என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று மாலை பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
    • பழனிக்கு வந்த அவருக்கு தண்டபாணி நிலையத்தில் வைத்து போலீஸ் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

    பழனி:

    பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதேபோல் அரசியல் பிரமுகர்களும் அவ்வப்போது வந்து தரிசனம் செய்கின்றனர்.

    இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று மாலை பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக பழனிக்கு வந்த அவருக்கு தண்டபாணி நிலையத்தில் வைத்து போலீஸ் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து கோவில் அறங்காவலர்கள் சுப்பிரமணியன், ராஜசேகரன், இணை ஆணையர் மாரிமுத்து ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அவர் பழனி ரோப்கார் வழியே அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்றார்.

    பின்னர் ஆனந்தவிநாயகர் சன்னதியில் வழிபட்டார். அதையடுத்து சாயரட்சை பூஜையில் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தார். அப்போது அவரது குடும்பத்தினர் உடனிருந்தனர். பின்னர் மீண்டும் ரோப்கார் வழியே அடிவாரம் வந்தார். தொடர்ந்து காரில் புறப்பட்டு சென்றார்.

    • அந்தந்த வீடுகளுக்கு தகவல் சேகரிப்பாளர்கள் மடிக்கணினியுடன் வந்தனர். அவர்களுக்கு உதவியாக மருத்துவ துறை பணியாளர்கள் வருகின்றனர்.
    • அந்தந்த பகுதிகளில் டிசம்பர் 22ந் தேதி வரை கணக்கெடுப்பு பணி நடைபெறும் என்றனர்.

    குள்ளனம்பட்டி:

    தமிழகத்தில் 6-வது தேசிய குடும்பநல கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலுடன் திண்டுக்கல் காந்தி கிராமம் மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம் திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூன் 20ந் தேதி முதல் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி திண்டுக்கல் குறிஞ்சி நகரில் கணக்கெடுப்பு பணியை இன்று தொடங்கினர். இதில் டாக்டர்கள் சீதாலட்சுமி, கவிதா தலைமையில் மேற்பார்வையாளர்கள் சம்பத், அபர்ணா, ஜெயந்தி ஆகியோர் மேற்பார்வையிலான குழுவினர் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர்.ஏற்கனவே உள்ள தகவல் பதிவுகளை கொண்டு கணினியில் குலுக்கல் முறையில் குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. அந்தந்த வீடுகளுக்கு தகவல் சேகரிப்பாளர்கள் மடிக்கணினியுடன் வந்தனர். அவர்களுக்கு உதவியாக மருத்துவ துறை பணியாளர்கள் வருகின்றனர்.

    வீட்டில் உள்ள அடிப்படை வசதிகள், தாய், சேய் நலம், குழந்தைகள் பிறப்பு, இறப்பு விவரங்கள், ஊட்டச்சத்து, ரத்தசோகை, கருவுறுதல், குடும்ப கட்டுப்பாடு, எய்ட்ஸ் விழிப்புணர்வு, சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து கேள்விகள் கேட்டு அதற்கு குடும்பத்தினர் அளிக்கும் பதிலை பதிவு செய்து கொண்டனர். இதில் அந்தந்த குடும்ப சூழ்நிலைக்கு தேவையான கேள்விகளை மட்டும் கேட்டு பதிவு செய்கின்றனர். இதுதவிர அவரவர் வீடுகளில் பயன்படுத்தும் உப்பில் அயோடின் சத்து உள்ளதா? என்பதையும் பரிசோதித்து உறுதி செய்து பதிவு செய்து கொண்டனர். மேலும் ரத்த பரிசோதனை, சர்க்கரை பரிசோதனையும் மேற்கொள்கின்றனர்.

    இதுகுறித்து கணக்கெடுப்பாளர்கள் கூறுகையில்,

    திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் மொத்தம் 44 பகுதிகள் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன. அந்த பகுதிகளில் டிசம்பர் 22ந் தேதி வரை கணக்கெடுப்பு பணி நடைபெறும் என்றனர்.

    வெற்றி தெய்வமாக விளங்கக்கூடிய ஸ்ரீவாராஹி அம்மனுக்கு ஆலயம் கட்டப்பட்டு கும்பாபிஷேக விழா நாளை காலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் மாவட்டம் அகரம் கிராமம் சுக்காம்பட்டியில் வாஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வெற்றி தெய்வமாக விளங்கக்கூடிய ஸ்ரீவாராஹி அம்மனுக்கு ஆலயம் கட்டப்பட்டு இதன் கும்பாபிஷேக விழா நாளை நடைபெறுகிறது.

    இதனை முன்னிட்டு இன்று காலை 2ம் கால யாகபூஜையும், மாலை 3ம் கால யாகபூஜை, யந்திர ஸ்தாபனம், ரக்ஷாபந்தனம் ஆகியவை நடைபெற்றது. நாளை காலை 4.30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, 4ம் கால யாகசாலை பூஜை, பூர்ணஹூதி மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.

    அதனை தொடர்ந்து காலை 6 மணிக்கு மேல் 6.25 மணிக்குள் மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேதமந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் மஹா அபிஷேகம், குருநாதர் அருளாசி, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீலஸ்ரீ சுக்காம்பட்டி சாமிகள், சிவனடியார் திருக்கூட்டம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


    • இரவில் மலரும் பிரம்ம கமலம் பூ தெய்வீக பூவாக கருதப்படுகிறது.
    • வீடுகளில் பிரம்ம கமலம் பூ பூத்ததை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    இரவில் மலரும் பிரம்ம கமலம் பூ தெய்வீக பூவாக கருதப்படுகிறது.

    திண்டுக்கல் செட்டி நாயக்கன்பட்டி இ.பி காலனியை சேர்ந்த சமேஸ்வரி என்பவரது வீட்டில் இரவு பிரம்ம கமலம் பூ பூத்தது. இவர் கடந்த 3 வருடமாக பிரம்ம கமலம் செடியை வளர்த்து வருகிறார். முதல் முறையாக நேற்று இரவு பூ மலர்ந்தது. இதனை அடுத்து பிரம்ம கமலம் மலருக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

    அதேபோல் முள்ளிப்பாடி அன்னை நகரை சேர்ந்த வசந்தா மகேஸ்வரி என்பவர் கடந்த 1 வருடமாக பிரம்ம கமல செடி வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பூ மலர்ந்தது. இதனை அடுத்து பூவிற்கு விளக்கேற்றி நிறைகுட செம்பில் தண்ணீர் வைத்து வழிபாடு நடத்தினர்.

    வீடுகளில் பிரம்ம கமலம் பூ பூத்ததை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

    • சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு ஊத்தா கூடை, கச்சாவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு ஒற்றுமையாக மாங்குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர்.
    • கிடைத்த மீன்களை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் திம்மணநல்லூர் ஊராட்சியில் தி.பள்ளபட்டி உள்ளது.இங்கு உள்ள மாங்குளத்தில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நல்ல மழை பொழிவு இருந்ததால் மாங்குளம் நிரம்பியது. விவசாயத்திற்கு மாங்குளம் நீரை பயன்படுத்தியதால் நீர் வற்றியது. இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் மீன் பிடிக்க முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து இன்று ஊர் பொதுமக்கள் மாங்குளத்தில் அருகே உள்ள கருப்புசாமி கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர். அதன் பின்னர் மாங்குளத்திற்கு ஊர்வலமாக வந்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர். இந்த மீன்பிடி திருவிழாவில் மணியக்காரன்பட்டி, ராமராஜபுரம், மந்தநாயக்கன்பட்டி,வேட்டைக்காரன் புதூர், திம்மணநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கிராமங்களில் இருந்து வருகை தந்தவர்கள் மீன் பிடித்தனர்.

    சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு ஊத்தா கூடை, கச்சாவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு ஒற்றுமையாக மாங்குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர். இதில் கட்லா, ஜிலேபி, விரால், கெளுத்தி, கெண்டை மீன்கள் கிடைத்தன.

    கிடைத்த மீன்களை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

    • கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் மலைச் சாலையில் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்பதால் சுற்றுலாப் பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
    • இதனால் அதிகாரிகள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சாலையை பார்வையிட்டனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராள மான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கோடை காலத்திலும் ஆஃப் சீசனிலும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை இருக்கும். அப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் மலைச் சாலையில் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்பதால் சுற்றுலாப் பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    இதற்கு தீர்வு காண அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். ஆனால் போக்குவரத்து நெரிசலுக்கு தற்போதுவரை தீர்வு காணப் படவில்லை. எனவே மாற்றுச்சாலை அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். கொடைக்கானல் கோட்டாட்சியர் ராஜா தலைமையில் அதிகாரிகள் வில்பட்டி-கோவில்பட்டி, நார்த்தன் தொட்டி, வெங்கல வயல் பகுதிகளில் இருந்து பாரதி அண்ணா நகர் வரை மாற்று சாலை அமைப்பது குறித்து ஆய்வு நடத்தினர். சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சாலையை பார்வை யிட்டனர்.

    கொடைக்கானல் வட்டாட்சியர் முத்துராமன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் வரதன், வி.ஏ.ஓ. சுசீந்தரன் மற்றும் வனத்துறையினர் அடங்கிய குழுவினர் ஆய்வில் கலந்து கொண்டனர். கொடை க்கானலில் இருந்து பழனி வரை செல்லும் பழமையான சாலை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பகுதிகளில் உள்ள விவசாயிகளால் சாலை பராமரிக்கப்பட்டு வருகிறது.

    தமிழக அரசு இந்த சாலையை மேம்படு த்தினால் போக்கு வரத்து நெரிசலுக்கு தீர்வு கிடை க்கும். மேலும் விவசாய நிலங்களும் செழிக்கும். சுற்றுலா தொழிலும் மேம்படும்.எனவே இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோவிலில் 48 நாள் மண்டல பூஜையை நடத்தி தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த வாரம் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி, செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜையை நடத்தி தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை செய்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன் வரிசையில் தெற்கு தெரு முத்துமாரியம்மன் கோவில் பூசாரி கல்யாணி குடும்பத்தார் சார்பில் நடந்த அன்னதானத்தை திருப்பணி குழு தலைவர் மருதை என்ற அன்பு தொடங்கி வைத்தார். அன்னதானத்தில் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு சங்கத் தலைவர் ரமேஷ், சக்தி, ஜெகதீஸ்வரன், செந்தில்குமார், சரத்குமார் மற்றும் திருப்பணிக்குழு, உற்சவ கமிட்டியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த 546.25 டன் உரங்கள் ரெயில் மூலம் திண்டுக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டன.
    • அதிகபட்ச விலைக்கு கூடுதலாக உரங்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பு பருவ வேளாண்மைக்கு தேவையான ரசாயன உரங்கள் 190 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், 361 தனியார் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டன. அந்த வகையில் யூரியா 3,790 டன், டி.ஏ.பி. 2,231 டன், பொட்டாஷ் 330 டன், காம்ப்ளக்ஸ் 6,277 டன், சூப்பர் பாஸ்பேட் 998 டன் இருப்பில் உள்ளது.

    இந்நிலையில் உர நிறுவனம் மூலம் 16:16:16 காம்ப்ளக்ஸ் உரம் 255 டன், பொட்டாஷ் 289.25 டன், 20:20:0:13 காம்ப்ளக்ஸ் உரம் 2 டன் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த 546.25 டன் உரங்கள் ரெயில் மூலம் திண்டுக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டன. பிறகு லாரிகள் மூலம் மாவட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. உர மூடைகள் வினியோகிக்கும் பணிகளை வேளாண்மை வட்டார உதவி இயக்குனர் ராஜேஸ்வரி தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதுதொடர்பாக வேளாண் இணை இயக்குனர் அனுசுயா கூறியதாவது,

    விவசாயிகள் ஆதார் எண்ணை கொடுத்து உரம் வாங்க வேண்டும். இதேபோல் விவசாயிகளுக்கு எளிதாக தெரியும் வகையில் உரங்களுக்கான விலை பட்டியல் பலகை வைக்க வேண்டும். அதிகபட்ச விலைக்கு கூடுதலாக உரங்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு தட்டுபாடின்றி உரம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

    • கொடைக்கானல் நாயுடுபுரம் செல்லக்கூடிய பிரதான சாலையில் காட்டெருமைகள் கூட்டமாக உலா வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் பெரும் அவதி அடைந்தனர்.
    • காட்டெருமை கூட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொடைக்கானல் மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், பூண்டி, கிளாவரை மற்றும் வில்பட்டி, அட்டுவம்பட்டி, பள்ளங்கி, பேத்துப்பாறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது .

    இந்த நிலையில் வனவிலங்குகளான காட்டெருமை, மான், பன்றி, சிறுத்தை, யானை உள்ளிட்ட விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தியும் நகர் பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியும் வருகிறது. இந்த நிலையில் கொடைக்கானல் நாயுடுபுரம் செல்லக்கூடிய பிரதான சாலையில் காட்டெருமைகள் கூட்டமாக உலா வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் பெரும் அவதி அடைந்தனர். காட்டெருமைகள் சாலையை வழி மறித்து நின்றதால் நீண்ட தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அன்றாட தேவைகளுக்கும் செல்ல முடியாமல் தொடர்ந்து மக்கள் தவித்தனர்.

    மேலும் அப்பகுதியின் வழியே பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத சூழலும் ஏற்பட்டது . எனவே காட்டெருமை கூட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது. காட்டெருமை கூட்டம் அப்பகுதியில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது. வனத்துறையினர் வந்து காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடல் என்பது மீனவர்களின் வாழ்வாதாரம். அதனை தி.மு.க. அ.தி.மு.க. தங்களது சொத்தாக மாற்றி வருகிறது.
    • ஊழலை ஒழிப்பதாக சொன்னவர்கள் கொசுவைக் கூட ஒழிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் நடந்த நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

    தமிழகத்தில் உள்ள நிலப்பரப்பில் 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 13 சதவீதம் மட்டுமே உள்ளது. எங்களுக்கு அதிகாரம் கிடைத்தால் மரம் நடுவதை மக்கள் இயக்கமாக மாற்றி மாணவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவோம்.

    நீர் ஆதாரங்கள் கழிவுகளால் மாசடைந்து வருகிறது. விதையில் விஷம் தடவுவதால் தாய்ப்பால் நஞ்சாக மாறி வருகிறது. வேளாண்மை என்பது தொழில் அல்ல. அது தமிழர்களின் பண்பாடு அதனை அரசு வேலையாக செயல்படுத்துவோம்.

    கடல் என்பது மீனவர்களின் வாழ்வாதாரம். அதனை தி.மு.க. அ.தி.மு.க. தங்களது சொத்தாக மாற்றி வருகிறது. கடற்கரையில் தலைவர்களுக்கு நினைவிடங்கள் அமைப்பதை ஏற்க முடியாது. தற்போது பேனா நினைவு சின்னம் வைப்பதை முதலமைச்சர் மறு பரிசீலனை செய்ய வேண்டும். தவறினால் எங்களிடம் அதிகாரம் வரும்போது அவற்றை அகற்றுவோம் என்றார்.

    முன்னதாக ஒட்டன்சத்திரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது:-

    பூமிக்கு எந்த உயிரினங்களாலும் ஆபத்து இல்லை. மனிதர்களால்தான் பேராபத்து ஏற்பட்டுள்ளது. கண்ணுக்கு தெரியாத கொரோனா என்ற நுண்ணுயிரியிடம் இந்த உலகம் தோற்றுப்போனது. ஊழலை ஒழிப்பதாக சொன்னவர்கள் கொசுவைக் கூட ஒழிக்க முடியாமல் திணறி வருகின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மரங்களை வெட்டினால் 6 மாதம் சிறை தண்டனை விதிப்போம். மக்களின் தேவைக்காக மட்டுமே மணல் அள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது சொந்த தேவைகளுக்காக அள்ளி வருகின்றனர்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மிக்ஷி, கிரைண்டர் கொடுக்க மாட்டோம். நல்ல குடிநீர், காற்று, தரமான மருத்துவம் அனைவருக்கும் கிடக்கச் செய்து பூமித்தாயை 10 ஆண்டுகளில் பச்சைப் போர்வையால் போற்றுவோம் என்றார்.

    • திண்டுக்கல், பழனி உழவர்சந்தையிலேயே 1 கிலோ ரூ.100க்கு விற்பனையாகி வருகிறது.
    • தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு வருடத்தின் பெரும்பகுதி நஷ்டம் ஏற்படுகிறது.

    வடமதுரை:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை குறையாமல் கிலோ ரூ.100க்கு மேல் விற்பனையாகி வருகிறது. தக்காளியை தொடர்ந்து வெங்காயம், கத்தரிக்காய், அவரைக்காய், பீன்ஸ், கேரட் போன்ற அத்தியாவசிய காய்கறிகளும் கிலோ ரூ.100க்கும் மேல் விற்பனையாகி வருகிறது.

    விவசாயிகளிடம் இருந்து ரூ.30 முதல் ரூ.40 வரை காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டாலும், வியாபாரிகள் 2 முதல் 3 மடங்கு வரை கூடுதல் விலை வைத்து விற்பதால் பொதுமக்கள் அதிக அளவு சுமையை தாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரேசன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்பட்டாலும் திண்டுக்கல் மாவட்டத்தில் அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

    திண்டுக்கல் மாவட்டத்தில் அய்யலூர், ஒட்டன்சத்திரம் மிகப்பெரிய மார்க்கெட்டாக உள்ளது. இங்கே 1 கிலோ ரூ.130 வரை விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.10 வரை குறைந்து உள்ளது. சில்லரை கடைகளில் பொதுமக்கள் வாங்கும்போது 1 கிலோ ரூ.140 வரை கொடுத்து வாங்கி வருகின்றனர். இதனால் தக்காளியை குறைத்துக்கொண்டு மாற்று பொருளை பயன்படுத்தும் நிலைக்கு மாறிவருகின்றனர்.

    திண்டுக்கல், பழனி உழவர்சந்தையிலேயே 1 கிலோ ரூ.100க்கு விற்பனையாகி வருகிறது. தக்காளியை போன்றே கத்தரிக்காய், பச்சைமிளகாய், வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளும் உச்சத்தில் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு மேல் காய்கறிகள் விலை குறையாத நிலையில் இந்த விலையேற்றம் மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவித்துள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் தற்போது தக்காளி நாற்றுகளை பாவி வைத்துள்ளனர். இவை செடிகளாகி அறுவடைக்கு வர இன்னும் 2 மாதங்கள் ஆகும். ஏற்கனவே தக்காளி செடியை நட்டு அறுவடை செய்து வருபவர்கள் தோட்டத்தில் தக்காளி திருடு போகாமல் இருக்க இரவு, பகலாக காவல் காத்து வருகின்றனர். பல இடங்களில் இரவு நேரங்களில் தோட்டத்தில் புகுந்து தக்காளி திருடு போவதால் இதுபோல காவல்காத்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கண்டமநாயக்கனூரில் தக்காளி பயிரிட்டுள்ள விவசாயி ராமசாமி தெரிவிக்கையில்,

    தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு வருடத்தின் பெரும்பகுதி நஷ்டம் ஏற்படுகிறது. லாபம் கிடைக்கும் நேரத்தில் இதுபோன்ற பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே விளைச்சல் அதிகம் உள்ள காலங்களில் அதனை பதப்படுத்தி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • கடைக்கு வந்த நபர் கடையின் முன்னால் இருந்த 20 ஆயிரம் மதிப்புள்ள புதிய எல்.இ.டி. டி.வி.யை திருடிச் சென்றார்.
    • கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுப்பட்டியை சேர்ந்தவர் ராஜன் (வயது 35). இவர் நத்தம் - அசோக்நகர் பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.

    இவரது கடைக்கு 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் புதிய டி.வி.க்களின் விலையை விசாரித்து உள்ளார். உடனே கடைக்காரர் குடோனில் உள்ள டி.வி.க்களை பார்க்குமாறு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென குடோனில் இருந்து கடைக்கு வந்த நபர் கடையின் முன்னால் இருந்த 20 ஆயிரம் மதிப்புள்ள புதிய எல்.இ.டி. டி.வி.யை திருடிச் சென்றார். இந்த காட்சி பர்னிச்சர் கடையில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது.

    இதனால் அதிர்ச்சியடைந்த ராஜன் திருட்டு சம்பவம் குறித்து நத்தம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து மர்ம நபரை தேடி வருகின்றார்.

    ×