என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் தக்காளி பயன்பாட்டை குறைத்த ஓட்டல்கள்
- தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை
- தக்காளியின் விலை ஆப்பிள்களுக்கு நிகராக இருப்பதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை,
சென்னை, கோவை உள்பட தமிழகம் முழுவதும் தக்காளி விலை கிலோ ரூ.100-ஆக அதிகரித்துள்ளது.
கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் எம்.ஜி.ஆர். மொத்த காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கர்நாடகா, கோலார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தினமும் தக்காளி வரத்து இருக்கிறது.
இங்கிருந்து, மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரங்களில் தினமும் 300 டன் அளவிற்கு இருந்த தக்காளி வரத்தானது தற்போது 40 டன் அளவில் உள்ளது. இதனால், 25 கிலோ உள்ள ஒரு பெட்டி ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன் காரணமாக கடைகளில், சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.100-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கடந்த வாரங்களில் கோவையில் இயங்கி வரும் வாரச்சந்தைகளில் ஒன்றரை கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தினமும் பயன்படுத்தும் உணவில் தக்காளியின் தேவை இருப்பதால், அத்தியாவசிய பொருளாக தக்காளி பார்க்கப்படுகிறது.
இதன் விலை ஆப்பிள்களுக்கு நிகராக இருப்பதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், ஓட்டல்களிலும் சாம்பார், ரசம் போன்றவற்றில் தக்காளி பயன்பாட்டை குறைத்துள்ளனர். வடை கடைகளில் பெரும்பாலும் தக்காளி சட்னி தான் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தனர். தற்போது தக்காளி விலை உயர்வால் தக்காளி சட்னியை நிறுத்தி விட்டு தேங்காய், வெங்காய சட்னிக்கு மாறி உள்ளனர்.
தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.
அதன்படி, மொத்த விலையில் இஞ்சி கிலோ ரூ.230, பச்சை மிளகாய் கிலோ ரூ.120, பீன்ஸ் கிலோ ரூ.100, கேரட் ரூ.80, சேனை கிலோ ரூ.60-க்கு, சின்ன வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உருளை, பெரிய வெங்காயம், பூசணி, கோஸ் உள்ளிட்ட காய்கறிகளை தவிர மற்ற அனைத்து காய்கறிகளும் மொத்த விலையில் கிலோ ரூ.50-க்கு மேல் விற்பனையாகி வருகிறது.
இதில், உருளைக்கிழங்கு, கோஸ் தலா கிலோ ரூ.40 வரையும், பெரிய வெங்காயம், பூசணி ஆகியவை ரூ.15 முதல் ரூ.20-க்கும் விற்பனையாகிறது. மேலும், பருவ மழை பெய்து வருவதால் அடுத்த நாட்களுக்கு தக்காளி உள்ளிட்ட காய்கறி விலையின் உயர்வானது தொடரும் வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, தக்காளி விலை இன்னும் உயர வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்த 50 நாட்களுக்கு குறைய வாய்ப்பு இல்லை எனவும் கூறுகின்றனர்.
இது குறித்து தியாகி குமரன் மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், பருவமழை, உற்பத்தி பாதிப்பு, வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களினால் தக்காளி விலை உயர்ந்துள்ளது.
எம்.ஜி.ஆர். மார்க்கெட்டிற்கு தினமும் 300 டன் தக்காளி வரத்து இருந்த நிலையில், தற்போது 40 டன் வரத்து தான் உள்ளது. இதனால், விலை உயர்ந்துள்ளது. இதேபோல் இஞ்சி, பச்சை மிளகாய், பீன்ஸ், கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.
மழையால் அனைத்து காய்கறிகளின் வரத்தும் குறைந்துள்ளது. எனவே, இந்த விலை உயர்வு அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும். இதில், தக்காளியின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது. இந்த விலை உயர்வால் விவசாயிகளுக்கு லாபம் இல்லை என்றார்.






