் வியாபாரிகள் அனைவரும் இணை ஆணையர் லட்சுமியை முற்றுகையிட்டனர். அவரை போலீசார் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இணை ஆணையர் தனது அலுவலகத்திற்கு வந்துவிட்ட போதிலும் வியாபாரிகள் அவரை பின்தொடர்ந்து வந்து அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவரிடம் கேட்டபோது தான் யாரையும் தாக்கவில்லை என்று விளக்கம் அளித்தார். இருந்தபோதிலும் பூவாயி என்பவர் கூறுகையில், தனது கழுத்தில் அணிந்திருந்த கயிரை பிடித்து இழுத்து இணை ஆணையர் கன்னத்தில் அறைந்ததாக கூறினார். இதனால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை சமரசம் செய்ய முயன்றும் கேட்கவில்லை.

    இதனால் கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

    • கனமழை பெய்ததால் பஸ்சுக்குள் மழைநீர் ஒழுகியது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • பஸ்சுடன் கலெக்டர் அலுவலகம் வந்த டிரைவர், கலெக்டரை சந்தித்து அரசு பஸ்சின் நிலைமையை எடுத்துக்கூற இங்கு வந்துள்ளேன் என்றார்.

    குள்ளனம்பட்டி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அழகர்நாயக்கன்பட்டிைய சேர்ந்தவர் முருகேசன். இவர் லோயர்கேம்ப் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை குமுளியில் இருந்து திண்டுக்கல்லுக்கு அரசு பஸ்சை ஓட்டிவந்தார்.

    கனமழை பெய்ததால் பஸ்சுக்குள் மழைநீர் ஒழுகியது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் முருகேசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து பயணிகளை திண்டுக்கல் பஸ்நிலையத்தில் இறக்கிவிட்டு பஸ்சுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்கு கலெக்டரிடம் புகார் மனு கொடுக்க வந்துள்ளதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து முருகேசன் கூறுகையில்,

    கடந்த சில ஆண்டுகளாக அரசு பஸ்கள் ஓட்டை, உடைசலாகவே காணப்படுகிறது. இதுகுறித்து தேனி மற்றும் திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்துள்ளேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து 22 மணிநேரம் பணிபுரிய கட்டாயப்படுத்துகின்றனர்.

    இதனால் கடும் மனஉளைச்சலில் உள்ேளன். மேலும் பஸ்கள் முறையாக பராமரிக்கப்படாததால் அடிக்கடி பயணிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டரை சந்தித்து அரசு பஸ்சின் நிலைமையை எடுத்துக்கூற இங்கு வந்துள்ளேன் என்றார். இதனைதொடர்ந்து திண்டுக்கல் வட்டார போக்குவரத்து கழகத்தில் புகார் அளிக்குமாறு அவரை அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

    திண்டுக்கல் மண்டலத்தில் ஓடும் பெரும்பாலான பஸ்கள் ஓட்டை, உடைசலாகவே காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் பயணிகள் பாடு திண்டாட்டமாக உள்ளது. மேலும் டிரைவர், கண்டக்டர்கள் பயணிகளுடன் வாக்குவாதம் செய்யும் நிலையும் உள்ளது. எனவே தரமான பஸ்களை இயக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.
    • தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் சுமார் 10 கி.மீ சுற்றி சீலப்பாடி, அணைப்பட்டி வழியாக சென்றனர்.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகே தாடிக்ெகாம்பு அடுத்த டி.பள்ளபட்டி, சிக்கயகவுண்டனூர், பூசாரிகவுண்டனூர், மாரம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சென்றுவர சந்தனவர்த்தினி ஆற்றில் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு தரைப்பாலம் கட்டப்பட்டது.

    அந்த பாலம் சேதமடைந்ததால் அப்போதே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனைதொடர்ந்து கிராம மக்கள் பைக் உள்ளிட்ட வாகனங்களில் பாலத்தை கடந்து வந்தனர். தற்போது அந்த பாலம் மேலும் சேதமடைந்து காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.

    இதனைதொடர்ந்து கிராமமக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இன்று மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என பல்வேறு தரப்பினரும் திண்டுக்கல், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரமுடியாமல் சிரமம் அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் போது தரைப்பாலத்தை ஆபத்தான முறையிலேயே கடந்து வருகிறோம். இந்த ஆண்டும் அதேநிலையே நீடிக்கிறது.

    இதுகுறித்து பலமுறை தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் சுமார் 25 கி.மீ சுற்றி வேடசந்தூருக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றனர்.

    இதேபோல் பழைய கரூர் சாலை தனியார் கல்லூரி அருகே என்.பாறைப்பட்டி கிராம மக்கள் சந்தனவர்த்தினி ஆற்றை கடந்து சென்று வருகின்றனர். இன்று காலை தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் சுமார் 10 கி.மீ சுற்றி சீலப்பாடி, அணைப்பட்டி வழியாக சென்றனர். ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் போது இப்பகுதி மக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இதற்கு தீர்வு காணவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திண்டுக்கல் ஒன்றிய பகுதியில் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேசினார்.

    திண்டுக்கல்:

    பால் விலை, மின்கட்டணம், சொத்துவரி உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து திண்டுக்கல் ஒன்றிய பகுதியில் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் உழவர் சந்தை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சீனிவாசன் தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

    தமிழகத்தில் விடியலை ஏற்படுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு மக்களுக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தி வருகிறது. கடினமான சூழ்நிலையில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதிகளவு வரிச்சுமையை ஏற்படுத்தி அத்தியாவசிய பொருட்களை மக்கள் வாங்க முடியாத அளவிற்கு நெருக்கடியை தி.மு.க அரசு ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சூழ்நிலையில் தனது மகனுக்கு அமைச்சர் பதவி கொடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழகுபார்த்து வருகிறார். ஊேர பற்றி எரிந்தபோது ரோமாபுரி மன்னன் புல்லாங்குழல் வாசித்த கதைபோல்தான் இது உள்ளது. ஆளும்கட்சி என்பதால் தங்களை யாரும் கேட்கமாட்டார்கள் என்ற மமதையில் செயல்பட்டு வருகின்றனர். மக்களுக்கான நலத்திட்டங்கள் எதையும் செயல்படுத்த வில்லை.

    7 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை முறையாக கிடைக்கவில்லை. திண்டுக்கல் ஒன்றிய பகுதியில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்ட சாலைகளே தற்போது உள்ளது. பல சாலைகள் மழையால் சேதமடைந்து உள்ளபோதிலும் அதனை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு அலுவலகங்களில் தி.மு.கவினரின் தலையீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேநிலை நீடித்தால் மக்கள் ஒட்டுமொத்தமாக தி.மு.கவை புறக்கணிப்பார்கள். வாரிசு அரசியலை ஊக்கப்படுத்தியதால் காங்கிரஸ் அழியும் நிலையில் உள்ளது. அதேநிலைதான் தி.மு.கவிற்கும் ஏற்படும். மீண்டும் தேர்தல் நடைபெறும் போது அ.தி.மு.க வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பழனி:

    பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (டிச.15ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    அதன்படி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, காவலபட்டி, வி.பி.புதூர், தாதநாயக்கன்பட்டி, கரடிக்கூட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், தாளையூத்து துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தாளையூத்து, சுக்கம நாயக்கன்பட்டி பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஹோம் ஸ்டே,சாகச சுற்றுலா பயணம்,கேம்பிங் சைட்ஸ் உள்ளிட்டவைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கேம்பிங் சைட்ஸ் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டால் அந்த‌ நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

    கொடைக்கானல்:

    கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களை நம்பி வியாபாரிகள், கைடுகள், தங்கும்விடுதி உரிமையாளர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் அனும‌தியின்றி டென்ட் கூடாரங்கள் உள்ளிட்டவைகள் அமைப்ப‌த‌ற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்த‌து. ஆனால் சிலர் மலைகிராமங்களில் ஆபத்தான முறையில் டென்ட் அமைத்து சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விட்டனர். இதனால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தது.

    இதனையடுத்து சுற்றுலாத்துறை சார்பில் ஹோம் ஸ்டே,சாகச சுற்றுலா பயணம்,கேம்பிங் சைட்ஸ் உள்ளிட்டவைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் டென்ட் கூடாரங்கள் உள்ளிட்ட கேம்பிங் ஆப்ப‌ரேட்டர் உரிமம் பெறுபவர்கள் அரை ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். பிரிமியம் உரிமம் பெறுபவர்கள் குறைந்தபட்சமாக 2 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. உரிமம் பெற விண்ண‌ப்பிப்ப‌வ‌ர்க‌ள் வனப்பகுதியை ஒட்டிய நில‌மாக‌ வைத்து இருக்க கூடாது என்றும் வனப்பகுதியில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் நில‌ம் இருக்க வேண்டும் எனவும்,

    ஹோம் ஸ்டே மற்றும் சாகச சுற்றுலா இயக்குபவர்கள் (டிகேடி ப‌ட்டா) அர‌சு ஒப்புகை இல்லாத நில‌ப்ப‌ட்டா உள்ள‌ நிலத்தில் அமைக்க கூடாது என்றும் அதற்கு வருவாய்த்துறை அலுவலகத்தில் தடையின்மை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    தொகுப்பு வீடுகள் ம‌ற்றும் ப‌சுமை வீடுக‌ள் வைத்திருப்பவர்கள் அந்த‌ இட‌த்தினை குடியிருக்க ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டும். ஹோம் ஸ்டே உரிமம் பெற்று பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் ஹோம் ஸ்டே, சாகச சுற்றுலா, டென்ட் கூடாரங்கள் உள்ளிட்ட கேம்பிங் சைட்ஸ் அமைப்பவர்கள் பல்வேறு சந்தேகங்கள் குறித்து எழுப்பிய‌ கேள்விக‌ளுக்கு அரசு அதிகாரிகள் ப‌தில் தெரிவித்தன‌ர்.

    முறையான‌ உரிமம் இல்லாமல் சாகச சுற்றுலா, ஹோம் ஸ்டே,டென்ட் கூடாரங்கள் உள்ளிட்ட கேம்பிங் சைட்ஸ் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டால் அந்த‌ நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் கோட்டாட்சிய‌ர் ராஜா, வ‌ட்டாட்சிய‌ர் முத்துராம‌ன், சுற்றுலா உத‌வி அலுவ‌ல‌ர் சுதா உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், டென்ட் கூடாரம் மற்றும் ஹோம் ஸ்டே அமைக்கும் 50-க்கும் மேற்பட்ட நபர்களும் க‌லந்துகொண்ட‌ன‌ர்.

    • பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிைடத்தது.
    • சோதனையில் 3 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    பழனி:

    பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிைடத்தது. இதையடுத்து டி.எஸ்.பி. பாலசுப்பிரமணி தலைமையில் இன்ஸ்பெக்டர் கீதா உள்ளிட்ட போலீசார் பழனி பகுதியில் சோதனை நடத்தினர்.

    அப்போது சிவகிரிப்பட்டி ஊராட்சியில் சேரன் ஜீவா நகரில் உள்ள ஒரு வீட்டில் ரேசன் அரிசி இருப்பதாக தெரிய வந்தது. அங்கு நடத்திய சோதனையில் வீட்டின் முகப்பு பகுதியில் இருந்த 1050 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    இதே போல் நெய்க்காரப்பட்டி சின்னக்கடை வீதியில் ஒரு வீட்டில் இருந்து 1.50 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இவற்றை பதுக்கியது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×