என் மலர்
கோயம்புத்தூர்
- கேரளாவில் இருந்து புறப்பட ஆலோசனை.
- கொங்கு மண்டலத்தை சேர்ந்த பக்தர்கள் மத்தியில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ேகாவை,
கோவையில் இருந்து திருப்பதிக்கு வாரந்தோறும் 3 நாட்களில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இது கொங்கு மாவட்டத்தை சேர்ந்த பயணிகளுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. எனவே அந்த நாட்களில் 500-க்கும் மேற்பட்டோர் இன்டர்சிட்டி ரெயிலில் முன்பதிவு சென்று பயணம் சென்று திரும்புகின்றனர்.
கோவை-திருப்பதி ரெயிலில் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்வதால், அந்த ரெயிலில் சீட் கிடைப்பது என்பது பெரும்பாடாக உள்ளது. எனவே திருப்பதிக்கு மேலும் சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று கொங்கு மண்டல பக்தர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இந்த நிலையில் கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து கோவை வழியாக திருப்பதிக்கு வாரம் இருமுறை சிறப்பு ரெயில் ஒன்றை இயக்குவது என்று தென்னக ரெயில்வே முடிவு செய்து உள்ளது. இதற்கு மத்திய ரெயில்வே வாரியமும் ஒப்புதல் அளித்து உள்ளது.
அதன்படி 21 பெட்டிகளுடன் கூடிய அந்த சிறப்பு ரெயில் கொல்லத்தில் இருந்து புதன், சனிக்கிழமைகளில் மதியம் புறப்பட்டு, கோவைக்கு மாலை 6 மணிக்கு வரும். அடுத்த நாள் அதிகாலை 3.20 மணிக்கு திருப்பதி செல்லும்.
அதேபோல மறுமார்க்கத்தில் திருப்பதியில் இருந்து செவ்வாய், வெள்ளி கிழமைகளில் மதியம் 2.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், அன்றைய தினம் இரவு 10 மணிக்கு கோவை வந்தடையும்.
கொல்லம்-திருப்பதி இடையேயான சிறப்பு ரெயில் மாவேலிக்கரை, சங்கனாச்சேரி, காயங்குளம், செங்கனூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் சித்தூரில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து கோவை வழியாக மேலும் ஒரு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது, கொங்கு மண்டலத்தை சேர்ந்த பக்தர்கள் மத்தியில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- வலசைப்பாதையில் மாற்றம் தென்படும்போது யானைகள் ஆக்ரோஷம் அடைகின்றன.
- 2022 ஜனவரி முதல் 2023 ஜூன் மாதம் வரை கிட்டத்தட்ட 7566 தடவைகள் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி உள்ளன
கோவை,
கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் யானைகள் வாழ்வியல் தொடர்பான மாநாடு நடந்தது. இதில் வனத்துறை அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் வனவியல் வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது, வழித்தட பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, யானைகள் வரத்தை முன்கூட்டியே கண்டறிந்து பொதுமக்களுக்கு அறிவிப்புகள் வெளியிடுவது, ஊருக்குள் நுழைவதை தடுப்பது, வனவிலங்கு-மனிதர்கள் மோதலுக்கு நிரந்தர தீர்வு காணுவது ஆகியவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
முன்னதாக கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் யானைகளின் நடமாட்டம், மனிதர்களின் உயிர்ப்பலி ஆகியவை தொடர்பாக காட்ட இலாகா சார்பில் ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ள விவரங்கள் குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை வனச்சரகத்தில் மட்டும் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 11 ஆண்டுகளில் காட்டு யானைகள் மிதித்து 147 பேர் பலியாகி உள்ளனர். அதிலும் குறிப்பாக காட்டுக்குள் சென்ற 45 பேரை யானைகள் மிதித்து கொன்று உள்ளன.
கோவை மண்டல வனச்சரகத்துக்கு உட்பட்ட போளுவம்பட்டியில் மட்டும் அதிகபட்சமாக 46 பேர் காட்டு யானைகளுக்கு பலியாகி உள்ளனர்.
இதேபோல கோவை சரகத்தில் 36 பேர், பெரிய நாயக்கன் பாளையத்தில் 23 பேர், மேட்டுப்பாளையத்தில் 10 பேர், சிறுமுகையில் 14 பேர், காரமடையில் 8 பேர், மதுக்கரையில் 11 பேர் என்று காட்டு யானைக்கு பலியானோர் பட்டியல் நீண்டு வருகிறது.
கேரளாவின் அடர்ந்த வனப்பகுதிகளில் வசிக்கும் காட்டு யானைகள், காலநிலைக்கு ஏற்ப வாழ்விடத்தை மாற்றிக்கொள்ளும் தன்மை படைத்தவை.
அதாவது கேரளாவில் கனமழை பெய்தால், அவை தமிழகம்-கர்நாடக வனப்பகுதிக்கு வந்து விடும். அதேபோல தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கினால் யானைகள் மீண்டும் கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள காட்டுப்பகுதிகளுக்கு சென்று விடும்.
காட்டு யானைகளின் போக்குவரத்தில் வலசைப்பாதை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்வழியாக மட்டுமே அவை தற்காலிக வாழ்விடங்களை தேடி சென்று மீண்டும் திரும்பும்.
அவற்றுக்கான வலசைப்பாதையில் மாற்றம் தென்படும்போது யானைகள் ஆக்ரோஷம் அடைகின்றன. எனவே அவை உடனடியாக வலசைப்பாதையை மீட்கும் பணியில் ஈடுபட ஆயத்தப்படுகிறது.
இதன்காரணமாக தான் அங்கு மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதுவும்த விர இன்றைக்கு காட்டு யானைகளுக்கான வலசை பாதைகளில் பெரும்பா லானவை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்றன. எனவே அந்த பகுதிகளில் மனித உயிர்ப்பலிகளை தவிர்க்க முடிவது இல்லை.
அதுவும்தவிர காட்டு யானைகளின் வசிப்பிடம் தற்போது நாளுக்கு நாள் சுருங்கி கொண்டே வருகிறது. எனவே அவை பல்வேறு வனவிலங்குகளுக்கு மத்தியில் நெருக்கடிகளுடன் வசிக்க நேரிடுகிறது.
அப்போது காட்டு யானைகளுக்கு பிற விலங்குகளால் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதன் காரணமாகவும் அவை வனப்பகுதியில் இருந்து வெளியேறி மனிதர்களின் வசிப்பிட பகுதிகளுக்குள் சென்று விடுகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் இருந்து காட்டு யானைகள் கோவை வனச்சரகம் வழியாக சத்தியமங்கலம் சென்று அதன்பிறகு கேரளாவுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளன.
அப்படி அவை செல்லும்போது கோவை வனச்சரகத்தில் வாளையாறு, போளு வாம்பட்டி, ஆனைக்கட்டி, கோபிநாரி, ஹீலிக்கல், ஜாகனாரி, நீலகிரி, சோளக்கரை, சிங்கபதி மற்றும் இருட்டுப்பள்ளம் ஆகிய பகுதிகளில் சில நாட்கள் தங்கியிருந்து இளைப்பாறும்.
அப்போது அங்கு மனிதர்கள் நுழை யும்போது காட்டு யானைகள் ஆக்ரோஷம் அடைந்து தாக்குதலில் ஈடுபடுகின்றன.
இதன் காரணமாக அங்கு உயிர்ப்பலி நேரிடுகிறது.
கோவை வனச்சரகத்தில் மட்டும் கடந்த 2022 ஜனவரி முதல் 2023 ஜூன் மாதம் வரை கிட்டத்தட்ட 7566 தடவைகள் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி உள்ளன என்று யானைகள் வாழ்விட மாநாட்டில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநரும், வன பாதுகாவலருமான ராமசுப்பிரமணியன் கூறுகையில், யானைகளின் நடமாட்டத்தை பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் கண்காணிக்க வேண்டியது அவசியம். இதனை கருத்தில் கொண்டு கோவை வனச்சரக பகுதியில் இரவு நேர கண்காணிப்பு பணிகளு க்ககான குழுக்களை ஏற்படுத்தி உள்ளோம். இதன்காரணமாக எங்கள் பகுதியில் காட்டு யானைகள்-மனித மோதலை பெருமளவில் தவிர்த்து வருகிறோம் என்று குறிப்பிட்டு உள்ளார்.
+2
- தொழில் வளர்ச்சிக்கு திராவிட மாடல் அரசு மிகவும் அக்கறை செலுத்தி வருகிறது.
- தமிழ்நாட்டில் தொழில் கட்டமைப்பு, உள்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
கோவை:
கோவை கொடிசியா வளாகத்தில் புதிய தொழில்முனைவோர் பங்கு பெறும் தமிழ்நாடு ஸ்டார்அப் திருவிழா இன்று தொடங்கியது. இதில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
தொடக்க விழாவுக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமை தாங்கினார். அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
கல்வியில் சிறந்த தமிழ்நாடு, கலையில் சிறந்த தமிழ்நாடு என்ற வகையில் தொழிலில் சிறந்த தமிழ்நாடு என்கிற நிலையை நோக்கி தமிழகம் முன்னேறி கொண்டிருக்கிறது.
இந்த துறையின் 2 ஆண்டுகால வளர்ச்சிக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் உழைப்பே சான்று. பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளுக்கு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதை போன்று சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியும் முக்கியமானது.
தொழில் வளர்ச்சிக்கு திராவிட மாடல் அரசு மிகவும் அக்கறை செலுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் தொழில் கட்டமைப்பு, உள்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் மிக பிரமாண்டமான அளவில் ஸ்டார்ட் அப் திருவிழா நடத்த வேண்டும் என அமைச்சர் என்னிடம் கேட்டுக்கொண்டார். அதனை நான் கோவையில் நடத்துமாறு அவரிடம் அறிவுறுத்தினேன். ஏனென்றால் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோயம்புத்தூர். இதனால் அங்கு நடத்துங்கள் என கேட்டுக்கொண்டேன்.
இன்று மிக பிரமாண்டமான அளவில் 450-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகளுடன் இந்த ஸ்டார்ட் அப் திருவிழாவானது நடக்கிறது. இதனை பார்வையிட மாணவர்கள், தொழில் அதிபர்கள், தொழில் நிறுவனங்கள் உள்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். மேலும் புத்தாக்க தொழில் கருத்தரங்கு மற்றும் சந்திப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர்.
புத்தாக்கம் மற்றும் ஸ்டார்ட்அப் தொழில் நிறுவனங்களுக்கு இந்த அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த 2021 மார்ச் மாத காலகட்டத்தில் தமிழகத்தில் 2,300 ஸ்டார்ப் நிறுவனங்களே இருந்தன.
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கையானது 3 மடங்காக உயர்ந்து, 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. எந்த துறையாக இருந்தாலும் தமிழ்நாடு அதில் சிறந்து விளங்குகிறது.
புத்தாக்க சிந்தனையோடு, தொழில் முனைவில் ஈடுபடும் தொடக்க நிலை நிறுவனங்களுக்கு ஆதார நிதியும் வழங்கி வருகிறோம். இதுவரை 109 நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.10 கோடி வரை நிதி ஆதார உதவி வழங்கி உள்ளோம்.
2022-23 ம் நிதியாண்டில் மதுரை, ஈரோடு, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் வட்டார புத்தாக்க தொழில் மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதே போன்று நடப்பாண்டில் சேலம், கடலூர், ஓசூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வட்டார புத்தாக்க மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தி.மு.க. அரசானது மக்கள் அளித்த அதிகாரத்தை வானளவியதாக நினைப்பது கிடையாது. நாங்கள் திருக்குறளை போல நெறிப்படுத்தி எங்கள் அதிகாரத்தை செயல்படுத்தி வருகிறோம்.
தி.மு.க ஆட்சியில், வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியே ஆகும். அதனை நோக்கியே பல்வேறு திட்டங்களை எங்கள் ஆட்சியில் செயல்படுத்தி வருகிறோம்.
தமிழகத்தை புத்தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற மாநிலமாக மாற்றுவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தலைமை செயலாளர் அருண்ராய், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பாரதி கணேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
தேனி போடிநாயக்கனூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் பாரதி கணேஷ் (வயது 29). இவர் கோவை பிள்ளையார்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 6 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.
இதற்காக பாரதி கணேஷ் அன்னூர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் திண்டுக்கல்லை சேர்ந்த சிவா என்பவருடன் வசித்து வந்தார். இவரது வீட்டின் கீழ் தளத்தில் இளம்பெண் ஒருவர் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று காலை 11 மணியளவில் இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது யாரோ கதவை தட்டி உள்ளனர். இளம்பெண் வெளியே வந்து பார்த்த போது யாரும் இல்லை.
இளம்பெண்ணின் பெற்றோர் வந்ததும் யாரோ கதவை தட்டிச் சென்றதாகவும், மேல் மாடியில் வசிக்கும் பாரதி கணேஷ் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பாரதி கணேஷ் வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை அவர்களது வீட்டிற்குள் மறைத்து நிறுத்தினர். வேலைக்கு செல்வதற்காக வெளியே வந்த பாரதி கணேஷ் மோட்டார் சைக்கிளை தேடினார். அப்போது மோட்டார் சைக்கிள் இளம்பெண்ணின் வீட்டிற்குள் நிற்பதை பார்த்தார். உள்ளே சென்று மோட்டார் சைக்கிளை கொடுக்கும்படி கேட்டார்.
அப்போது ஆத்திரத்தில் இருந்த இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் அவரது அண்ணன் ஆகியோர் கதவை எதற்கு தட்டினாய் என்று கேட்டனர். அதற்கு அவர் நான் கதவை தட்டவில்லை என்றார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் 3 பேரும் சேர்ந்து பாரதி கணேசை கட்டையால் தாக்கினர்.
இதுகுறித்து பாரதிகணேஷ், அன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தார். தாக்குதலால் அவமானம் தாங்க முடியாத வேதனையில் பாரதிகணேஷ், மாடிப்படி இறங்கும் இடத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடன் தங்கி இருந்த சிவா இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட பாரதி கணேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 பேரும் ஆலங்குளம் என்ற ஊரில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.
- இளம்பெண்ணின் பெற்றோர் அவர்களது மகளுக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
கோவை:
மதுரையை சேர்ந்தவர் 25 வயது வாலிபர். இவர் உடுமலை பேட்டையில் உள்ள ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு இவருக்கு வேறு மதத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரியவரவே வாலிபர் வேறுமதத்தை சேர்ந்தவர் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தநிலையில் கடந்த 2020-ம் ஆண்டு இளம்பெண் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் தனது காதலனுடன் சிவகாசிக்கு சென்றார். அங்குள்ள கோவிலில் வைத்து 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து 2 பேரும் ஆலங்குளம் என்ற ஊரில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.
தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி இளம்பெண்ணின் பெற்றோர் எஸ்.எஸ். காலனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காதலனை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த இளம்பெண் மற்றும் அவரது காதலனை மீட்ட னர். பின்னர் தங்கள் மகளை திருமணம் செய்ய அவரது பெற்றோர் வாலிபருக்கு சில நிபந்தனைகளை விதித்து தங்களுடன் அழைத்துச் சென்றனர்.
அதன் பின்னர் எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் இருந்தனர். மேலும் இளம்பெண்ணின் பெற்றோர் அவர்களது மகளுக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் மணமகனை தேடி வந்தனர்.
இதுகுறித்து இளம்பெண் அவரது காதலனுக்கு தகவல் தெரிவித்தார். எப்படியாவது தன்னை அழைத்து செல்லுமாறு கூறினார். இதனையடுத்து இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்ற வாலிபர் அவரை அழைத்துக்கொண்டு பொள்ளாச்சிக்கு வந்தார். பின்னர் 2 பேரும் அங்குள்ள கோவில் வைத்து மீண்டும் திருமணம் செய்து கொண்டனர்.
அதன்பின்னர் காதல் ஜோடி மாலையுடன் பாதுகாப்பு கேட்டு பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் லாரா செலிவ் குஹனை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.
- பிரியா மாலிக்குக்கு இடது கண்ணுக்கு மேலே காயம் ஏற்பட்டது.
20 வயதுக்குட்பட்டோர் ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டானில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 76 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பிரியா மாலிக் தங்கம் வென்றார். அவர் இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் லாரா செலிவ் குஹனை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.
பிரியா மாலிக்குக்கு இடது கண்ணுக்கு மேலே காயம் ஏற்பட்டது. ரத்தம் வழிந்த போதிலும் அவர் வெற்றி பெற்று அசத்தினார். இதன் மூலம் அவர் ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற 2-வது இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார். கடந்த ஆண்டு ஆன்டிம் பங்கல் தங்கம் வென்று இருந்தார். தற்போதைய போட்டித் தொடரில் ஆன்டிம் பங்கல், 53 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை,
அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டலத்தின் சார்பில் வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாட்களான நாளை(சனிக்கிழமை), 20-ந் தேதி மற்றும் 21-ந் தேதி ஆகிய நாட்களில் பொதுமக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று வர சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களிலிருந்து மதுரை, தேனி, திருச்சி, சேலம், ஊட்டி போன்ற ஊர்களுக்கு செல்லவும் மற்றும் சென்று மீண்டும் ஊர் திரும்பவும் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தடப் பஸ்களுடன் கூடுதலாக 60 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. எனவே பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆயுதங்கள் மற்றும் பூட்டை உடைக்க பயன்படுத்தும் கருவிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
- 7 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை.
கோவை செல்வபுரம் போலீசார் நேற்று இரவு அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது தெலுங்குபாளையம்,சாஸ்தா நகர்,புல்லுக்காடுபகுதியில் பதுங்கி இருந்த சிலர் ஓட்டம் பிடித்தனர்.
எனவே அவர்களில் 6 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்களிடம் ஆயுதங்கள் மற்றும் பூட்டை உடைக்க பயன்படுத்தும் கருவிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் மேற்கண்ட 6 பேரையும் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் உக்கடம் புல்லுக்காடு பகுதியைச் சேர்ந்த பீர்முகமது (வயது 26), ,தெலுங்குபாளையம் தனஞ்செயன் (31), செல்வபுரம் மாணிக்கம் (31,), திருச்சி ரோடு ஜான் ஜோசப் (32), தெலுங்கு பாளையம் ஜெகன் (26), செல்வபுரம் மணிகண்டன் (29) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அவர்கள் சாஸ்தா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை உடைத்து கொள்ளை அடிப்பதற்காக சதி திட்டம் தீட்டி பதுங்கி இருப்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து பூட்டிய வீட்டை உடைத்து கொள்ளை அடிப்பதற்காக பதுங்கி இருந்த 7 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- அய்யம்பாளையம்- செஞ்சேரிபுதூர் ரோட்டில் சென்ற போது திடீரென நிலைதடுமாறி அம்மாசி கீழே விழுந்தார்.
- சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை சூலூர் அருகே உள்ள வரப்பாளையத்தை சேர்ந்தவர் அம்மாசி (வயது 64). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் அவரது மொபட்டில் கறி வாங்குவதற்காக எஸ்.அய்யம்பாளையத்துக்கு சென்றார்.
மொபட் அய்யம்பாளையம்- செஞ்சேரிபுதூர் ரோட்டில் சென்ற போது திடீரென நிலைதடுமாறி மொபட்டில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அம்மாசிக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அம்மாசி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இடையர்பாளையம் பவானி வீதியை சேர்ந்தவர் ராஜ்மோகன் (70). சம்பவத்தன்று இவர் மொபட்டில் அண்ணா நகர் சோதனை சாவடி அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென மொபட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராஜ்மோகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டு முன்பு உள்ள வாசலில் அமர்ந்து இருந்த சின்னப்பராஜ் அவரது மனைவியிடம் படபடப்பாக உள்ளது என்றுள்ளார்.
- வால்பாறை போலீசார் சந்தேகம் மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை,
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சிறுகுன்றாவை சேர்ந்தவர் சின்னப்பராஜ் (வயது 57). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வழி விடாமல் அவரது வாகனத்தை நிறுத்தி இருந்தார். இது குறித்து சின்னப்பராஜ் கேட்ட போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது கைகலப்பாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சண்டையை விலக்கி விட்டனர்.
வீட்டு முன்பு உள்ள வாசலில் அமர்ந்து இருந்த சின்னப்பராஜ் அவரது மனைவியிடம் படபடப்பாக உள்ளது. எனவே குடிக்க சுடுதண்ணீர் வேண்டும் என கேட்டார். இதனை பார்த்த அவரது மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சின்னப்பராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வால்பாறை போலீசார் சந்தேகம் மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன் தாக்கியதில் அவர் இறந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவில் தான் இது இயற்கை மரணமா அல்லது தாக்குதலா? என தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
- ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையின் இருபுறங்களிலும் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
- மொத்தமாக 62 பலகைகளில் இந்த தகவல்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
கோவை,
சென்னைக்கு அடுத்தபடியாக தொழில், கல்வி, மருத்துவம் என அனைத்து துறைகளிலும் வளர்ந்த நகரமாக கோவை திகழ்கிறது.இதற்கு பல்வேறு தரப்பினரின் உழைப்பும், பங்களிப்பும் முக்கிய காரணம்.
இப்படிப்பட்ட மூத்த முன்னோடிகளை இன்றைய தலைமுறையினர் அறியும் விதமாக ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் லெஜண்ட்ஸ் ஆப் கோயம்புத்தூர் என்ற பெயரில் புகைப்படங்களுடன் கூடிய தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியதாவது:-
கோவை மாநகரம் பலரின் உழைப்பு, பங்களிப்பின் மூலமாக வளர்ந்த ஒரு நகரமாகும். ஒரு சிறிய நகரமாக இருந்து, இன்று தமிழகத்தின் 2-வது பெரிய மாநகராட்சியாக உயர்ந்து ள்ளது.
கோவை மாநகராட்சி நிர்வாகம், பொலிவுறு திட்டத்தின் (ஸ்மார்ட்சிட்டி) கீழ் பல்வேறு திட்டபணிகளை மேற்கொண்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் மாதிரிசாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையின் இருபுறங்களிலும் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர் உருவாவதற்கு காரணமான பல தலைவர்கள் தங்களது அறிவு, நேரம், பொருட்கள் போன்றவற்றை செலவழித்துள்ளனர். அவர்களை நினைவு கூறும் வகையிலும், பெருமைப்படுத்தும் வகையிலும், மக்கள் அவர்களை தெரிந்து கொள்ளும் வகையிலும் கோவை நகரை சேர்ந்த தொழில்அதிபர்கள், பண்டைய கால நகர தலைவர்கள் உள்ளிட்டோரின் புகைப்படங்கள், அவர்கள் குறித்த தகவல்களை காட்சிக்கு வைக்கும் பணி தொடங்கி உள்ளது.
தற்போது 32 பலகைகளில் இந்த காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் 30 பலகைளில் கோவை நகரை வளர்த்தவர்களின் புகைப்படங்கள், அவர்களது தகவல்களை வைக்க திட்டமிட்டுள்ளோம்.
மொத்தமாக 62 பலகைகளில் இந்த தகவல்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இதில் விடுபட்டுள்ளவர்கள் குறித்த விவரங்களை மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மேலும் பழங்காலத்தில் கோவையில் இருந்த இயற்கை சார்ந்த இடம், பழமை வாய்ந்த கட்டி டங்கள் குறித்த தகவல்களை தகவல் பலகைகளில் வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் பலகைகளை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் நின்று பார்த்து படித்து சென்று வருகின்றனர்.
- போலீசார் பழைய குற்றவாளிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
- ரேஷன் அரிசி கடத்தல் குற்றச்செயலில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொள்ளாச்சி,
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை சிலர் பொது மக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை மூட்டைகளில் அடைத்து இருசக்கர வாகனம், கார், டெம்போ, லாரி, சரக்கு ஆட்டோ ஆகியவற்றில் கேரள மாநிலத்துக்கு சென்று அங்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
குடிமைப் பொருள் வழங்கல் துறையினர், போலீசார் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுத்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் செம்மனாம்பதி, மீனாட்சிபுரம், கணபதி பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் ரேஷன் அரிசி கடத்தப்படும் வழித்தடமாக கண்டறியப்பட்டு அங்கு ரோந்து மற்றும் வாகனத்தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை இயக்குநராக வன்னிய பெருமாள் பொறுப்பேற்ற பின்னர் தமிழகம் முழுவதிலும் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையின் கோவை சரக டி.எஸ்.பி. கிருஷ்ணன் தலைமையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர், மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரிசி கடத்தலில் தொடர்புடைய பழைய குற்றவாளிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று தணிக்கை செய்தனர்.
மீண்டும் ரேஷன் அரிசி கடத்தல் குற்றச்செயலில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதுடன், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.






