என் மலர்
செங்கல்பட்டு
தாம்பரம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியான தாம்பரம் மாநகராட்சி பகுதிகள் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.
கடந்த சில தினங்களாக கல்லூரி மாணவ-மாணவி கள் பெரிய வணிக வளாகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் ஏராளமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொது மக்களுக்கும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையைக் கருத்தில் கொண்டு தாம்பரம் அடுத்த சானட்டோரியத்தில் இயங்கி வரும் தேசிய சித்த மருத்துவமனையில் 100 படுக்கை வசதியுடன் கூடிய தனி வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு வார்டை இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.
நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ரகுநாத் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 2 நாள் மாவட்ட மாநாடு செங்கல்பட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக பார்வை இழந்த பாரதி அண்ணா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவரது சொந்த ஊர் மதுராந்தகம் அருகே உள்ள பாக்கம் கிராமம் ஆகும். இவரது மனைவி குணவதி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களது ஒரே மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.
கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து பாரதி அண்ணா நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் 1989-ம் ஆண்டு மாணவ பருவத்தில் இருந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியில் இணைத்து கொண்டு பணியாற்றி வருகிறேன்.
மாணவர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் அதன் பின்பு மதுராந்தகம் வட்டசெயலாளர், பொறுப்பு வகித்துள்ளேன். கட்சியில் அகில இந்திய வழக்கறிஞர் சங்க பொறுப்பிலும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் மாநில பொறுப்பிலும் மற்றும் மாற்று திறனாளிகள் பிரிவு மாநில பொறுப்பிலும் இருந்துள்ளேன்.
2 முறை சிறை சென்றுள்ளேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் என்னை இணைத்து கொண்டுள்ளேன். நான் சிறுவயதில் அதிகதிறன் கொண்ட பவர் உள்ள மூக்கு கண்ணாடியை பயன்படுத்தினேன். பின்னர் முழுவதுமாக பார்வையை இழந்துவிட்டேன். நான் மக்களுக்காக பாடு பட என்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தாம்பரம்:
தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் வரதராஜபுரத்தில் அடையாறு ஆற்றின் கரையோரம் ஆஞ்சநேயர் கோவில் இருந்தது.
நீர் நிலையை ஆக்கிரமித்து கோவில் கட்டப்பட்டு இருப்பதாக கூறி கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவில் முழுவதும் இடிக்கப்பட்டது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவில் இடிக்கப்பட்டபோது போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஆஞ்சநேயர் கோவில் இடிக்கப்பட்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பகிரப்பட்டு வருகிறது.
இதையடுத்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மணிமங்கலம் போலீசில் குன்றத்தூர் தாசில்தார் பிரியா புகார் அளித்தார். போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
இது தொடர்பாக ஆஞ்ச நேயர் கோவில் நிர்வாகி ரமணன், லலிதா உள்பட 9 பேர் மீது இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து உள்ளார். அவர்கள் மீது 7 பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களை போலீசார் ஆய்வு செய்து அதனை அனுப்பியவர்களின் விவரங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
கோவில் இடிக்கப்பட்டது தொடர்பாக தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை அருகே மாமல்லபுரம் பகுதியில் ஐடியல் கடற்கரை விருந்தினர் மாளிகை உள்ளது. இங்கு விலை மதிப்புள்ள பார்வதி சிலை ஒன்று வெளிநாட்டுக்கு கடத்தி செல்ல பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே குறிப்பிட்ட விருந்தினர் மாளிகைக்குள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள். சோதனை நடத்திய போலீசாருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
போலீசார் தேடிப்போன பார்வதி சிலைக்கு பதிலாக 11 பழங்கால சிலைகள் அங்கு ஒரு பெட்டிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த சிலைகளை போலீசார் கைப்பற்றினார்கள். அவற்றை அங்கு பதுக்கி வைத்திருந்த ஜாவித்ஷா என்பவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் போலீசார் நைசாக பேச்சு கொடுத்தனர். நாங்கள் தேடிவந்த தொன்மையான பார்வதி சிலை எங்கே என்றும், அந்த சிலையை கொடுத்தால், தற்போது கைப்பற்றிய 11 சிலைகளையும் திருப்பி ஒப்படைத்து விடுகிறோம், என்றும் போலீசார் தெரிவித்தனர்.
11 சிலைகளும் திருப்பி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில், மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த பார்வதி சிலையை தோண்டி எடுத்து ஜாவித்ஷா போலீசாரிடம் ஒப்படைத்தார். மிகவும் பழமையான அந்த பார்வதி சிலை உள்பட போலீசார் கைப்பற்றிய இதர 11 சிலைகளையும் வெளிநாட்டுக்கு கடத்தி செல்ல ஜாவித்ஷா திட்டமிட்டு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
பார்வதி சிலையையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஜாவித்ஷா காஷ்மீரை சேர்ந்தவர். அவரது சகோதரர் ரியாஸ் தொன்மையான சிலைகளை தமிழகத்தில் இருந்து கடத்திச்சென்று வெளிநாடுகளில் விற்பனை செய்யும் தொழில் செய்பவர். சகோதரர் காட்டிய வழியில் ஜாவித்ஷாவும் சிலை கடத்தல் தொழிலை வெற்றிகரமாக செய்து வந்துள்ளார். தஞ்சாவூரில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் சிலைகளை விற்பனை செய்யும் கடை ஒன்றை ஜாவித்ஷா நடத்தி வந்துள்ளார். கொரோனா காலத்தில் அந்த கடையை நடத்த முடியாமல் மூடிவிட்டார். ஜாவித்ஷா கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது சகோதரர் ரியாசை தேடி வருவதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
சிலைகள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த்முரளி நிருபர்களிடம் கூறியதாவது:-
கைப்பற்றப்பட்ட 12 சிலைகளில் 8 சிலைகள் மிகவும் தொன்மை வாய்ந்தவை என்று தொல்லியல் துறை மூலம் தெரிய வந்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.30 முதல் ரூ.40 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிலைகள் 11-ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம். மீட்கப்பட்டுள்ள இந்த சிலைகள் எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டவை என்பது பற்றி விசாரித்து வருகிறோம்.
இந்த சிலைகளில் மிகவும் அரிதானது ராவணன் சிலை ஆகும். இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் உள்பட 5 மாநிலங்களில்தான் ராவணனுக்கு கோவில் உள்ளது. அந்த கோவில்களில் ஏதாவது ஒன்றில் இந்த ராவணன் சிலை திருடப்பட்டதா, அல்லது இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்டதா, என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். கைப்பற்றப்பட்ட இந்த சிலைகள் கும்பகோணம் சிறப்பு கோர்ட்டில் ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தாம்பரம் கோட்டத்திற்கான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் காலை 11 மணிக்கு தாம்பரம் செயற்பொறியாளர் அலுவலகம், 110 கி.வோ, புதுதாங்கல் துணை மின் நிலைய வளாகம், 1-வது தளம், முல்லை நகர், மேற்கு தாம்பரம் சென்னை- 45 என்ற அலுவலக முகவரியில் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தாம்பரம் அடுத்த முடிச்சூர் வரதராஜபுரத்தில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்தக் கோயில் அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாக கூறி, வருவாய்த்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையினர் கோவிலை இடிக்க முடிவு செய்தனர்.
இது தொடர்பான கோயில் நிர்வாகத்துக்கும் நோட்டீஸ் வழங்கினர். இதற்கு நிர்வாகிகள் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் வருவாய்த்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையினர் கோவிலை இடிக்க பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் ஏராளமானோர் கோவில் உள்ளே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சில பக்தர்கள் கோபுரத்தின் உச்சியில் ஏறி, கோயிலை இடிக்க கூடாது என்று போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
குன்றத்தூர் வட்டாட்சியர் பிரியா தலைமையில் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதை ஏற்காத பக்தர்கள் வட்டாட்சியருடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அவர்களை தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
பின்னர் பொக்லைன் மூலம் ஆஞ்சநேயர் கோவிலை இடிக்கும் பணி நடைபெற்றது. கோயில் முழுவதும் இடிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரி விடுதி மாணவர்கள், 2 பிரபல துணிக்கடை ஊழியர்கள், தாம்பரத்தில் உள்ள கல்லூரி விடுதி மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சியில் பணிபுரியும் 36 ஊழியர்களுக்கு, கொரோனா தொற்று நேற்று உறுதியானது. அதன்படி தாம்பரம் மாநகராட்சி அலுவலக ஊழியர்கள்-14, மாநகராட்சிக்கு உட்பட்ட அலுவலகங்களான பம்மலில் 17 பேர், செம்பாக்கத்தில்-5 பேர் என 36 ஊழியர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் மாநகராட்சி பகுதிகளில் நேற்று மட்டும் 237 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து தாம்பரம் மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 940 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை:
சென்னை புறநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை 60 கி.மீ தூரத்துக்கு ரூ.2156 கோடியில் வெளி வட்ட சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வெளி வட்ட சாலை ஒவ்வொரு பகுதிகள் வாரியாக படிப்படியாக திறக்கப்பட்டன. இந்த வெளி வட்டச்சாலையில் போக்கு வரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் செல்கின்றன.
இந்த சாலையில் இது வரை கட்டணம் இன்றி வாகனங்கள் சென்று வந்தன. இந்த நிலையில் வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் முடிச்சூர் அருகே வரத ராஜபுரம், நசரத்பேட்டை அருகே கோலப்பன்சேரி, நெமிலிச்சேரி அருகே பாலவேடு, மீஞ்சூர் அருகே சின்ன முல்லைவாயல் ஆகிய 4 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த 4 சுங்கச்சாவடிகளிலும் இன்றுமுதல் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை தொடங்கியது. வாகனங்களுக்கு ஏற்றார்போல குறைந்தபட்சமாக ரூ.20 முதல் அதிகபட்சமாக ரூ.865 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வண்டலூரில் இருந்து மீஞ்சூருக்கு கார் சென்றுவர அதிகபட்சமாக ரூ.163 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்றுவர அதிகபட்சமாக ரூ.865 நிர்ணயிக்கப்பட் டுள்ளது. வண்டலூர்-நசரத்பேட்டை சுங்கச்சாவடி இடையே கார், ஜீப்களுக்கு ரூ.47, சரக்கு வாகனத்துக்கு ரூ.75, பஸ்களுக்கு ரூ.158, கனரக வாகனங்களுக்கு ரூ.301 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வண்டலூர்-நெமிலிச்சேரி இடையே கார், ஜீப்களுக்கு ரூ.66, சரக்கு வாகனத்துக்கு ரூ.107, பஸ்களுக்கு ரூ.224, கனரக வாகனத்துக்கு ரூ.351, பெரிய கனரக வாகனத்துக்கு ரூ.428 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வண்டலூர்-பாடிய நல்லூர் இடையே கார், ஜீப்களுக்கு ரூ.91, சரக்கு வாகனத்துக்கு ரூ.148, பஸ்களுக்கு ரூ.309, கனரக வாகனத்துக்கு ரூ.590 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வண்டலூர்-மீஞ்சூர் இடையே கார், ஜீப்களுக்கு ரூ.109, சரக்கு வாகனத்துக்கு ரூ.175, பஸ்களுக்கு ரூ.368, கனரக வாகனத்துக்கு ரூ.576 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வண்டலூரில் இருந்து மீஞ்சூர் சென்று திரும்பிவர கார், ஜீப்களுக்கு ரூ.163, சரக்கு வாகனத்துக்கு ரூ.263, பஸ்களுக்கு ரூ.551, கனரக வாகனத்துக்கு ரூ.865 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நசரத்பேட்டை-நெமிலிச்சேரி இடையே கார், ஜீப்களுக்கு ரூ.20, சரக்கு வாகனத்துக்கு ரூ.32, பஸ்களுக்கு ரூ.104, கனரக வாகனத்துக்கு ரூ.126 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ் நாடு சாலை மேம்பாடு நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்டச்சாலை காரணமாக சென்னை மாநகருக்கு பல்வேறு திசைகளில் இருந்து வரும் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் மாநகருக்குள் நுழையாமல் எண்ணூர், துறைமுகம், புறநகர் தொழிற் சாலைகளுக்கு எளிதாக சென்றடைய முடியும். வாக னங்கள் மற்றும் தூரத்துக்கு ஏற்றார்போல் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
பாஸ்டேக் வசதி உள்ள வாகனங்கள் தனியாக கட்டணம் செலுத்தும் ஏற்பாடுகளும் மற்ற வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு தனி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன’ என்றார்.
இதுதொடர்பாக வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘கொரோனா பரவல் காரணமாக வாகனங்கள் மற்றும் லாரி தொழில் முடங்கி உள்ளன. மற்றொரு புறம் போக்குவரத்து செலவும் அதிகரித்துள்ளது. அத்தியா வசிய பொருட்களின்
விலையும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையின் முக்கிய நுழைவு பகுதியாக உள்ள வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் 4 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது வாகன தொழில் செய்பவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். கொரோனா பாதிப்பு முடியும் வரையிலாவது 4 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்றனர்.






