என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியில் பார்வை இழந்த மாற்றுத்திறனாளிக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 2 நாள் மாவட்ட மாநாடு செங்கல்பட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக பார்வை இழந்த பாரதி அண்ணா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவரது சொந்த ஊர் மதுராந்தகம் அருகே உள்ள பாக்கம் கிராமம் ஆகும். இவரது மனைவி குணவதி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களது ஒரே மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.
கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து பாரதி அண்ணா நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் 1989-ம் ஆண்டு மாணவ பருவத்தில் இருந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியில் இணைத்து கொண்டு பணியாற்றி வருகிறேன்.
மாணவர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் அதன் பின்பு மதுராந்தகம் வட்டசெயலாளர், பொறுப்பு வகித்துள்ளேன். கட்சியில் அகில இந்திய வழக்கறிஞர் சங்க பொறுப்பிலும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் மாநில பொறுப்பிலும் மற்றும் மாற்று திறனாளிகள் பிரிவு மாநில பொறுப்பிலும் இருந்துள்ளேன்.
2 முறை சிறை சென்றுள்ளேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் என்னை இணைத்து கொண்டுள்ளேன். நான் சிறுவயதில் அதிகதிறன் கொண்ட பவர் உள்ள மூக்கு கண்ணாடியை பயன்படுத்தினேன். பின்னர் முழுவதுமாக பார்வையை இழந்துவிட்டேன். நான் மக்களுக்காக பாடு பட என்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






