என் மலர்tooltip icon

    அரியலூர்

    • திருமானூரில் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில் அன்னதானம் நடைபெற்றது
    • திரௌபதை அம்மன் திருவிழாவை முன்னிட்டு 14வது ஆண்டாக நடைபெற்றது

    திருமானூர்,

    அரியலூர் மாவட்டம் திருமானூரில் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பாக 14-ம் ஆண்டு நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு, தொடர்ந்து 65 நாட்கள் நீர் மோர் வழங்கப்பட்டது. இதன் நிறைவாக திருமானூர் திரெளபதை அம்மன் கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டும் இரண்டு நாட்களும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சமூக ஆர்வலர் பாளை திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். இயக்க தலைவர் மு.வரதராஜன் வரவேற்றார். அன்னதானம் வழங்கும் நிகழ்வை எ.கெ.எம். ஐ.ஏ.எஸ் அகாடமி தலைவர் கணேசன் மற்றும் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க சண்முக சுந்தரம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நா.பாஸ்கர், குரு.பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜெயங்கொண்டத்தில் காங்கிரஸ் சார்பில் ராகுல் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது
    • பொதுமக்களுக்கு, இனிப்பு - அன்னதானம் வழங்கப்பட்டது

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில், ராகுல் காந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்டத் தலைவர் தலைவர் சங்கர் தலைமையில், காந்தி பூங்கா எதிரில் பொதுமக்களுக்கு இனிப்பும், அன்னதானமும் காங்கிரசார் வழங்கினர்.நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் மனோகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் குருசாமி, ஜெயங்கொண்டம் நகர காங்கிரஸ் தலைவர் அறிவழகன், வட்டாரத் தலைவர்கள் கண்ணன், சாமிநாதன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் என ஏராளமானர்கள் கலந்து கொண்டனர்.

    • அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி நடைபெறவிருக்கிறது
    • மாணவர்கள் கலந்து கொள்ள கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அழைப்பு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 11, 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 27ந் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் தங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரை அணுகி விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து, தலைமை ஆசிரியரின் ஒப்பம் பெற்று பள்ளி, முதன்மைக் கல்வி அலுவலகம் மூலமாக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். போட்டி நடைபெறும் நாளன்று அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9.00 மணிக்கு வருகை புரிந்து போட்டிகளில் கலந்து கொள்வதற்கான வருகைப் பதிவேட்டில் ஒப்பமிட வேண்டும். ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் மூன்று போட்டிக்கும் மூன்று மாணவர்கள் மட்டும் ஒரு பள்ளியில் இருந்து அனுப்பிவைக்கும்படி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டியில் முதல் பரிசுப் பெற்றவர்கள் மட்டும் மாநில அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மாநிலப் போட்டிகள் தொடர்பான தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும். இந்த வாய்ப்பினைக் பள்ளியில் பயிலும் 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • கத்தியை காட்டி மிரட்டி முதியவரிடம் பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
    • போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள சலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் ராமானுஜம் (வயது 68). இவர் நேற்று முன்தினம் காலை ஜெயங்கொண்டம் செல்வதற்காக கங்கைகொண்ட சோழபுரம் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி கத்தியை காட்டி மிரட்டி ராமானுஜம் வைத்திருந்த ரூ.200-ஐ பறித்து கொண்டு தப்பி சென்றார். இது குறித்து ராமானுஜம் கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், கடலூர் மாவட்டம் பழஞ்சநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஜோதி (42) என்பவர் முதியவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட சுண்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு (வயது 88), விவசாயி. இவர் வயது முதிர்வு காரணமாக உடல் நலக்கோளாறால் அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தங்கராசு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருமானூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    • தா.பழூர் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது
    • இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் முத்துகணேஷ். இவருடைய மனைவி கமலி (வயது 24). இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையில் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று கமலியின் தம்பி ஈஸ்வர் சரக்கு ஆட்டோ ஓட்டி சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த முத்துகணேஷ் குடும்பத்தை சேர்ந்த காந்தி, அவருடைய மனைவி மாலதி, மகன் முரளி, மோகன்ராஜ் மனைவி காயத்ரி ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

    அதுபோல் காயத்ரியின் தம்பி முரளிதரன் தனது தாயாரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று கொண்டிருந்தபோது கமலி, கமலியின் உறவினர்களான அரவிந்தன் மகன் ஈஸ்வர், ஆறுமுகம் மகன் அரவிந்தன் என்கிற ராஜேந்திரன், ராஜேந்திரன் மனைவி வெண்ணிலா ஆகியோர் வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கமலி மற்றும் காயத்ரி ஆகியோர் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் இருதரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • உடையார்பாளையம் அருகே பள்ளி மாணவி மாயமானதால் தாய் போலீசில் புகார் அளித்தார்
    • புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிந்து மாயமான அனுசியாவை தேடி வருகின்றனர்.

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஒக்கநத்தம் மேல தெருவை சேர்ந்தவர் அஞ்சப்பன். இவரது மனைவி தேவி (வயது 43). இவர்களது மகள் அனுசியா (17) நடுவலூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தேவி தூங்கி எழுந்து பார்த்த போது அனுசியாவை காணவில்லை. பின்னர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள் என பல இடங்களில் தேடியும் அனுசியா கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து தேவி உடையார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிந்து மாயமான அனுசியாவை தேடி வருகின்றனர்.

    • ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது
    • பயிற்சியில் தா.பழூர் வட்டாரத்துக்குட்பட்ட 194 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டார வள மையம் மூலம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. தா.பழூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுதா தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் சாந்திராணி முன்னிலை வகித்தார். தா.பழூர், காரைக்குறிச்சி, சுத்தமல்லி ஆகிய குறுவள மையங்களில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் மன்ற செயல்பாடுகள், மாணவர்களின் உடல்நலம், மனநலம், ஊட்டச்சத்து குறைபாடுகளை களைதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. பயிற்சியில் தா.பழூர் வட்டாரத்துக்குட்பட்ட 194 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முன்னதாக ஆசிரியர் பயிற்றுனர் சம்பத் வரவேற்றார். முடிவில் ஆசிரிய பயிற்றுனர் அந்தோணி தாஸ் நன்றி கூறினார்.

    • அரியலூரில் தமிழர் நீதிக்கட்சி, ஏர் உழவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாநில மகளிரணி தலைவர் இள.கவியரசி தலைமை வகித்தார்.

    அரியலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தை சேர்ந்த அபிநயாவை, பார்த்திபன் என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று சாலையின் தடுப்பு சுவற்றில், மோதச் செய்ததால், அபிநயா உயிரிழந்தார்.இந்த வழக்கு விசாரணையில், உடையார்பாளையம் போலீஸார், பார்த்திபனை கொலை வழக்கில் கைது செய்துள்ளனர். இந்நிலையில், அபிநயா கொலைக்கு நீதி கேட்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக்கோரியும், தமிழர் நீதிக்கட்சி, ஏர் உழவர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் அண்ணாசிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாநில மகளிரணி தலைவர் இள.கவியரசி தலைமை வகித்தார். கட்சித் தலைவர் சுபா.இளவரசன் கண்டன உரையாற்றினார். மாவட்ட மகளிரணிச் செயலாளர் கஸ்தூரி, மாநில இலக்கிய அணிச் செயலாளர் சீனி.அறிவுமழை, மாநிலப் பொருளாளர் ராமசாமி மற்றும் அல்லிநகரம் கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • கால்நடைகளுக்கான கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது
    • முகாமை கடுகூர் ஊராட்சி தலைவர் தர்மலிங்கம் தொடக்கி வைத்தார்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், க.பொய்யூர் கிராமத்தில் கால்நடைகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை கடுகூர் ஊராட்சி தலைவர் தர்மலிங்கம் தொடக்கி வைத்தார். அரியலூர் கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் சொக்கலிங்கம், கடுகூர் கால்நடை உதவி மருத்துவர் குமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராமலிங்கம், கால்நடை ஆய்வாளர் மாலதி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 30 பசு, கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். முன்னதாக, 4 முதல் 8 மாத வயதுடைய பசுங்கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கு அடையாள காது வில்லைகள் பொருத்தப்பட்டது.

    • பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அனைத்து சான்றிதழ்கள் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது
    • பள்ளி கல்வி மற்றும் வருவாய் துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    அரியலூர்,

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் பள்ளி கல்வி மற்றும் வருவாய் துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது. ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி, அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி, திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 பள்ளிகளில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தேவையான சாதி சான்றிதழ், வாரிசு சான்றிதழ், ஆதார் அட்டை, இருப்பிடச் சான்று, பான் கார்டு, ரேஷன் கார்டு, பிறப்புச் சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்று, வருவாய்ச் சான்று மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து வழங்கப்பட்டது. இந்த முகாமில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி, வருவாய்க் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன், பரிமளம், கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஆண்டிமடம் அருகே தண்ணீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • தெரு விளக்குகள் எரியாமல் இரவு நேரங்களில் இருண்டு கிடப்பதாகவும் கூறப்படுகிறது.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் வரதராஜன் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பொதுமக்களுக்கு குடிதண்ணீர் சரியான முறையில் வரவில்லை, தொடர்ந்து மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டு வருவதாகவும், துப்புரவு பணியாளர்கள் இல்லை என்றும், தெரு விளக்குகள் எரியாமல் இரவு நேரங்களில் இருண்டு கிடப்பதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய அடிப்படை பிரச்சனைகளை முன்வைத்து அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் பேரூராட்சி தலைவர் மார்க்ரேட் எலிசபெத் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    ×