என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • கடத்தூர் அரசு பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ கோவிந்தசாமி தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    கடத்தூர் 

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ கோவிந்தசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் கடத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மதிவாணன், பள்ளி தலைமை ஆசிரியை ரமாதேவி,கடத்தூர் ஒன்றிய குழு துணை தலைவர் சக்திவேல், மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன்,ஒன்றிய துணைச் செயலாளர் ரவீந்திரன், கடத்தூர் பேரூராட்சி கவுன்சிலர் சபியுல்லா, பொரிமாது, சென்னகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் ஆதிமூலம் மற்றும் இருபால் ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கினார்.
    • 33 போலீஸ் நிலையங்களில் இருந்து புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை தர்மபுரியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

    இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி தகராறு, பொது வழி பிரச்சினை, குடும்பத்தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 166 மனுக்கள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த விசாரணையில் 142 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 24 மனுக்கள் தொடர் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிக்கு புகார் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு விரைவில் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த முகாமில் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகலிங்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரங்கசாமி, சுரேஷ் உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

    • ஒரு பெண் தனது குழந்தைக்கு பால் கொடுக்க பஸ்சில் இடம் தருமாறு கேட்டார்.
    • பையில் இருந்த 20 ஆயிரம் ரூபாயை திருடி மற்றொரு பெண்ணிடம் கொடுத்தார்.

    ராயக்கோட்டை,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா பாப்பாரப்பட்டி அப்பு முதலியார் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது42).

    பெங்களூருவில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    தனது மகள் வயிற்று வலிக்கு சிகிச்சை அளிக்க தனது முதலாளியிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் வாங்கி கொண்டு மனைவி மற்றும் மகளுடன் தனியார் பஸ்சில் நேற்று ஊருக்கு சென்றார்.

    சந்தனப்பள்ளி பஸ் நிறுத்தம் வந்த போது 2 பெண்கள் குழந்தைகளுடன் பஸ்சில் ஏறினர். அதில் ஒரு பெண் தனது குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும். அதனால் இடம் தருமாறு சண்முகத்திடம் கேட்டார். அவர் எழுந்து இடம் கொடுத்தார்.

    ராயக்கோட்டை தக்காளி மண்டி அருகே பஸ் வந்த போது சண்முகத்தின் மனைவியிடம் குழந்தையை கொடுத்து விட்டு பேச்சு கொடுப்பது போல் நடித்த அந்த பெண், சண்முகம் மனைவி வைத்திருந்த பையில் இருந்த 20 ஆயிரம் ரூபாயை திருடி மற்றொரு பெண்ணிடம் கொடுத்தார்.

    இதை பார்த்த சண்முகம் பயணிகள் உதவியுடன் 2 பெண்களையும் பிடித்து ராயக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டம், உடையார்பட்டி முனீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த சூர்யா மனைவி பாரதி (27), அயோத்திப்பட்டணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருண்குமார் மனைவி பிரியா (20) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவர் மீதும் ராயக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தார். அவர்களிடம் இருந்து ரூ20 ஆயிரம் மீட்கப்பட்டது. 

    • வத்தல்மலையில் ரூ.2.23 கோடி மதிப்பில் சாகச சுற்றுலாப்பணிகள் ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
    • சுற்றுலாத்துறை அமைச்சர் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் சாகச சுற்றுலா பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழாவினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இவ்விழா வில் சுற்றுலாத்துறை இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, திட்ட விளக்கவுரை ஆற்றினார். மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார். ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவானது நேற்று தொடங்கி நாளை 4.8.2023 வெள்ளிக்கிழமை வரை மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெறுகின்றது.

    இவ்விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    தருமபுரி மாவட்ட ஒகேனக்கல் சுற்றுலாதலத்திற்கு சுற்றுலா பயணிகள் வந்து காவிரி ஆற்றினை பார்த்துவிட்டு மக்கள் செல்கின்றனர். மேலும், ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை ரூ.17.58 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தும் விதமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்பணிகளை தரமாகவும், விரைவாகவும் மேற்கொள்ள வேண்டுமென இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், தருமபுரியில் சுற்றுலாவை மேம்படுத்த வத்தல்மலையில் ரூ.2.23 கோடி மதிப்பில் சாகச சுற்றுலாப்பணிகள் ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுபோன்ற பல்வேறு சுற்றுலா திட்டப்பணிகளால் உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும், தனி மனித வருமானம் அதிகரிப்பதோடு, மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியும் மேன்மை அடையும். மக்கள் சுற்றுலாத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, சுற்றுலா பயணிகளுக்கு நல்ல ஆதரவு அளித்து, சுற்றுலாத்த்துறையை வளர்த்து எடுக்க வேண்டும்.

    மேலும், இந்த விழாவை சிறப்பிக்கும் வகையில் ஏறத்தாழ 77 பயனாளிகளுக்கு ரூ.72.10 லட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார். இதனை தொடர்ந்து, வத்தல்மலையில் அமைச்சர் ராமச்சந்திரன் சுற்றுலாவை மேம்படுத்தும் பொருட்டு ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் சாகச சுற்றுலா மற்றும் திறந்தவெளி முகாம்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை தரமாகவும், விரைந்து முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இவ்விழாவில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், மாவட்ட வன அலுவலர் அப்பல நாயுடு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கவிதா, மாவட்ட சுற்றுலா அலுவலர் கதிரேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 1,950 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 5,559 கிலோவாக அதிகரித்தது.
    • பட்டுக்கூடு விலை கிலோவிற்கு ரூ.59 குறைந்தது.

    தருமபுரி,

    தருமபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

    இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 1,950 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 5,559 கிலோவாக அதிகரித்தது. அதே நேரத்தில் பட்டுக்கூடு விலை கிலோவிற்கு ரூ.59 குறைந்தது.

    இந்த அங்காடியில் நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.560-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று அதிகபட்சமாக ரூ.501-க்கும், குறைந்தபட்சமாக ரூ.247-க்கும், சராசரியாக ரூ.423.22-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.23 லட்சத்து 52 ஆயிரத்து 757-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

    • தர்மபுரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பகல் 11 மணிக்கு நடக்கிறது.
    • இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    தருமபுரி, 

    தருமபுரி உதவி கலெக்டர் கீதாராணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட தர்மபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம் ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

    இதன்படி இந்த மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பகல் 11 மணிக்கு நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள். எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு கேட்டு ்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த சம்பவத்திற்கு பிறகு கணவர் இறப்பிற்கு தான் காரணம் என நினைத்த மீனா மன நிலை பாதிப்படைந்தார்.
    • வீட்டில் இருந்த பேன் கொக்கியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு மீனா தற்கொலை செய்து கொண்டார்.

    காரிமங்கலம், 

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே பூனாத்தன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி மீனா (வயது36). இவர்களுக்கு 2 மகன் ஒரு மகள் உள்ளனர்.

    கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் கடந்த மாதம் கோவிந்தராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்குபோட்டு தற்கொலை செய்தார்.

    இந்த சம்பவத்திற்கு பிறகு கணவர் இறப்பிற்கு தான் காரணம் என நினைத்த மீனா மன நிலை பாதிப்படைந்தார்.

    நேற்று காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, வீட்டில் இருந்த பேன் கொக்கியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு மீனா தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பயனாளிகளின் விரல் ரேகை பதிவு சரியாக அமையவில்லை என்றால் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண் வழியாக ஒருமுறை ஓ.டி.பி. பெறப்படும்.
    • விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையுடன் தொலைபேசி இணைக்கப்பட்டிருந்தால் அந்த செல்போனை முகாமிற்கு எடுத்து வருவது விண்ணப்ப பதிவை எளிமைப்படுத்தும்

    தருமபுரி,  

    தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற முதல் கட்ட விண்ணப்பங்கள் பதிவு முகாம் கடந்த 24- ந்தேதி முதல் தொடங்கி வருகிற நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.

    இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த 28- ந்தேதி வரை 1 லட்சத்து 61 ஆயிரத்து 655 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல் கட்ட முகாமில் டோக்கனில் குறிப்பிட்ட நாளில் வராமல் விடுபட்டு இருப்பவர்கள் மற்றும் விண்ணப்பம் பெறாமல் விடுபட்ட நபர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் ஆகிய நாட்களில் நடைபெறும் விண்ணப்ப பதிவு முகாமிற்கு வந்தால் போதுமானது. இடைப்பட்ட நாட்களில் முகாமிற்கு வர தேவையில்லை.

    இந்த நிலையில் 2-ம் கட்ட விண்ணப்பங்கள் பதிவு முகாம் வருகிற 5-ந் தேதி முதல் தொடங்கி 16- ந்தேதி வரை நடைபெறுகிறது. ரேஷன் கடை பணியாளர் ஒவ்வொரு ரேஷன் கடை பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றை வீட்டில் நேரடியாக வழங்குவார். இதனிடையே தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான 2- ம் கட்ட முகாமிற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

    பொதுமக்கள் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும்.

    விண்ணப்பத்துடன் எந்த வித ஆவணங்களையும் நகலெடுத்து இணைக்க தேவையில்லை. விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும் நடைபெறும்.

    இந்த முகாமில் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும். பயனாளிகளின் விரல் ரேகை பதிவு சரியாக அமையவில்லை என்றால் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண் வழியாக ஒருமுறை ஓ.டி.பி. பெறப்படும்.விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையுடன் தொலைபேசி இணைக்கப்பட்டிருந்தால் அந்த செல்போனை முகாமிற்கு எடுத்து வருவது விண்ணப்ப பதிவை எளிமைப்படுத்தும். இந்த திட்டத்தில் பயன் பெற 21 வயது நிரம்பிய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதனுடைய தர்மபுரி நகரில் 15 ரேஷன் கடைகள் மூலம் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. அந்தந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சம்பந்தப்பட்ட ரேஷன் கடை விற்பனையாளர் நேரில் சென்று விண்ணப்பம் மற்றும் லோகங்கள் வழங்கினர்.

    இதற்கான முகாம்கள் வருகிற 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நகரில் தேர்வு செய்யப்பட்ட 15 இடங்களில் நடைபெற உள்ளது.

    • அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொருவர் தனக்கு வேண்டும் என கேட்டுள்ளார்.
    • கானாப்பட்டி கிராமத்தில் உள்ள கோவில் முன்பு தனது ஆதரவாளர்களை திரட்டி தரையில் அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

     தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் பாலவாடியில் கிராம அறங்காவலர் குழு தலைவருக்கு அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொருவர் தனக்கு வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் இவருக்கு மாவட்ட அறங்காவர் குழு தலைவர் பரிந்துரை செய்யவில்லை.

    இதையறிந்த இவர் அறங்காவலர் குழு தலைவர் பதவி தரவில்லை என தெரிந்ததும் கானாப்பட்டி கிராமத்தில் உள்ள கோவில் முன்பு தனது ஆதரவாளர்களை திரட்டி தரையில் அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அப்போது அப்பகுதியில் உள்ள ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் பரிந்துரையை மீறி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கு வேறு ஒரு நபரை பரிந்துரை செய்ததாக கூறி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் மாவட்ட அறங்காவலர் குழு தலைவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்களது உறுப்பினர் அடையாள அட்டையை ஒப்படைக்க போவதாக கூறி போராட்டம் நடத்தினர்.

    • ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • தருமபுரி குமாரசாமிப்பேட்டை கூட்டுறவு ரேஷன் கடையில் தக்காளி விற்பனையை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

    தருமபுரி,

    தமிழகம் முழுவதும் 500 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்ய தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி தருமபுரி மாவட்டத்தில் 10 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தருமபுரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை கட்டுப்பாட்டில் உள்ள தருமபுரி குமாரசாமிப்பேட்டை கூட்டுறவு ரேஷன் கடையில் தக்காளி விற்பனையை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சந்தானம், துணைப் பதிவாளர்கள் ராஜா, மதியழகன் மற்றும் கூட்டுறவு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தாளநத்தம் கிராமத்தில் இரண்டு பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • அந்த கிராமத்தில் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் வட்டாரப் பகுதியில் கடந்த மாதம் பெய்த மழை காரணமாக கொசு தொல்லை அதிகரித்து காணப்பட்டது.

    இதை அடுத்து கிராமப் பகுதிகளில் டெங்கு பரவும் சூழ்நிலை உருவாகி வருகிறது. கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாளநத்தம் கிராமத்தில் இரண்டு பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் அந்த கிராமத்தில் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு கிராமங்களிலும் டெங்கு பரவாமல் தடுக்க அந்தந்த ஊராட்சி பகுதியில் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு பணிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • தனது நண்பர் கூறிய ஆசை வார்த்தையை நம்பிய சுரேஷ் வங்கியில் இருந்து ரூ.10 லட்சம் பணத்தை எடுத்து அதனை ஒரு பையில் போட்டு வந்தார்.
    • கைதான 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே கருத்தானூரைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் சுரேஷ் (வயது31). இவர் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் சுரேஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து ஒரு வாகனத்தை விற்றுவிட்டார்.

    இதற்காக அவருக்கு ரூ.10 லட்சம் பணம் கிடைத்தது. அந்த பணத்தை தனது வங்கியில் போட்டிருந்தார்.

    இதையறிந்த அவரது நண்பர் நடூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனக்கு தெரிந்த முக்கிய பிரமுகர் ரூ.3,200 கோடிக்கு ரூ.2ஆயிரம் நோட்டுகளாக வைத்துள்ளார் என்றும், அதனை மாற்ற முடியாமல் தவித்து வருவதாகவும், அதற்காக உன்னிடம் உள்ள ரூ.10 லட்சத்தை வங்கியில் இருந்து ரூ.500 நோட்டுகளாக எடுத்து கொடுத்தால், அதற்கு பதிலாக அவர்கள் ரூ.13 லட்சத்துக்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகளாக தருவார்கள்.

    அதில் ரூ.10 லட்சத்தை எடுத்து கொண்டு மீதமுள்ள பணத்தை சரிசமமாக பிரிந்து கொள்ளலாம் என்று சுரேஷிடம் கூறினார்.

    தனது நண்பர் கூறிய ஆசை வார்த்தையை நம்பிய சுரேஷ் வங்கியில் இருந்து ரூ.10 லட்சம் பணத்தை எடுத்து அதனை ஒரு பையில் போட்டு வந்தார்.

    அந்த பணத்தை எடுத்துக்கொண்டு நேற்று சுரேஷ், அவரது தந்தை நாகராஜ், ராஜேந்திரன் ஆகிய 3 பேரும் காரில் தருமபுரியை அடுத்த நல்லம்பள்ளிக்கு வந்தனர்.

    அப்போது 3 பேரும் அந்த முக்கிய பிரமுகரின் ஏஜெண்டை தொடர்பு கொண்டனர். அவர் காரை அங்கேயே விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தான் கூறிய இடத்திற்கு வருமாறு சுரேஷிடம் கூறியுள்ளார்.

    உடனே 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏஜெண்டு கூறிய இடத்திற்கு வந்தனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் 2 பேர் கையில் பையுடன் அங்கு வந்தனர்.

    அப்போது மர்மநபர்கள் சுரேஷிடம் இருந்து பையை வாங்கி கொண்டனர். அதற்கு பதிலாக மர்மநபர்கள் கொண்டு வந்த பையை சுரேஷிடம் கொடுத்தனர்.

    உடனே மர்ம நபர்கள் சுரேஷிடம் இங்கு இருந்தால் நமக்கு ஆபத்து என்றும், உடனே இங்கிருந்து புறப்பட்டு செல்லுங்கள் என்றும் கூறியுள்ளார். அதனை நம்பிய சுரேஷ் உள்பட 3 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    அப்போது சுரேஷ் சிறிது தூரம் சென்ற பிறகு மர்மநபர்கள் கொடுத்த பையை திறந்து பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    அதில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளுக்கு பதிலாக வெள்ளைதாள்கள் பணகட்டுகளாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    உடனே திரும்பி 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று அவர்களை தேடிபார்த்தனர். அதற்குள் அந்த மர்மநபர்கள் அங்கிருந்து பணத்துடன் மாயமாகி விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து சுரேஷ் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஏரியூர் சீலநாயக்கனூரைச் சேர்ந்த முருகன் (45), அவரது நண்பர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    தொடர்ந்து கைதான 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டிராவல்ஸ் அதிபர் ரூ.13 லட்சத்திற்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகளாக கிடைக்கும் என்று ஆசைப்பட்டு ரூ.10 லட்சத்தை இழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×