என் மலர்tooltip icon

    கடலூர்

    பண்ருட்டி அருகே கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு சிற்பம் 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால சிற்பமாகும்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பைத்தாம்பாடி சத்திரம் பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், பாரதிதாசன் பல்கலைக்கழக முதுகலை வரலாறு ஆய்வு மாணவர் குமரகுரு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அப்போது சுற்றுமதில் சுவரின் வெளிபுறத்தில் கால்கள் 2-ம் மண்ணில் புதைந்த நிலையில் 5 அடி உயரம் கொண்ட விஷ்ணு சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

    இந்த விஷ்ணு சிற்பம் 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால சிற்பமாகும். இப்படைப்பு சிற்பம் நின்ற நிலையில் நான்கு கரங்களில் வலதுபுற இரு கரங்கள் உடைந்த நிலையில் உள்ளது.

    மூக்கின் பகுதி சிறிது உடைந்த நிலையில், தலையில் மணிமுடி அணிந்தவாறு உள்ளார். காதுகள் இரண்டிலும் காதணியாக மகர குண்டலம், கழுத்தில் வனமாலை, வைஜெயந்தி என்கிற இருவகை மாலைகள் உள்ளன.

    இடது கைகள் இரண்டில் ஒரு கையில் சங்கும், மற்றொரு கையை இடுப்பில் வைத்தவாறு கம்பீரமான தோற்றத்தில் உள்ளார். மார்பு பகுதி பூணூல் மற்றும் இடுப்பு நூல் அணிந்துள்ளார். இடுப்பு நூல் என்பது பூணூலிலிருந்து தனித்து நேரே உடலை ஒட்டி இடுப்பு வரை தொங்கும்.

    இடுப்பு நூல் விஷ்ணு, சிவன், பிரம்மன் ஆகியோர் சிற்பங்களில் காணலாம். இடுப்பின் மேல் உதரபந்தம் என்கிற அலங்கார அணிகலன், முன்புறத்தின் நடுவே சிங்கமுகம் உள்ளது. இடுப்பு பகுதியில் ஆடையாக கீழ்பட்டாடையும் அணிய பெற்று உள்ளது.



    விருத்தாசலம் அருகே வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி நடந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்.பி.யிடம் ஒருவர் புகார் மனு அளித்துள்ளார்.
    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த கோபாலபுரம் பகுதியை சேர்ந்த இளையராஜா (வயது 39) என்பவர், நேற்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கடந்த 2019-ம் ஆண்டு கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதிவறை எழுத்தர் காலிபணியிடத்திற்கு நானும், அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு எனது மனைவி மேகலாவும் தனித்தனியாக விண்ணப்பித்தோம். இதேபோல் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் விண்ணப்பித்து விட்டு வெளியே வரும் போது, மும்முடிசோழகன் மற்றும் வடலூர் ஆர்.சி.காலனியை சேர்ந்த 2 பேர் என்னை தொடர்பு கொண்டு, எங்களுக்கு சென்னை தலைமை செயலகத்தில் நேரடியாக வேலை வாங்கி கொடுக்க ஆட்கள் உள்ளது. அதனால் உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் அரசு வேலை வாங்கி தரவேண்டுமானால் ரூ.8 லட்சம் தரவேண்டும் என்றனர்.

    இதை நம்பிய நான், பல்வேறு தவணைகளில் ரூ.8 லட்சத்தை கொடுத்தேன். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள், வேலை வாங்கி தராமல் மோசடி செய்து விட்டனர். மேலும் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால், ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
    கடலூர் மாவட்டத்தில் கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற ஆணவக்கொலை சம்பவத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் சாதி மாறி திருமணம் செய்துகொண்ட முருகேசன்-கண்ணகி தம்பதி 2003ல் கொலை செய்யப்பட்டனர். காது மற்றும் மூக்கில் விஷத்தை ஊற்றி கொடூரமாக கொன்றதுடன், சடலங்களை எரித்துள்ளனர். 

    சாதி ஆணவத்தில் நடத்தப்பட்ட இந்த கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின. இதையடுத்து இவ்வழக்கு 2004ம் ஆண்டு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ தீவிர விசாரணை நடத்தி 15 பேரை குற்றவாளிகளாக சேர்த்தது. இந்த வழக்கு கடலூர் எஸ்சி, எஸ்டி நீதிமன்றத்தில் நடைபெற்றது. 

    வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை நிறைவடைந்த நிலையில், சிறப்பு நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். குற்றம்சாட்டப்பட்ட 15 பேரில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். 2 பேர் விடுவிக்கப்பட்டனர்.

    அதன்பின்னர் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் பிற்பகல் அறிவிக்கப்பட்டது. கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 12 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    கடலூர் மாவட்டத்தில் கடந்த 2003-ம் ஆண்டு நடந்த ஆணவக்கொலை சம்பவத்தில் 13 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் சாதி மாறி திருமணம் செய்துகொண்ட முருகேசன்-கண்ணகி தம்பதி 2003ல் கொலை செய்யப்பட்டனர். சாதி ஆணவத்தில் நடத்தப்பட்ட இந்த கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின. இதையடுத்து இவ்வழக்கு 2004ம் ஆண்டு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ தீவிர விசாரணை நடத்தி 15 பேரை குற்றவாளிகளாக சேர்த்தது. இந்த வழக்கு விசாரணை கடலூர் எஸ்சி, எஸ்டி நீதிமன்றத்தில் நடைபெற்றது. 

    வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை நிறைவடைந்த நிலையில், சிறப்பு நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். குற்றம்சாட்டப்பட்ட 15 பேரில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்.
    வேப்பூரில் தம்பதியை தாக்கி நகையை பறித்த பெண் உள்பட 2 பேர் செல்போன் சிக்னல் மூலம் போலீசில் சிக்கினர்.
    வேப்பூர்:

    வேப்பூர் அருகே உள்ள காட்டுமயிலூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பிள்ளை(வயது 74). கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி இரவு முனியப்பிள்ளை, தனது மனைவி மலருடன் வீட்டில் இருந்தார். அப்போது முகமூடி அணிந்த மர்மநபர்கள் 2 பேர் அவரது வீட்டுக்குள் புகுந்து, கணவன்-மனைவி இருவரையும் தாக்கி மலர் கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் நகை பறிக்கப்பட்ட நேரத்தின் போது முனியப்பிள்ளை வசித்த பகுதியில் இருந்து செல்போன்களில் பேசியவர்களின் எண்களை வைத்து, போலீசார் கண்காணித்தனர். இதில் ஒருவரது செல்போன் சிக்னல் வேப்பூர் பகுதியிலும், தஞ்சாவூரிலும் அடுத்தடுத்து காட்டியது. இதனால் போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த செல்போன் எண்ணை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் விருத்தாசலம் பகுதியில் அந்த செல்போன் சிக்னல் காட்டியது. உடனே போலீசார் விரைந்து சென்று சந்தேகத்தின் பேரில் விருத்தாசலம் பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தஞ்சாவூரை சேர்ந்த ரமேஷ் மனைவி பிரேமலதா(29), அவரது உறவினர் அரியலூரை சேர்ந்த மணிகண்டன்(29) என்பதும், ரமேசுடன் சேர்ந்து மலரின் நகையை அவர்கள் பறித்துச் சென்றதும், தற்போது தஞ்சாவூரில் நகையை உருக்கி, அதனை விருத்தாசலத்தில் விற்பனை செய்ய வந்ததும் தெரியவந்தது.

    மேலும் அவர்கள் 2 பேர் மீதும் அரியலூர், தஞ்சாவூர், பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிரேமலதா, மணிகண்டன் ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த 6½ பவுன் நகையை மீட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள ரமேசை வலைவீசி தேடி வருகின்றனர்.

    திருவந்திபுரத்தில் தேவநாதசுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது. அப்போது பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா“ என்ற பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர்.
    கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினந்தோறும் தேவநாத சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று காலை மற்றும் மாலையில் சூரிய பிரபை, யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கோவில் உட்புறத்தில் சாமி உலா வந்தார்.

    இந்த நிலையில் தற்போது தொற்று நோய் பரவல் காரணமாக சாமி ஊர்வலம் வெளிப்புறத்தில் நடைபெறவில்லை. மேலும் தேரோட்டமும் வெகு விமரிசையாக நடைபெற வில்லை. மாறாக நேற்று 9-ம் நாள் விழாவான பவுர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ தேவி பூதேவி சமேத தேவநாத சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி மற்றும் தேவநாதசுவாமி கோவிலுக்குள் அமைக்கப்பட்ட சிறிய தேரில் எழுந்தருளினர். அப்போது சிறிய தேரை கோவில் ஊழியர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா“ என்ற பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர். தேர் கோவில் உட்புறத்தை உலா வந்து நிலையை அடைந்தது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    கடலூர் மாவட்டத்தில் 640 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமை கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.
    கடலூர்:

    கொரோனா 3-வது அலை தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள தகுதி வாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை முழுமையான அளவில் செயல்படுத்தும் விதமாக கடந்த 12-ந்தேதி சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் 28 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து 2-வது கட்டமாக நேற்று மாபெரும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.

    கடலூர் மாவட்டத்தில் இந்த 2-வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் 640 இடங்களில் போடுவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற முகாமை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதில் வடகிருஷ்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சிவக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் அப்துல் சாதிக் பாஷா, டாக்டர்கள் முத்துக்குமரன், அருண்குமார், ராமலிங்கம், ஜெயலட்சுமி, தாசில்தார் அன்பழகன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகர், நகர செயலாளர் கந்தன், வருவாய் ஆய்வாளர் ஆதிலட்சுமி, பேரூராட்சி துப்புரவு, சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து புவனகிரி வட்டம் பி.உடையூர், குறிஞ்சிப்பாடி வட்டம் வழுதலம்பட்டு ஆகிய பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாமையும் கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்துகிறார்களா?, முகாம்களில் அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், மாவட்ட மலேரியா அலுவலர் கஜபதி, வட்டார மருத்துவ அலுவலர்கள் சிவக்குமார், அகிலா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சி அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 640 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது.
    பண்ருட்டி அருகே கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    துப்பாளையம் கிழக்கு தெரு சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 40) இவர் சென்னையில் கார் டிரைவராக இருந்தார். அவரது மனைவி நதியா. இவர்களுக்கு 2மகன், ஒருமகள் உள்ளனர்.

    கீழ்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு. பைனாஸ் தொழில் செய்து வந்தார். இவருக்கும், நதியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. அதன்பின்னர் ஜெகதீசன் வீட்டில் இல்லாத நேரத்தில் கோவிந்தராசுவும், நதியாவும் அடிக்கடி உல்லாசமாக இருந்துவந்தனர்.

    இதை அறிந்த ஜெகதீசன் அவர்கள் 2 பேரையும் கண்டித்துள்ளார். ஆனால் கோவிந்தராசுவும், நதியாவும் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கோவிந்தராசுவும், நதியாவும் அவரது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவர் ஜெகதீசனை கொலை செய்ய திட்டமிட்டார். இந்த திட்டத்தை நதியா அவரது கள்ளக்காதலன் கோவிந்தராசுவிடம் தெரிவித்துள்ளார். அவரும் இதற்கு சம்மதித்துள்ளார்.

    நேற்று காலை கணவன், மனைவிக்கும் கள்ளகாதல் விவகாரமாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. உடனே நதியா கள்ளக்காதலன் கோவிந்தராசுக்கு போன் செய்து வரவழைத்து கணவன் ஜெகதீசனை, நதியா கள்ளக்காதலனுடன் சேர்ந்து மண்வெட்டியால் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்தில் ஜெகதீசன் ரத்த வெள்ளத்தில் பிணமானார். இதனை பார்த்ததும் 2 பேரும் அங்கிருந்து தப்பினர்.

    தகவல் அறிந்ததும் பண்ருட்டி டி.எஸ்.பி. பொறுப்பு ராஜேந்திரன், பயிற்சி போலீஸ் டி.எஸ்.பி. சத்யா, காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சமேதா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஜெகதீசன் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கிருந்து தப்பமுயன்ற மனைவி நதியாவை போலீசார் கைது செய்தனர். ஆனால் கள்ளக்காதலன் கோவிந்தராசு தப்பி ஓடிவிட்டார். உடனே தனிப்படை போலீசார் விரைந்து சென்று கோவிந்தராசுவை கைது செய்தனர். 

    கடலூர் பகுதியில் பிரபல ரவுடியின் மனைவி கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 30). இவரது மனைவி காந்திமதி (வயது 27). கிருஷ்ணன், கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி இரவு தனது கூட்டாளிகள் 9 பேருடன் சேர்ந்து, திருப்பாதி ரிப்புலியூர் சுப்புராயலுநகர் பூந்தோட்ட சாலையை சேர்ந்த பிரபல ரவுடியான வீரா என்கிற வீரங்கனை தலையை துண்டித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான போலீசார், கிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரை மடக்கி பிடித்தனர். அதன் பின்னர் கிருஷ்ணன் போலீசாரிடமிருந்து தப்ப முயன்ற போது, என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    மேலும் கிருஷ்ணன் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணன் மனைவி காந்திமதி நேற்று இரவு குப்பங்குளத்தில் தனது உறவினர் ஆறுமுகம் என்பவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 3 பேர், காந்தி மதியை வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே காந்திமதி பரிதாபமாக இறந்தார்.

    கொலை சம்பவம் குறித்து அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப் புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காந்திமதியை கொலை செய்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் காந்திமதிக்கும், அதே பகுதியை சேர்ந்த அரவிந்தன் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் காந்திமதிக்கு மற்றொரு வாலிபருடனும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.

    இதுபற்றி அறிந்த அரவிந்தன் அதிர்ச்சி அடைந்து மற்றொரு நபருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதை கைவிடுமாறு பலமுறை எச்சரித்தார். ஆனால் அதனை காந்திமதி கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அரவிந்தன் காந்திமதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார்.

    அதன்படி அரவிந்தன் தனது நண்பர் ஆறுமுகம் மூலம் காந்திமதியை வீட்டில் இருந்து வெளியே வரவழைத்துள்ளார். பின்னர் காந்திமதி வீட்டில் இருந்து வெளியே வந்ததும் அரவிந்தன், தனது கூட்டாளிகள் ஆறுமுகம், சக்தி, மதன் ஆகியோருடன் சேர்ந்து காந்திமதியை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

    இதற்கிடையே கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் மற்றும் போலீசார் கொலை சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் தலைமறைவாக இருந்த அரவிந்தன் உள்ளிட்ட 4 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து அந்தபகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். 

    கடலூரில் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடியின் மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளத்தை சேர்ந்தவர் முருகன் மகன் கிருஷ்ணன்(வயது 30). இவருடைய மனைவி காந்திமதி(27). கிருஷ்ணன், கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி இரவு தனது கூட்டாளிகள் 9 பேருடன் சேர்ந்து, சுப்புராயலுநகர் பூந்தோட்ட சாலையை சேர்ந்த கனகராஜ் மகன் பிரபல ரவுடியான வீரா என்கிற வீராங்கன் என்பவரை தலையை துண்டித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினார். இதுபற்றி அறிந்த புதுப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான போலீசார், கிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரை மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அவர்களை திருப்பாதிரிப்புலியூர் போலீசில் ஒப்படைத்து விட்டு, கிருஷ்ணனை மட்டும் மற்ற கொலையாளிகள் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டுவதற்காக அழைத்து சென்றனர். அப்போது கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தீபனை கழுத்தை அறுத்துவிட்டு தப்ப முயன்ற போது, என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணனின் கூட்டாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

    இந்தநிலையில் கிருஷ்ணன் மனைவி காந்திமதி நேற்று இரவு 8.30 மணி அளவில் குப்பங்குளத்தில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 3 பேர், காந்திமதியை வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரா கொலை வழக்கு தொடர்பாக அவரது கூட்டாளிகள் யாரேனும் காந்திமதியை வெட்டி கொன்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து குப்பங்குளம் பகுதியில் பதற்றம் நிலவுவதால் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த மாதம் முழு கொள்ளளவை எட்டியதால் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும்.

    இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஏரிக்கு மேட்டூர் அணை, பருவ காலங்களில் பெய்யும் மழை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். இந்த ஆண்டு போதுமான தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்ததால் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி பாசனத்துக்கு திறக்கப்பட்டது.

    இந்த தண்ணீர் கொள்ளிடம் ஆறு வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து வீராணம் ஏரி நிரப்பப்பட்டது. கடந்த மாதம் முழு கொள்ளளவை எட்டியதால் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    நேற்று காலை வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47.45 அடியாக இருந்தது. அது இன்று காலை 45.30 அடியாக குறைந்தது. பாசனத்துக்கு 312 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

    சென்னை மாநகர் குடிநீர் தேவைக்காக 61 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது. வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக 96 கனஅடி நீரும், வி.என்.ஆர். மதகு வழியாக 187 கனஅடி நீரும், சி.எஸ்.ஆர். மதகு வழியாக 283 கனஅடி நீரும், கே.கே.எம்.மதகு வழியாக 43 கனஅடி நீரும் ஆக மொத்தம் 609 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது.

    வீராணம் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை பெய்யவில்லை. ஆனால், வெளிப்புற பகுதிகளில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி தட்டாஞ்சாவடி சரஸ்வதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜன் (வயது 45). இவர் பண்ருட்டி அருகே திருவாமூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    தர்மராஜனின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இதையடுத்து பிரசவத்துக்காக அவரது தாய் வீட்டிற்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில் நேற்று இரவு தர்மராஜன் தனது வீட்டை பூட்டி விட்டு அவரது மனைவியை பார்க்கச் சென்றார்.

    இதை நோட்டமிட்ட மர்மமனிதர்கள் சிலர் நள்ளிரவில் தர்மராஜனின் வீட்டுக்கு வந்தனர். பின்னர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அவர்கள் அதில் இருந்த நகை- பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இன்று காலை வீட்டுக்கு வந்த தர்மராஜன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. உடனே அவர் பீரோ இருந்த அறைக்கு சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை-பணம் கொள்ளை போய் இருந்தது.

    இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். கடலூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வீடு புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×