என் மலர்
செங்கல்பட்டு
பழைய மாமல்லபுரம் சாலை நாவலூர் பகுதியில் உள்ள தனியார் உணவகங்கள் அருகே ஆன்லைனில் உணவு டெலிவரியில் வேலை செய்வது போல் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
கானத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் தாழம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிவது போல் உடை அணிந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவரை கைது செய்து தாழம்பூர் காவல் நிலையம் அழைத்துசென்று விசாரணை மேற்கொண்ட போது அவர் ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ்குமார் சேனாபதி (வயது 30) என்பது தெரியவந்தது. இவரிடமிருந்து 1 கிலோ 250 கிராம் எடை கொண்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலம் அருகே உள்ள சப்தகன்னி கோவில் வளாகத்தில் உள்ள பழமையான மரத்தில் 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன.
நேற்று மாலை பெரிய குரங்கு ஒன்று கிழக்கு ராஜ வீதி சாலையை உணவுக்காக கடக்க முயன்றது. அந்நேரத்தில் எதிரில் வந்த காரின் சக்கரத்தில் குரங்கு சிக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே குரங்கு இறந்து போனது.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் தாய் குரங்கு பலியானதை கண்ட அதன் குட்டி குரங்குள் மற்றும் அதன் கூட்டத்தில் இருந்த ஏராளமான குரங்குகள் அங்கு வந்தன.
அவை இறந்து கிடந்த குரங்கை சுற்றி சுற்றி வந்தன. மேலும் பலியான குரங்கை பரிதாபத்துடன் தடவி கொடுத்தும், கண்ணீர் விட்டும், தட்டி எழுப்ப முயற்சித்தும் பாச போராட்டம் நடத்தியது.
இதனை கண்ட அவ்வழியே சென்றவர்கள் கண் கலங்கினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் பேரூராட்சி ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 2,196 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 5,796 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 699 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தனர்.
இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2573 ஆக உயர்ந்துள்ளது. 17,524 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 738 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85 ஆயிரத்து 274 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 78 ஆயிரத்து 642 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1280 பேர் உயிரிழந்துள்ளனர். 5,351 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செங்கல்பட்டு:
சென்னை புதுப்பேட்டை பச்சையப்பா முதலி தெருவைச் சேர்ந்தவர் ஞானவேல் (வயது44). ஆட்டோ டிரைவர். இவரது மகள்கள் ஐஸ்வர்யா (5), பூஜா (3).
கடந்த 15-ந்தேதி காலை ஞானவேல் தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வெளியில் சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை.
இதுகுறித்து ஞானவேலின் மனைவி ஜெயந்தி எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 3 பேரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் மறைமலைநகர் அருகே உள்ள கடம்பூர் கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் 3 பேர் பிணமாக கிடப்பதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தினர்.
இதில் பிணமாக மீட்கப்பட்டது மாயமான ஞானவேல், அவரது மகள் ஐஸ்வர்யா, பூஜா என்பது தெரிந்தது. 3 பேரும் துணியால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருப்பது தெரிந்தது.
மீட்கப்பட்ட 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஞானவேல் 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்திருப்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.
தாம்பரம்:
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த புதன் கிழமை பூங்காவில் பணிபுரியும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பூங்காவில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் என 350 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 75 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் 5 வயது சிங்கம் ஒன்றும் உயிரிழந்தது.
இதை தொடர்ந்து வண்டலூர் பூங்கா வருகிற 31-ந் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அனைவரும் வீட்டு தனிமையிலும், ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பூங்கா ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், விலங்குகளுக்கும் அது பரவி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனால் பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளின் மாதிரிகளையும் பரிசோதனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
அதன்படி சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று மாலை கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த 4 வயதான சிறுத்தைப்புலி ஒன்றின் மாதிரியை சேகரிப்பதற்காக கால்நடை மருத்துவர்கள் சென்றனர். மாதிரியை சேகரித்துக் கொண்டிருந்த போது சிறுத்தைப்புலி திடீரென இறந்தது.
இதனால் கால்நடை மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிறுத்தைப்புலி திடீரென இறந்ததற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்த வண்டலூர் பூங்கா இயக்குனர் கருணா பிரியா உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த ஓராண்டில் 3 சிங்கங்கள், 3 புலிகள், 14 நெருப்புக் கோழிகள் வண்டலூர் பூங்காவில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன. கொரோனா தொற்று பாதித்த சிங்கமும் உயிரிழந்து இருந்தது.
தற்போது கொரோனா பரிசோதனைக்கு மாதிரி எடுத்த போது சிறுத்தைப்புலி உயிரிழந்து இருப்பது பூங்கா ஊழியர்கள் இடையே மீண்டும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளின் உடல்நிலையை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.






