என் மலர்
தர்மபுரி
- சம்பவத்தன்று சென்னையன் வேலைக்காக வீட்டை விட்டு சென்றார்.
- மீண்டும் அவர் வீடு திரும்பிவந்து பார்த்தபோது அவரது மனைவி சுஜி காணவில்லை.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே சூரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சென்னையன். கார்பெண்டரான இவரது மனைவி சுஜி (வயது 23).
இந்த நிலையில் சம்பவத்தன்று சென்னையன் வேலைக்காக வீட்டை விட்டு சென்றார்.
மீண்டும் அவர் வீடு திரும்பிவந்து பார்த்தபோது அவரது மனைவி சுஜி காணவில்லை. இதனால் பதறிப்போன அவர் பல்வேறு இடங்களில் தனது மனைவியை தேடினார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சென்னையன் மொரப்பூர் போலீஸ் நிலை–யத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுஜியை தேடிவருகின்றனர்.
- 29-ந் தேதி காலை நடந்த பட்டாசு குடோன் வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
- தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் உயிருக்கு போராடிக்கொண்டி ருந்தவர்களை மீட்டு உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த இளைஞர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த பழையப்பேட்டையில் கடந்த 29-ந் தேதி காலை நடந்த பட்டாசு குடோன் வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதில் 12 பேர் படுகாயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் விபத்து ஏற்படும் போது பழையப்பேட்டை சேர்ந்த பாபுலால், அஸ்ரப், காதர், வஜீர், அஸ்மத், விஷ்ணு, சுஹேல், ரப்பீக், அனஸ் உள்ளிட்ட இளைஞர்கள் வெடி விபத்து நடந்து கொண்டிருந்த போதே தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வெடி விபத்தில் சிக்கியவர்களை இளைஞர்கள் மீட்கும் காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவியது. அந்த இளைஞர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்ட மிலாதுநபி விழாக்குழு சார்பில் நடந்த இந்த விழாவில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் உயிருக்கு போராடிக்கொண்டி ருந்தவர்களை மீட்டு உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த இளைஞர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். இதில் கிருஷ்ணகிரி புதுப்பேட்டை மிலாது நபி விழாக்குழு தலைவர் அஸ்லம், செயலாளர் கராமத், சுகுமார், ஜெயக்குமார், சந்தோஷ்,பிரதோஸ்கான், மதன்ராஜ், செந்தில், ரியாஸ், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இந்த பதிவை கண்டவுடன் அவரது உறவினர்கள் தருமபுரி அமைப்பினரை தொடர்பு கொண்டு முதியவரை ஒப்படைக்க கேட்டுக் கொண்டனர்.
- இதனையடுத்து தருமபுரி சேவை அமைப்பிற்கு முதியவரின் உறவினர்கள் நன்றிகளை தெரிவித்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், செம்மணஹள்ளி அருகே உள்ள ஒட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த முதியவர் மாதப்பன் மூக்கப்பகவுண்டர்.
இவர் இரண்டு வருடங்களாக ஆதரவின்றி சத்தியமங்கலம் பகுதியில் இருப்பதை சமூக வலைத்தள ங்களில் தருமபுரி அமைப்பி னர் பதிவு செய்திருந்தனர்.
இந்த பதிவை கண்டவுடன் அவரது உறவினர்கள் தருமபுரி அமைப்பினரை தொடர்பு கொண்டு முதியவரை ஒப்படைக்க கேட்டுக் கொண்டனர்.
சத்தியமங்கலத்தை சேர்ந்த சமூக சேவகர் ஜார்ஜ் உதவியுடன் முதியவரை மீட்டு, தருமபுரி நகர போலீஸ் ஸ்டேசன் சப்-இன்ஸ்பெக்டர் இளமதி தலைமையில் முதியவரை அவரது உறவினர் எர்ரப்பட்டியை சேர்ந்த மாணிக்கத்திடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து தருமபுரி சேவை அமைப்பிற்கு முதியவரின் உறவினர்கள் நன்றிகளை தெரிவித்தனர்.
- தமிழகத்தைச் சேர்ந்த 3093 மாணவ , மாணவியர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசலால் அறிவிக்கப்பட்டுள்ளது.
- தேசியத் தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
2023-24 நிதியாண்டில், நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 3093 மாணவ , மாணவியர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசலால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் பெற்றோர், அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11 -ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்க வேண்டும்.
9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
தேசியத் தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இத்தேர்விற்கு 10.08.2023 க்குள் https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் 12.08.2023 முதல் 16.08.2023 தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும்.
எழுத்துத் தேர்வு 29.09.2023 ஆம் தேதி நடைபெறும். விண்ணப்பத்துடன் கைப்பேசி எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
இத்திட்டம் தொடர்பான முழுமையான விவரங்கள் https://yet.nta.ac.in மற்றும் http://socialjustice.gov.in/schemes/ ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
- கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு அதிகபட்சம் ரூ.50,000- வரையிலும் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.
- மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை மேற்காண் சான்றிதழ்களுடன் மாற்றுத்தினாளிகள் நலவாரிய அட்டை மற்றும் UDID சமர்ப்பித்து கடன் பெறலாம்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் டாப்செட்கோ, டாம்கோ, தாட்கோ, சுய உதவி குழு கடன்கள், மாற்றுத்திறனாளிகள் கடன்கள், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான கடன் வழங்கப்படுகிறது என மண்டல இணைப்பதிவாளா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் தருமபுரி மண்டல இணைப்பதிவாளர் சந்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:
தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 21 கிளைகள். 131 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 3 மலைவாழ் பல்நோக்கு கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகள் மற்றும் தருமபுரி கூட்டுறவு வங்கி மூலம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கடன் (டாப்செட்கோ), (தாட்கோ), கைவினை கலைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திட அவர்கள் தம் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் வாங்கிட (டாம்கோ-VIRASAT) சுய உதவி குழுக்களுடன் போன்ற கடன்களுக்கு தனிநபர் ஒருவருக்கு ரூ.10.00 இலட்சம் வரையிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு கடனாக தனிநபர் ஒருவருக்கு (அடமானத்தின் பேரில் ) ரூ.50.00 இலட்சம் வரையிலும் சுய உதவி குழு ஓன்றுக்கு அதிகபட்சமாக ரூ.20.00 இலட்சம் வரையிலும், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு அதிகபட்சம் ரூ.50,000- வரையிலும் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.
மேற்கண்ட கடன் கோரும் பயனாளிகள், ஆதார், குடும்ப அட்டை நகல், வருமான சான்று, பிறப்பிடச் சான்று, சாதிச் சான்றிதழ், தொழிலாளி ரசீது மற்றும் இதர ஆவணங்களை சமர்ப்பித்து கடன்களை பெறலாம். மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை மேற்காண் சான்றிதழ்களுடன் மாற்றுத்தினாளிகள் நலவாரிய அட்டை மற்றும் UDID சமர்ப்பித்து கடன் பெறலாம்.
இக்கடன்கள் பெறுவது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கி, தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 21 கிளைகள் மூலம் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர்-9489094166 உதவி பொது மேலாளர் -9489906009 மற்றும் மேலாளர்-9489094152 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- கபினி, கே.ஆர்.எஸ். ஆகிய இரு அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு 3,983 கனஅடியாக குறைக்கப்பட்டது.
- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிந்து காணப்பட்டது.
தருமபுரி:
கர்நாடகா, கேரளா மாநிலங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்ததன் காரணமாக கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் காரணமாக 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டது.
தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் கபினி, கே.ஆர்.எஸ். ஆகிய இரு அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு 3,983 கனஅடியாக குறைக்கப்பட்டது.
இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிந்து காணப்பட்டது.
நேற்று மாலை 5 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்றுகாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு 4 ஆயிரம் கன அடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
கர்நாடகா-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து காவிரி ஆற்றில் வரும் நீரினை அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.
- பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவராக சபரி என்பவர் கடந்த சுமார் 1½ ஆண்டாக இருந்து வருகிறார்.
- தகவல் அறிந்த தலைமை ஆசிரியர் ஸ்ரீகாந்த் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
கடத்தூர்:
தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கேத்துரெட்டிப்பட்டி பஞ்சாயத்து பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 173-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவராக சபரி என்பவர் கடந்த சுமார் 1½ ஆண்டாக இருந்து வருகிறார்.
அவரின் குழந்தைகள் இந்த அரசு பள்ளியில் படிக்காத நிலையில் அவர் அரசியல் கட்சியில் உள்ளதால் பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது தெரிய வந்தது.
எனவே அவரை மாற்றி பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களில் யாரேனும் ஒருவரை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி முன்பு இன்று காலை திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாணவர்களும் இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தலைமை ஆசிரியர் ஸ்ரீகாந்த் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது பெற்றோர், ஆசிரியர் கழக தலைவரை மாற்ற வேண்டும் என பெற்றோர்கள் தலைமை ஆசிரியர் ஸ்ரீகாந்திடம் மனு அளித்தனர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பள்ளி விடுமுறை என பெற்றோர்கள் தெரிவித்த நிலையில் நேற்று சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் ஆப்சென்ட் ஆகி இருந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறி ஏளனமாக பேசி வருகின்றனர்.
- மாடுபிடிக்க சென்ற போது அடித்து உதைத்து துன்புறுத்தினர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட நாகனம்பட்டி ஊராட்சியில் சங்கனம்பட்டி கிராமத்தில் உள்ள கண்ணன் கொட்டாய் பகுதியில் வசிக்கும் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
காரிமங்கலம் ஒன்றியம், சங்கனபட்டி கிராமத்தில் கண்ணன் கொட்டாய் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் குடியிருந்து வசித்து வருகிறோம். மேலும் அதே பகுதியில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் எங்களை தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறி ஏளனமாக பேசி வருகின்றனர். எங்கள் ஊரில் உள்ள அம்மன் கோவில் திருவிழாவிற்கு எங்களிடமும் வரி வசூலித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 29-ம் தேதி கோவில் திருவிழாவை முன்னிட்டு மாடுபிடிக்கும் விழா நடைபெற்றது.
அந்த விழாவில் நாங்கள் சென்று மாடுபிடிக்க சென்ற போது எங்களை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று சிலர் அடித்து உதைத்து துன்புறுத்தினர். படுகாயம் அடைந்த எங்களில் ஒரு சிலர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . எங்கள் மீது மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் சிலர் வீட்டுகளை காலி செய்து வெளியில் தங்கி உள்ளனர்.
எனவே மேற்படி நபர்கள் மீது சட்டரீதியான துரித நடவடிக்கை எடுக்கவும், எங்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று புகார் மனுவாக கலெக்டரிடம் அளித்தனர்.
- ஜே.சி.பி எந்திரம் மூலம் அடியாட்களுடன் வந்து பஞ்சாயத்து தலைவர் கடைகளை இடித்துள்ளார்.
- ரூ.15 லட்சம் மதிப்பிற்கு மேல் எனக்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட மானியதள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் கலெக்டரிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே மானிய தள்ளி கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு சொந்தமான இரண்டு கடைகள் உள்ளது. அதில் எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையும் நடத்தி வந்தேன். அந்த கடைகளை சட்ட விரோதமாக ஜே.சி.பி எந்திரம் மூலம் அராஜக முறையில் அடியாட்க ளுடன் வந்து பஞ்சாயத்து தலைவர் இடித்துள்ளார். மேலும் கடைகளில் இருந்து எனது உடைமைகளை முற்றிலும் அழித்து மின் இணைப்பு சாதனங்கள் உட்பட அனைத்து பொருட்களையும் நொறுக்கி, சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிற்கு மேல் எனக்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளார்.
எங்கள் குடும்பத்திற்கு கொலைமிரட்டலும் விடுத்து எங்கள் வாழ்வா தாரத்தை அழித்துள்ளார். எனவே பஞ்சாயத்து தலைவர் மீது தொப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி உரிய விசாரணை மேற்கொண்டு பஞ்சாயத்து தலைவர் மீதும், அவர்களது அடியாட்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே இடத்தில் கடைகளை கட்டிக் கொடுக்க ஆவனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.
- தருமபுரியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
- வெங்கடேசனின் தலை பகுதியில் அடிபட்டு மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் வெங்கடேசன் (வயது31). இவர் தருமபுரியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இதற்காக அவர் வெண்ணாம்பட்டியில் உள்ள ஹவுசிங் போர்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.
இவரது தந்தை அண்ணாதுரை தருமபுரியில் தனியார் டிராவல்ஸ் ஒன்றை நடத்தி வருகிறார்.
வெங்கடேசன் வேலைக்கு செல்வதற்கு முன்பு தனது தந்தையின் டிராவல்ஸ் அலுவலகத்திற்கு சென்று சுத்தம் செய்து விட்டு அதன்பிறகு அவர் வேலைக்கு செல்வது வழக்கம். இதேபோல் நேற்று காலை தனது வீட்டில் இருந்து வெங்கடேசன் தந்தையின் டிராவல்ஸ் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றபோது வெண்ணாம்பட்டி ரெயில் கேட்டை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக பெங்களூரு-எர்ணாகுளம் ரெயில் வருவதை தெரியாமல் அஜாக்கி ரதையாக அவர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். ஆனால், ரெயில் வேகமாக வந்து அவர் மீது மோதியது. இதில் வெங்கடேசனின் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் அடிபட்டு மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து தருமபுரி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திடீரென்று மாயமானது.
- எர்ரனஅள்ளியைச் சேர்ந்த ஆஞ்சநேயர் திருடி வந்து பாத்திரகடையில் விற்றது தெரியவந்தது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் இருந்து ஓசூர் செல்லும் சாலை 4 வழி சாலையாக மாற்றுவதற்காக பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அதற்காக தனியார் நிறுவனம் ஒன்று டெண்டர் எடுத்து பணிகளை செய்து வருகின்றன. இந்த பணிகளுக்கான டெண்டர் எடுத்த தனியார் நிறுவனத்தில் பாலக்கோடு சொக்கன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சங்கர் (வயது30) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் பாலக்கோடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த சாலையில் விளக்குகள் அமைப்பதற்கான வயர்கள், ஜாக்கி உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திடீரென்று மாயமானது. இதனை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து சங்கர் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், பாலக்கோடு அருகே மூக்கம்பாடி பாத்திரக்கடை ஒன்றில் அந்த பொருட்கள் இருப்பதும், அந்த பொருட்களை எர்ரனஅள்ளியைச் சேர்ந்த ஆஞ்சநேயர் (52) என்பவர் திருடி வந்து பாத்திரகடையில் விற்றது தெரியவந்தது. உடனே போலீசார் ஆஞ்சநேயரை கைது செய்து பாத்திர கடையில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
- ஊராட்சி மன்ற தலைவரின் கையொப்பங்களை போலியாக அரசு பதிவேடுகளில் போடுகிறார்.
- ஊராட்சி செயலாளரும் உடந்தையாக செயல்படுகிறார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா ஏரியூர் ஒன்றியத்திற்குட்பட்ட பத்ர அள்ளி ஊராட்சியின் துணைத் தலைவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியம் பத்ர அள்ளி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பணியாற்றி வருகிறேன். ஊராட்சி மன்ற தலைவராக சீரங்காயி பஞ்சாயத்து தலைவராக உள்ளார். ஆனால் இதுவரை ஊராட்சி மன்ற தலைவராக இவரது கணவர் தங்கராஜ் செயல்பட்டு வருகிறார்.
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சித் தலைவரின் இருக்கையில் அமர்வது, ஊராட்சி மன்ற தலைவரின் கையொப்பங்களை போலியாக அரசு பதிவேடுகளில் போடுவது, ஊராட்சி மன்ற நிதிகளை தவறுதலாக கையாண்டு கையாடல் செய்வது போன்ற சட்டத்துக்கு புறம்பான செயல்பாடுகளில் இவர் ஈடுபட்டு வருகிறார்.
மாதாந்திர கூட்டங்களை நடத்துவதே இல்லை. ஊராட்சி மன்ற கூட்டங்களை நடத்தியது போல் தீர்மானங்களை நிறைவேற்றி யது ,வார்டு உறுப்பினர்களின் கையொப் பங்களை அவரே போட்டுக் கொண்டு அதிகாரிகளை ஏமாற்றுகிறார். இதற்கு ஊராட்சி செயலாளரும் உடந்தையாக செயல்படுகிறார்.
இதனை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இது போன்ற பல வெளியில் தெரியவராத குளறுபடிகள் பல நடந்த வண்ணம் உள்ளன.
ஆகவே எனது புகாரின் பேரில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுவதுடன் எங்கள் ஊராட்சி மன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் நிறைவேற்றப்பட்ட பணிகள் தொடர்பாக வெளிப்படை யான சிறப்பு தணிக்கையினை மேற்கொள்ள உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






