என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • பள்ளியில் படித்து வரும் அவரது நண்பர் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளான்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 45). வெங்காய வியாபாரி. இவரது வீட்டு பீரோவில் வைத்திருந்த மோதிரம், தோடு, வளையல் என 14 பவுன் தங்க நகைகள், ரூ.48 ஆயிரம் பணம் திருடு போனது. இது குறித்து கன்னிவாடி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    பாலசுப்பிரமணியனின் 14 வயது மகன் திருமலை ராயபுரத்தில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். அதே பள்ளியில் படித்து வரும் அவரது நண்பர் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளான். அப்போது பாலசுப்பிரமணியன் குடும்பத்தினர் பீரோவில் நகை, பணம் வைப்பதையும் அவர்கள் சாவியை எங்கே வைக்கின்றனர் என்பதையும் கவனித்து வந்துள்ளான்.

    பின்னர் அவர்கள் வீட்டுக்குள் புகுந்து கொஞ்சம் கொஞ்சமாக நகையை எடுத்து கன்னிவாடியைச் சேர்ந்த மாரிமுத்து (22), முத்துப்பாண்டி (39) ஆகியோரிடம் கொடுத்து அதனை விற்றுத் தருமாறு கூறியுள்ளார். அவர்கள் இந்த நகை எப்படி கிடைத்தது என்று கேட்ட போது, நடந்ததைக் கூறி இதை வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என கூறியுள்ளான்.

    இதனையடுத்து நகையை விற்று அதில் சிறிது தொகையை மாணவனுக்கு கொடுத்து விட்டு மற்றவற்றை மாரிமுத்து மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் வைத்துக் கொண்டனர். கடந்த 2 மாதமாக இதே போல் 14 பவுன் நகை மற்றும் ரூ.48 ஆயிரம் பணத்தை மாணவன் மூலம் திருடி அதனை தாங்களும் செலவழித்து வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் பள்ளி மாணவன் உள்பட 3 பேரையும் கைது செய்து நகையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    • ஜெ.ஊத்துப்பட்டியில் அரசுக்கு சொந்தமான இடங்களில் சிலர் ஆக்கிரமிப்பு செய்தனர்.
    • பொதுமக்கள் ஊராட்சி தலைவரிடம் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவேண்டும் என மனு கொடுத்தனர்.

    கொடைரோடு:

    கொடைரோடு அருகே ஜெ.ஊத்துப்பட்டியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு அரசுக்கு சொந்தமான இடங்களில் சிலர் ஆக்கிரமிப்பு செய்தனர்.

    அவற்றை அகற்றுவது குறித்து மனு அளிக்கப்பட்டது. ஜம்புதுரைகோட்டை ஊராட்சி மன்றத்துணைத்தலைவர் சிவராமன் அளித்த புகாரின்பேரில் 2 தெருக்கள் மட்டும் சர்வே செய்யப்பட்டு ஒரு கோவில் தடுப்புச்சுவர் உள்பட 14 இடங்கள் பட்டியலை வருவாய்த்துறையினர் கொடுத்தனர்.

    ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனைதொடர்ந்து சமாதானகூட்டம் நடைபெற்றது. நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாத்துரை தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் பவுன்தாய் காட்டுராஜா முன்னிலை வகித்தார். வி.ஏ.ஓ கணேசன், ஊராட்சித்துணைத்தலைவர் சிவராமன் மற்றும் ஊர்முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் ஆக்கிரமிப்புகளை முழுவதும் அளந்து அகற்ற வேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி துணைத்தலைவர் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார்.

    இதனைதொடர்ந்து பொதுமக்கள் ஊராட்சி தலைவரிடம் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவேண்டும் என மனு கொடுத்தனர். அப்போது சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

    • திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், அபிராமி அம்மன், மலையடிவாரம் சீனிவாசபெருமாள், தாடிக்கொம்பு சவுந்திரராஜபெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.
    • திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டதுடன் அம்மனின் போற்றிபாடல்களும் பாடப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    தனுர்மாதம் எனப்படும் மார்கழி மாதத்தில் 30 நாட்களும் அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். குறிப்பாக அதிகாலையில் நடக்கும் திருவிளக்கு வழிபாட்டில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொள்வது வழக்கம். இதற்காக அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதனைதொடர்ந்து 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. அதன்பிறகு காலசந்தி, சிறுகாலசந்தி மற்றும் விழா பூஜைகள் நடைபெற்றது.

    இந்த பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சபரிமலை சீசனை முன்னிட்டு அய்யப்ப பக்தர்களும் அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், அபிராமி அம்மன், மலையடிவாரம் சீனிவாசபெருமாள், தாடிக்கொம்பு சவுந்திரராஜபெருமாள், ஆர்.எம்.காலனி வெக்காளியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.

    கொட்டும் பனியையும் பொருட்படுத்தாது பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர். பெரும்பாலான கோவில்களில் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டதுடன் அம்மனின் போற்றிபாடல்களும் பாடப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

    மார்கழி மாதம் முழுவதும் இந்த பூஜைகள் நடைபெறும் என்பதால் பூக்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனையும் அதிகளவில் நடைபெற்றது.

    • குளக்கரையில் கண்டறியப்பட்ட கணவன்-மனைவி நடுகல் 17-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும்.
    • நடுகல்லில் உள்ள ஆண் இப்பகுதியில் நாயக்கர் அரசின் நிர்வாகத்தில் முக்கிய அதிகாரியாக பணிபுரிந்திருக்கக்கூடும்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் வரலாற்று ஆய்வுக்குழு ஆய்வாளர் விஸ்வநாததாஸ், மாணவர் ரத்தினம் முரளிதர், வரலாற்று ஆர்வலர்கள் சந்திரசேகர், உமாமகேஸ்வரி ஆகியோர் கொண்ட குழுவினர் திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகில் உள்ள வி.மேட்டுப்பட்டியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது ஒரு வீட்டில் இருந்த கணவன்-மனைவி நடுகல்லை கண்டறிந்தனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், குளக்கரையில் கண்டறியப்பட்ட கணவன்-மனைவி நடுகல் 17-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். ஒரு குகை போன்ற வீட்டினுள் அமைந்துள்ள இந்த நடுகல் இடதுபுறம் ஆண் சிற்பத்தில் தலையில் அள்ளிமுடிந்து சவரிகொண்டை முடிச்சில் தொங்கும் குஞ்சமும், ஆணின் காதில் வளைகுண்டலமும், இருகரமும் மார்போடு இணைந்து கும்பிட்ட நிலையும், இடைவாரியிலிருந்து மீண்டும் காணப்படுகிறது.

    இடுப்பில் இடைகச்சை ஆடை, தார்பாச்சி கட்டிய அமைப்பும் அதிலிருந்து கெண்டைக்கால்வரை மூடியநிலையில் இடைகச்சை ஆடை உள்ளது.

    பெண் சிற்பத்தில் கொண்டை வலதுபுறமும், காதில் வலைகுண்டலமும், மார்பில் ஆரமும், இடதுகை தொங்குகரம், டோலிமுத்திரையும், வலதுகரம் இடுப்பில் வைத்தபடியும், இடை ஆடை இடுப்பில் சுற்றி கெண்டைக்கால் வரை நீண்டுள்ளது.

    இந்த நடுகல்லில் உள்ள ஆண் இப்பகுதியில் நாயக்கர் அரசின் நிர்வாகத்தில் முக்கிய அதிகாரியாக பணிபுரிந்திருக்கக்கூடும் என்றனர். இதேபோன்று மற்ற பகுதியிலும் வேறு ஏதேனும் தொல்லியல் ஆய்வுகள் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    • தாதநாயக்கன்பட்டியில் வெடிமருந்து ஆலை அமைக்க கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது
    • கூட்டத்தில் கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    பழனி:

    பழனி அருகே உள்ள தாதநாயக்கன்பட்டியில் வெடிமருந்து ஆலை அமைக்க கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பழனி அருகே உள்ள தாதநாய க்கன்பட்டி கிராமப்பகுதியில் வெடிமருந்து ஆலை அமைக்க தனியார் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதற்கு பாப்பம்பட்டி, கரடிக்கூட்டம், சித்திரை க்குளம், தாதநாயக்கன்பட்டி மற்றும் அதன்சுற்றுவட்டார கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய த்தின் மூலம் வெடிமருந்து ஆலை அமைப்பது தொட ர்பான கருத்துகேட்பு கூட்டம் பழனி அருகே உள்ள தாழையூத்து பகுதியில் உள்ள தனியார் மண்டப த்தில் நேற்று நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாசுகட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிைல வகித்தனர். கூட்டத்தில் பாப்பம்பட்டி, தாதநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்ேவறு கிராமமக்கள், அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர், இயற்கை ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆலை அமைப்பது தொடர்பாக கிராமமக்களி டம் கருத்து கேட்கப்பட்டது.

    அப்போது கிராமமக்கள், அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்டடோர் ஆலை அமைய உள்ள இடத்திற்கு அருகே உள்ள பழமை வாய்ந்த ஐவர் மலை, கோவில்கள் மற்றும் விவசாய நிலம் ஆகியவை உள்ளது. இங்கு வெடிமருந்து தயாரிப்பு ஆலை அமை ந்தால் நிலம், நீர், காற்று மாசடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

    எனவே ஆலை அமைக்க கூடாது என அவர்கள் தெரிவித்தனர். மேலும் ஆலை அமைய எதிர்ப்பு தெரிவித்து மனுக்களையும் அளித்தனர்.

    • அனைத்து பிரிவினருக்கும் சிறந்த நூலக சேவை வழங்கும்.
    • பொது நூலக துறையின் உயரிய நோக்கத்திற்கு நூலக நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் பொது நூலகத்துறை சார்பில் நூலக நண்பர்கள் திட்டம் தொடக்க விழா எம்.எஸ்.பி. சோலை நாடார் பள்ளியில் நடைபெற்றது.

    விழாவுக்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை வகித்தார். அமைச்சர் அர.சக்கரபாணி, எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், காந்திராஜன், மேயர் இளமதி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் நூலக நண்பர்களுக்கு அடையாள அட்டை மற்றும் புத்தகப்பைகளை வழங்கி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

    பிற்போக்கு எண்ணங்கள் கூடாது, அறிவு சார்ந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'நூலக நண்பர்கள்' திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டம் தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில்தான் முதன்முறையாக தொடங்கப்படுகிறது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் ஆகியோரின் இல்லங்களை தேடி புத்தகங்களை கொண்டு சென்று அவர்களின் புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

    பொது நூலகத்துறை மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டம் 'நூலக நண்பர்கள் திட்டம்' என்றழைக்கப்படுகிறது. நூலகத்திற்கு வரமுடியாத மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், புத்தக ஆர்வலர்கள், குழந்தைகள், மாணவர்கள், குடும்பத் தலைவிகள். மருத்துவமனை உள்நோயாளிகள் ஆகியோரை தேடி, அவர்கள் இருக்குமிடத்திற்கே நூலக நண்பர்கள் மூலம் நூல்களை கொண்டு செல்ல இருக்கிறது. நூலகத்திற்கும் இல்லங்களுக்கும் இடையே நூல்களை கொண்டு செல்லும் சேவை பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர். தன்னார்வலர்களே நூலக நண்பர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

    இதில் நூலகத்தில் தொடர்ந்து வாசகர்களாக இருப்பவர்கள், உறுப்பினர்களாக இருப்பவர்கள், நூலக சேவையில் விருப்பம் உள்ளவர்கள் நூலக நண்பர்களாகலாம். ஒரு நூலகத்திற்கு 5 பேர் நூலக நண்பர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நூலகங்களில், நூலகத்திற்குட்பட்ட மக்களுக்கு இல்லம் தேடி சென்று நூல்களை வழங்கி சேவை ஆற்றுவார்கள். நூலக நண்பர்களுக்கு அடையாள அட்டை நூலகரால் வழங்கப்படும். இல்லங்களுக்கு நூல்களை கொண்டு செல்ல பை வழங்கப்படும். 25 நூல்கள் வழங்கப்படும். அந்த நூல்கள் இல்லங்களுக்கு விநியோகிக்கப்படும். மக்கள் அந்த நூல்களை 15 நாள் அவகாசத்தில் படித்துவிட்டு, நூலக நண்பர்களிடம் திரும்ப கொடுத்து, வேறு நூல்களை பெற்றுக் கொள்ளலாம்.

    நூலகத்திற்கு வர முடியாதவர்கள், வாசிக்கும் தேவை உள்ளவர்கள், உங்களை தேடி வரும் நூலக நண்பர்களிடம் நூலகத்தில் உறுப்பினராக பதிவு செய்து, நூலக நண்பர்கள் மூலம் சிறந்த நூல்களை பெற்று பயன் பெறலாம். அனைத்து பிரிவினருக்கும் சிறந்த நூலக சேவை வழங்கும். பொது நூலக துறையின் உயரிய நோக்கத்திற்கு நூலக நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். "நூலக நண்பர்கள் திட்டம்" தமிழகத்தில் முதல் கட்டமாக 31 மாவட்ட மைய நூலகங்கள் 300 முழு நேர கிளை நூலகங்கள். 1,463 கிளை நூலகங்கள், 706 ஊர்ப்புற நூலகங்கள் என மொத்தம் 2,500 நூலகங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி இத்திட்டம் திண்டுக்கல் மாவட்ட நூலகத்துறை சார்பில் தொடங்கி வைக்கப்படுகிறது.

    நூலகர் தினவிழா, புத்தக தினவிழா, நூலக வார விழா உள்ளிட்ட பல்வேறு நூலக செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் திண்டுக்கல்லில் இத்திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். திண்டுக்கல் மாவட்டத்தில் நூலக நண்பர்களாக சேவையாற்ற 300 பேர் முன்வந்துள்ளனர். புத்தகங்கள் வாசிப்பு என்பது நம் சுய சிந்தனையை வளர்ப்பது மட்டுமின்றி நாட்டின் தலையெழுத்தையும் நிர்ணயிக்கும் சக்தியாகும். எனவே மேலும் பலர் நூலக நண்பர்களாக சேர முன்வர வேண்டும். நூலக நண்பர்களுக்கு அடையாள அட்டையும், புத்தகப் பையும் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இனி, இல்லங்களை தேடி வருவார்கள். அவர்கள் மூலம் இல்லங்களில் உள்ளவர்கள் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக இல்லம் தேடி கல்வி பணியாற்றும் தன்னார்வலர்கள். பள்ளி நூலக சேவையில் ஆர்வமுள்ள மாணவர்கள். ஆசிரியர்கள் நூலக நண்பர்களாக சேர்ந்து நூலக சேவையை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பஸ் சாலையோர ஓட்டலுக்கு திரும்ப முற்பட்டபோது கார்மீது பயங்கரமாக மோதியது.
    • இந்த விபத்தில் காரில் வந்த 3 பேரும் படுகாயமடைந்தனர்.

    வேடசந்தூர்:

    கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த மதுசூதனரெட்டி(33), மதுசூதனராவ்(45), ரவி(37) ஆகியோர் காரில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிரே மதுரையில் இருந்து சேலம் நோக்கி அரசு பஸ் வந்தது.

    அந்த பஸ் சாலையோர ஓட்டலுக்கு திரும்ப முற்பட்டபோது கார்மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.

    இந்த விபத்தில் காரில் வந்த 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து குறித்து கூம்பூர் போலீசார் அரசு பஸ் டிரைவர் கணேசனிடம் விசாரித்து வருகின்றனர்.

    • பெட்டி நாயக்கன்பட்டி மற்றும் கீரனூர் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி பாசி படர்ந்துள்ளது.
    • மேற்கூரைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் மழை காலங்களில் சுரங்கப்பாதையில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நின்றது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வட மதுரை அருகே உள்ள பெட்டி நாயக்கன்பட்டி மற்றும் கீரனூர் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி பாசி படர்ந்துள்ளது.

    இதனால் பைக் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் பழுதாகி வருகின்றன. மேலும் பைக்கில் செல்பவர்கள் விழுந்து பலத்த காயம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் ரயில்வே நிர்வாகம் செவி சாய்க்கவில்லை.

    மேற்கூரைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் மழை காலங்களில் சுரங்கப்பாதையில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நின்றது. எரியோடு, குஜிலியம்பாறை, பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதைகளிலும் இதே நிலைமை உள்ளது.

    ரெயில்வே நிர்வாகத்தினர் சுரங்கப்பாதைகளை முறையாக பராமரிப்பதில்லை என சமூகஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் விவசாயிகள், கிராமமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    • வருகிற 25-ந்தேதி முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
    • ஜனவரி 18-ந்தேதி பூர்வாங்கு பூஜைகள் நடைபெற உள்ளன.

    பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் 2023-ம் ஆண்டு ஜனவரி 27-ந்தேதி நடைபெற உள்ளது என கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் சந்திரமோகன் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், பழனி தண்டாயுதபாணிசாமி மலைக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகிற 25-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்வு நடைபெற உள்ளது.

    அடுத்த ஆண்டு ஜனவரி 18-ந்தேதி காலை 9 மணிமுதல் பூர்வாங்கு பூஜைகள் நடைபெற உள்ளன. ஜனவரி 23-ந்தேதி முதல்கால வேள்வி பூஜைகளும், ஜனவரி 26-ந்தேதி காலை 9.05 முதல் 11 மணிக்குள் அனைத்து பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதையடுத்து ஜனவரி 27-ந்தேதி காலை 8.30 மணிக்குமேல் 9.30 மணிக்குள் தங்ககோபுரம் மற்றும் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என்றும் தெரிவித்தார். கோவில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் அறங்காவலர் குழுவினர் உடனிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மும்முரமாக செய்து வருகின்றனர்.

    • கொடைக்கானல் மலைப்பகுதியில் கஞ்சா மற்றும் போதைக்காளான் விற்பனை அதிகரித்து வருகிறது.
    • கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதியில் கஞ்சா மற்றும் போதைக்காளான் விற்பனை அதிகரித்து வருகிறது. தொடர்ந்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

    சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து சில சமூக விரோத கும்பல்கள் அதிக அளவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொடைக்கானல் அருகே அக்கரைக்காடு பகுதியில் கஞ்சா விவசாயம் மேற்கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையில், போலீசார் ராமராஜன், காசி, சரவணன் ஆகியோர் அங்கு விரைந்தனர்.

    அப்போது அக்கரைக்காடு பகுதியில் ராஜா, மகேந்திரன், பெனாசீர் ஆகியோரிடம் இருந்து சுமார் 10 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா செடிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கஞ்சா செடிகள் எங்கெங்கு பயிரிட்டுள்ளனர் என்பது குறித்தும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கஞ்சா செடி வளர்த்த இடம் வனத்துறைக்கு கட்டுப்பட்டதா அல்லது வருவாய் துறைக்கு கட்டுப்பட்டதா என்றும் அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கொடைக்கானலில் அரியவகை சுற்றுலாத்தலங்கள் அதிக அளவில் இருப்பது யாரும் அறியா வண்ணம் உள்ளது.
    • ஐந்து வீடு அருவி, ஓராவி அருவி, ஆதிமனிதன் வாழ்ந்த குகைகள், கல்திட்டைகள், பழங்கால மனிதர்கள் வாழ்ந்தகுகைகள் என சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கக்கூடிய இதுவரை வெளிஉலகுக்கு தெரியாத இடங்கள் நிறைந்துள்ளன.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி கொடைக்கானலில் குளுமையான சீசனை அனுபவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

    இவர்கள் மோயர்சதுக்கம், தூண் பாறை, குணா குகை, பைன் மரச்சோலை, பசுமைப்பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, படகு குழாம் போன்ற சுற்றுலா இடங்களை மட்டும் கண்டு ரசித்து செல்கின்றனர். சிலர் மேல் மலை கிராமத்தில் உள்ள சுற்றுலா இடங்களை மட்டும் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.

    ஆனால் கொடைக்கானலில் அரியவகை சுற்றுலாத்தலங்கள் அதிக அளவில் இருப்பது யாரும் அறியா வண்ணம் உள்ளது.மேல் மலை கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஒரு அரிய வகை அருவி உள்ளது. இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல பாதை உருவாக்க வேண்டும்.

    இதேபோல் பேத்துப்பாறை கிராமத்தில் ஐந்து வீடு அருவி, ஓராவி அருவி, ஆதிமனிதன் வாழ்ந்த குகைகள், கல்திட்டைகள்,அடுக்கம் கிராமப் பகுதியில் பழங்கால மனிதர்கள் வாழ்ந்தகுகைகள் என சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கக்கூடிய இதுவரை வெளிஉலகுக்கு தெரியாத இடங்கள் நிறைந்துள்ளன.

    சுற்றுலா வளர்ச்சி கழகம் தங்கள் கட்டுப்பாட்டில் இந்த இடங்களை கொண்டு வந்து சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும்.

    கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி கிராமத்தில் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவிலைப்போல் வரலாற்று சிறப்புமிக்க பண்டையகால முருகன் கோவில் உள்ளது.

    இங்கு பழங்கால கல்வெட்டு கோவிலின் சிறப்பை பற்றி பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் இதே பகுதியில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்கு ஏற்ற அருவியும் உள்ளது. தற்போது இந்த கோவிலை பழனி தண்டாயுதபாணி கோவிலின் உப கோவிலாக அறங்காவல் குழு ஏற்று உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சுற்றுலா பயணிகளின் வருகையை நம்பி தொழில் செய்வோரின் கோரிக்கையாக உள்ளது.

    கொடைக்கானல் சிட்டி வியூ சுற்றுலா பகுதி, அடுக்கம் பகுதியில் உள்ள கற்சிற்பம், மேல் மலைப்பகுதிகளில் உள்ள இயற்கையான பல்வேறு இடங்கள், புதுமையாக அமைந்துள்ள பகுதிகளை புதிய சுற்றுலா தளங்களாக மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • துணி துவைக்க சென்ற மூதாட்டி குட்டையில் மூழ்கி இறந்து கிடந்தார்.
    • இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகில் உள்ள கணவாய்பட்டி மலைப்பட்டியை சேர்ந்தவர் நாகப்பன் மனைவி ராமக்காள் (வயது 75). இவர் கடந்த வாரம் சோளக்குளத்துப்பட்டியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தார். நேற்று மாலை அருகில் உள்ள சங்கிலியான் கோவில் பகுதியில் துணி துவைப்பதற்காக சென்றார்.

    ஆனால் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்ைல. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். இந்நிலையில் இன்றுகாலை அங்குள்ள ஒரு குட்டையில் மூழ்கி ராமக்காள் இறந்து கிடந்தார். தண்ணீரில் இறங்கியபோது கால்வழுக்கி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் வந்து அவரது உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×