என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • ஆன்லைனில் உள்ள திருமண வெப்சைட் தளத்தில் தனது பெயர் மற்றும் முகவரி உள்ளிட்டவற்றை பதிவு செய்திருந்தார்.
    • ஏற்கனவே திருமண ஆசைகாட்டி பெண்ணை ஏமாற்றிய புகாரில் பீளமேடு போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருந்தார்.

    வடவள்ளி:

    கோவை பேரூர் சுண்டக்காமுத்தூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது42). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ரவிச்சந்திரனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதையடுத்து கணவன், மனைவி 2 பேரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். ரவிச்சந்திரன் மட்டும் அந்த பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

    ரவிச்சந்திரன் தனது மனைவி பிரிந்து சென்றதால் 2-வது திருமணத்திற்கு பெண் தேடி வந்தார். இதற்காக அவர் ஆன்லைனில் உள்ள திருமண வெப்சைட் தளத்தில் தனது பெயர் மற்றும் முகவரி உள்ளிட்டவற்றை பதிவு செய்திருந்தார்.

    மேலும் அதில் மாப்பிள்ளை தேவை என யாராவது பதிவிட்டுள்ளார்களா என்றும் பார்த்தார். அப்போது நாமக்கல் திருச்செங்கோட்டை சேர்ந்த விதவை பெண் ஒருவர் வரன் தேடி பதிவிட்டிருந்ததை ரவிச்சந்திரன் பார்த்தார்.

    பின்னர் அதில் உள்ள செல்போன் எண்ணை எடுத்து, போனில் அவரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தனது பெயர் ரவிச்சந்திரன் என்றும், மொத்த வியாபாரம் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் தனக்கு சொந்தமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளதாகவும், சென்னையில் 60 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு, பெங்களூருவில் பங்களா இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

    தான் விவகாரத்து பெற்று விட்டதால் தன்னுடன் யாரும் இல்லை. நான் மட்டுமே தனியாக இருப்பதாகவும், உங்கள் விவரத்தை பார்த்து தொடர்பு கொண்டேன் என தெரிவித்தார்.

    மேலும் உங்களை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் அந்த பெண்ணிடம் தெரிவித்தார். அவர் கூறிய அனைத்தும் உண்மை என நம்பிய பெண், திருமணத்திற்கும் சம்மதம் தெரிவித்துவிட்டார்.

    தொடர்ந்து 2 பேரும் செல்போனில் பேசி வந்தனர். ஒருநாள் பெண்ணை தொடர்பு கொண்டு பேசிய ரவிச்சந்திரன், தனக்கு திருமண தடை தோஷம் இருப்பதாகவும், அதற்கு பரிகாரம் செய்ய வேண்டி இருப்பதால் உங்களால் முடிந்த உதவி செய்ய முடியுமா? என கேட்டார்.

    அந்த பெண்ணும், அவர் கூறியதை நம்பி, ரூ.80 லட்சம் ரொக்க பணம், ரூ.80 லட்சம் மதிப்பிலான 167 பவுன் நகையையும் கொடுத்தார். நகை, பணத்தை வாங்கிய பிறகு பெண் ரவிச்சந்திரனை தொடர்பு கொள்ள முயன்றார்.

    ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் இதுகுறித்து பேரூர் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வந்தனர். அவரது செல்போனை வைத்து தேடியதில் கரூர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவரவே போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அங்கு பதுங்கியிருந்த ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்தனர். அப்போது அவருடன் பெண் ஒருவரும் இருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

    ரவிச்சந்திரன், தனது மனைவி பிரிந்து சென்ற பின்னர் தனியாக வசித்துள்ளார். அப்போது 2-வது திருமணத்திற்காக பெண் தேடிய அவர், நாமக்கல்லை சேர்ந்த பெண்ணிடம் நைசாக பேசி பணத்தை பறித்து சென்றார்.

    பின்னர் நேராக கரூர் பகுதிக்கு சென்ற ரவிச்சந்திரன், அந்த பகுதியில் பல் டாக்டராக இருந்து வரும் விதவை பெண்ணுடன், ஆன்லைன் வாயிலாக தொடர்பை ஏற்படுத்தி கொண்டு, அவருடனும் பேசி வந்தார்.

    அவரிடமும் நாம் 2 பேரும் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார்.

    டாக்டரும் நம்பவே 2 பேரும் கணவன், மனைவி போல ஒன்றாக வாழ தொடங்கி உள்ளனர். வீட்டில் இருந்தால் கண்டு பிடித்து விடுவார்கள் என நினைத்த ரவிச்சந்திரன் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தங்கும் விடுதிகள், லாட்ஜ்களிலேயே தங்கி இருந்ததும் தெரியவந்தது.

    மேலும், பல் டாக்டரிடம் இருந்து பணம் பெற்று 2 சொகுசு கார்களையும் வாங்கியதும், அவரிடம் இருந்து பெற்ற பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததும் தெரியவந்தது.

    இதேபோல் அவர் பீளமேடு, திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் தனது கைவரிசையை காட்டியுள்ளது போலீசாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து போலீசார் ரவிச்சந்திரனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தொடர்ந்து இவர் இதுபோன்று வேறு எங்காவது கைவரிசை காட்டியுள்ளரா? என்பதை அறிய ரவிச்சந்திரனை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதற்கான நடவடிக்கைகளை போலீசார் தொடங்கியுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட ரவிச்சந்திரனிடம் இருந்து 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான ரவிச்சந்திரன், ஏற்கனவே திருமண ஆசைகாட்டி பெண்ணை ஏமாற்றிய புகாரில் பீளமேடு போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருந்தார். தற்போது மீண்டும் திருமண ஆசை காட்டி பெண்களை ஏமாற்றி பணம் பறித்து சிக்கி உள்ளார்.

    • இரவு நேரத்தில் தூங்கிகொண்டிருந்த தம்பதி இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.
    • உங்கள் ஊரில் பிழைக்க வழியில்லை என தமிழகத்திற்கு வந்துவிட்டு எங்கள் ஊரை தரக்குறைவாக பேசுவதா என அவரை சத்தம் போட்டனர்.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் ஆத்துமேடு பயணிகள் நிழற்குடையில் பச்சைகுத்தும் தொழிலாளிகளான தம்பதிகள் இரவு நேரத்தில் தங்குவது வழக்கம். அதன்படி இரவு நேரத்தில் அங்கு தூங்கிகொண்டிருந்த தம்பதி இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு குடிபோதையில் வந்த வடமாநில ஆசாமி ஒருவர் அவர்களது சண்டையை தனது செல்போனில் படம் பிடித்தார்.

    அதனை வீடியோ எடுத்து கொண்டிருந்தபோதே தமிழகத்தில் இதுபோல்தான் அனைத்து இடங்களிலும் நடக்கிறது. எங்கள் ஊரில் இதுபோல் நடக்காது என பேசினார். இதைபார்த்ததும் அங்கிருந்தவர்கள் அவரை சத்தம்போட்டனர். இருந்தபோதும் அந்த வாலிபர் கேட்காமல் தமிழகத்தில் இதுபோல்தான் நடக்கிறது என்று பேசிக்கொண்டே இருந்தார்.

    இதனால் அங்கிருந்த வியாபாரிகள் அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் இதை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். உங்கள் ஊரில் பிழைக்க வழியில்லை என தமிழகத்திற்கு வந்துவிட்டு எங்கள் ஊரை தரக்குறைவாக பேசுவதா என அவரை சத்தம் போட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • அனுமதி பெறாமல் வீடு கட்டி வருவதாகவும், வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சிமெண்ட் சாலை அமைத்துள்ளதாகவும் புகார் எழுந்தது.
    • தற்போது நடிகர்கள் கட்டி வரும் 2 கட்டிடங்கள் வரைபட அனுமதிக்கு மேல் கட்டியுள்ளது.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பேத்துப்பாறை பாரதி அண்ணாநகர் பகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் அரசு அனுமதி பெறாமல் வீடு கட்டி வருவதாகவும், வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சிமிண்ட் சாலை அமைத்துள்ளதாகவும் புகார் எழுந்தது.

    மேலும் இதேபகுதியில் நடிகர் பாபிசிம்ஹா அரசு அனுமதியின்றி 3 மாடி கட்டிடம் கட்டி வருவதாக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். கொடைக்கானலில் ஜே.சி.பி உள்ளிட்ட கனரக வாகனங்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை வழங்கியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.

    இதனைதொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர், நிலஅளவையர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பாபிசிம்ஹா மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோரின் கட்டிடங்கள் மற்றும் இடங்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் வனத்துறையினரும் ஈடுபட்டனர். அளவீடு செய்யப்பட்ட அறிக்கையை திண்டுக்கல் கோட்டாட்சியர் ராஜாவிடம் வழங்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டிகுமார் பிரசாத் தெரிவிக்கையில், கொடைக்கானலில் 2400 சதுரடிக்குமேல் கட்டிடம் கட்ட அனுமதி கிடையாது. ஆனால் தற்போது நடிகர்கள் கட்டி வரும் 2 கட்டிடங்கள் வரைபட அனுமதிக்கு மேல் கட்டியுள்ளது.

    இதுகுறித்து வில்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது. வனத்துறை இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர். நடிகர் பிரகாஷ்ராஜ் கட்டிடம் கட்ட அனுமதி பெறவில்லை. பாபிசிம்ஹா தனது தாயார் பெயரில் உள்ள இடத்தை புதுப்பித்து வீடு கட்டி வருகிறார். ஆனால் அதற்கும் அனுமதி பெற்றுள்ளாரா என தெரியவில்லை.

    2 பேரிடமும் நோட்டீஸ் அளித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றார்.

    • பஸ் நிலையம் அதனைச் சுற்றியுள்ள ஹோட்டல் மற்றும் வணிக நிறுவனங்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது அதிகரித்து வருகிறது
    • வெயிலில் நீண்ட நேரம் குழந்தைகள் பிச்சை எடுப்பதால் அவர்களுக்கு நீர் இழப்பு ஏற்பட்டு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.குழந்தைகளின் மனநிலையும் பாதிக்கப்படுகிறது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் பஸ் நிலையத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வேலை நிமித்தமாகவும், வியாபாரநிமித்தமாகவும் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.இதனால் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    இந்த நிலையில் பஸ் நிலையம் அதனைச் சுற்றியுள்ள ஹோட்டல் மற்றும் வணிக நிறுவனங்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது அதிகரித்து வருகிறது.மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சில பெண்கள் கையில் குழந்தைகளை வைத்துக் கொண்டு குழந்தைக்கு பால் வாங்க காசு கொடுங்கள் என்று கேட்டு பிச்சை எடுக்கின்றனர்.

    பச்சிளம் குழந்தைகளை வைத்திருப்பதால், பொதுமக்களும் பரிதாபப்பட்டு அதிக அளவில் உதவுகின்றனர். ஆனால், ஒரு கும்பல் பணத்துக்காக குழந்தைகளை பிச்சை எடுக்கப் பயன்படுத்துவது அவ்வப்போது நடந்து வருகிறது.மேலும் குழந்தைகள் பசிக்குது சாப்பிட காசு கொடுங்க என கெஞ்சும் காட்சி காண்போரை கண் கலங்க வைக்கிறது.மேலும் வெயிலில் நீண்ட நேரம் குழந்தைகள் பிச்சை எடுப்பதால் அவர்களுக்கு நீர் இழப்பு ஏற்பட்டு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.குழந்தைகளின் மனநிலையும் பாதிக்கப்படுகிறது.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது

    இந்த கும்பல்கள் உண்மையிலேயே அவருடைய குழந்தைகள் வைத்து தான் பிச்சை எடுக்கிறார்களா அல்லது குழந்தைகளை திருடி வந்து பிச்சை எடுக்கிறார்களா என்பது தெரியவில்லை.ஆகவே குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் கும்பல்கள் மீது அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வங்கி அதிகாரி வீட்டில் பீரோவை உடைத்து அதிலிருந்த 12 பவுன் நகை, ரூ.5ஆயிரம் ரொக்க பணத்தை திருடிச்சென்றனர்.
    • கொள்ளை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தம்மணம்பட்டியை சேர்ந்தவர் விஜயபாஸ்கர். இவர் அரவக்குறிச்சி தமிழ்நாடு கிராம வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    விஜயபாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டின் மேல்தளத்தில் தூங்கச்சென்றுவிட்டனர். இந்நிலையில் மர்மநபர்கள் பின்பக்கமாக உள்ளே நுழைந்து முன்பக்க கதவை உடைத்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்த 12 பவுன் நகை, ரூ.5ஆயிரம் ரொக்க பணத்தை திருடிச்சென்ற னர்.

    காலையில் எழுந்து கீழே வந்து பார்த்தபோது வீடு திறந்து கிடப்பதை கண்டும், பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளைபோனது கண்டும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவஇடத்திற்கு வந்து விசாரணை மேற்கொ ண்டனர். கைரேகை நிபுண ர்கள் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.

    இச்சம்பவம் வேட சந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காளாஞ்சிப்பட்டியில் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவு சார் மையப்பணிகளை அமைச்சர் அர.சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • அரசு செயல்படு த்தும் திட்டங்களை மாணவ- மாணவிகள் நன்கு பயன்படுத்தி, உயர் நிலையை அடைந்து சமுதாய த்திற்கும், பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை தேடித்தர வேண்டும் என அமைச்சர் பேசினார்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிப்பட்டியில் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவு சார் மையப்பணிகளை உணவு மற்றும் உணவு ப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அமைச்சர் பேசியதாவது,

    மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு பெறுவத ற்காக போட்டித்தேர்வுகளு க்கான அறிவுசார் மையம் காளாஞ்சிப்பட்டியில் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இங்கு, மத்திய மற்றும் மாநில அரசு உட்பட பல்வேறு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்க ப்படவுள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் போட்டித் தேர்வு பயிற்சிக்காக வெளிமாவட்டங்களுக்கு செல்ல வேண்டியது இல்லை. இந்த பயிற்சி கட்டுமான பணிகள் விரைந்து முடித்து பயன்பா ட்டிற்கு கொண்டுவரப்படும். மாணவ- மாணவிகள் விடா முயற்சி, தன்னம்பி க்கை மற்றும் குறிக்கோளுடன் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மாணவ- மாணவிகள் செல்போன்களை படிப்பி ற்காக மட்டும் பயன்படுத்தி க்கொள்ள வேண்டும்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ- மாணவிகளுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றை செயல்படுத்தி வருகிறார். அரசு செயல்படு த்தும் திட்டங்களை மாணவ- மாணவிகள் நன்கு பயன்படுத்தி, உயர் நிலையை அடைந்து சமுதாய த்திற்கும், பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை தேடித்தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில், திண்டுக்கல் எம்.பி வேலுச்சாமி, ஊராட்சி மன்றத் தலை வர்கள் அமுதா, செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் இ.பெரியசாமி திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் ஊராட்சி ஒன்றியம், செட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முதல்-அமை ச்சரின் காலை உணவுத் திட்டத்தை கலெக்டர் பூங்கொடி தலைமையில் தொடங்கி வைத்தார்.
    • மாணவ-மாணவிகள் என மொத்தம் 1111 பள்ளிகளில் பயிலும் 58,330 மாணவ-மாணவிகள் பயனடை கின்றனர்.

    திண்டுக்கல்:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் அனைத்து அரசு தொடக்க ப்பள்ளி மாணவ-மாணவி களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி படித்த நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார்.

    அதனைத்தொடர்ந்து அமைச்சர் இ.பெரியசாமி திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் ஊராட்சி ஒன்றியம், செட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முதல்-அமை ச்சரின் காலை உணவுத் திட்டத்தை கலெக்டர் பூங்கொடி தலைமையில் தொடங்கி வைத்தார்.

    இதில் அமைச்சர் தெரிவித்ததாவது:-

    திண்டுக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் பணி தொடங்கப்பட்டது. அதன்படி, ஊராட்சிப் பகுதிகளில் 34 பள்ளிகளைச் சேர்ந்த 951 மாணவ- மாணவிகளுக்கும், நகர்ப்புறங்களில் 15 பள்ளிகளைச் சேர்ந்த 1354 மாணவ- மாணவிகளுக்கும், என மொத்தம் 49 பள்ளிகளைச் சேர்ந்த 2,305 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து தொடக்கப்பள்ளி களிலும் காலை உணவு வழங்கும் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டு ள்ளது. அதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 1,034 பள்ளிகளைச் சேர்ந்த 53,715 மாணவ, மாணவிகளுக்கும், நகர்ப்புறத்தில் 28 பள்ளிகளைச் சேர்ந்த 2,310 மாணவ, மாணவிகளுக்கும், என மொத்தம் 1,062 பள்ளிகளைச் சேர்ந்த 56,025 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு இன்று முதல் காலை உணவு வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தின் வாயிலாக திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த 1068 பள்ளிகளில் பயிலும் 54,666 மாணவ-மாணவிகள், நகர்ப்புற ங்களைச் சேர்ந்த 43 பள்ளிகளில் பயிலும் 3,664 மாணவ-மாணவிகள் என மொத்தம் 1111 பள்ளிகளில் பயிலும் 58,330 மாணவ-மாணவிகள் பயனடை கின்றனர்.

    இத்திட்டத்தின்படி பள்ளிகளில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் வெண் பொங்கலுடன் காய்கறி சாம்பார், செவ்வாய் கிழமைகளில் ரவா காய்கறி கிச்சடி,  புதன் கிழமைகளில் அரிசி உப்புமாவுடன் காய்கறி சாம்பார், வியாழக் கிழமைகளில்  வரகு பொங்கலுடன் காய்கறி சாம்பார், வெள்ளிக் கிழமைகளில் சாமை கிச்சடி மற்றும் ரவா கேசரி(இனிப்பு) ஆகியவை சமைத்து மாணவ, மாணவிகளுக்கு வழங்க ப்படுகிறது. சமையல் மையப் பொறுப்பா ளர்க ளுக்கு அந்தந்த வட்டாரங்க ளில் தனித்தனி குழுவாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சரவணன், மாவட்ட ஊராட்சித் தலை வர் பாஸ்கரன், ஆத்துார் ஊராட்சி ஒன்றிய க்குழு தலைவர் மகேஸ்வரி முரு கேசன், மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவி யாளர்(சத்துணவு) சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவர் லாரன்ஸ், செட்டியப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருமணத்துக்காக மளிகை கடையில் பொருட்கள் வாங்கி வரும் வழியில் பைக் தம்பதி மீது மோதி படுகாயமடைந்தனர்.
    • இந்த விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஊராளி ப்பட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 48). இவர் செல்லம்புதூர் பகுதியில் இரும்புக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி (44). இவர்களின் மகளுக்கு 2 நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது.

    இந்த திருமணத்துக்காக நத்தம் அம்மன் குளம் அருகே மளிகை கடையில் பொருட்கள் வாங்கினர். பின்னர் 2 பேரும் வெளியே நின்று கொண்டு இருந்தனர். அப்போது பைக்கில் வந்த கூலித் தொழிலாளி சூரிய பிரசாத் (22) என்பவர் அவர்கள் மீது மோதினார்.

    இந்த விபத்தில் 3 பேரும் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் ஜெயந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆரோக்கியசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சூரியபிரகாஷ் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு ள்ளார். மகளுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலை க்கழகத் தமிழ்த்துறையின் சார்பில் உலக நாட்டுப்புறவியல் நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவில் பல்துறை மாணவர்களும், ஆய்வாளர்களும், பேராசிரியர்களும் பங்கேற்றனர்.

    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் அருகே காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலை க்கழகத் தமிழ்த்துறையின் சார்பில் உலக நாட்டுப்புறவியல் நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்குப் பல்கலை க்கழகப் பதிவாளர் (பொறு ப்பு) ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பழனி யாண்ட வர் கலை பண்பாட்டுக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கிருஷ்ண மூர்த்தி சிறப்பு விருந்தின ராகக் கலந்துகொண்டார்.

    உலக நாட்டுப்புறவியல் நாள் கொண்டாடப்படு வதன் நோக்கம் குறித்துக் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலை க்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முத்தையா எடுத்துரைத்தார். பல்கலை க்கழகப் பதிவாளர் (பொறு ப்பு) ராதாகிருஷ்ணன் பேசுகையில், இந்தியா கிராமங்களில் வாழ்கின்றது என்றார் காந்தியடிகள். கிராம மக்கள்தான் ஆடம்பர மில்லாத எளிய வாழ்க்கை வாழ்கின்றனர். இவர்களி டம்தான் நமது முன்னோ ர்கள் கடைப்பிடி த்த தொன்மையான பண்பாடு உயிர்ப்புடன் இருக்கின்றது. இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழும் மனநிலையும் விட்டுக்கொடு க்கும் பண்பும் அவர்களிட ம்தான் காண ப்படு கின்றது. முன்னோ ர்கள் பின்பற்றி வந்த பல நல்ல செயல்பாடு களை நாம் இன்று இழந்து விட்டோம்.

    இயற்கையைப் பாதுகாக்க மற்றும் உறவுகளை நேசிக்கத் தவறிவிட்டோம். முன்னோ ர்கள் கடைப்பித்த நல்ல பழக்கவழக்கங்களை நமது வருங்கால சந்ததி களுக்கும் கற்றத்தர வேண்டும் என்றார். தொடர்ந்து 'வழி நடையில் வாழும் பண்பாடு' என்னும் தலைப்பில் சிறப்பு ரை யாற்றிய பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி பேசுகை யில், பழனி முருகன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை வழிபட்டுச் செல்கின்றனர். இதனால் மக்கள் மனவலிமையும் உடல் வலிமையும் பெறு கின்றனர்.

    நவீன வாழ்க்கை தரும் நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கும் பல தரப்பட்ட மக்களைச் சந்தித்து உறவாடுவதற்கும் தெய்வத்திற்குக் காணி க்கைகள் செலுத்துவதன் மூலம் இனம்புரியாத நம்பிக்கையைப் பெறு வதற்கும் இது வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும் விருந்தோம்பல், விட்டு க்கொடுக்கும் மனப்பா ன்மை, ஒற்றுமை உணர்வு, சமத்துவ மனப்பான்மை போன்றவை வழிநடைப் பயணத்தால் வளர்கின்றன. பாதையாத்திரை மக்களுக்குப் பண்பாட்டைக் கற்றக் கொடுக்கும் புனித யாத்திரையாகத் திகழ்கி ன்றது என்றார்.

    தொடர்ந்து பல்கலைக்கழக நுண்கலை உதவிப் பேராசிரியர் ராஜராஜன் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சிதம்பரம் நன்றி கூறினார். முதுகலை தமிழ் மற்றும் இந்திய இலக்கியம் மாண வர்கள் பழமொழி விடுகதை களை எடுத்துக் கூறினர். நிகழ்வில் பல்துறை மாணவர்களும், ஆய்வாள ர்களும், பேராசிரியர்களும் பங்கேற்றனர்.

    • பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக தமிழக கவர்னர் ரவி குடும்பத்துடன் வருகை தந்தார்.
    • போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டது உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக தமிழக கவர்னர் ரவி குடும்பத்துடன் வருகை தந்தார். கவர்னருக்கு வரவேற்பு அளிப்பதாக தேசிய கொடியுடன் வந்த பாரதிய ஜனதா கட்சியினர் பஸ் நிலையத்தின் முன்பு கூடிய போது போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் தள்ளுமுள்ளாக மாறியது.

    இந்த சம்பவம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் மற்றும் நிர்வாகிகளை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்று 1 மணி நேரத்திற்கு பின்னர் கவர்னருக்கு வரவேற்பு அளிக்க அனுமதி அளித்து விடுவித்தனர்.

    போலீசாருடன் ஏற்பட்ட தகராறு தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ், மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன், நகர தலைவர் ராமசந்திரன், இளைஞர் அணி நிர்வாகி ஸ்ரீதர், ஒன்றிய நிர்வாகிகள் முத்து உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டது உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    மேலும் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் பழனி பஸ் நிலையம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்ட த்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுதலை செய்த னர். கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியது தொடர்பாக மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சச்சி தானந்தம், நகரச் செயலாளர் கந்தசாமி, முன்னாள் நகர் மன்ற தலைவர் ராஜ மாணி க்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் திருவளவன், நகர செயலாளர் மணவாளன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    அனுமதி இன்றி ஒன்றுகூடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • கடந்த 23 ஆண்டுகளாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் செயற்கைகோள் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.
    • அவரது புகைப்படத்துடன் தேசிய கொடி ஏற்றி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    பழனி:

    நிலவின் தென்துருவத்தில் கால் பதித்த முதல்நாடு என்ற பெருமையும், நிலவில் கால் பதித்த 4-வது நாடு என்ற பெருமையும் சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதன்மூலம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

    இந்த திட்டத்தில் செற்கைகோள் மையத்தின் இயக்குனராக சங்கரன், திட்ட இயக்குனர் வீரமுத்து வேல் தமிழகத்தை சேர்ந்தவர். மேலும் சந்திரயான்-3 திட்டத்தில் பூமியில் இருந்து ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்ட செயற்கைகோள் நிலவின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படுவதற்கான ஆர்பிட்டர் நிலவில் கால் பதிப்பதற்கான லேண்டர் மற்றும் நிலவினை ஆய்வு செய்யும் ரோவர் ஆகியவை மிக முக்கியமானவையாகும். இவை மூன்றையும் பெங்களூரில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இயக்குவதற்கான ஆணைகளை பிறப்பிக்கும் டெலிகாமாண்ட் சாப்ட்வேர் வடிவமைப்பாளராக திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள கணக்கன்பட்டியை சேர்ந்த கவுரிமணி (வயது50) என்பவர் கடந்த 23 ஆண்டுகளாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் செயற்கைகோள் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

    10ம் வகுப்பு வரை பழனியில் உள்ள பள்ளியிலும், 11, 12-ம் வகுப்புகளை திண்டுக்கல் அண்ணாமலையார் மேல்நிலைப்பள்ளியிலும், தொலைதொடர்பு பொறியியலில் பி.இ., எம்.இ. பட்ட படிப்புகளை மதுரை தியாகராஜர் கல்லூரியிலும் முடித்துள்ளார். இவரது கணவர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார்.

    சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதன் மூலம் இக்குழுவில் பணியாற்றிய பழனி பெண் விஞ்ஞானி கவுரிமணிக்கு அப்பகுதி மக்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரது புகைப்படத்துடன் தேசிய கொடி ஏற்றி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    • பள்ளிக்கு செல்வதற்காக தர்மராஜ் புறப்பட்டுக் கொண்டு இருந்தான்.
    • டாக்டரிடம் காண்பிக்கவே பாம்பை கையில் எடுத்து வந்ததாக சிறுவனின் தந்தை தெரிவித்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடுத்த பழைய கன்னிவாடி கே. குரும்பபட்டியை சேர்ந்தவர் செல்வம். கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் தர்மராஜ் (வயது 8). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறான்.

    இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதற்காக தர்மராஜ் புறப்பட்டுக் கொண்டு இருந்தான். அப்போது வீட்டில் பதுங்கி இருந்த நல்ல பாம்பு சிறுவனின் கால் கட்டை விரலில் கடித்தது. இதனால் சிறுவன் கூச்சலிட்டான். மகனின் அலறல் சத்தம் கேட்டு வந்த தந்தை செல்வம் 4 அடியில் நல்லபாம்பு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அந்த பாம்பை அடித்து கையோடு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மகனுடன் சிகிச்சைக்கு வந்தார். இதனை பார்த்ததும் ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து சிறுவன் தர்மராஜ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனது மகனை கடித்த பாம்பு எந்த வகையை சேர்ந்தது என டாக்டரிடம் காண்பிக்கவே பாம்பை கையில் எடுத்து வந்ததாக சிறுவனின் தந்தை தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×