என் மலர்
உள்ளூர் செய்திகள்

பயணிகள் புகாரால் விரக்தி ஓட்டை உடைசலான பஸ்சுடன் கலெக்டர் ஆபீஸ் வந்த டிரைவர்
- கனமழை பெய்ததால் பஸ்சுக்குள் மழைநீர் ஒழுகியது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- பஸ்சுடன் கலெக்டர் அலுவலகம் வந்த டிரைவர், கலெக்டரை சந்தித்து அரசு பஸ்சின் நிலைமையை எடுத்துக்கூற இங்கு வந்துள்ளேன் என்றார்.
குள்ளனம்பட்டி:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அழகர்நாயக்கன்பட்டிைய சேர்ந்தவர் முருகேசன். இவர் லோயர்கேம்ப் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை குமுளியில் இருந்து திண்டுக்கல்லுக்கு அரசு பஸ்சை ஓட்டிவந்தார்.
கனமழை பெய்ததால் பஸ்சுக்குள் மழைநீர் ஒழுகியது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் முருகேசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து பயணிகளை திண்டுக்கல் பஸ்நிலையத்தில் இறக்கிவிட்டு பஸ்சுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்கு கலெக்டரிடம் புகார் மனு கொடுக்க வந்துள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து முருகேசன் கூறுகையில்,
கடந்த சில ஆண்டுகளாக அரசு பஸ்கள் ஓட்டை, உடைசலாகவே காணப்படுகிறது. இதுகுறித்து தேனி மற்றும் திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்துள்ளேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து 22 மணிநேரம் பணிபுரிய கட்டாயப்படுத்துகின்றனர்.
இதனால் கடும் மனஉளைச்சலில் உள்ேளன். மேலும் பஸ்கள் முறையாக பராமரிக்கப்படாததால் அடிக்கடி பயணிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டரை சந்தித்து அரசு பஸ்சின் நிலைமையை எடுத்துக்கூற இங்கு வந்துள்ளேன் என்றார். இதனைதொடர்ந்து திண்டுக்கல் வட்டார போக்குவரத்து கழகத்தில் புகார் அளிக்குமாறு அவரை அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல் மண்டலத்தில் ஓடும் பெரும்பாலான பஸ்கள் ஓட்டை, உடைசலாகவே காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் பயணிகள் பாடு திண்டாட்டமாக உள்ளது. மேலும் டிரைவர், கண்டக்டர்கள் பயணிகளுடன் வாக்குவாதம் செய்யும் நிலையும் உள்ளது. எனவே தரமான பஸ்களை இயக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






