என் மலர்
செங்கல்பட்டு
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா 3-ம் அலை வேகமாக பரவி வருகிறது. சென்னையில் தினசரி நோய் பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மட்டும் புதிதாக 1,512 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் நோய் தொற்று பாதிப்பு வெறும் 168 ஆக இருந்தது. கடந்த 9 நாட்களில் கொரோனாவின் பாதிப்பு எகிறி உள்ளது.
நேற்று மட்டும் தாம்பரத்தில்-166 பேர், பல்லாவரம்-540, அனகாபுத்தூர்-57, பம்மல்-68, சிட்ல பாக்கம்-59, மாடம் பாக்கம்-59 பேருக்கு நோய்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதியில் கொரோனா பரவல் வேகம் அதிகமாக காணப்படுகிறது. இதையடுத்து இந்த பகுதிகளில் சுகாதார அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகத்தினரும் அதிக கவனம் செலுத்தி நோய்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த 7-ந் தேதிக்கு பின்னர் தினசரி பாதிப்பு ஆயிரத்தை கடந்து உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 9 நாட்களில் தினசரி நோய் தொற்று பாதிப்பு விவரம் வருமாறு:-
1-ந்தேதி 168 பேர், 2-ந்தேதி 146 பேர், 3-ந்தேதி 158 பேர், 4-ந்தேதி 290 பேர், 5-ந்தேதி 596 பேர், 6-ந்தேதி 816 பேர், 7-ந்தேதி 1,039 பேர், 8-ந்தேதி 1,332 பேர், 9-ந்தேதி 1512 பேர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் உள்ளது வெள்ளப்புத்தூர் ஊராட்சி இந்த ஊராட்சியில் அருந்ததி பாளையம், இருளர் பழங்குடி காலனி, வெள்ளப்புத்தூர், பாலக்காடு மற்றும் சுண்ணாம்பு மேடு உள்பட பத்து குக்கிராமங்கள் உள்ளன.
434 வீடுகள் 1454 மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். நீர் மேலாண்மை துறை மூலம் மத்திய அரசு தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் உள்ள வெள்ளப்புத்தூர் ஊராட்சி நீர் மேலாண்மை திட்டத்தில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் மூலம் ஊராட்சியில் உள்ள 100 பேருக்கு வேலையை வழங்கி இதன் மூலம் உடையார்குளம், மாரியம்மன் குளம், கங்கையம்மன் குளம், வண்ணான் குளம், கண்ணியம்மன் குளம் மற்றும் லட்சுமணன் குளம் ஆகிய குளங்களை தூர்வாரி ஆழப்படுத்தி குளத்தின் கரைகளை உயர்த்தி உள்ளனர்.
மழை நீர் வருவாய் கால்வாய்களை சுத்தம் செய்து மழை நீர் வீணாகாமல் குளத்தில் சென்று சேரும் விதத்தில் மழை நீர் கால்வாய்களை அமைத்துள்ளனர். இந்த ஊராட்சியில் சிற்றேரி, பெரியஏரி என இரண்டு ஏரிகள் முழு கொள்ளவுடன் காணப்படுகிறது.
இதனால் இப்பகுதியில் உள்ள 10 க்கும் மேற்பட்ட கிணற்றில் கோடைகாலங்களில் நீர் வற்றாமல் இருக்கும். இதனால் விவசாயம் செழிபாக இருக்கும் என்று அப்பகுதியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜயக்குமார் கூறுகிறார்.
இந்த பகுதியில் வீணாகும் தண்ணீரை பயன்படுத்தி சாலையில் மரங்களும், காலியாக உள்ள ஊராட்சி இடங்களில் செடிகளை வளர்த்து வருவதாகவும் கூறுகின்றனர். மழை நீர் வீனாகாதவாரு ஏரி மற்றும் குளங்களுக்கு சென்றடைகின்ற வகையில் மழை நீர் கால்வாயை கிராம மக்கள் அமைத்துள்ளனர்.
ஊராட்சியில் உள்ள அனைத்து பணிகளும் மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு மழை நீர் கால்வாய், ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு சாலையில் மரம் செடிகள் நடப்பட்டு விவசாயத்திற்கு தேவையான நீர் ஆதாரம் உள்ள ஊராட்சியாக இந்த ஊராட்சி அமைந்துள்ளது.
இதனால் மத்திய அரசின் நீர் மேலாண்மை துறை மூலம் தென் மாநிலத்தில் தமிழ் நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுபாக்கம் ஒன்றியம் வெள்ளப்புத்தூர் ஊராட்சி நீர் மேலாண்மை துறை சிறந்து விளங்கி தேர்வு செய்யப்பட்டதற்கு கிராம மக்கள் மகிழ்ச்சி அடைவதாக அப்பகுதி முன்னாள் இந்நாள் தலைவர்களும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்களும் கூறுகின்றனர்.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா அசுரவேகத்தில் பரவி வருகிறது. சென்னைக்கு அடுத்த படியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தாம்பரம் சானட்டோரியம் காசநோய் மருத்துவமனையில் 500 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுஉள்ளது.
இந்த மருத்துவமனையில் செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னைக்கு அடுத்த படியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கொரோனா பாதித்தவர்களில் அறிகுறி உள்ளவர்கள், அறிகுறி இல்லாதவர்கள் என வகைப்படுத்தி அறிகுறி உள்ளவர்களை கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் படுக்கைகள், ஆக்சிஜன் இல்லாத படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
தாம்பரம் மாநகராட்சி பகுதியில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் தாம்பரம் காசநோய் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் 500 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டு உள்ளது.
தாம்பரம் தேசிய சித்தா மருத்துவமனையில் 100 படுக்கைகள், சேலையூர் பாரத் கல்லூரியில் 250 படுக்கை வசதிகள் தயாராக உள்ளன.
தையூர் அரசு மருத்துவ மனையில் 1000 படுக்கைகளும், எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் 600 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. அறிகுறி உள்ள நோயாளிகளுக்கு வகைப்படுத்தல் மையம் மூலம் பரிசோதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆர்.டிபி. சி.ஆர். பரிசோதனைகளும் கூடுதல் ஆக்கப்பட்டுள்ளன. தினமும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
கொரோனா குறித்து பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம். இதனை தவிர்க்க பொதுமக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
அனைவரும் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட அரசு அறிவித்துள்ள வழி முறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குரோம்பேட்டை பகுதியில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வருகிறது. இங்கு பொதுமக்கள் மட்டும் இன்றி மாணவர்கள், கடை ஊழியர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.
குரோம்பேட்டை பகுதியில் இயங்கி வரும் பிரபல ஜவுளிக்கடையில் பணிபுரியும் ஊழியர்கள் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குரோம்பேட்டையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 22 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் சென்னையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா பரவாமல் தடுக்க அந்த ஜவுளிக்கடை தற்காலிகமாக மூடப்பட்டது.
இதேபோல் குரோம்பேட்டையில் இயங்கி வரும் மற்றொரு பிரபலமான ஜவுளிக்கடை ஊழியர்கள் 250 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி அந்த ஜவுளிக்கடையும் தற்காலிகமாக மூடப்பட்டது.
அடுத்தடுத்து 2 ஜவுளிக்கடைகளில் கொரோனா பரவியதால் குரோம்பேட்டை மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் 1,850 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மொத்தம் 142 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலான மாணவர்கள் விடுதிகளை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டனர். 40 மாணவர்கள் மட்டும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கிழக்கு தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மாணவர்களில் 22 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது ஏற்கனவே தெரியவந்தது. தற்போது மேலும் 38 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் எத்தனை பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறது என்பது தெரிய வரும்.
குரோம்பேட்டை பகுதியில் வேகமாக பரவி வரும் கொரோனாவை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொது மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள் மற்றும் அதிக ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுத்தப்பட்டுள்ளனர்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சுற்றுலா பகுதியில் பொதுமக்கள் கூட்டம் காரணமாக கொரோனா அதிகம் பரவும் நிலை உருவாகியுள்ளது.
இதை தவிர்க்கும் வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அங்குள்ள புராதன சின்னங்களை வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் மறு உத்தரவு வரும்வரை இவை மூடப்பட்டுள்ளன. இதையடுத்து தொல்லியல்துறை மாமல்லபுரம் புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்துரதம், புலிக்குகை, பட்டர்பால் உள்ளிட்ட பகுதிகளை மூடியது. அங்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.
தாம்பரம் அடுத்த முடிச்சூர் வரதராஜபுரம் 8வது தெரு கிருஷ்ணா நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பிரேம்குமார் (வயது 45). இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
வழக்கம்போல் நேற்று காலை பணிக்கு சென்றுவிட்டு இரவு தனது வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் கதவை தட்டியபோது யாரும் கதவைத் திறக்கததால் நீண்டநேரம் தட்டிப் பார்த்துவிட்டு பின்பு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தனது மனைவி சுகாசினி மற்றும் 11 வயது மகன் பிரணித் ஆகியோர் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்து உள்ளனர். இதுகுறித்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பிரேதத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர். போலீசாரின் விசாரணையில் பிரேம்குமாரின் மனைவி சுகாசினி கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு மன அழுத்தத்தால் அவர் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. தாயும் மகனும் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிவேகத்தில் பரவி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.
நேற்று மட்டும் புதிதாக 816 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஒருவர் உயிரிழந்துள்ளார். நோய் தொற்று பரவலை தடுக்க சுகாதார அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
பொதுமக்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிய வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற வசதியாக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. சுமார் 500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
இதனை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.






