search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனிதனின் தலையெழுத்தை நிர்ணயிப்பது புத்தகங்கள்தான்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
    X

    மனிதனின் தலையெழுத்தை நிர்ணயிப்பது புத்தகங்கள்தான்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

    • அனைத்து பிரிவினருக்கும் சிறந்த நூலக சேவை வழங்கும்.
    • பொது நூலக துறையின் உயரிய நோக்கத்திற்கு நூலக நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் பொது நூலகத்துறை சார்பில் நூலக நண்பர்கள் திட்டம் தொடக்க விழா எம்.எஸ்.பி. சோலை நாடார் பள்ளியில் நடைபெற்றது.

    விழாவுக்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை வகித்தார். அமைச்சர் அர.சக்கரபாணி, எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், காந்திராஜன், மேயர் இளமதி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் நூலக நண்பர்களுக்கு அடையாள அட்டை மற்றும் புத்தகப்பைகளை வழங்கி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

    பிற்போக்கு எண்ணங்கள் கூடாது, அறிவு சார்ந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'நூலக நண்பர்கள்' திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டம் தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில்தான் முதன்முறையாக தொடங்கப்படுகிறது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் ஆகியோரின் இல்லங்களை தேடி புத்தகங்களை கொண்டு சென்று அவர்களின் புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

    பொது நூலகத்துறை மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டம் 'நூலக நண்பர்கள் திட்டம்' என்றழைக்கப்படுகிறது. நூலகத்திற்கு வரமுடியாத மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், புத்தக ஆர்வலர்கள், குழந்தைகள், மாணவர்கள், குடும்பத் தலைவிகள். மருத்துவமனை உள்நோயாளிகள் ஆகியோரை தேடி, அவர்கள் இருக்குமிடத்திற்கே நூலக நண்பர்கள் மூலம் நூல்களை கொண்டு செல்ல இருக்கிறது. நூலகத்திற்கும் இல்லங்களுக்கும் இடையே நூல்களை கொண்டு செல்லும் சேவை பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர். தன்னார்வலர்களே நூலக நண்பர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

    இதில் நூலகத்தில் தொடர்ந்து வாசகர்களாக இருப்பவர்கள், உறுப்பினர்களாக இருப்பவர்கள், நூலக சேவையில் விருப்பம் உள்ளவர்கள் நூலக நண்பர்களாகலாம். ஒரு நூலகத்திற்கு 5 பேர் நூலக நண்பர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நூலகங்களில், நூலகத்திற்குட்பட்ட மக்களுக்கு இல்லம் தேடி சென்று நூல்களை வழங்கி சேவை ஆற்றுவார்கள். நூலக நண்பர்களுக்கு அடையாள அட்டை நூலகரால் வழங்கப்படும். இல்லங்களுக்கு நூல்களை கொண்டு செல்ல பை வழங்கப்படும். 25 நூல்கள் வழங்கப்படும். அந்த நூல்கள் இல்லங்களுக்கு விநியோகிக்கப்படும். மக்கள் அந்த நூல்களை 15 நாள் அவகாசத்தில் படித்துவிட்டு, நூலக நண்பர்களிடம் திரும்ப கொடுத்து, வேறு நூல்களை பெற்றுக் கொள்ளலாம்.

    நூலகத்திற்கு வர முடியாதவர்கள், வாசிக்கும் தேவை உள்ளவர்கள், உங்களை தேடி வரும் நூலக நண்பர்களிடம் நூலகத்தில் உறுப்பினராக பதிவு செய்து, நூலக நண்பர்கள் மூலம் சிறந்த நூல்களை பெற்று பயன் பெறலாம். அனைத்து பிரிவினருக்கும் சிறந்த நூலக சேவை வழங்கும். பொது நூலக துறையின் உயரிய நோக்கத்திற்கு நூலக நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். "நூலக நண்பர்கள் திட்டம்" தமிழகத்தில் முதல் கட்டமாக 31 மாவட்ட மைய நூலகங்கள் 300 முழு நேர கிளை நூலகங்கள். 1,463 கிளை நூலகங்கள், 706 ஊர்ப்புற நூலகங்கள் என மொத்தம் 2,500 நூலகங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி இத்திட்டம் திண்டுக்கல் மாவட்ட நூலகத்துறை சார்பில் தொடங்கி வைக்கப்படுகிறது.

    நூலகர் தினவிழா, புத்தக தினவிழா, நூலக வார விழா உள்ளிட்ட பல்வேறு நூலக செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் திண்டுக்கல்லில் இத்திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். திண்டுக்கல் மாவட்டத்தில் நூலக நண்பர்களாக சேவையாற்ற 300 பேர் முன்வந்துள்ளனர். புத்தகங்கள் வாசிப்பு என்பது நம் சுய சிந்தனையை வளர்ப்பது மட்டுமின்றி நாட்டின் தலையெழுத்தையும் நிர்ணயிக்கும் சக்தியாகும். எனவே மேலும் பலர் நூலக நண்பர்களாக சேர முன்வர வேண்டும். நூலக நண்பர்களுக்கு அடையாள அட்டையும், புத்தகப் பையும் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இனி, இல்லங்களை தேடி வருவார்கள். அவர்கள் மூலம் இல்லங்களில் உள்ளவர்கள் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக இல்லம் தேடி கல்வி பணியாற்றும் தன்னார்வலர்கள். பள்ளி நூலக சேவையில் ஆர்வமுள்ள மாணவர்கள். ஆசிரியர்கள் நூலக நண்பர்களாக சேர்ந்து நூலக சேவையை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×