என் மலர்tooltip icon

    கடலூர்

    கோடை வெயில் நேரத்தில் அக்னி நட்சத்திர மழை பொழிந்ததால் தற்போது வெப்பத்தின் கோரத்தாண்டவம் குறைந்துள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 48 ஆண்டுகால இல்லாத வரலாற்றில் கொட்டி தீர்த்தது. இதனால் தென்பெண்ணை, கெடிலம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதன் காரணமாக ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களில் வெள்ளநீர் புகுந்து விளைநிலங்களை மூழ்கடித்தது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இருந்தாலும் விவசாயிகள் தங்களது சொந்த செலவில் சமபடுத்தி தற்போது விவசாயத்தை தொடங்கியுள்ளனர். ஆனால், கடந்த சில நாட்களாக வெயில் வறுத்தெடுத்து வருகிறது.

    அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால், அதற்கு எதிர்மறைபோல் கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதனால் கோடை வெப்பம் தணிந்துள்ளது. கடலூர் நகர் முழுவதும் பகல் நேரத்திலும் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. கோடை வெயில் நேரத்தில் அக்னி நட்சத்திர மழை பொழிந்ததால் தற்போது வெப்பத்தின் கோரத்தாண்டவம் குறைந்துள்ளது.

    பண்ருட்டி அருகே மரத்தின் நடுவில் குலை தள்ளிய அதிசய வாழையை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே பனப்பாக்கத்தில் விவசாயி ஒருவர் வீட்டின் தோட்டத்தில் வாழை மரங்கள் வளர்த்து வருகிறார். இதில் ஆறடி உயரம் வளர்ந்த பூவன் வகையை சேர்ந்த ஒரு வாழைமரத்தில் 3 அடி உயரத்திற்கு மரத்தின்நடுப்பகுதியில் கடந்த மாதம்குலை தள்ளியது. பின்னர் பூவில் இருந்து காய்கள் காய்த்து தற்போது வாழைத்தாராக வருகிறது.

    பொதுவாக வாழை மரங்கள்மேற்பகுதியில் இலைகளுக்கு இடையே இருந்தே குலைதள்ளுவது வழக்கம். ஆனால் மரத்தின் இடையே குலை தள்ளிய இந்த அதிசய வாழையை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

    கடலூர் தாழங்குடாவில் மீனவர் வீட்டில் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் சரகம் தாழங்குடா மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. மீனவர். இவர் தற்போது வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். அவரது மனைவி சோனியா தனியாக வசித்து வருகிறார்.

    கடந்த 11ந் தேதி சோனியாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே சிகிச்சைக்காக புதுவையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சோனியா சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் மீனவர்வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

    மாலை நேரம் சோனியா வீடு திரும்பினார். கதவை திறந்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    மேலும் வீட்டில் இருந்த டெலிவிசனை கொள்ளையர்கள் திருடி சென்றதோடு வீட்டில் இருந்த ஆதார் கார்டு, ரேசன் கார்டு ஆகியவற்றை கிழித்து எறிந்துள்ளனர்.

    இதுகுறித்து சோனியா தேவனாம்பட்டினம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் பற்றி துப்புதுலக்க மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது.

    தடயவியல் நிபுணர்களும் ரேகைகளை பதிவு செய்து கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்கி வருகிறார்கள்.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையை சேர்ந்தவர் வெங்கடேசன். அவரது மனைவி ரஞ்சினி (வயது 22). இவர்கள் 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர்.

    ஆரம்பத்தில் இனிதாக சென்ற இவர்களது வாழ்க்கையில் நாளடைவில் புயல் வீச தொடங்கியது. ஏனென்றால் வெங்கடேசன் குடிபழக்கத்துக்கு அடிமையானார். நாள்தோறும் குடித்துவிட்டு ரஞ்சினியிடம் தகராறு செய்து வந்தார்.

    இதுபற்றி அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தார்கள். ஆனாலும் இந்த பிரச்சினை தீரவில்லை. தொடர்ந்து வெங்கடேசன் குடிபோதையில் வந்ததால் ரஞ்சினி தற்கொலை செய்துகொள்வது என முடிவு செய்தார்.

    அதன்படி நேற்று ரஞ்சினி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பண்ருட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். ரஞ்சினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    ஜிப்மரில் நடத்தப்பட்ட சோதனையில் வாசுதேவனுக்கு "தசை அழற்சி நோய்" என தெரிய வந்துள்ளது. தன்னுடைய 2 குழந்தைகளை விட்டுவிட்டு கணவருக்காக 7 மாதமாக மருத்துவமனையிலேயே மகேஸ்வரி தங்கியுள்ளார்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி.

    இவரது கணவர் வாசுதேவன். ஸ்பதியான இவருக்கு கடந்த ஜூன் மாதம் திடீரென கைகால் இழுத்தது. இதனையடுத்து கணவருக்கு வந்த நோயை சரிபடுத்த மகேஸ்வரி பல டாக்டரிடம் அழைத்து சென்றும் பயனில்லை.

    வாசுதேவனால் மீண்டும் எழுந்து நடமாடவில்லை. இதனால் மகேஸ்வரி ஜிப்மர் மருத்துவமனையில் கணவர் வாசுதேவனை சேர்த்தார். கடந்த 7 மாதங்களாக ஐ.சி.யூ. பிரிவில் வாசுதேவன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஆரம்பத்தில் மருத்துவமனைக்கு வந்து சென்ற உறவினர்கள் நாட்கள், மாதங்களாக வருகை குறைந்தது. அதன் பிறகு அவ்வப்போது வந்து சென்ற உறவினர்கள் 6 மாதங்களை கடந்த நிலையில் வருகையை முற்றிலுமாக நிறுத்தி விட்டனர்.

    இதனிடையே, ஜிப்மரில் நடத்தப்பட்ட சோதனையில் வாசுதேவனுக்கு "தசை அழற்சி நோய்" என தெரிய வந்துள்ளது. தன்னுடைய 2 குழந்தைகளை விட்டுவிட்டு கணவருக்காக 7 மாதமாக மருத்துவமனையிலேயே மகேஸ்வரி தங்கியுள்ளார்.

    குழந்தைகளை உறவினர்கள் சிலர் கவனித்து வந்தனர். நாட்கள் செல்ல செல்ல குழந்தைகளை கவனிக்கவும் ஆளில்லை. சமீப காலமாக மகேஸ்லரி தங்கியுள்ள தெருவாசிகள் குழந்தைகளுக்கு சாப்பாடு அளித்து வருகின்றனர்.

    தமிழக அரசு தனது குடும்பத்திற்கு உதவ வேண்டும் என மகேஸ்வரி கோரிக்கை வைத்துள்ளார். அவர் கூறியதாவது:-

    என்னிடமிருந்த பணம் அனைத்தையும் செலவிட்டு விட்டேன். குழந்தைகள் கல்வி செலவிற்கும், உணவுக்கும் கூட தற்போது பணம் இல்லை. ஜிப்மரில் கணவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்தாலும் உடலில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு மேல் சிகிச்சைக்கு உதவிட வேண்டும். எனது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். டாக்டர்களும் உறவினர்களும் போதிய அளவில் உதவிகளை செய்தும் பயனில்லை.

    பெரிய பணக்காரர்களுக்கு வரவேண்டிய நோய் எனது கணவருக்கு வந்துள்ளது. கணவரை காப்பாற்ற அனைத்து நகை மற்றும் பணத்தை செலவிட்டும் அவர் உடல்நலம் பெறவில்லை. இதற்கு மேல் சமாளிக்க முடியாமல் தனியாளாக போராடுகிறேன்.

    இவ்வாறு மகேஸ்வரி கூறினார்.
    கடலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளான நெல்லிக்குப்பம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, அண்ணாமலைநகர் போன்ற பல்வேறு பகுதிகளில் இந்த மழை பெய்தது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் கடந்த வாரத்தில் தெற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அசானி புயலாக மாறியது.

    இந்நிலையில்  அசானி புயல் நேற்றுமுன்தினம் அமைதியான முறையில் கரையை கடந்தது. மே 3-ந் தேதி தொடங்கிய அக்னி  நட்சத்திர வெயிலின் தாக்கத்தினால் மக்கள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்த நிலையில் வங்கக்கடலில் உருவான இந்த அசானி புயலின் தாக்கத்தினால் பல்வேறு இடங்களில் மழை பெய்ய தொடங்கியது.

    இந்த மழை ஓரிரு நாட்கள் விட்டுவிட்டு  பெய்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. மேலும் நேற்று மாலை வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசி வந்த நிலையில் இரவு முழுவதும் பலத்த மழை பெய்து வந்தது.

    மேலும் இரவில் பலத்த மழை பெய்ததால் எல்லா இடங்களிலும் குளிர் சூழ்ந்தது. கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் கடலூர் மற்றும் கடலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளான நெல்லிக்குப்பம், பண்ருட்டி,வேப்பூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், சேத்தியாதோப்பு சிதம்பரம், அண்ணாமலைநகர் போன்ற பல்வேறு பகுதிகளில் இந்த மழை பெய்தது.

    தற்போது பெய்த மழையின் அளவு மி.மீ பின்வருமாறு:-

    வேப்பூர் - 75.0, காட்டுமயிலூர் - 70.0, பண்ருட்டி - 32.0, லக்கூர் - 28.0, எஸ்.ஆர்.சி.குடிதாங்கி - 25.0, மீ-மாத்தூர் - 25.0, ஆட்சியர் அலுவலகம் - 20.6,விருத்தாசலம் - 20.0, வானமாதேவி - 17.0 ,குப்பநத்தம் - 15.2, குறிஞ்சிப்பாடி - 12.0, கடலூர் - 11.2, தொழுதூர் - 10.0, கீழச்செருவாய் - 9.0, சேத்தியாதோப்பு - 6.0, கொத்தவாச்சேரி - 5.0, சிதம்பரம் - 2.8, பெல்லாந்துறை - 2.4, அண்ணாமலைநகர் - 2.0, புவனகிரி - 2.0, பரங்கிப்பேட்டை -1.2என மொத்தம் 397.40 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கோழிக்குஞ்சு வியாபாரிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே  சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்த கோழிக்குஞ்சு வியாபாரிகள் தேவநாதன், அய்யனார் உள்ளிட்ட 20 பேர் கோழிக்குஞ்சு வியாபாரத்திற்காக  தஞ்சைக்கு சென்றிருந்தனர்.

    வியாபாரம் முடித்து விட்டு வழக்கமாக சாலை ஓரத்தில் உள்ள மூடி இருக்கும் கடைகளின்முன்பு தூங்குவது வழக்கம்.

    அதன்படி  தஞ்சாவூரில், பட்டுக்கோட்டை-மன்னார்குடி பைபாஸ் பாலத்தின் கீழ், கீழவச்சான் சாவடி என்ற இடத்தில் இரவு தூங்கி உள்ளனர். நள்ளிரவில்  அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் அங்கு வந்தனர். அவர்கள் வீச்சரிவாள் வைத்திருந்தனர்.

    பின்னர் மர்மநபர்கள் கத்தியைகாட்டி கோழி வியாபாரிகள்  தேவநாதன், அய்யனார் ஆகியோரை மிரட்டி அவர்களிடமிருந்த பணம், செல்போன், துணிப்பை அனைத்தையும் பறித்து  சென்றனர்.

    இவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகருகே படுத்து தூங்கிய மற்றவர்கள் ஓடி வருவதற்குள் மர்மஆசாமி கள் தப்பி ஓடினர்.  இதனால் அங்கு சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.

    இது பற்றி கீழவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு  கேமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தற்போது மீன்பிடி தடைகாலம் உள்ளதாலும், கடலில் சீற்றம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை.
    கடலூர்:

    இலங்கை முழுவதும் வன்முறைக்களமாக காட்சி அளித்து வரும் நிலையில் தேச விரோத சக்திகள் ஊடுருவலை தடுக்க கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்த தமிழக காவல் துறை, பாதுகாப்பு குழுமத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

    இலங்கையில் இருந்து தப்பிய கைதிகள் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்பு உள்ளது. மேலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், போதைப் பொருள் கும்பல் கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைய வாய்ப்பு உள்ளது. இதனால் இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்த தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

    இந்த நிலையில் கடலோர காவல்துறை இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் கடலோர காவல்படை போலீசார் கடலூர், சிதம்பரம், புதுச்சேரி எல்லை பகுதி மரக்காணம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் தீவிரமாக படகுகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் தற்போது மீன்பிடி தடைகாலம் உள்ளதாலும், கடலில் சீற்றம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் சந்தேகப்படும்படியான படகுகளில் நபர்கள் யாரேனும் கடல் வழியாக வருகை தந்தால் கடலோர மீனவ கிராமத்தில் வசிக்கும் மீனவர்கள் உடனடியாக கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் கடலோர காவல் படையினர் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் படங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    கடலூர் அருகே கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், தனியார் நிலத்தை கையகப்படுத்தி தங்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என கூறினர்.
    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள கோண்டூர் பனங்காட்டு காலனி பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலம் உள்ளது.

    அந்த நிலத்தை ஆதிதிராவிடர் நலத்துறையினர் கையகப்படுத்தி அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு அந்த தனியார் நிலத்தின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கிடையே அந்த பகுதியில் வசிக்கும் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அந்த நிலத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.

    தொடர்ந்து இன்று காலை அந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் அந்த தனியார் நிலத்திற்குள் நுழைந்து ஏராளமான கூடாரங்களை அமைத்தனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

    தகவலறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதற்கிடையே கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்தார். தொடர்ந்து அவர் சற்றும் எதிர்பாராதவிதமாக மண்எண்ணெயை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே போலீசார் அந்தப் பெண்ணிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கினர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர்கள் இந்த தனியார் நிலத்தை கையகப்படுத்தி தங்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என கூறினர். தொடர்ந்து தாசில்தார் பூபால சந்திரன் தலைமயில் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கூட்டத்தில் உள்ள 5 பெண்கள் தங்கள் கைகளில் மண்எண்ணெய் மற்றும் பெட்ரோல் கேனுடன் இருப்பதால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.

    சிதம்பரம் அருகே திருட்டை தடுக்க முயன்ற போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. 2,800 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஆலைக்கான கட்டுமான பணி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

    இதற்காக அங்கு பெரிய இரும்பு தளவாடங்கள், காப்பர் கம்பிகள் ஆலை வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தது. கட்டுமான பணிகள் நடந்து வந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டு தானே புயல் வீசியதில் கட்டிடங்கள் சேதமானது.

    அதன் பின்னர் அந்த கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டது. எனினும் இந்த தொழிற்சாலையில் இரும்பு பொருட்கள், காப்பர் கம்பிகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அப்படியே வைக்கப்பட்டிருந்தது. இதனை காவலாளிகள் இரவு பகல் பாராமல் கண்காணித்து வந்தனர்.

    கடந்த மாதம் 24ந் தேதி 50க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் ஆலைக்குள் புகுந்து இரும்பு தளவாடி பொருட்கள் காப்பர் கம்பிகளை திருடினர். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது.

    கொள்ளையர்கள் விட்டு சென்ற 2 சரக்கு வாகனங்கள், 26 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் கூடுதல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் டிரோன் கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டது.

    நேற்று அதிகாலையில் ஆலை கண்காணிப்பாளர் ரவி தலைமையில் காவலாளிகள் பணியில் இருந்தனர். அப்போது ஏதோ பொருட்கள் விழும் சத்தம் கேட்டது. உஷாரான காவலாளிகள் அங்கு சென்று பார்த்தபோது. 50க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் ஆலை வளாகத்தில் திருடிகொண்டிருந்தனர். உடனடியாக காவலாளிகள் புதுசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர். ஆலையில் திருடிய கொள்ளையர்களை போலீசார் பிடிக்க சென்றபோது அவர்கள் புதருக்குள் புகுந்தனர். என்றாலும் போலீசார் அவர்களை துரத்தி சென்றனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள் போலீசார் மீது 6 பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் 3 பெட்ரோல் குண்டுகள் வெடித்து சிதறியது. மீதமுள்ள 3 குண்டுகள் வெடிக்கவில்லை.

    போலீசார் சுதாரித்துக்கொண்டு விலகியதால் அவர்கள் காயமின்றி தப்பினர். எனினும் கொள்ளையர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். இதுபற்றி அறிந்த சிதம்பரம் போலீஸ் டி.எஸ்.பி. ரமேஷ், புதுசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினிதா மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர்.

    வெடிக்காத குண்டுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வுக்கு அனுப்பினர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    இதன் விளைவாக இன்று அதிகாலை இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் பெயர் விபரங்களை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர். இதில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.


    கடலூர் மாவட்ட வருவாய் அலுவலரும் கூடுதல் ஆட்சியருமான ரஞ்ஜீத்சிங் பண்ருட்டி நகராட்சி விழமங்கலம், ஆண்டிக்குப்பம் பகுதியிலுள்ள நியாயவிலை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்ட வருவாய் அலுவலரும் கூடுதல் ஆட்சியருமான ரஞ்ஜீத்சிங் பண்ருட்டி நகராட்சி விழமங்கலம், ஆண்டிக்குப்பம் பகுதியிலுள்ள நியாயவிலை கடைகள், அங்கன்வாடி மையங்கள், நகராட்சி அலுவலகம், நகர ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது தாசில்தார் சிவா. கார்த்திகேயன், மண்டல தாசில்தார் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் கொளஞ்சி மற்றும் கிராம நிர்வாக அதிகாரி உடனிருந்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
    கடலூர்:

    தெற்கு வங்கக்கடலில் உருவான அசானி தீவிர புயலால் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து இந்த அசானி தீவிர புயல் ஆந்திரா-ஒடிசா இடையே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த சூழலில் இந்தப் புயல் இன்று வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து இன்று காலை முதல் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது. மேலும் நேற்று நண்பகல் முதல் கடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டது.

    குறிப்பாக தாழங்குடா பகுதியில் கடல் அலை 20 முதல் 30 அடி உயரத்திற்கு எழுந்தது. இதன் காரணமாக கடற்கரை பகுதியில் உள்ள சில தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தன. தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள சூழலில் தற்போது கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டு வருவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் கடலூரில் உள்ள தாழங்குடா, தேவனாம்பட்டினம், துறைமுகம் பகுதி மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் தங்கள் வீடுகளில் முடங்கினர்.

    மேலும் பைபர் படகு மற்றும் கட்டுமர படகுகளும் கடலுக்கு செல்லாததால் அவை அனைத்தும் கடற்கரையோரம் உள்ள பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாததால் அவர்கள் தங்கள் வலைகளை பின்னும் வேலையிலும் படகுகளை சீர் செய்யும் வேலையிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ×