என் மலர்tooltip icon

    கடலூர்

    காட்டுமன்னார்கோவில் அருகே நடந்த தீ விபத்தில் 3 ஓட்டல்கள் உள்பட 6 கடைகள் எரிந்து சேதமானது.
    காட்டுமன்னார்கோவில்:

    காட்டுமன்னார்கோவில் அருகே ஆயங்குடி கீழபஜார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் அதே பகுதியை சேர்ந்த முஜிபுர்ரகுமான் (வயது 37), ஹஜி முகமது (36), ஆரிப் (44) ஆகிய 3 பேரும் தனித்தனியே ஓட்டல்கள் நடத்தி வருகின்றனர். அதேபோல் அப்துல் மஜித் என்பவர் மோட்டார் சைக்கிள் டயர் பஞ்சர் ஒட்டும் கடையும், பரமேஸ்வரன் என்பவர் சலூன் கடையும், ஹஜ்ஜி முகமது கோழி இறைச்சி கடையும் வைத்திருந்தனர். இந்த கடைகள் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. சற்று நேரத்தில் கடைகள் முழுவதும் பற்றி எரிந்தது. இதை பார்த்ததும் அக்கம், பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. தொடர்ந்து தீ மள, மளவென பரவி வேகமாக எரிந்தது.

    பின்னர் இது பற்றி காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் 6 கடைகளும் முற்றிலும் எரிந்து சேதமானது. இதில் ஹஜ்ஜி முகமது கடையில் பெட்டிக்குள் இருந்த கோழிகள் அனைத்தும் தீயில் கருகி செத்தன. அதேபோல் ஓட்டல்கள், பஞ்சர் கடை, சலூன் கடையில் இருந்த பொருட்களும் தீயில் கருகி நாசமானது. அப்துல் மஜித் பஞ்சர் கடையில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் வீட்டு பத்திரங்கள் முற்றிலும் எரிந்து விட்டதாக தெரிவித்தார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.7 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் தீ விபத்து பற்றி அறிந்ததும் காட்டுமன்னார்கோவில் தாசில்தார் தமிழ்ச்செல்வன், ஒன்றியக்குழு தலைவர் சகதியா நிஜார்அகமது, ஊராட்சி மன்ற துணை தலைவர் நியமத்துல்லா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
    கொரோனாவால் பாதிக்கப்பட்ட நெல்லிக்குப்பம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலியானார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிவேகத்தில் உயர்ந்து வருகிறது. இதில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தடுப்பு பணியில் முன்கள பணியாளர்களாக பணிபுரிந்து வருபவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த 10 நாட்களில் மட்டும் 6 டாக்டர்கள், 16 போலீஸ்காரர்கள் உள்பட 3 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:-

    கடலூர் வில்வநகர் பகவதியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 52). இவர் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2-ந்தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அன்று முதல் நடராஜன் விடுப்பில் இருந்து வந்தார். இதற்கிடையே அவர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து இவர் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் மேல்சிகிச்சைக்காக சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை 9.30 மணி அளவில் நடராஜன் பரிதாபமாக இறந்தார். அவரின் மறைவு சக போலீசாரிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் பலியானார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடலூரில் நேற்று காலை முதல் மதியம் 1 மணி வரை வெயில் சுட்டெரித்தது. இதற்கிடையே மதியம் 1.30 மணியளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து, குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. பின்னர் 2 மணி அளவில் இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.

    நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை சுமார் ½ மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அதன் பிறகு தூறிக்கொண்டே இருந்தது. பின்னர் மழை சற்று ஓய்ந்திருந்தது. இதற்கிடையே மழை பெய்த போது பலத்த காற்று வீசியதால், காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் கடலூர் பீச்ரோட்டில் உள்ள மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதற்கிடையே மாலை 6 மணி அளவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இடைவிடாது 8 மணி வரை பெய்தது. அதன் பிறகு விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த மழை இரவு 1 மணி வரை நீடித்தது. இந்த மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது. இதேபோல் பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி, மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இந்நிலையில் மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் பலியானார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

    கடலூர் முதுநகர் அருகே உள்ள பெரியபிள்ளையார்மேடு பகுதியை சேர்ந்தவர் பாவாடைசாமி மனைவி மச்சகாந்தி (வயது 53). இவர் நேற்று மதியம் அதே பகுதியில் உள்ள தனது விளை நிலத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்த போது, இடி-மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது மின்னல் தாக்கியதில் மச்சகாந்தி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுதொடர்பாக கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    யார் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை இ-பாஸ் முறை இருந்தால்தான் கண்டறிய முடியும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    கடலூர்:

    கடலூரில் கொரோனா தடுப்பு, வளர்ச்சி பணிகள் பற்றி ஆலோசித்த பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

    * தமிழகத்தில் கொரோனாவை தடுக்க கடுமையான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது.

    * தமிழகத்தில் அதிகளவு கொரோனா பரிசோதனைகள் செய்வதன் காரணமாக தொற்று கட்டுக்குள் உள்ளது.

    * உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் கொரோனாவுக்கு ஆளாகும் நபர்கள் அச்சப்பட வேண்டாம்.

    * கடலூர் மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்திற்கும் அதிகமான காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றுள்ளன.

    * கடலூரில் கொரோனா தடுப்புக்காக 39 நடமாடும் மருத்துவக்குழுக்கள் செயல்படுகின்றன.

    * கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம் மூலம் 9,965 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    * கடலூரில் மட்டும் 3 ஆண்டுகளில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1,114 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது

    * கடலூர் மாவட்டத்தில்தான் அதிகளவு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நீட் தேர்வு, இ-பாஸ் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் கூறியதாவது:

    * மாணவர்களின் மன உளைச்சலுக்கு தீர்வு காணும் விதமாகவே தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    * கொரோனா தாக்கம் குறைந்தபின் நீட் தேர்வு நடத்துமாறு பிரதமருக்கு நான் ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளேன்.

    * யார் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை இ-பாஸ் முறை இருந்தால்தானே கண்டறிய முடியும் என்று அவர் கூறினார்.

    கட​லூர் மாவட்டத்தில் 12,514 இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நிறைவுற்ற ரூ.25.54 கோடியிலான புதிய திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ரூ.32.16 கோடியிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

    * தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    * இந்தியாவிலேயே அதிக பரிசோதனை தமிழகத்தில்தான் நடைபெறுகிறது.

    * நாள்தோறும் 300க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    * நடமாடும் பரிசோதனை மையங்கள் மூலம் நோய்த்தொற்று உடனடியாக கண்டறியப்படுகிறது .

    * மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு

    * கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதமும் தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது.

    * கட​லூர் மாவட்டத்தில் அதிக தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

    * கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.495 கோடியில் கதவணை கட்டும் பணிகள் 40% நிறைவடைந்துள்ளன.

    * கடலூர் மாவட்டத்தில் சாலை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

    * கட​லூர் மாவட்டத்தில் 12,514 இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

    * 1,554 மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    * மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.225 கோடி சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 வகுப்பில் 3,836 மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
    கடலூர்:

    கொரோனா பொதுமுடக்கத்தால் பள்ளிகள் செயல்படாத நிலையில் அரசு, அரசு நிதி உதவிப்பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையில் மாணவ-மாணவிகள் சேர்க்கை கடந்த 17-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள 790 தொடக்கப்பள்ளி, 179 நடுநிலைப் பள்ளி, 245 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இச்சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    இதில் கடந்த 24-ந் தேதி பிளஸ்-1 சேர்க்கை தொடங்கிய நிலையில், 3,836 பேர் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் அரசுப்பள்ளியில் 2,864 பேரும், அரசு நிதிஉதவிப்பெறும் பள்ளியில் 972 பேரும் சேர்ந்துள்ளனர்.

    அரசு, அரசு உதவிப்பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இதுவரையில் 1-ம் வகுப்பில் 6,904 பேரும், இரண்டாம் வகுப்பில் 465 பேரும், 3-ம் வகுப்பில் 420 பேரும், 4-ம் வகுப்பில் 390 பேரும், 5-ம் வகுப்பில் 254 பேரும், 6-ம் வகுப்பில் 452 பேரும், 7-ம் வகுப்பில் 29 பேரும், 8-ம் வகுப்பில் 11 பேரும் சேர்ந்துள்ளனர். இதேப்போன்று உயர்நிலை மற்றும் மேல்நிலை அளவிலான பள்ளிகளில் 6-ம் வகுப்பில் 3,885 பேரும், 7-ம் வகுப்பில் 127 பேரும், 8-ம் வகுப்பில் 103 பேரும், 9-ம் வகுப்பில் 2,145 பேரும், 10-ம் வகுப்பில் 21 பேரும், 11-ம் வகுப்பில் 3,836 பேரும், 12-ம் வகுப்பில் 2 பேரும் சேர்ந்துள்ளனர்.

    மேற்கண்ட தகவலை கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
    இ-பாஸ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டிசம்பர் மாதம் வரை ரேஷன் கடைகளில் இலவசமாக அனைத்து பொருட்களும் வழங்கிட வேண்டும். இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். பஸ் போக்குவரத்தை படிப்படியாக தொடங்கிட வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மத்திய அரசு ரூ.7,500 வழங்கிட வேண்டும்.

    காய்ச்சல், சளிக்கு சிகிச்சை அளிக்க கடலூர் நகரில் அனைத்து வார்டுகளிலும் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 26-ந் தேதி (அதாவது நேற்று) மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்து இருந்தனர்.

    அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று காலை 11 மணிக்கு கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மருதவாணன், நகர செயலாளர் அமர்நாத், வக்கீல் ஜோதிலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    இதேபோல் கடலூர் நகரத்தில் மேலும் 30 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்புராயன், மாவட்ட குழு உறுப்பினர் பாஸ்கரன், நகர குழு உறுப்பினர்கள் பால்கி, செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பண்ருட்டி இந்திராகாந்தி சாலையில் நகர குழு உறுப்பினர் சங்கர் தலைமையிலும், சரவணா தியேட்டர் எதிரில் நடராஜன் தலைமையிலும், அம்பேத்கர் சிலை எதிரில் ஜீவானந்தம் தலைமையிலும், சுபாஷினி மஹால் அருகில் தினேஷ் தலைமையிலும், தபால் அலுவலகம் எதிரில் ராஜேந்திரன் தலைமையிலும் ,பி.டி.எஸ். மணிநகரில் ராஜேந்திரன் தலைமையிலும், எல்.ஐ.சி. அலுவலகம் எதிரில் தேவராஜீலு தலைமையிலும், லிங்க் ரோட்டில் ஜீவா தலைமையிலும், ஹவுசிங் போர்டில் மகாலட்சுமி தலைமையிலும், பக்கிரிப்பாளையத்தில் வசந்தா தலைமையிலும், வி.ஆண்டிக்குப்பத்தில் முகமது நிஜார் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதுதவிர சிதம்பரம், விருத்தாசலம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க. பெண் எம்.எல்.ஏ. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    பண்ருட்டி:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் வரிசையாக தொற்று பாதிப்புக்கு ஆளாகினர். அவர்களுடைய குடும்பத்தில் சிலரும் பாதிக்கப்பட்டனர். பின்னர் சிகிச்சைக்கு பிறகு அனைவரும் குணம் அடைந்தனர். இதேபோல் எம்.எல்.ஏ.க்கள் குமரகுரு(உளுந்தூர்பேட்டை), செஞ்சி மஸ்தான்(செஞ்சி), வசந்தம் கார்த்திகேயன்(ரிஷிவந்தியம்), கணேசன்(திட்டக்குடி) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், அ.தி.மு.க. மகளிரணி துணை அமைப்பாளராகவும் இருப்பவர் சத்யா பன்னீர்செல்வம் (வயது 42). இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வந்தார். மேலும் கட்சி சார்பில் நடந்த ஆய்வு பணியிலும் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா அறிகுறி தென்பட்டதால், உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.

    பின்னர் அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே நேற்று வெளியான பரிசோதனை முடிவில் சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வுக்கும், அவரது குடும்பத்தினர் 3 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வும், அவரது குடும்பத்தினர் 3 பேரும், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2-வது எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் ஆவார். ஏற்கனவே தி.மு.க. எம்.எல்.ஏ. கணேசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
    விருத்தாசலம் அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ,1½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே தே.கோபுராபுரம் கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் விற்பனையாளர்களாக பழனிவேல், கிருஷ்ணமூர்த்தி, மேற்பார்வையாளராக ராமகிருஷ்ணன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். கடந்த 22-ந் தேதி கடைக்கு வந்த அவர்கள், வியாபாரத்தை முடித்து விட்டு இரவு கடையை பூட்டிச்சென்றனர்.

    நேற்று முன்தினம் தளர்வு இல்லா முழு ஊரடங்கு பின்பற்றப்பட்டதால் கடையை திறக்கவில்லை. இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவு நேரத்தில் டாஸ்மாக் கடையின் இரும்பு கதவில் உள்ள பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கடையில் 22 பெட்டிகளில் இருந்த ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர்.

    நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து, விருத்தாசலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது, டாஸ்மாக் கடையின் முன்பு காலி அட்டைபெட்டிகளும், 2 அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்களும் இருந்தன. மேலும் 200 மீட்டர் தூரத்துக்கு ஆங்காங்கே ஒரு சில மதுபாட்டில்களும் கிடந்தன. இதன் மூலம் நள்ளிரவில் மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றபோது சில மதுபாட்டில்கள் கீழே விழுந்திருப்பது தெரியவந்தது. மேலும் கடலூரில் இருந்து மோப்ப நாய் அர்ஜூன் வரவைக்கப்பட்டது. கடையில் இருந்து சிறிது தூரம் மோப்பம் பிடித்தபடி சென்ற அர்ஜூன், மீண்டும் கடைக்கு திரும்பி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கடலூரில் இருந்து தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் டாஸ்மாக் கடையில் இருந்த தடயங்களை சேகரித்தனர். இது தொடர்பாக விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    நெட்டப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் நெல்லிக்குப்பம் விவசாயி உடல் நசுங்கி செத்தார். அவரது உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    பாகூர்:

    நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் அருகே கொங்கரானூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 49). விவசாயி. இவருக்கு பானுமதி (42) என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். நேற்று காலை சக்திவேல் தனது மனைவி பானுமதியுடன் நெட்டப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    மடுகரை சாலையில் நெட்டப்பாக்கத்தை அடுத்த கல்மண்டபம் என்ற இடத்தில் தனியார் தொழிற்சாலை அருகே வந்துகொண்டிருந்தபோது, அந்த தொழிற்சாலைக்கு வந்த கண்டெய்னர் லாரி திடீரென்று இடது புறமாக திரும்பியது. இதில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் லாரி முன்பக்கம் சிக்கிய சக்திவேல், பானுமதி ஆகியோர் மீது சக்கரம் ஏறி இறங்கியது. இதை கவனிக்காமல் டிரைவர் தொடர்ந்து சென்றதால் பின்பக்க சக்கரத்தில் சக்திவேல் சிக்கி, உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். பானுமதி படுகாயம் அடைந்தார்.

    இந்த விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் படுகாயமடைந்த பானுவை மீட்டு மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்து நெட்டப்பாக்கத்தில் உள்ள சக்திவேலின் உறவினர்கள் அங்கு வந்தனர். அவர்கள் சக்திவேலின் உடலை எடுக்க விடாமல் தொழிற்சாலை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்த நெட்டப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர்கள், சக்திவேல் இறந்ததால் அவரது குடும்பம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே அவரது சாவுக்கு இழப்பீடு வழங்கவேண்டும், அவரது மகனுக்கு சம்பந்தப்பட்ட தனியார் தொழிற்சாலையில் வேலை வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இதுபற்றி தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது. இதன்பின்னர் சக்திவேலின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    முழு ஊரடங்கிலும் அரசு விதிமுறைகளை பின்பற்றி திருவந்திபுரத்தில் ஒரே நாளில் 50 திருமணங்கள் நடைபெற்றது.
    நெல்லிக்குப்பம்:

    கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் 108 வைணவ தலங்களில் ஒன்றான தேவநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெறும். தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இக்கோவில் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டு உள்ளது. இதனால் கோவில் அருகே உள்ள திருமண மண்டபங்களில் அரசு விதிமுறைப்படி திருமணங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இருப்பினும் நேற்று திருவந்திபுரம் பகுதியில் திருமண மண்டபங்கள் மற்றும் கோவில் வெளிபிரகாரத்திலும் அரசு விதிமுறைகளை பின்பற்றி 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. இந்த திருமணத்தில் மணமக்களுடன் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றிருந்ததை காணமுடிந்தது. திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகள் கோவில் முன்பு சென்று சாமி தரிசனம் செய்தனர். திருமணத்தின்போது அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா? என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆகஸ்டு மாதம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆவணி மாத சுப முகூர்த்தம் என்பதால் திருவந்திபுரத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது. ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பே நாங்கள் திருமண தேதியை குறித்து விட்டோம். எனவே அரசின் அறிவுரைப்படி தான் திருமணத்தை நடத்துகிறோம் என்று திருமண வீட்டார்கள் கூறுகின்றனர். இதனால் திருமணம் நடைபெறும்போது அரசு அறிவித்த நடைமுறையை பின்பற்றி சுப நிகழ்ச்சிகளை நடத்துகிறார்களா? என்பதை மட்டும் கண்காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் கூட்டம் அதிகமானாலும் அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தாலும் உடனடியாக எச்சரிக்கை செய்து அறிவுறுத்தி வருகிறோம் என்றார். 
    மாவட்டத்தில் விபத்தை தடுக்க 98 இடங்களில் 248 ஒளிரும் மின்விளக்குகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தெரிவித்துள்ளார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் விபத்தை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி முக்கிய இடங்களில் ஒளிரும் மின்விளக்குகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இது பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்விடம் கேட்ட போது, மாவட்டத்தில் விபத்தை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலக்கட்டத்தில் விபத்து, உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

    ஏற்கனவே விபத்து நடக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது கூடுதலாக கடலூரில் ஆல்பேட்டை, மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு, பாரதிசாலை சினிமா தியேட்டர் அருகில், மோகினி பாலம், செம்மண்டலம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், சாவடி, குட்டியாங்குப்பம், நல்லாத்தூர், சிதம்பரம் வண்டிக்கேட், புறவழிச்சாலை, வயலூர் ரோடு, சி.முட்லூர், கீரப்பாளையம் உள்பட 98 இடங்களில் மொத்தம் 248 ஒளிரும் மின்விளக்குகள் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் விபத்துகள் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது என்றார்.
    ×