என் மலர்
கோயம்புத்தூர்
- மேட்டுப்பாளையம் நகராட்சியில் தினசரி குப்பைகள் 10 டன்னிற்கு அதிகமாக குவிந்து வருகின்றன.
- தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயினால் புகை மூட்டத்தை கட்டுப்படுத்த கோரி அ.தி.மு.க வார்டு உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் இறங்கியதால் பதற்றம் நிலவியது.
மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு வெளியூர், உள்ளூர் பஸ் நிலையம், வங்கிகள், குடியிருப்புகள், உருளைக்கிழங்கு மண்டிகள், பழைய இரும்பு குடோன்கள். காய்கறி சந்தைகள் உள்ளிட்டவைகள் உள்ளன. இதனால் மேட்டுப்பாளையம் நகராட்சியில் தினசரி குப்பைகள் குறைந்தது 10 டன்னிற்கு அதிகமாக குவிந்து வருகின்றன. இந்த குப்பைகள் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரித்து சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் நேஷனல் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டு வருகிறது. இங்கிருந்து குப்பை கழிவுகள் தரம் பிரித்து அதனை உரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வருதவால் குப்பை மேடுகளில் திடீரென தீப்பற்றி எரிந்து புகை மூட்டமாக இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக சுற்று வட்டார கிராம மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் இதுவரை அதனை அணைக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபடவில்லை என கூறப்பட்டது. இதனிடையே மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட அ.தி.மு.க வார்டு உறுப்பினர்கள் 9 பேர் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கிற்கு சென்று அதனை அணைக்க வேண்டும் என புகார் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு நகராட்சி ஆணையாளர் வினோத், சுகாதார ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான அதிகாரிகள் நேரில் வந்து குப்பை மேட்டில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ ஏ.கே.செல்வராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இதுபோல் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார். இதனால் சுற்று வட்டார கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.
- ஆரோக்கியராஜா ஆடுகளை தேடி கொண்டு இருந்த போது 30 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார்.
- மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை பன்னிமடை அருகே உள்ள தென்றல் நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய ராஜா (வயது 45). ஐ.டி. ஊழியர். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.
சம்பவத்தன்று ஆரோக்கிய ராஜா குன்னூரில் உள்ள தனது அக்கா மகள் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றார். செல்லும் வழியில் அவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது மாமா ஜார்ஜ் பாலன் என்பவரது வீட்டிற்கு சென்றார்.
அவர் வளர்த்து வரும் ஆடுகள் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. எனவே ஆடுகளை தேடி ஜார்ஜ் பாலன் வெளியே சென்றார். அவருடன் ஆரோக்கிய ராஜாவும் சென்றார். கல்லாறு ரெயில்வே பாலத்தில் ஆடுகளை தேடி கொண்டு இருந்த போது 30 அடி பள்ளத்தில் ஆரோக்கிய ராஜா தவறி விழுந்தார்.
இதில் அவரது விலா எலும்பு உடைந்தது. உயிருக்கு போராடிய ஆரோக்கிய ராஜாவை அவரது மாமா மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஆரோக்கிய ராஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ஆயர் டேவிட் பர்ணபாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
- மாநகரின் முக்கிய பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கோவை
ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் நிகழ்வை ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். நேற்று இரவு ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி கோவை மாநகரில் உள்ள காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயம், உப்பிலிபாளையம் இம்மானுவேல் ஆலயம், டவுன்ஹால் புனித மைக்கேல் ஆலயம், திருச்சி ரோடு கிறிஸ்துநாதர் ஆலயம், புலியகுளம் அந்தோணியார் ஆலயம் உள்பட கிறிஸ்தவ தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது.
இந்த திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.
ஈஸ்டர் பண்டிகையையொட்டி கோவை காந்திபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ஆயர் டேவிட் பர்ணபாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. திருப்பலியின் போது ஏசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நிகழ்வு தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களது ஈஸ்டர் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.
ஈஸ்டர் பண்டிகையை யொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க அனைத்து ஆலயங்கள் முன்பும் மாநகரின் முக்கிய பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- சுயநினைவை இழந்த அவர் என்ன நடந்தது என்று தெரியாமல் செயினை கழற்றி கொடுத்துள்ளார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாந்திரீகம் செய்வதாக கூறி மூதாட்டியை சுயநினைவு இழக்க செய்து பணம் மற்றும் செயினை பறித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி.
இவரது மனைவி மரகதம் (வயது 60). இவர் தனது வீட்டின் அருகே காய்கறி மற்றும் பழ வியாபாரம் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று மரகதம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அங்கு வந்தார். அவர் மரகதத்திடம் வீட்டில் தோஷம் இருப்பதாக தெரிவித்தார். மேலும் மாந்திரீகம் செய்தால் தோஷம் நீங்குவதுடன், வியாபாரத்தில் பண வரவு கூடும் என ஆசை வார்த்தை கூறினார்.
இதனை உண்மை என நம்பிய அவர் அந்த வாலிபரை மாந்திரீகம் செய்து தருமாறு வீட்டிற்குள் அழைத்து சென்றார். வீட்டிற்குள் சென்றதும் அந்த வாலிபர் மாந்திரீகம் செய்வதாக கூறி ஏதோ வசிய மருந்தை மரகத்தின் நெற்றில் தேய்த்து உள்ளார்.
சிறிது நேரத்தில் அவர் சுய நினைவை இழந்தார். அப்போது அந்த வாலிபர் மரகதம் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க செயினை கழற்றி கொடுக்குமாறு கூறினார். சுயநினைவை இழந்த அவர் என்ன நடந்தது என்று தெரியாமல் செயினை கழற்றி கொடுத்துள்ளார். பின்னர் பீரோவில் வைத்து இருந்த ரூ.25 ஆயிரம் பணத்தையும் அந்த வாலிபரிடம் எடுத்து கொடுத்து உள்ளார். செயின் மற்றும் பணத்துடன் அந்த வாலிபர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
சிறிது நேரத்துக்கு பின்னர் மரகதத்தின் கணவர் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் தனது மனைவி சுயநினைவு இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். முகத்தில் தண்ணீர் தெளித்த பின்னர் மரகதம் சுயநினைவுக்கு வந்தார். பின்னர் அவர் தனது கணவரிடம் நடத்த சம்பவங்களை கூறினார்.
இது குறித்து அவர் வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாந்திரீகம் செய்வதாக கூறி மூதாட்டியை சுயநினைவு இழக்க செய்து பணம் மற்றும் செயினை பறித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- செல்வராஜ் வலது கையில் பாம்பு கடித்து விட்டது.
- கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கிணத்துக்கடவு அருகே சோலவம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(55).கூலி தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் தனது வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வலது கையில் பாம்பு கடித்து விட்டது. இதனையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
- ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை,
கோவை கள்ளிபாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் ஒடிசாவை சேர்ந்த தனபதான் (வயது28) என்பதும், அன்னூர் அருகே கணேசபுரத்தில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்வதும் தெரியவந்தது.மேலும் இவர் ஒடிசாவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சாவை வாங்கி வந்து கள்ளிபாளையம் பகுதியில் விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி ெஜயிலில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- நாகராஜ் குடிபோதையில் சங்கனூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- உயிருக்கு போராடிய நாகராஜை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை,
கோவை ரத்தினபுரி அருகே உள்ள பூந்தோட்டத்தை சேர்ந்தவர் நாகராஜ்(வயது45). வெல்டர்.
இவர் இன்று காலை குடிபோதையில் சங்கனூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நாகராஜ் அங்கு கடந்த பீர் பாட்டிலை உடைத்து தனக்குத்தானே தனது கழுத்தை அறுத்துக் கொண்டார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை தடுக்க முயன்றனர். அதற்குள் நாகராஜ் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அங்கு இருந்தவர்கள் இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய நாகராஜ் மேட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவுகள் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர் இது குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் குடிபோதையில் பீர் பாட்டிலால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- முருகேசன் நதியாவுடன் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்து விட்டார்.
- ரேஸ்கோர்ஸ் போலீசார் நதியா மற்றும் அவரது மகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை பாப்பநாயக்கன்பாளையம் அம்மன் குளத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது42). தனியார் ஆஸ்பத்திரி ஊழியர்.
இவருக்கு நதியா(37) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்தநிலையில், கணவன் -மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபா டுஏற்பட்டது. இதன் காரணமாக முருகேசன் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நதியா தனது கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். அதற்கு முருகேசன் மறுப்பு தெரிவித்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த நதியா தனது மகனை அழைத்து கொண்டு நேற்று முன்தினம் முருகேசன் வீட்டுக்கு சென்றார். அவரை தன்னுடன் சேர்ந்து வாழ அழைத்தாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த நதியா தனது மகனுடன் சேர்ந்து உருட்டுக்கட்டையால் முருகேசனை தாக்கினர்.
பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து சென்றனர். தாக்குதலில் காயமடைந்த முருகேசனை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து முருகேசன் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், சேர்ந்து வாழ மறுத்த கணவரை தாக்கிய மனைவி நதியா மற்றும் அவரது மகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.1.5 லட்சம் செலவில் 11 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
- டி.எஸ்.பி. நமச்சிவாயம் ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
கோவை,
கோவை பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் தனியார் பங்களிப்புடன் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம் மற்றும் இன்ஸ்பெக்ட்டர் தாமோதரன் ஆகியோர் பல்வேறு முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்களை அமைத்து வருகின்றனர்.
கண்காணிப்பு காமிராக்களின் இயக்கங்கள் அனைத்தும் பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள திருமலை நாயக்கன்பாளையத்தில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் தனியார் பங்களிப்புடன் ரூ.1.5 லட்சம் செலவில் 11 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழாவில் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி. நமச்சிவாயம் கலந்து கொண்டு 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களை ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
கண்காணிப்பு காமிராக்கள் அமைத்துக் கொடுத்தவர்களுக்கு சால்வை அணிவித்து பா ாட்டு தெரிவிக்கப்பட்டது.
அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் பேசும்போது, பல லட்சம் மதிப்பில் வீடுகளை கட்டுவோர் குற்ற நட டிக்கைகளை தடுக்கும் விதமாக சில ஆயிரம் மதிப்பில் கண்காணிப்பு காமிராக்களையும் பொருத்த வேண்டும்.
இதன் மூலம் குற்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்றார்.
- தந்தை மகன் இருவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு இருவரும் குடிபோதையில் இருந்தனர்.
- கோவில்பாளையம் போலீசார் குருநாதனை கைது செய்தனர்.
கோவை,
கோவை கீரணத்தம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கர்ணன் (வயது50). இவர் தனியார் நிறுவனத்தில் தோட்டப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் குருநாதன் (25). இவருக்கு திருமணமாகி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று தந்தை மகன் இருவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு இருவரும் குடிபோதையில் இருந்தனர். இந்நிலையில் கர்ணன் தனது மகனிடம், மனைவியுடன் சேர்ந்து வாழும்படியும், வேலைக்கு செல்லும்படியும் அறிவுறுத்தியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
இதில் கோபமடைந்த கர்ணன் அவரது மகனை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குருநாதன், அவரது தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டி, அருகில் இருந்த அரிவாள் மனையை எடுத்து தலை, முகம் மற்றும் பல இடங்களில் வெட்டினார். இதனையடுத்து அவரது அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர் காயம் அடைந்த அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அவர் கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று குருநாதனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- செல்போனில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இருந்தது தெரியவந்தது.
- செல்போனில் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை காட்டி பெண்களை மிரட்டி வந்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை:
கோவை பாப்பநாயக்கன்பாளையம் நேதாஜி நகரை சேர்ந்தவர் ராமு(வயது41).
இவர் தனது வீட்டு அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இங்கு சவுரிபாளையம் அண்ணாமலை நகரை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தனது நண்பர்களுடன் ஜெராக்ஸ் எடுக்க சென்றார்.
அப்போது ராமு தனது கடைக்கு வந்த ஒரு இளம்பெண்ணை அவருக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்ததார்.
இதனை பார்த்த கல்லூரி மாணவர் ராமுவை கண்டித்து, அவரது செல்போனை வாங்கி பார்த்தார். அப்போது, அவரது செல்போனில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இருந்தது தெரியவந்தது.
மேலும் ஏராளமான ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களும் இருந்தது. இதனை பார்த்ததும் கல்லூரி மாணவரும், அவரது நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தார்.
இதற்கிடையே ராமு அங்கு இருந்து தப்பி செல்ல முயன்றார். உடனடியாக கல்லூரி மாணவர் நண்பர்களுடன் சேர்ந்து அவரை மடக்கி பிடித்து தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அங்கு இருந்தவர்கள் ராமுவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கல்லூரி மாணவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ராமு மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் அவர் செல்போனில் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை காட்டி பெண்களை மிரட்டி வந்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர். அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்த போது, அதில் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது.
இந்நிலையில், ராமுவும் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், நான் கடையில் இருந்த போது 2 பேர் கடைக்கு வந்தனர்.
அவர்கள் எனது செல்போனில் கல்லூரி மாணவிகளின் வீடியோக்கள் இருப்பதாகவும், அதனை சோதனை செய்ய வேண்டும் என கூறி செல்போனை கேட்டனர். கொடுக்க மறுத்ததால் அவர்கள் என்னை தகாத வார்த்தைகளால் பேசி செல்போனை பறித்தனர்.
அவர்கள் தாக்கியதில் நான் கீழே விழுந்ததில் எனக்கு காயம் ஏற்பட்டது. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் தெரிவித்திருந்தார்.
அதன்பேரிலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பஸ்களில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
- தானியங்கி அறிவிப்பு ஆடியோ கருவி கோவையில் இயங்கும் டவுன் பஸ்களில் பொருத்தப்பட்டுள்ளது.
கோவை:
கோவையில் 675 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
இதில் பெரும்பாலான பஸ்கள் தாழ்தள சொகுசு பஸ்களாகும். இந்த பஸ்களில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
வழக்கமாக பஸ்களில் பயணிகள் ஏறவும், பயணிகள் பஸ்சை விட்டு இறங்கும் பொழுதும் கண்டக்டர்கள் விசில் ஊதுவார்கள்.
கண்டக்டர் விசில் ஊதியவுடன் பஸ்சை டிரைவர்கள் நிறுத்தி விடுவார். அதன்பின்னர் பயணிகள் இறங்குவதும், ஏறுவதும் வழக்கத்தில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காவும், கண்டக்டர்களின் வேலைப்பளுவை குறைக்கவும், டவுன் பஸ்களில் தானியங்கி அறிவிப்பு ஆடியோ கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தானியங்கி அறிவிப்பு ஆடியோ கருவி கோவையில் இயங்கும் டவுன் பஸ்களில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி பஸ் நிறுத்தம் நெருங்கும் போது, பஸ் நிறுத்தத்தின் பெயரை அறிவிக்கிறது.
பஸ் புறப்பட்டவுடன், அடுத்து வரும் பஸ் நிறுத்தத்தின் பெயரை அறிவித்து இறங்கும் பயணிகளை தயார்படுத்துகிறது. இதனால் கண்டக்டரின் விசிலுக்கு வேலை இல்லை. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் முக்கிய நகரங்களில் ஓடும் டவுன் பஸ்களில் இந்த ஆடியோ அறிவிப்பு கருவி பொருத்தப் பட்டுள்ளது. கோவையில் 35 டவுன் பஸ்களில் சோதனை முறையில் பொருத்தி இருக்கிறோம்.
பயணிகளுக்கு இந்த கருவி எந்தளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு மேலும் அதிகரிக்கப்படும் என்றனர்.






