என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை
    • தக்காளியின் விலை ஆப்பிள்களுக்கு நிகராக இருப்பதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கோவை,

    சென்னை, கோவை உள்பட தமிழகம் முழுவதும் தக்காளி விலை கிலோ ரூ.100-ஆக அதிகரித்துள்ளது.

    கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் எம்.ஜி.ஆர். மொத்த காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கர்நாடகா, கோலார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தினமும் தக்காளி வரத்து இருக்கிறது.

    இங்கிருந்து, மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரங்களில் தினமும் 300 டன் அளவிற்கு இருந்த தக்காளி வரத்தானது தற்போது 40 டன் அளவில் உள்ளது. இதனால், 25 கிலோ உள்ள ஒரு பெட்டி ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதன் காரணமாக கடைகளில், சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.100-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கடந்த வாரங்களில் கோவையில் இயங்கி வரும் வாரச்சந்தைகளில் ஒன்றரை கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தினமும் பயன்படுத்தும் உணவில் தக்காளியின் தேவை இருப்பதால், அத்தியாவசிய பொருளாக தக்காளி பார்க்கப்படுகிறது.

    இதன் விலை ஆப்பிள்களுக்கு நிகராக இருப்பதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், ஓட்டல்களிலும் சாம்பார், ரசம் போன்றவற்றில் தக்காளி பயன்பாட்டை குறைத்துள்ளனர். வடை கடைகளில் பெரும்பாலும் தக்காளி சட்னி தான் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தனர். தற்போது தக்காளி விலை உயர்வால் தக்காளி சட்னியை நிறுத்தி விட்டு தேங்காய், வெங்காய சட்னிக்கு மாறி உள்ளனர்.

    தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.

    அதன்படி, மொத்த விலையில் இஞ்சி கிலோ ரூ.230, பச்சை மிளகாய் கிலோ ரூ.120, பீன்ஸ் கிலோ ரூ.100, கேரட் ரூ.80, சேனை கிலோ ரூ.60-க்கு, சின்ன வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உருளை, பெரிய வெங்காயம், பூசணி, கோஸ் உள்ளிட்ட காய்கறிகளை தவிர மற்ற அனைத்து காய்கறிகளும் மொத்த விலையில் கிலோ ரூ.50-க்கு மேல் விற்பனையாகி வருகிறது.

    இதில், உருளைக்கிழங்கு, கோஸ் தலா கிலோ ரூ.40 வரையும், பெரிய வெங்காயம், பூசணி ஆகியவை ரூ.15 முதல் ரூ.20-க்கும் விற்பனையாகிறது. மேலும், பருவ மழை பெய்து வருவதால் அடுத்த நாட்களுக்கு தக்காளி உள்ளிட்ட காய்கறி விலையின் உயர்வானது தொடரும் வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, தக்காளி விலை இன்னும் உயர வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்த 50 நாட்களுக்கு குறைய வாய்ப்பு இல்லை எனவும் கூறுகின்றனர்.

    இது குறித்து தியாகி குமரன் மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், பருவமழை, உற்பத்தி பாதிப்பு, வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களினால் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

    எம்.ஜி.ஆர். மார்க்கெட்டிற்கு தினமும் 300 டன் தக்காளி வரத்து இருந்த நிலையில், தற்போது 40 டன் வரத்து தான் உள்ளது. இதனால், விலை உயர்ந்துள்ளது. இதேபோல் இஞ்சி, பச்சை மிளகாய், பீன்ஸ், கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.

    மழையால் அனைத்து காய்கறிகளின் வரத்தும் குறைந்துள்ளது. எனவே, இந்த விலை உயர்வு அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும். இதில், தக்காளியின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது. இந்த விலை உயர்வால் விவசாயிகளுக்கு லாபம் இல்லை என்றார்.

    • ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தையை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே கரியாம்பாளையம் கிராமத்தில் உள்ள முட்புதருக்குள் நேற்று அதிகாலை குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு பிறந்து சிலமணி நேரங்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை கிடந்தது.

    இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தனபால், ராஜசேகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முட்புதரில் சிக்கி கிடந்த குழந்தையை பார்த்தனர். இதில் அந்த குழந்தைக்கு உடலில் ஆங்காங்கே சிராய்ப்பு காயங்கள் இருப்பது தெரியவந்தது.

    எனவே ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தையை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் குழந்தைக்கு உடல்எடை மிகவும் குறைவாக இருப்பது தெரிய வந்தது. எனவே அந்த குழந்தை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு டாக்டர்கள் தற்போது தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    அன்னூரில் குடியிருப்பு நிறைந்த பகுதியில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் சிசு முட்புதருக்குள் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்காதலில் குழந்தை பிறந்ததால் குழந்தை முட்புதரில் வீசுப்பட்டதா? அல்லது பெண் குழந்தை பிறந்ததால் பெற்றோர் விரக்தியில் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்டனரா? என்று தெரியவில்லை. இதுகுறித்து அன்னூர் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 26-ந்தேதி கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின.
    • பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    கோவை,

    கோவை பீளமேடு, முல்லை நகரில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி கடந்த 26-ந்தேதி கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. காந்தி மாநகரில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

    தொடர்ந்து நேற்றுகாலை 8.30 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, மண்டப அர்ச்சனை, மகாதீபாராதனை, மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாகபூஜை, திரவியஹோமம், கோபுர கலசங்கள் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது

    இன்று காலை 7 மணிக்கு 4-ம் கால யாக பூஜை, திரவியஹோமம், திருக்குடங்கள் புறப்பாடு, காலை 9-30 மணியில்இருந்து 10.30 மணிக்குள் சிவஸ்ரீ சிவமணி சிவாச்சாரியார் தலைமையில் மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.

    ஜெகதீஷ்வர சிவாச்சாரியார் மற்றும் குழுவினர் வேதசிவ ஆகம முறைப்படி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்கள். தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், ஊர் பொதுமக்களும் செய்துள்ளனர்.

    • வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்த பின்னரும் சிலருக்கு இழப்பீடு வழங்கப்பட்டும், வழங்கப்படாமலும் உள்ளது
    • 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இப்பேரணியில் கலந்துகொண்டனர்.

    கோவை,

    விவசாயிகள் சங்கத்தினர் (சாதி, மதம் கட்சி சார்பற்றது) விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் மணி மற்றும் மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி ஆகியோர் தலைமையில் சிவானந்தா காலனியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக வந்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உள்ள கோரிக்கை பெட்டியில் மனு அளித்தனர்.

    அப்போது விவசாயிகள் சங்க (சாதி, மதம், கட்சி சார்பற்றது) பொதுச் செயலாளர் கந்தசாமி கூறியதாவது:-

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் கடந்த 1980-ம் ஆண்டு வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு வீட்டை கட்டி தர வேண்டும் என்ற நல்ல நோக்கில் விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டது.

    இதற்காக கோவையில் வீரகேரளம், வடவள்ளி, வெள்ளக்கிணறு, கணபதி தெலுங்குபாளையம், காளப்பட்டி, விளாங்குறிச்சி மற்றும் சவுரிபாளையம் பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் வீட்டு வசதி திட்டம் செயல்படுத்த முன்மொழிவு செய்யப்பட்டது. வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்த பின்னரும் சிலருக்கு இழப்பீடு வழங்கப்பட்டும், வழங்கப்படாமலும் உள்ளது.இதனால் பல கிராமங்களில் விவசாயிகள், பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நில கையகப்படுத்தும் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்பேரணியில் ஒருங்கிணைப்பாளர் மணி, பொருளாளர் சண்முகம், செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  

    • இப்பொருட்காட்சியில் 33 அரசு துறை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
    • ரூ.30 லட்சத்து 69 ஆயிரத்து 160 அரசுக்கு வருவாய் வரப்பெற்றுள்ளது.

    கோவை,

    கோவை சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் கடந்த மே 13-ந் தேதி முதல் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசு பொருட்காட்சி நடந்து வந்தது. இப்பொருட்காட்சியானது தொடர்ந்து நடைபெற்று நேற்றுடன் நிறைவு பெற்றது.

    ஒவ்வொரு துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் இத்திட்டங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினை அணுகி அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி அரங்குகள் இடம் பெற்றிருந்தன.

    இப்பொருட்காட்சியில் 27 அரசு துறை அரங்குகளும், 6 அரசு சார்பு நிறுவனங்கள் என மொத்தம் 33 அரசு துறை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அரசின் திட்டங்கள் மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களும் இப்பொருட்காட்சியில் இடம் பெற்றிருந்தன. அரசு பொருட்காட்சியை காண வந்த பெரியவர்களுக்கு ரூ.15-ம், சிறியவர்களுக்கு ரூ.10-ம் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டது.

    நேற்று வரை நடந்த அரசு பொருட்காட்சியை 1 லட்சத்து 77 ஆயிரத்து 742 பெரியவர்களும், 40 ஆயிரத்து 303 சிறியவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 45 பேர் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் நுைழவுக்கட்டணமாக ரூ.30 லட்சத்து 69 ஆயிரத்து 160 அரசுக்கு வருவாய் வரப்பெற்றுள்ளது.

    இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

    • மேம்பாலம் சுமார் ரூ.41.83 கோடி மதிப்பில் 658 மீட்டர் தூரத்தில் நான்கு வழி பாதையாக அமைக்கப்பட்டது.
    • வருகிற ஜூலை 1-ந் தேதி மேம்பாலத்தில் வாகனங்கள் சென்று வர திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கவுண்டம்பாளையம்,

    கோவை கவுண்டம்பாளையம் அடுத்துள்ள ஜி.என்.மில்ஸ் மேம்பாலம் பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் டெண்டர் வெளியிடப்பட்டு தொடங்கப்பட்டது.

    இந்த மேம்பாலம் சுமார் ரூ.41.83 கோடி மதிப்பில் 658 மீட்டர் தூரத்தில் நான்கு வழி பாதையாக அமைக்கப்பட்டது. கொரோனா நோய் பரவல் தீவிரமாக இருந்த நிலையில் மேம்பால பணிகள் நிறுத்தப்பட்டு அதன்பிறகு தொடங்கப்பட்டது.

    தற்போது மேம்பால பணிகள் கிட்டத்தட்ட 99 சதவீதம் நிறைவடைந்து விட்டது. வருகிற ஜூலை 1-ந் தேதி மேம்பாலத்தில் வாகனங்கள் சென்று வர திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்காக சோதனை ஓட்டம் நடத்த தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டனர். இன்று காலை 10 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சோதனை ஓட்டத்திற்காக மேம்பாலத்தை திறந்துவிட்டனர். தற்போது மேம்பாலத்தில் ஏறி வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இன்னும் 2 அல்லது 3 நாட்கள் சோதனை ஓட்டம் இருப்பதால் காலையில் இருந்து மாலை வரை இந்த மேம்பாலத்தில் ஏறி சென்று வரலாம். மேம்பால மின்சார கம்பங்கள், சென்டர் மீடியன் வேலை, பெயிண்ட் வேலை இரவில் செய்யப்படுவதால் இந்த மேம்பால வழி தற்காலிகாமாக இரவில் இருக்காது என்று தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேம்பாலம் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் இந்த பாதையில் இனி நெருக்கடி, போக்குவரத்து நெரிசல் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. கணபதி, சரவணம்பட்டி பகுதியில் இருந்து இந்த வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.

    மேலும் கணுவாய் , – ஆனைக்கட்டி சாலையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையை அதாவது ஜி.என்.மில்ஸ் பாலத்தை கடந்து சத்தி சாலைக்கு செல்லமுடியும் என்பதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருந்துகொண்டே இருந்தது. தற்பொது மேம்பாலம் பணிகள் முடிவுற்றதால் கோவையில் இருந்து துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஊட்டி, கோத்தகிரி, குன்னூருக்கு சென்று வர இனி எளிதாக இருக்கும் என்று கோயமுத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தினர் தெரிவித்தனர்.

    • படுகாயமடைந்தவர்களை மீட்டு கோவை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • கிழக்கு போக்கு வரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    திருப்பூர் மாவட்டம் கே.ஆர். லேஅவுட்டை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 57). இவர் பில்டிங் காண்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் கோவை அவினாசி ரோட்டில் பாஸ்போர்ட் ஆபிஸ் அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் உதயகுமார் மீது மோதியது. இதில் அவருக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. மொபட் மீது மோதியதில் கார் நிலை தடுமாறி அருகில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது.

    இதில் காரை ஓட்டி வந்த திருப்பூரை சேர்ந்த முருகானந்தம் (61) தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காரில் இருந்த மற்ற 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு கோவை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து முருகானந்தத்தை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் கிழக்கு போக்கு வரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆட்டோ டிரைவர் பிரகாஷ் என்பவர் குடிபோதையில் பெண்களை தகாத வார்த்தைகளால் பேசியபடி சென்றார்.
    • தனலட்சுமி பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் ரோடு பெரியார் காலனியை சேர்ந்தவர் சசி. இவரது மனைவி தனலட்சுமி (வயது 37). கூலித் தொழிலாளி.

    சம்பவத்தன்று இவரது வீட்டின் அருகே வசிக்கும் ஆட்டோ டிரைவர் பிரகாஷ் (37) என்பவர் குடிபோதையில் அந்த பகுதியில் உள்ள பெண்களை தகாத வார்த்தைகளால் பேசியபடி சென்றார்.

    இதனை பார்த்த தனலட்சுமி ஏன் இவ்வாறு பேசி செல்கிறீர்கள் என கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் அவரையும் தகாத வார்த்தைகளால் பேசி விட்டு சென்றார். பின்னர் அவர் அந்த வழியாக வேலை முடிந்து நடந்து வந்த தனலட்சுமியின் கணவர் சசியை வழிமறித்து உனது மனைவியை ஒழுங்காக வைத்து கொள். இல்லை என்றால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி அவரையும் தாக்கி விட்டு சென்றார்.

    இது குறித்து தனலட்சுமி பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடி போதையில் பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி அவரது கணவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் பிரகாஷை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • போலீசார் ஒத்தகால்மண்டபம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.
    • விசாரணையில் ஒத்தகால்மண்டபத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் 160 கிலோ இரும்பு கம்பிகளை திருடி வந்தது தெரியவந்தது.

    கோவை,

    கோவை செட்டிப்பாளையம் போலீசார் ஒத்தகால்மண்டபம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது 5 பெண்கள் உள்பட 6 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் லோடு ஆட்டோவை சோதனை செய்தனர். அப்போது இந்த கும்பல் ஒத்தகால்மண்டபத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் 160 கிலோ இரும்பு கம்பிகளை திருடி வந்தது தெரியவந்தது.

    பின்னர் போலீசார் 6 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இது குறித்து போலீசார் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மின்வாரிய அலுவலகத்தில் உதவி என்ஜினீயராக பணியாற்றும் சதீஸ்குமார் என்பவர் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்து புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் கைது செய்யப்பட்ட 6 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் பழவாஞ்சிபாளையத்தை சேர்ந்த டிரைவர் முத்துகுமார் (வயது 25), அதே பகுதியை சேர்ந்த தேவி (29), சந்தியா (25), பிரியா (24), ஜோதி (25) என்பது தெரியவந்தது.

    பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட 5 பெண்கள் உள்பட 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • இளம்பெண்ணின் பெற்றோர் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர்.

    கோவை,

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சென்னியாண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் தெக்கலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இவருக்கு கும்பகோணத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தங்களை பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில் இளம்பெண் இருந்தார்.

    சம்பவத்தன்று அவர் உடல்நிலை சரி இல்லை என கூறி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இளம்பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். மகள் வீட்டில் இல்லாதது கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

    அவர்கள் இளம்பெண்ணை அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோர் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடியை சேர்ந்தவர் 23 வயது பட்டதாரி இளம்பெண். இவர் உடுமலையை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் மாயமானார். அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோர் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண் அவரது காதலனுடன் சென்றது தெரியவந்தது. போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

    • இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 3 வழித்தடங்ளில் செயல்படுத்தப்படுகிறது.
    • ஜூலை 15-க்குள் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்க தீவிரம்

    ேகாவை,

    கோவை, மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து ஆய்வு நடைபெறும் நிலையில், வருகிற ஜூலை 15-ம் தேதிக்குள் விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மொத்தம் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரெயில் சேவை பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 3 வழித்தடங்ளில் செயல்படுத்தப்படுகிறது.

    இதேபோல கோவை மதுரை உள்பட 4 நகரங்களில் மெட்ேரா ரெயில் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. அதிலும், கோவை, மதுரையில் முறையே ரூ.9,000 கோடி, ரூ.8,500 கோடி என ரூ.17,500 கோடி மதிப்பீட்டில் மெட்ேரா ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து, இந்த இரு நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்துவற்காக ஆலோசனை நடைபெற்றது. தொடர்ந்து, விரிவான திட்ட அறிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள நடவடிக்ைக எடுக்கப்பட்டது. தற்போது, இந்த ஆய்வு பணி தீவிரமாக நடைபெறுகிறது.

    இதற்கிடையே, சென்னையில் இருந்து கோவை, மதுரை ஆகிய நகரங்களுக்கு மெட்ரோ ரெயில் நிறுவன உயர் அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிப்பது தொடர்பாக ஆலோசித்து உள்ளனர்.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையை தொடர்ந்து, மதுரை மற்றும் கோவையிலும் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

    எங்கெல்லாம் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைகின்றன. பஸ் ரெயில் நிலையங்கள் இணைப்பு பகுதிகள், பயணிகள் அதிகமாக இருக்கும் இடங்களில் பெரிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைப்பது குறித்து கடந்த இரண்டு நாள்களாக கோவையில் ஆய்வு நடைபெறுகிறது.

    விரிவான திட்ட அறிக்கையை வருகிற ஜூலை 15-ந் தேதிக்குள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரெயில் நிலைய வகை, செலவுகள், செயல்படுத்தப்படும் முறை, மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைவிடங்கள் உள்பட பல்வேறு விவரங்கள் இதில் இடம்பெறும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 2021-ல், மருதமலையில் ‘லிப்ட்’ அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.
    • 2024 ஜூன் மாதத்துக்குள் பணியை முடிக்க கால நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

    வடவள்ளி,

    முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மலை மீதுள்ள இந்த கோவிலுக்கு, 'பார்க்கிங்' வரை வாகனங்களில் செல்லலாம். அதன்பிறகு படிக்கட்டுகள் வழியாக ஏறிச் சென்று தான் சுவாமி தரிசனம் செய்ய முடியும்.

    இங்கு வரும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் படிக்கட்டில் ஏறுவதற்கு சிரமமாக உள்ளது. இதனால், 'லிப்ட்' அல்லது நகரும் படிக்கட்டுகள் அமைக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து 2021-ல், மருதமலையில் 'லிப்ட்' அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்கு பின், திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம், ரூ.5.20 கோடி மதிப்பில், 'லிப்ட்' அமைக்கும் பணியை, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து லிப்ட் அமைக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டு உள்ளது. 2024 ஜூன் மாதத்துக்குள் பணியை முடிக்க கால நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

    இந்து சமய அறநிலையத்துறை துணை கமிஷனர் ஹர்ஷினி கூறுகையில். "மருதமலையில் ராஜகோபுரம் அருகில் 'லிப்ட்' அமைக்கப்படுகிறது. பாறைகள் உள்ளதால், 'கெமிக்கல்' செலுத்தி வெட்டி எடுக்கப்படுகின்றன.

    பணிகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுகின்றன," என்றார்.

    ×