search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    வண்டலூர் பூங்காவில் மீண்டும் கொரோனா பரிசோதனைக்கு மாதிரி எடுத்த போது சிறுத்தை திடீர் மரணம்

    கொரோனா பரிசோதனைக்கு மாதிரி எடுத்த போது சிறுத்தைப்புலி உயிரிழந்து இருப்பது பூங்கா ஊழியர்கள் இடையே மீண்டும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தாம்பரம்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த புதன் கிழமை பூங்காவில் பணிபுரியும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து பூங்காவில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் என 350 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 75 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் 5 வயது சிங்கம் ஒன்றும் உயிரிழந்தது.

    இதை தொடர்ந்து வண்டலூர் பூங்கா வருகிற 31-ந் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அனைவரும் வீட்டு தனிமையிலும், ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    பூங்கா ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், விலங்குகளுக்கும் அது பரவி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனால் பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளின் மாதிரிகளையும் பரிசோதனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் நேற்று மாலை கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த 4 வயதான சிறுத்தைப்புலி ஒன்றின் மாதிரியை சேகரிப்பதற்காக கால்நடை மருத்துவர்கள் சென்றனர். மாதிரியை சேகரித்துக் கொண்டிருந்த போது சிறுத்தைப்புலி திடீரென இறந்தது.

    இதனால் கால்நடை மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சிறுத்தைப்புலி திடீரென இறந்ததற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்த வண்டலூர் பூங்கா இயக்குனர் கருணா பிரியா உத்தரவிட்டுள்ளார்.

    ஏற்கனவே கடந்த ஓராண்டில் 3 சிங்கங்கள், 3 புலிகள், 14 நெருப்புக் கோழிகள் வண்டலூர் பூங்காவில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன. கொரோனா தொற்று பாதித்த சிங்கமும் உயிரிழந்து இருந்தது.

    தற்போது கொரோனா பரிசோதனைக்கு மாதிரி எடுத்த போது சிறுத்தைப்புலி உயிரிழந்து இருப்பது பூங்கா ஊழியர்கள் இடையே மீண்டும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளின் உடல்நிலையை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    Next Story
    ×