என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அன்னூர் அருகே பெண்ணின் வீட்டு கதவை தட்டியதாக தாக்குதல்- அவமானத்தில் வாலிபர் தற்கொலை
    X

    அன்னூர் அருகே பெண்ணின் வீட்டு கதவை தட்டியதாக தாக்குதல்- அவமானத்தில் வாலிபர் தற்கொலை

    • பாரதி கணேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    தேனி போடிநாயக்கனூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் பாரதி கணேஷ் (வயது 29). இவர் கோவை பிள்ளையார்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 6 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.

    இதற்காக பாரதி கணேஷ் அன்னூர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் திண்டுக்கல்லை சேர்ந்த சிவா என்பவருடன் வசித்து வந்தார். இவரது வீட்டின் கீழ் தளத்தில் இளம்பெண் ஒருவர் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று காலை 11 மணியளவில் இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது யாரோ கதவை தட்டி உள்ளனர். இளம்பெண் வெளியே வந்து பார்த்த போது யாரும் இல்லை.

    இளம்பெண்ணின் பெற்றோர் வந்ததும் யாரோ கதவை தட்டிச் சென்றதாகவும், மேல் மாடியில் வசிக்கும் பாரதி கணேஷ் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பாரதி கணேஷ் வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை அவர்களது வீட்டிற்குள் மறைத்து நிறுத்தினர். வேலைக்கு செல்வதற்காக வெளியே வந்த பாரதி கணேஷ் மோட்டார் சைக்கிளை தேடினார். அப்போது மோட்டார் சைக்கிள் இளம்பெண்ணின் வீட்டிற்குள் நிற்பதை பார்த்தார். உள்ளே சென்று மோட்டார் சைக்கிளை கொடுக்கும்படி கேட்டார்.

    அப்போது ஆத்திரத்தில் இருந்த இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் அவரது அண்ணன் ஆகியோர் கதவை எதற்கு தட்டினாய் என்று கேட்டனர். அதற்கு அவர் நான் கதவை தட்டவில்லை என்றார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் 3 பேரும் சேர்ந்து பாரதி கணேசை கட்டையால் தாக்கினர்.

    இதுகுறித்து பாரதிகணேஷ், அன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தார். தாக்குதலால் அவமானம் தாங்க முடியாத வேதனையில் பாரதிகணேஷ், மாடிப்படி இறங்கும் இடத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடன் தங்கி இருந்த சிவா இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட பாரதி கணேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×