என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிய காட்சி.
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது மன்னன் பிடில் வாசித்த கதை முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தாக்கு
- திண்டுக்கல் ஒன்றிய பகுதியில் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேசினார்.
திண்டுக்கல்:
பால் விலை, மின்கட்டணம், சொத்துவரி உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து திண்டுக்கல் ஒன்றிய பகுதியில் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் உழவர் சந்தை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சீனிவாசன் தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழகத்தில் விடியலை ஏற்படுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு மக்களுக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தி வருகிறது. கடினமான சூழ்நிலையில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதிகளவு வரிச்சுமையை ஏற்படுத்தி அத்தியாவசிய பொருட்களை மக்கள் வாங்க முடியாத அளவிற்கு நெருக்கடியை தி.மு.க அரசு ஏற்படுத்தி உள்ளது.
இந்த சூழ்நிலையில் தனது மகனுக்கு அமைச்சர் பதவி கொடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழகுபார்த்து வருகிறார். ஊேர பற்றி எரிந்தபோது ரோமாபுரி மன்னன் புல்லாங்குழல் வாசித்த கதைபோல்தான் இது உள்ளது. ஆளும்கட்சி என்பதால் தங்களை யாரும் கேட்கமாட்டார்கள் என்ற மமதையில் செயல்பட்டு வருகின்றனர். மக்களுக்கான நலத்திட்டங்கள் எதையும் செயல்படுத்த வில்லை.
7 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை முறையாக கிடைக்கவில்லை. திண்டுக்கல் ஒன்றிய பகுதியில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்ட சாலைகளே தற்போது உள்ளது. பல சாலைகள் மழையால் சேதமடைந்து உள்ளபோதிலும் அதனை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு அலுவலகங்களில் தி.மு.கவினரின் தலையீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேநிலை நீடித்தால் மக்கள் ஒட்டுமொத்தமாக தி.மு.கவை புறக்கணிப்பார்கள். வாரிசு அரசியலை ஊக்கப்படுத்தியதால் காங்கிரஸ் அழியும் நிலையில் உள்ளது. அதேநிலைதான் தி.மு.கவிற்கும் ஏற்படும். மீண்டும் தேர்தல் நடைபெறும் போது அ.தி.மு.க வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.






