என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • சென்னை வந்துள்ள “ஜி-20” நாடுகளின் பிரதிநிதிகள் 120 பேர் இன்று மாலை மற்றும் நாளை மறுநாள் மாமல்லபுரம் வருகிறார்கள்.
    • வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகையையொட்டி புராதன சின்னங்கள் எதிரே உள்ள சாலையோர கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.

    சென்னை வந்துள்ள "ஜி-20" நாடுகளின் பிரதிநிதிகள் 120 பேர் இன்று மாலை மற்றும் நாளை மறுநாள் மாமல்லபுரம் வருகிறார்கள். அவர்கள் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்க்க உள்ளனர். இதையடுத்து 200-க்கும் மேற்பட்ட போலீசார் மாமல்லபுரம் புராதன சின்னம் மற்றும் கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வெளிநாட்டு பிரதிநிதிகள் செல்லும் வழித்தடம், புராதன சின்னங்கள், உணவருந்தும் ஓட்டல்கள் உள்ளிட்ட பகுதிகளை போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர். வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகையையொட்டி புராதன சின்னங்கள் எதிரே உள்ள சாலையோர கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு மாமல்லபுரத்தில் "டிரோன்" கேமரா பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    • மண்ணிவாக்கம் தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் கெஜலட்சுமி சண்முகம் அனைவரையும் வரவேற்றார்.
    • எம்.எல்.ஏ.க்கள் செல்வ பெருந்தகை, பல்லாவரம் கருணாநிதி, வண்டலூர் தாசில்தார் ராஜேந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூடுவாஞ்சேரி:

    மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் ரூ. 76.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கூட்டமைப்பு கட்டிடம், மண்ணிவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரவுண்ட் டேபிள் இந்தியா தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ.69 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள கட்டிடங்கள் திறப்பு விழா மாவட்ட கலெக்டர் ஏ.ஆர்.ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது.

    வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன் துணைத்தலைவர் ஆராமுதன், ஒன்றிய கவுன்சிலர் வக்கீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்ணிவாக்கம் தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் கெஜலட்சுமி சண்முகம் அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு அரசு கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் செல்வ பெருந்தகை, பல்லாவரம் கருணாநிதி, வண்டலூர் தாசில்தார் ராஜேந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • 50 பேருக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில், உதவித்தொகை கொடுத்து தொழில் பழகுனர் பயிற்சி கொடுக்க உள்ளது.
    • விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி ஆகும்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுசக்தி துறை வளாகத்தில் "பாவினி" எனப்படும் பாரதிய நாபிக்ய வித்யூத் நிகாம் அணுமின் நிறுவனம், 500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட முன்மாதிரி அதிவேக ஈனுலை கட்டி வருகிறது. இந்நிறுவனம் 50 பேருக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில், உதவித்தொகை கொடுத்து தொழில் பழகுனர் பயிற்சி கொடுக்க உள்ளது.

    இதில் பிட்டர்.10, கெமிக்கல் பிளான்ட் மெயின்டனன்ஸ் மெக்கானிக்.8, இன்ஸ்ரூமென்ட் மெக்கானிக்.11, எலக்ட்ரீஷியன்.11, கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்.3, ரெப்ரிஜரேஷன், மெக்கானிக், ஏசி மெக்கானிக்.3, மெக்கானிக்கல் டிராப்ஸ்மேன்.2, போட்டோகிராபர்.1, மெசினிஸ்ட், டிஜிட்டல் போட்டோகிராபர்.1, என பயிற்சி அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி ஆகும். கூடுதல் விபரங்களை https://bhavini.nic.in என்ற இணையத்தில் அறியலாம்.

    • திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன் அதை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
    • ஊர் பொதுமக்கள் விழாவில் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த காரணையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை சார்பில், சுயாட்சி திட்டம் (ஆர்.ஜி.எஸ்.ஏ) 2021-2022 நிதியின் கீழ், ரூ.24.54லட்சம் செலவில் கூட்ட அரங்கம், தலைவர், கிராம நிர்வாக அதிகாரி, ஊராட்சி செயலர் அலுவலகம் உள்ளிட்ட அறைகளை கொண்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம் கட்டப்பட்டது.

    பணிகள் நிறைவடைந்த நிலையில் திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன் அதை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். காரணை ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் தமிழரசி, ஒன்றிய கவுன்சிலர் வினோத், அனைத்து வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

    • பின்னால் மணல் ஏற்றி வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
    • மாணவர்கள் பலியானது பற்றி அறிந்ததும் அவருடன் படித்த ஏராளமான மாணவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

    வண்டலூர்:

    வாலாஜாபாத்தை சேர்ந்தவர்கள் தசரதன் (வயது20), சந்தோஷ்(20). இருவரும் மண்ணிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்கள். இவர்களில் தசரதன் பி.காமும், சந்தோஷ் பி.ஏ.வும் 3-ம் ஆண்டு படித்து வந்தனர். இருவரும் தினந்தோறும் ஒரே மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை மாணவர்கள் தசரதனும், சந்தோசும் ஒரே மோட்டார் சைக்கிளில் கல்லூரி நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

    மணிமங்கலம் அருகே மண்ணிவாக்கம்-மணிமங்கலம் பிரதான சாலையில் வந்துகொண்டு இருந்தபோது பின்னால் மணல் ஏற்றி வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் மாணவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தனர். அப்போது லாரியின் சக்கரத்தில் சிக்கியதில் மாணவர்கள் தசரதன், சந்தோஷ் ஆகியோர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். விபத்து பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை மடக்கி பிடித்தனர்.

    தகவல் அறிந்ததும் பொத்தேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பலியான மாணவர்கள் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி டிரைவரையும் கைது செய்தனர்.

    மாணவர்கள் பலியானது பற்றி அறிந்ததும் அவருடன் படித்த ஏராளமான மாணவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பலியான மாணவர்களின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் இறந்து போன மாணவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

    லாரி டிரைவர் அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • குழந்தை இல்லாததால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டு வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பெரியார் நகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது32) பெயின்டர. இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது.

    குழந்தை இல்லாததால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனவேதனை அடைந்த சதீஷ் வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கல்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராகவன் கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் பணத்தை எடுத்தார்.
    • பணத்தை மொபட் சீட்டுக்கு அடியில் வைத்துக்கொண்டு வண்டலூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்றார்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட செங்கழனியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராகவன் (வயது 46). இவர் நேற்று கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் பணத்தை எடுத்தார். பின்னர் அந்த பணத்தை மொபட் சீட்டுக்கு அடியில் வைத்துக்கொண்டு வண்டலூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்றார்.

    அங்கு மொபட்டை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது தனது மொபட் சீட்டுக்கு அடியில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து ராகவன் ஒட்டேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாலுகா அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகள், இதேபோல கூடுவாஞ்சேரியில் ராகவன் பணம் எடுத்துக் கொண்டு வெளியே வந்த போது அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் பணத்தை திருடிய மர்ம நபர்களை ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் வண்டலூர் தாலுகா அலுவலகம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பேவர் பிளாக்சாலை அமைக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூடுவாஞ்சேரி:

    காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் நெடுங்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட கொளப்பாக்கம் நாராயணன் நகர் ஜாஸ்மின் தெருவில் செங்கல்பட்டு மாவட்ட கவுன்சிலர் கஜா என்கிற கஜேந்திரன் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக்சாலை அமைக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ஸ்ரீ சீனிவாசன் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் நேதாஜி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடந்த விழாவில் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், செங்கல்பட்டு மாவட்ட கவுன்சிலருமான ரத்தினமங்கலம் எம்.கஜா என்கிற கஜேந்திரன் கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதில் பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராட்சத சுறாக்கள் கடற்கரையில் உலா வந்த நிலையில் தற்போது ராட்சத திமிங்கலங்களும் வருகை தந்துள்ளது.
    • மீன்பிடி வலைகளையும் வாயில் கடித்து திமிங்கலங்கள் சேதப்படுத்தி விடுகின்றன.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் பகுதி மீனவர்கள் தினமும் 40 படகில் கடலுக்கு மீன் பிடிக்க செல்வது வழக்கம். இந்த நிலையில் சில தினங்களாக கரைப்பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள கடலில் ராட்சத திமிங்கலங்கள் ஆழ்கடல் பகுதியில் உணவுக்காக சிறிய வகை மீன்கள் கிடைக்காததால் இங்கு வந்து சிறிய மீன்களை பிடித்து தின்று பசியாறுகின்றன. இந்த திமிங்கலங்கள் கட்டுமரம் மற்றும் பைபர் படகை கவிழ்க்கும் ஆற்றல் கொண்டவை ஆகும். அதேபோல் அவற்றிடம் மனிதர்கள் சிக்கினால் கடித்து காயப்படுத்தி, கொமோடா டிராகன், முதலை, மலைப்பாம்பு போல் விழுங்கி விடும்.

    சில நாட்களாக சதுரங்கப்பட்டினம் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்லும்போது 10 அடி முதல் 20 அடி நீளமுள்ள திமிங்கலங்கள் கரைப்பகுதியில் படகுகளின் அருகில் வந்து உரசிவிட்டு செல்வதால் எங்கு படகுகளை கவிழ்த்து, தங்களை கடித்து காயப்படுத்தி விழுங்கி விடுமோ என்ற உயிர் பயத்தில் தினம், தினம் ஒரு வித பயத்துடனேயே கடலுக்கு சென்று வருகின்றனர்.

    மேலும் மீன்பிடி வலைகளையும் வாயில் கடித்து திமிங்கலங்கள் சேதப்படுத்தி விடுகின்றன. மேலும் கடலில் ஏற்பட்டுள்ள தட்பவெப்ப சீதோஷ்ன நிலை காரணமாக ஆழ்கடலில் உள்ள திமிங்கலங்கள் இரை தேடி கரைப்பகுதியை நோக்கி வருவதாகவும் சதுரங்கப்பட்டினம் மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் கரைப்பகுதியில் திமிங்கலங்கள் உலாவுவதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அதனை பதிவிட்டுள்ளனர். ஏற்கனவே ராட்சத சுறாக்கள் கடற்கரையில் உலா வந்த நிலையில் தற்போது ராட்சத திமிங்கலங்களும் வருகை தந்துள்ளது.

    • ஆய்விற்கு பின்னர் குளத்தின் ஓரத்தில் மரங்களை நட்டு சென்றார்.
    • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் பணிகள் நிறைவடைந்தன.

    மாமல்லபுரம்:

    கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாமல்லபுரம் அடுத்துள்ளது பட்டிபுலம் ஊராட்சி. இது சாலவான்குப்பம் காலனி, இளந்தோப்பு, இடையன்குப்பம், சாலவான்குப்பம், புது நெம்மேலி, பட்டிபுலம் குப்பம் உள்ளிட்ட சிற்றூர்களை கொண்ட பெரிய ஊராட்சியாகும். இங்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 21-22 நிதியின் கீழ், 12.33 லட்சம் ரூபாய் செலவில் பட்டிபுலம் கிராம குளம் புனரமைத்தல் மற்றும் 2 லட்சம் செலவில் ஆலடியம்மன் கோயில் தெரு பேவர் பிளாக் சாலை அமைத்தல் ஆகிய பணிகள் நிறைவடைந்தது.

    இப்பகுதியை தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குநர் பி.பொன்னையா இன்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். ஊராட்சி தலைவர் ல.வரலட்சுமி உடனிருந்தார். ஆய்விற்கு பின்னர் குளத்தின் ஓரத்தில் மரங்களை நட்டு சென்றார்.

    • வேள்வி பூஜையுடன் ஆடிப்பூர விழா கோலாகலமாக தொடங்கியது.
    • பக்தர்கள் சுயம்பு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யவுள்ளனர்.

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 52-ம் ஆண்டு ஆடிப்பூர விழா நேற்று முன்தினம் மங்கள இசையு டன் ஆதிபராசக்தி அம்மனுக்கு அலங்கா ரத்துடன் தீபாராதனை செய்து வேள்வி பூஜையுடன் ஆடிப்பூர விழா கோலாகலமாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை 6 மணி அளவில் கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சி சித்தர் பீட வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் செந்தில்குமார் கலந்து கொண்டு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியை பக்தர்களுக்கு கஞ்சி கலயங்கள் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் பல லட்சம் பக்தர்கள் கஞ்சி கலயங்களை கையில் சுமந்தபடி சென்று கருவறை முன்பாக ஆதிபராசக்தி அம்மனை வழிபட்டு பின்னர் பள்ளி வளாகத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த கொப்பரை பாத்திரத்தில் ஊற்றினர். அது சமத்துவ கஞ்சியாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    காலை 9 மணி அளவில் அன்னதான பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியை ஆதி பராசக்தி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரமேஷ் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து 10 மணி அளவில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வந்திருந்த ஆன்மிக குரு பங்காரு அடிகளாருக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள் பாத பூஜை செய்து வரவேற்றனர்.

    இதனைத் தொடர்ந்து 10.15 மணியளவில் ஆதிபராசக்தி கருவறை முன்பு இருக்கும் சுயம்பு அம்மனுக்கு ஆன்மிக குரு பங்காரு அடிகளார் பால் அபிஷேகம் செய்து விழாவை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ரெயில்வே பொது மேலாளர் ஜெயந்த், முன்னாள் தமிழ்நாடு தேர்வாணைய தலைவர் அருள்மொழி, முன்னாள் நீதிபதி முருகேசன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

    ஆடிப்பூர தினமான இன்று சனிக்கிழமை காலை 3 மணி அளவில் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கருவறை முன்பாக உள்ள சுயம்பு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யவுள்ளனர்.

    நிகழ்ச்சிகளில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக இயக்க துணைத் தலைவர்கள் கோ.ப.அன்பழகன், வேளாண்மை கல்லூரி தாளாளர் உமா தேவி ஜெய்கணேஷ், செவிலியர் கல்லூரி தாளாளர் ஸ்ரீலேகா செந்தில் குமார், டாக்டர் மதுமலர், வழக்கறிஞர் அகத்தியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர்கள் கோ.ப.செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ் வழிகாட்டு தலில் இயக்கத்தின் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மன்றங்கள் மற்றும் சக்திபீடங்களை சார்ந்த தொண்டர்களை ஒருங்கிணைத்து மாவட்ட தலைவர்கள் கிருஷ்ண மூர்த்தி, சரஸ்வதி, சதாசிவம் ஆகியோர் செய்திருந்தனர்.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
    • இருதரப்பு புகாரின் அடிப்படையில் தகராறுக்கான காரணம் குறித்து சதுரங்கபட்டிணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

    கல்பாக்கம் அடுத்த குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 46), வெல்டர். இவரது மனைவி ஸ்ரீதேவி (வயது 37). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சென்று வருகிறார்., இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

    இந்நிலையில் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில், கொதிக்கும் எண்ணையை ஸ்ரீதேவி மீது சுந்தரமூர்த்தி ஊற்றினார்., துடிதுடித்த தாயை மீண்டும் தாக்க முயற்சி செய்த தந்தையை ஆத்திரமடைந்த 16 வயது மகள் வீட்டில் இருந்த அரிவாள் மனையால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதுகுறித்து இருதரப்பு புகாரின் அடிப்படையில் தகராறுக்கான காரணம் குறித்து சதுரங்கபட்டிணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

    ×