என் மலர்
உள்ளூர் செய்திகள்

பழனி மலைக்கோவில் உண்டியலில் பணம் திருடிய வாலிபர் கைது
- மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள உண்டியல் அருகே சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார்.
- போலீசார் அந்நபரை மறைமுகமாக கண்காணித்து வந்தனர்.
பழனி:
பழனி மலைக்கோவிலில் தற்போது சீசன் நடைபெற்று வருவதால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வருகை தருகின்றனர். இதுபோன்ற பக்தர்களை குறிவைத்து வழிப்பறி சம்பவங்களும், திருட்டு சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற நபர்களை போலீசார் கண்காணித்து அவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள உண்டியல் அருகே சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை மறைமுகமாக கண்காணித்து வந்தனர். ஆட்கள் இல்லாததை அறிந்து அந்த நபர் உண்டியலில் இருந்து பணத்தை எடுத்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
அடிவாரம் போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் தென்காசியை சேர்ந்த சுந்தர் (வயது34) என்பதும் இவர் கடந்த 4 வருடங்களாக பழனியில் தங்கி சமையல் வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்தார். உண்டியலில் இருந்து ரூ.340யை திருடியபோது கையும் களவுமாக பிடிபட்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






